அத்தியாயம் 48
முதல் நாள் இரவு அத்தனை அழுத்தத்தில் இருந்த தூயவன் காலையில் சமாளித்துக்கொண்டான்தான். என்றாலும் உள்ளே அரிக்கும் அந்த வேதனை அவனை விட்டு அகலாமலேயே இருந்தது.
வேறு யாரோவாக இருந்தால் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விடலாம். இல்லை, தூக்கிப்போட்டு மிதித்துவிட்டாவது போய்விடலாம். இது அப்பா. காலம் முழுக்க அவன் பக்கத்திலேயே இருக்கப் போகிறார். அப்படி இருக்க அவர் செய்த அத்தனை துரோகங்களையும் தாங்கிக்கொண்டு, ஒரே வீட்டிலிருந்து அவரை எப்படி எதிர்கொள்வது என்கிற வலி அவனைக் கொன்றுகொண்டே இருந்தது.
அதுதான் வீட்டுக்கே போகாமல் அங்கேயே இருந்துகொண்டான்.
ஆனால், அவனுடைய இசையரசியின் வரவு அவன் இதயத்தை இலேசாக்கிப் போட்டது; காயங்களுக்கு மருந்து தடவியது. உடலுக்கும் உள்ளத்துக்கும் தெம்பு வந்ததுபோல் உணர்ந்தான். இனித் தன்னால் பழையபடி சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கை பிறந்ததில் கொஞ்சம் உற்சாகமாகக் கூட உணர்ந்தான்.
நளினி அவளை அழைத்துப்போக வந்தபோது, அவனே வந்து யாழிசையை அவளிடம் ஒப்படைத்தான்.
“இசையைக் கூட்டிக்கொண்டு வந்ததுக்கு நன்றி அக்கா. நான் நேசன் அண்ணாவோட கதைக்கிறன்.” தன்னாலும் யாழிசையாலும் அவர்களுக்குள் எந்தச் சண்டை சச்சரவுகளும் வந்துவிட வேண்டாம் என்றெண்ணிச் சொன்னான்.
“இல்ல, வேண்டாம். நானே சொல்லுறன்.” உடனேயே மறுத்த நளினிக்கு அவனோடு இயல்பாக உரையாடுவது இலகுவாக இல்லை.
முன்னர் அவன் மீதிருந்த வெறுப்பு, கசப்பு எல்லாம் இப்போது இல்லை. அவன் எப்படித் தம்மைத் தவறாகப் புரிந்து வைத்திருந்தானோ அப்படியே தாமும் அவனை முழுமையாக அறிந்து வைத்திருக்கவில்லை என்று புரிந்தது. ஆனாலும், ஒரு இறுக்கம் இன்னுமே அவளைப் பற்றிப் பிடித்திருந்தது.
தூயவனுக்கு அவள் சொல்வதில் இருக்கிற நியாயம் புரிந்தது. அவர்கள் கணவன் மனைவி. அப்படியிருக்க, அவள் செய்த ஒன்றுக்காக அவன் பேசப்போனால் அவர்களுக்கிடையில் விரிசல் விழுவதற்குச் சாத்தியம் அதிகம். அதில், சரி என்று தலையசைத்துக் கேட்டுக்கொண்டான்.
அவனிடம் கண்களாலேயே விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள் யாழிசை.
வீட்டுக்குப் போனதுமே நளினி உண்மையைச் சொல்லிவிட்டாள். கோகிலாவால் நம்பவே முடியவில்லை. அதிர்ந்துபோய்ப் பார்த்தார்.
“இத உங்களிட்டக் கொஞ்சமும் எதிர்பாக்கேல்ல நளினி.” முகத்துக்கு நேராக உடனேயே சொன்னார்.
“பரவாயில்லை மாமி. நான் செய்தது பிழை எண்டு எனக்கும் தெரியும். ஆனா, உங்கட விருப்பு வெறுப்பைத் தண்டி நீங்க சொல்லுங்க, இசையைத் தூயவனைத் தவிர்த்து இன்னொருத்தருக்குக் கட்டிக்குடுக்க நீங்க ரெடியா? இல்ல, இன்னொருத்தனோட கலியாணம் முடிஞ்சா மட்டும் காணும் எண்டு நினைக்கிறீங்களா? உங்கட மகள், அவளின்ர மனம், அதில இருக்கிற விருப்பத்தைப் பற்றி எல்லாம் உங்களுக்கு ஒண்டுமே இல்லையா?” அவரின் கேள்வி சுருக்கென்று தைத்தாலும் தன் முடிவில் தெளிவாக இருந்தவள் தன் கேள்விகளையும் தெளிவாகவே கேட்டாள்.
“செய்றதையும் செய்துபோட்டு வந்து செய்ததை எல்லாம் நியாயப்படுத்த வேண்டாம் நளினி. ஏற்கனவே பெயர் கெட்டுப்போய் நிக்கிறா. இப்ப இத அறிஞ்சு அந்த மனுசன் இன்னும் என்ன எல்லாம் கதைப்பாரோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். அண்டைக்குச் சுரபிக்கு என்ன சொல்லி அடிச்சனீங்க? இண்டைக்கு நீங்க என்ன செய்து வச்சிருக்கிறீங்க? உங்கட பிள்ளை நல்லாருக்கோணும், ஆனா என்ர மகள்?” என்றதும் அவரையே வெறித்தாள் நளினி.
“நீங்க என்ன சொன்னாலும் பரவாயில்ல மாமி. பிழையான ஒருத்தனோட அவளைச் சேர்த்து வைக்க நினைக்கேல்ல நான். அதே மாதிரி அவளையும் சுரபியையும் நான் பிரிச்சுப் பாக்கிறேனா இல்லையா எண்டு எனக்குத் தெரியும்!” என்றுவிட்டு வாங்கிவந்த பொருள்களை ஒதுக்க ஆரம்பித்தாள்.
எப்போதும் உதவிக்குப் போகும் கோகிலா இந்த முறை போகவில்லை.
நளினியையும் அவரையும் ஒருமுறை பார்த்துவிட்டுக் கோகிலாவின் முன்னே வந்து நின்றாள் யாழிசை. பேசத் தயக்கம்தான். ஆனால், பேசாமல் இருப்பது நளினிக்குச் செய்யும் துரோகமாகப் பட்டது.
“அம்மா, அண்ணி எனக்காகத்தான் செய்தவா. அவாவோட கோவிக்காதீங்க அம்மா.” கண்ணீருடன் கெஞ்சியவளை, “வாயை மூடு!” என்கிற அவரின் ஒற்றை அதட்டல் அடக்கியது.
“இவ்வளவு பட்டும் உனக்கு இன்னும் புத்தி வரேல்ல என்ன? இப்பிடி உன்ர பெயரை நீயே கெடுத்துக்கொண்டு இன்னும் என்ன வாழ்க்கை வாழப்போறாய்? வாயே திறக்கக் கூடாது, போ உள்ளுக்கு!” என்றதும் சட்டென்று உள்ளுக்கு வந்திருந்தாள்.
வீடு வந்த நேசன் விடயமறிந்து கொதித்துவிட்டான். தாய், தங்கை, விவரம் தெரிய ஆரம்பித்துவிட்ட மகள் என்று எல்லோரும் ஒன்றாக இருப்பதால் பொதுவில் வைத்து மனைவியோடு சண்டையிடுவதை எப்போதும் தவிர்த்துவிடுவான். இன்று அதுகூட முடியாமல் போயிற்று.
யாழிசை காணாமல் போனது, அதன் பிறகு திக்குத் தெரியாமல் அந்தரித்துச் திரிந்தது, பிறகும் நல்லபடியாகக் கிடைத்துவிட்டாள் என்று நிம்மதியாக இருக்க முடியாமல், என்னதான் பொறுத்தமாக ஒரு கதை சொன்னாலும் அவள் பற்றி அரசல் புரசலாக அடிபடும் பேச்சுகள், நின்றுவிட்ட திருமணம், இனி என்ன செய்வது என்று தெரியாத நிலை, தூயவன் யாழிசை காதல், அதையாவது ஏற்று அந்த வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முடியா நிலை என்று அவன் சக்தியை மீறிய பிரச்சனைகளால் திணறிக்கொண்டிருக்கிறான்.
இதில் நளினியும் புதிதாக ஒன்றை ஆரம்பித்து வைக்கவும் கத்திவிட்டான். அமைதியாக அத்தனையையும் கேட்டுக்கொண்டாள் நளினி.
ஆனால், “உன்ர மகளுக்கும் இதே வேலையைப் பாப்பியா நீ?” என்றவனின் கேள்வி, அவள் இதயத்தைச் சுருக்கென்று தைத்தது.
அவனை நேராகப் பார்த்து, “என்னவோ அவளை நான் பாழுங்கிணத்தில தள்ளி விட நினைச்ச மாதிரியே ரெண்டு பேரும் கேக்கிறீங்க. என்ர மகளா இருந்தா என்ன, இசையா இருந்தா என்ன? ஒரு நல்லவனோட சந்தோசமா அவே வாழோணும். இதுதான் என்ர ஆசை. அந்த நம்பிக்கை எனக்குத் தூயவனில இருக்கு.” என்றவள் அதன் பிறகு வாயே திறக்கவில்லை.
அதன் பிறகு வந்த நாள்களில் கணவன் மனைவி இருவரும் முகம் கொடுத்துப் பேசிக்கொள்வதில்லை. கோகிலாவும் நளினியிடம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
நாள்கள் அவை பாட்டுக்குக் கரைந்தன. விமல் வவுனியா வந்து சேர்ந்திருந்தான். கொழும்பில் என்ன பொய்யைச் சொல்லிப் பணம் திரட்டினானோ அதே பொய்யைத்தான் வீட்டிலும் சொன்னான்.
அகிலனும் அவனும் உள்ளூர ஒரு பயத்துடனேயே நாள்களைக் கழித்துக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், அவர்கள் பயந்ததுபோல் தூயவன் எதையுமே செய்யவில்லை. யாழிசை வந்து அவனைப் பார்த்துவிட்டுப் போன அன்று இரவே வீட்டுக்குச் சென்றான்.
தேவகிக்கு மிகுந்த மகிழ்ச்சி. யாழிசை அவனைப் போய்ப் பார்த்துவிட்டு வந்ததற்குப் பிறகு அவரும் அவனைப் போய்ப் பார்த்து, நல்ல பேச்சும் கொடுத்து, மரியாதையாக வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்திருந்தார்.
அவர் சொன்னதுபோல் அவனும் வந்துவிட்டதால் மகன் மீதிருந்த சுணக்கம் அகன்றிருந்தது.
*****
அப்பாவோடு மகன் மோதிக்கொண்டு இரண்டு வாரங்கள் கழிந்திருந்தன. அன்று கருணாகரனுக்கு அறுபதாவது பிறந்தநாள்.
ஒவ்வொரு வருடமும் வருகிற பிறந்தநாள்களைக் கோலாகலமாகக் கொண்டாட மாட்டார்கள். ஆனால், மார்க்கண்டேயர் இருந்த காலத்திலிருந்தே அறுபதாவது, எழுபதாவது, எண்பதாவது என்று வருகிற பிறந்தநாள்களைச் சிறப்பாகக் கொண்டாடுவது அந்த வீட்டின் வழக்கம். கருணாகரனின் 50வது பிறந்தநாளை பத்து வருடங்களுக்கு முன் இதேபோல் கோலாகலமாகக் கொண்டாடியிருந்தார்கள்.
காலையிலேயே கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து, அங்கேயே பொங்கும் பொங்கல், பகலுக்கு வயிறு வெடிக்கிற அளவுக்கான கறி விருந்து, இரவில் விலையுயர்ந்த மது வகைகளோடு நல்ல சாப்பாடு என்று அன்றைய நாளே அமர்க்களப்பட்டுவிடும்.
அதனாலேயே இந்தப் பிறந்தநாள்களை நினைவில் வைத்து, அழைக்கும் அவசியம் இல்லாமலேயே உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், அந்த ஊரில் வாழும் அவரின் இனசங்கள் எல்லோரும் காலையிலேயே வந்துவிடுவார்கள்.
இதற்கு என்றே சமைப்பதற்காகப் சமையற்காரர்கள் பிடிக்கப்பட்டு, வண்டி வண்டியாகப் பண்ட பாத்திரங்கள் இறக்கி, வீட்டின் முன்னால் எல்லோரும் இருந்து உண்பதற்கு ஏதுவாகக் கொட்டகை போடப்பட்டு, அமர்வதற்கான பிளாஸ்டிக் நாற்காலிகள் எடுத்து, அந்த ஊருக்கே கேட்குமளவுக்கான மைக் செட் பூட்டி என்று அத்தனையையும் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்துவிடுவான் தூயவன்.
இந்தமுறை அவன் பேசாமல் இருந்தபோதும் தேவகி விடவில்லை. அப்பாவும் மகனும் முற்றிலுமாக விலகி நிற்பது, யாரில் சரி, யாரில் பிழை என்பதைத் தண்டி அவருக்குக் கவலையைக் கொடுத்தது. அதில் மகனோடு பேசி, அவனைச் சமாதானம் செய்து, அத்தனையையும் செய்ய வைத்தார்.
இத்தனையும் எப்போதும்போல நடந்தபோதிலும் கூட, மனைவி கொண்டு வந்து கொடுத்த வெள்ளை வேட்டி சட்டையில் தயாராகிக்கொண்டிருந்த கருணாகரனுக்கு அந்த நாள் ஏன் விடிந்தது என்றுதான் இருந்தது. ஏதோ ஒரு பயம், என்னவோ எல்லாம் அவர் கையை விட்டுப் போகப் போவது போலொரு உணர்வு.
நடப்பது எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், விடிந்துவிட்ட அந்தப் பிறந்தநாளையோ, கூடிவிட்ட இனசனத்தையோ அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.
அவர்கள் வீட்டிலிருந்து பெரும் கூட்டம் ஒன்றே கோயிலுக்குப் புறப்பட்டார்கள். எப்போதும் இப்படிப் போகையில் இந்தக் கூட்டத்துக்கே தலைவன் நான் என்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பார் கருணாகரன். அத்தனை கர்வமாக இருக்கும். என்னவோ இன்னும் நான்கடி தான் உயர்ந்துவிட்டதுபோல் உணர்வார். இப்போதோ நெஞ்சு படக்கு படக்கு என்று அடித்துக்கொண்டது.
கோயில் ஐயாவும் தயாராகவே இருந்தார். கருணாகரனுக்கான பிரத்தியே அர்ச்சனை எந்தக் குறையும் இல்லாமல் நடந்தது. ஐயாவும் பிறந்தநாள் வாழ்த்தினைச் சொல்லி, தீர்க்காயுசுடன் இன்னும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தினார். கூடியிருந்தவர்களும் சத்தமாக வாழ்த்தியபோது, எப்போதும் அவருக்குள் தலைதூக்கும் அந்தக் கர்வம் இப்போதும் தலை தூக்கிற்று.
அப்போதுதான் திடீரென்று கூட்டத்தினுள் ஒரு சலசலப்பு. எல்லோரும் என்ன, ஏது என்று பார்த்தனர். காவல்துறையைச் சேர்ந்த இருவர் முன்னால் வர, அவர்களோடு பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளையாகத் தூயவனும், மணப்பெண்ணிற்கான முழு அலங்காரத்துடன் யாழிசையும் நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.
அவர்களின் பின்னால் நேசனின் குடும்பமும் அவனின் உறவினர்கள் கூட்டமும்.
மகனை அப்படிப் பார்த்த கருணாகரனின் தலையில் இடியே விழுந்திருந்தது. கைப்பொருள் மொத்தமாகப் பறிபோன நிலையில் அவர் உள்ளம் பதறியது. ஆனாலும் எதையும் தடுக்க முடியா நிலையில் இருந்தார்.
“ஆரும் பதட்டப்படுறேல்ல, அவசரப்பட்டு யோசிக்காம நடக்கிறேல்ல. தூயவனுக்கும் யாழிசைக்கும் இப்ப கலியாணம் நடக்கப் போகுது. கலியாணப் பொம்பிளையின்ர குடும்பம், மாப்பிள்ளையின்ர அம்மா, தங்கச்சி, தங்கச்சின்ர மனுசன் எண்டு எல்லாரின்ர சம்மதத்தோடயும்தான் இந்த ஏற்பாடு நடக்குது. அதால இஞ்ச ஆரும் எந்தக் குழப்பமும் செய்யக் கூடாது. செய்றதுக்கு ஆருக்கும் அனுமதி இல்லை.” என்ற காவல்துறை அதிகாரியின் அறிவிப்பில் யாராலும் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.
கருணாகரன் மகனையேதான் பார்த்தார். அவனும் சளைக்காமல் அவரைத்தான் பார்த்தான். இருவர் பார்வைகளும் சத்தமே இல்லாமல் மோதிக்கொண்டன. இருவர் உள்ளத்திலும் ஆத்திரமும் ஆக்ரோசமும் குமுறின. ஆனாலும் வெளியில் காட்டாமல் அமைதியாக நின்றிருந்தனர்.
சத்தமில்லாமல் அத்தனையையும் அவர் எப்படி வெட்டி வீழ்த்த நினைத்தாரோ அப்படியே அவனும் அத்தனையையும் செய்து முடித்திருப்பது தெரிந்தது. தோளுக்கு மீறி வளர்ந்த மகன், இன்று அவர் கையையும் மீறிப் போய்விட்டான்.
நொடியில் காட்சிகள் மாறின. கோயில் மண்டபம் சட்டென்று திருமண மண்டபமாயிற்று. அக்கினி சாட்சியாக, ஊர் மொத்தமும் கூடி நிற்க, அம்மை அப்பனைக் கோர்த்த தாலிக்கொடியைத் தன் இசையரசியின் கழுத்தில் பூட்டி, அவளைத் தன் மனைவியாக்கிக்கொண்டான் தூயவன்.
அவரின் பிறந்தநாளுக்காகச் செய்யப்பட்ட அத்தனை ஏற்பாடுகளும் அவன் திருமண நாளுக்கான விருந்தாக மாறிப்போனது.
அத்தனைக்கும் சாட்சியாக நின்றார் கருணாகரன்.

