அத்தியாயம் 47
தன் எதிர்பார்ப்புத் தவறு என்று யாழிசைக்குத் தெரியாமல் இல்லை. அவனோடான திருமணமே வேண்டாம் என்று நிற்கும் தன் வீட்டினர், குமர்ப் பெண்ணான தன்னை, ஏற்கனவே இத்தனை பிரச்சனைகள் நடந்திருக்க, அவனைப் பார்க்க அனுமதிக்கவே அனுமதிக்க மாட்டார்கள் என்று நன்றாகப் புரிந்தது.
அதுதான் சரியும் கூட. எல்லாம் புத்திக்குப் புரிகிறதுதான். இந்த மனம்தான் அது சொல்வதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டேன் என்று சிணுங்கிக்கொண்டே இருந்தது.
காய்ச்சல் வருகிற அளவுக்குப் பெரிய காயமா, முதல் ஏன் இவனுக்கு மீன் தொட்டியைத் தூக்கிப் போட்டு உடைக்கும் அளவுக்குக் கோபமெல்லாம் வருகிறது என்று நினைத்து நினைத்து உள்ளுக்குள் அழுதாள்.
எப்படியாவது ஒருமுறை அவனைப் போய்ப் பார்க்கக் கிடைத்தால்… அவள் விழியோரங்கள் கசிய முயன்றன. இமை சிமிட்டி அடக்கினாள். ‘எப்பிடி இருக்கிறீங்க தூயவா?’ மனத்தோடு அவனிடம் பேச முயன்றாள்.
அவள் தவித்து நின்றபோது குழந்தையை அரவணைப்பதுபோல் அரவணைத்து, ஆறுதல் தந்து, பாதுகாப்பாகப் பார்த்துக்கொண்டவனுக்கு இப்படி என்று தெரிந்த பிறகும் பார்க்கப் போகாமல் இருப்பது அவள் நெஞ்சை அறுத்தது.
எப்படிப் போவது? என்ன தைரியத்தோடு வீட்டினரிடம் அதைக் கேட்பாள்? மாதவியோடு சேர்ந்து போவதற்குக் கூட மறுத்த அம்மா, தனியாகப் போக விடுவாரா என்ன?
போன மாதவியை வேறு காணவில்லை. அவர் வந்தாலாவது இப்போது எப்படி இருக்கிறான் என்று கேட்கலாம் என்றால் அதுக்கும் வழியில்லை.
கோகிலாவும் நளினியும் அவளைக் கவனிக்காமல் இல்லை. ஆனால், இங்கே பேசுவதற்கு எதுவுமில்லை என்பதில் அமைதியாகவே தம் வேலைகளைப் பார்த்தனர்.
பகல் உணவுச் சமையல் முடிந்ததும், “சாப்பிட வா இசை.” என்று அழைத்தாள் நளினி.
உண்ணும் நிலையில் அவள் இல்லை. மறுத்தால் அன்னைக்குப் பிடிக்காது. அதில் எழுந்து வந்து அமர்ந்தாள். என்ன, சாப்பிடத்தான் முடியவில்லை. நெருஞ்சிமுள்ளாக அவன் நினைவுகள் தொண்டையினுள் சிக்கி நின்றன.
அரைவாசி உணவோடு அவள் எழுந்துகொள்ள, “கடைக்குப் போயிட்டு வருவம் வாறியா?” என்றாள் நளினி.
பதில் சொல்லாது அன்னையைப் பார்த்தாள் அவள்.
“என்னை ஏனம்மா பாக்கிறீங்க? போயிட்டு வாங்கோ.” அவள் எதிர்பார்ப்பதை நிச்சயம் அவரால் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அதே நேரம், அவள் தனக்குள் தானே ஒடுங்கிக்கொண்டு, வருத்திக்கொண்டு இருப்பதையும் பார்க்க முடியவில்லை. வெளியே போனால் மனமாற்றம் கிடைக்கும் என்பதில் போகச் சொன்னார்.
யாழிசை காணாமல் போன அல்லாட்டத்தில் அந்த வாரம் முழுக்க வீட்டுக்குத் தேவையான பொருள்களை நளினி வாங்கி வைக்கவில்லை. வாங்கும் மனநிலை இருக்கவும் இல்லை.
அதில் கோகிலாவுடன் சேர்ந்து தேவையான பொருள்களின் பட்டியலைத் தயார் செய்துகொண்டு, தேவையான பைகளையும் எடுத்துக்கொண்டு யாழிசையோடு புறப்பட்டாள்.
திடீரென்று ஒரு இடத்தில் நிறுத்தி, “இறங்கு!” என்றாள் நளினி.
சொன்னதைக் கேட்கும் கிளிப்பிள்ளை போன்று இறங்கி நின்றபிறகுதான் சுற்றத்தைக் கவனித்தாள் யாழிசை. திரும்புகிற பக்கமெல்லாம் தென்னைகள் நின்றன. அது ஒரு தென்னந்தோப்பு என்று மட்டுமே அவளால் இனங்காண முடிந்தது. கேள்வியாக நளினியைப் பார்த்தாள்.
“நான் போய் சூப்பர் மார்க்கெட்ல சாமான் வாங்குற டைம் மட்டும்தான் உனக்கான டைம். தூயவனைப் போய்ப் பாத்துக்கொண்டு வா.” என்றதும் அதிர்ந்துபோனாள்.
“அண்ணி.” என்றவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. விழிகள் கலங்கின.
அன்னையை விடவும் சில நேரங்களில் கண்டிப்புக் காட்டுகிறவள் நளினி. இன்று அவளே இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்கிறாள். அது தனக்காகவும் தன் மனம் படும் பாட்டை உணர்ந்ததாலும் மட்டுமே என்று தெரிய அவளால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“ப்ச் இசை! அழுறத நிப்பாட்டு. ஆரும் பாத்தாலும். அங்க பார், குரு வாறார். அவரோட போ. ரெண்டு தேங்கா வாங்கிற மாதிரி நான் வாங்கிக்கொண்டு போறன். நீ போய் அவரைப் பாத்துக்கொண்டு வா.” சுற்றவரப் பார்த்தபடி சொன்னாள் நளினி.
“பயமா இருக்கு அண்ணி. அம்மாக்கோ அண்ணாக்கோ தெரிஞ்சா கோபப்படுவினம். முதல் அவரின்ர அப்பான்ர காதுக்குப் போனா இன்னும் பிரச்சினை ஆகிடும்.” அவனை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என்றுதான் காலையிலிருந்து அவள் தவித்ததே. அதற்கு நளினி வழி செய்து கொடுத்தபோது பயம் மட்டும்தான் வந்தது.
“வேணாம் அண்ணி. போவம் ப்ளீஸ்.” குரு அவர்களை நெருங்குவதற்குள் மெல்லிய குரலில் கெஞ்சினாள்.
“லூசா நீ. வா பேசாம!” என்றவள் குருவிடம் அவளை ஒப்படைத்துவிட்டு தேங்காய் வாங்கப் போனாள்.
தான் செய்வது தவறு என்று நளினிக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் துணிந்துவிட்டாள். அந்தளவில் கருணாகரனின் மீதான கோபம் அவளை ஆட்டிப்படைத்தது.
யாழிசையின் பெயரைக் கெடுக்க முயன்று, அவளைக் கடத்தி, அவர்களைக் கதற வைத்து, அவரைப் பார்க்கப் போனபோது பார்க்க மாட்டேன் என்று ஆணவம் காட்டி, கோகிலா பார்த்தபோதும் வார்த்தைகளால் கொன்று என்று அற்ப புழுவைப் போல் அவர்களின் குடும்பத்தையே போட்டு மிதித்த அந்த மனித மிருகத்துக்குத் திருப்பிக் கொடுக்க ஒரு வழி இருக்கும்போது அதைத் தவற விட அவளுக்கு விருப்பமில்லை.
அவர்கள் ஏழைகள், அவர்களால் அவரை அசைக்கவே முடியாது என்கிற ஆணவம் தானே இதற்கெல்லாம் காரணம்.
அவள் ஒன்றும் விருப்பம் இல்லாத பெண்ணை எதற்கும் தூண்டவில்லை. தவறான ஒருவனுடன் அவளை இணை சேர்க்க நினைக்கவும் இல்லை. அவனும் நல்லவனே! அவன் வீட்டினர் பார்க்கும் சாதியையும் அந்தஸ்தையும் தவிர்த்து அவனை மறுக்க எந்தக் காரணமும் இவர்களுக்கு இல்லை.
அதைவிட இருவரும் நேசிக்கிறார்கள். அதுவும் மிக மிக ஆழமாக. அதை, அவள் பார்த்த அந்த ஒற்றைக் காட்சி அவளுக்குக் கடத்தியிருந்தது.
பொல்லாதவனாக, அவர்களைப் பார்வையாலேயே மிரட்டுகிறவனாக மட்டுமே அதுவரையில் பார்த்த ஒருவனை அன்று கனிந்துருகும் காதலனாகப் பார்த்தாள். யாழிசையின் நல்லதொரு உற்ற துணையாகக் கண்டாள். எல்லாவற்றையும் விட அவளுக்குத் தைரியம் தந்தது, கருணாகரனையே அவன் எதிர்த்து நின்றானாம் என்கிற விடயம்.
யாழிசைக்காக அவன் என்னவும் செய்வான் என்பதற்கு இதை விடவும் வேறு என்னதான் வேண்டும்? அதுதான் துணிந்துவிட்டாள்.
அதேபோல் மறைக்கும் எண்ணமும் இல்லை. என்ன, சொல்லிவிட்டுச் செய்ய முயன்றால் விடமாட்டார்கள். அதில் செய்துவிட்டுச் சொல்லும் முடிவுக்கு வந்திருந்தாள்.
*****
குருவோடு அந்தத் தென்னந்தோப்பினூடு நடந்துகொண்டிருந்தாள் யாழிசை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் நேர்வரிசை மாறாமல் ஓங்கி உயர்ந்து நின்ற தென்னை மரங்கள், பசுமையையும் இனிய காற்றையும் பரப்பிக்கொண்டிருந்தன. வேறு யாரையும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணோம்.
“இண்டைக்குத் தேங்காய் ஆயிர நாள். விடிய வெள்ளன வெயில் வர முதலே முடிச்சிடுவம். இப்ப எல்லாரும் தேங்காய் கொட்டிலுக்க நிப்பினம்.” அவள் பார்வையைப் புரிந்துகொண்டு பதில் சொன்னான் குரு.
‘ஓ!’ என்பதுபோல் சிறிதாகத் தலையசைத்து அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டாள். என்னவோ இப்படி யாருக்கும் தெரியாமல் தூயவனைப் பார்க்க வருவது ஒரு மாதிரி மனத்தை உருத்த, குருவின் முகம் பார்க்கச் சங்கடப்பட்டாள்.
அவளின் அமைதியில் அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “உங்களப் பாத்தா அவனுக்கும் கொஞ்சம் நல்லாருக்கும் இசை. நேற்றுக் கொஞ்சம் நல்லாவே மனம் உடைஞ்சிட்டான். அதாலதான் நளினி அக்கா எடுத்துக் கேட்ட நேரம் நானும் கூட்டிக்கொண்டு வரச் சொன்னனான்.” என்று விளக்கம் சொன்னான்.
அதையும் தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள்.
அந்தத் தோட்ட வீட்டு வாசலில் அவளை விட்டுவிட்டு, “உள்ளுக்குத்தான் இருக்கிறான். அப்போத படுத்தவன் இன்னும் எழும்பேல்ல. எப்பிடியும் இப்ப சாப்பிட்டுக் குளுசை போட எழும்புவான். நீங்க போங்க.” என்றுவிட்டு விலகி நடந்தான் குரு.
அவளுக்கு உள்ளே போகக் கால்களே வரவில்லை. ஒரு தயக்கம். அதே நேரம், வந்ததுதான் வந்துவிட்டோம் அவனைப் பார்த்துவிட்டுப் போவோமே என்கிற ஆசை உந்தித் தள்ளியது.
இன்னுமே அவளால் அவனை இயல்பாகப் பெயர் சொல்லி அழைக்க முடிவதில்லை. மனத்தோடு பேசுகையில் மட்டும் தூயவா என்பாள். அப்படிச் சொல்கிற, நினைக்கிற பொழுதுகளில் எல்லாம் அவனைத் தன் மனத்துக்கு மிக நெருக்கமாக உணர்வாள். இப்போதும் அவன் பெயரைச் சொல்லி அழைக்க ஒரு மாதிரி இருக்க, திறந்திருந்த கதவை இரண்டு முறை தட்டிவிட்டு, மெல்ல உள்ளே சென்றாள்.
பெரிய தேடுதல் வேட்டை எல்லாம் நடத்தும் அவசியமே இல்லாமல், அங்கே ஒரு பக்கமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் அருகில், விரித்திருந்த பாயில் நல்ல உறக்கத்தில் இருந்தான் தூயவன்.
அவனைப் பார்த்ததும் அவளுக்குள் அதுவரை இருந்த அத்தனை தயக்கங்களும் காணாமல் போயின.
அதுவும் வலப்பக்கக் கை முழுவதையும் கட்டு ஆக்கிரமித்திருக்க, நல்ல உறக்கத்தில் இருந்தவனைக் கண்டபோது, தொண்டைக்குள் ஏதோ ஒன்று வந்து அடைத்துக்கொண்டது.
மெல்ல அவனருகில் சென்றாள். எப்போதும் சீறும் சிங்கமாகவே பார்த்தவனை இப்படிச் சோர்வாக, கையில் காயத்தோடு பார்க்க நெஞ்சுக்குள் என்னவோ செய்தது.
சில கணங்களுக்கு அவனையே பார்த்தவள் அவன் பாயில் அல்லாமல், குளிந்த சீமெந்து தரையில் சத்தம் எழுப்பாமல் அமர்ந்தாள். ஏனோ அவனை எழுப்பி, அவனோடு இரண்டு வார்த்தை பேசும் ஆசை எழவே இல்லை. கொஞ்ச நேரத்துக்கு அவன் முகத்தை இப்படியே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டுப் போனால் கூடப் போதும் போலிருந்தது.
காயம் பட்ட கரத்தை வருடிக்கொடுக்க ஆசைப்பட்டாள். தொட்டால் எழுந்துவிடுவானோ என்று யோசித்தாள். ஆனாலும் அவளுக்குள் எழும் உந்துதலை அடக்க முடியாமல் கையைக் கொண்டுபோனாள். பின் ஏனோ வேண்டாம் என்று முடிவு செய்து பின்னால் இழுத்துக்கொண்டாள். அவன் முகம் பார்த்தாள்.
வாரப்படாத கேசம் களைந்து கிடந்து அவள் விரல்களைக் குறுகுறுக்க வைத்தன. மூடியிருந்த இமைகள், அதன் மீது அடர்ந்த இணைந்த புருவங்கள். அதைப் பார்த்ததும் மெல்லிய புன்னகை அவள் உதட்டில். அது அவளை எத்தனை முறை மிரட்டியிருக்கிறது? ஆனால், இப்போதெல்லாம் அவள் மனத்தைச் சுருட்டி எடுத்து, அந்த முடிக் கற்றைகளுக்குள் ஒளித்து வைத்துக்கொள்வதுபோல் ஒரு பிரம்மை.
கோபக்கார நாசி, சீராக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டிருக்க, பிடிவாத உதடுகள் அழுத்தமாய் மூடியிருந்தன.
அவன் உறக்கத்தில் இருந்தாலும் அவன் முகத்தை இப்படி உற்றுக் கவனிக்கிறோம் என்பது மெல்லிய கூச்சத்தைத் தர, பார்வையை மீண்டும் அவன் கரத்துக்கு மாற்றினாள்.
உள்ளங்கை முழுவதையும் மூடுவதுபோல் கட்டுப் போட்டிருந்ததாலும், பெரிய அசைவுகள் இல்லாமல் இருந்ததாலும் அவனுடைய நீண்ட விரகள் இலேசாக ஊதியிருந்தன.
வலிவும் வனப்புமான விரல்கள். அவளை அணைத்து ஆறுதல் சொல்கிற ஒவ்வொரு பொழுதுகளிலும் மிக மிக மென்மையைத் தத்தெடுத்துவிடும்.
அந்த விரல்களையாவது வருடிப் பார்க்கும் உந்துதலில் மீண்டும் கையைக் கொண்டுபோனாள்.
திரும்பவும் இழுத்துக்கொண்டு அவனைப் பார்த்தவள் அதிர்ந்தாள். அவன் விழித்திருந்து, அவளையே பார்த்திருந்தான். உதட்டோரத்தில் குறுஞ்சிரிப்பு ஒன்று ஒளிந்து நிற்கிறதோ என்று ஒரு சந்தேகம் அவளுக்கு.
அவன் நல்ல உறக்கத்தில்தான் இருந்தான். ஆனால், எத்தனை ஆழ்ந்த உறக்கமாக இருந்தாலும் அவள் வாசனை தனியாகச் சென்று அவன் இதயத்தைச் சேர்ந்துவிடும். அதில்தான் விழித்தான். விழித்தவன் இனிமையாக அதிர்ந்தான்.
அவன் எதிர்பார்த்ததுபோல் அவள்தான். என்ன, சின்ன பிள்ளைபோல் அவனைத் தொட வருவதும் கையைப் பின்னுக்கு இழுப்பதுமாக இருந்தாள். கடல் அலையில் கால் நனைக்க வந்த குழந்தை, அலையைக் கண்டதும் திரும்பிக் கரைக்கே ஓடிச் செல்வதைப் போலவே இருந்த அவள் செய்கையில் அவளை ரசிக்கும் குட்டி முறுவல் அவன் உதட்டினில்.
ஒன்றுமே சொல்லாமல் கட்டுப்போட்டிருந்த தன் கரத்தை அவள் புறமாக நீட்டினான். அவள் சின்ன தடுமாற்றத்துடன் ஏறிட்டாள். ‘தொடு!’ பார்வையால் தன் கரத்தைக் காட்டிச் சொன்னான் அவன்.
ஒரு முறை அவனைப் பார்த்துவிட்டு மெல்ல அவன் கையைத் தொட்டாள். சுட்டது, அவள் உள்ளத்தையும் சேர்த்து. சட்டென்று விழிகள் கலங்க, “எல்லாம் என்னால என்ன?” என்றாள் உடைந்து கரகரத்த குரலில்.

