கடன் அன்பை முறிக்கும் 50 – 1

அத்தியாயம் 50

 

 

வெறி பிடித்த மிருகத்துக்கு ஒப்பான மனநிலையில் இருந்தார் கருணாகரன். மனைவி, பிள்ளைகள் என்று அத்தனை பேர் மேலும் ஆத்திரமும் ஆக்ரோசமும் பொங்கிற்று. எதையாவது போட்டு அடித்து நொறுக்கும் அளவுக்கு ஆவேசம்!

 

இத்தனை வருடங்களாக அந்த ஊரிலேயே அதிகாரம் மிக்கவராக இருந்திருக்கிறார். ஆனால் இன்று, அதே ஊரின் முன்னே, அவரின் அதிகாரத்தைப் பறித்து, நீ ஒரு வெறும் பயல் என்று சொல்லியிருந்தான் அவர் மகன்.

 

அன்று அவன், இந்தச் சொத்துகள் மீது உனக்கு எந்த உரிமையும் இல்லை, நீ வெளியிலிருந்து வந்தவன் என்று சொன்ன வார்த்தைகளே அவர் நெஞ்சில் இன்னும் நெருப்பாக எரிந்துகொண்டிருக்கையில் இன்று தலையிலேயே நெருப்பை அள்ளிக் கொட்டிவிட்டானே!

 

அவமானம் பிடுங்கித் தின்றது. ஆத்திரத்தில் நெஞ்சு கொதித்தது. அங்கிருந்த யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. எல்லோரும் அவரைப் பரிதாபமாகவும், ஏளனமாகவும் பார்ப்பது போலொரு பிரம்மை.

 

இனி ஒருவன் அவரை மதிப்பானா? அதுவும் அவர் மனைவி, அவளும் சேர்ந்தல்லவா அவரைக் கேவலப்படுத்திவிட்டாள். நொடி கூட அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காமல் விடுவிடுவென்று அங்கிருந்து வெளியேற, சண்முகமும் இன்னும் ஒரு சில அவரின் விசுவாசிகளும் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

 

கலக்கத்துடன் பார்த்த அன்னையைக் கண்ணாலேயே அமைதிப்படுத்தினான் தூயவன்.

 

நேசன் குடும்பமும் எல்லாவற்றையும் எதிர்பார்த்துத்தான் வந்தார்கள். என்றாலும் எல்லோர் உள்ளத்திலும் கலக்கம். தம் வீட்டுப் பெண்பிள்ளையின் திருமணத்தைக் கண்ணாரக் கண்டுவிட்ட நிறைவு யார் மனத்திலும் இல்லை.

 

எல்லோரையும் தேற்றித் தைரியம் கொடுத்தது தூயவனும் குருவும்தான்.

 

சில நிமிடங்களுக்கு முன் மனைவியானவள் விழிகளில் தெரிந்த கலக்கத்தைப் படித்துவிட்டு, “எல்லாம் சொல்லித்தானே கூட்டிக்கொண்டு வந்தனான். பிறகும் என்ன? எங்கட கலியாணம் முடிஞ்சுது. நீ இப்ப யாழிசை தூயவன். என்ன நடந்தாலும் பாக்கிறதுக்கு நான் இருக்கிறன். தைரியமா இருக்கோணும். இப்ப கொஞ்சம் சிரி பாப்பம்.” என்று கேட்டு, அவள் முகத்தில் மெல்லிய புன்னகையை வரவழைத்துவிட்டே மற்றவர்களைக் கவனிக்கப் போனான்.

 

ஒரு வழியாக அங்கிருந்தவர்களின் கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லி, அவர்களின் சலசலப்பை எல்லாம் அடக்கி, காலை உணவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கலை எந்தக் குறையும் இல்லாமல் பொங்கிச் சாப்பிட்டுவிட்டு, எல்லோருமாகத் தூயவனின் வீட்டுக்குச் சென்று சேர்ந்தபோது மத்தியானமாகியிருந்தது.

 

அதுவரையில் காயப்பட்ட மிருகத்தின் நிலையில் வீட்டு முற்றத்தில் அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தார் கருணாகரன். அவரால் நடந்தவற்றிலிருந்து வெளியில் வரவே முடியவில்லை. அதுவும் தன் இன மக்களை வைத்து, இதைச் சாதிப் பிரச்சனையாக மாற்றிவிடுவார் என்று முதலே கணித்து, காவல்துறையோடு வந்த மகனின் புத்தி சாதுர்யம், அவரைச் சீண்டிவிட்டுக்கொண்டே இருந்தது.

 

அப்போதுதான் தூயவன் தாய், தாரம், அவள் குடும்பம், அவர்களின் இனசனங்கள் என்று தன் மொத்தப் பரிவாரத்தோடும் வந்தான்.

 

சட்டென்று நடை நிற்க மகனையே பார்த்தார் கருணாகரன். அவர் நெஞ்சு கொதித்தது. வார்த்தைகள் படு மோசமாக வாய் நுனி வரையில் வந்தன. ஆனாலும் அடக்கி நின்றார். மகன் முன் அவர் நல்லவர். அந்த விம்பம் உடைய விடமாட்டார். விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டியே ஆக வேண்டும்.

 

ஆனால், அவருக்குப் பதிலாகச் சண்முகம் கொதித்தார்.

 

“என்ன காரியம் செய்துபோட்டு வந்திருக்கிறாய் தூயவன்? காலம் காலமா மதிப்பும் மரியாதையுமா வாழ்ந்த மனுசர் நாங்க. எங்கட மொத்தக் குடும்பத்தின்ரயும் அடுத்த வாரிசு நீ. அப்பிடியான நீ, கைக்கையே வச்சு வளத்த அப்பாவ ஊரக் கூட்டிக் கேவலப்படுத்திப்போட்டாய் என்ன?”

 

அவரின் சீற்றத்துக்கு இரையாகாமல், “அந்தளவுக்கு நான் என்ன பிழை செய்தனான்?” என்று, முழுமையான மணக்கோலத்தில் யாழிசையோடு நின்றவன் நிதானமாகவே கேட்டான்.

 

“இன்னும் என்ன செய்யக் கிடக்கு? போயும் போயும் கேடு…” என்றவரை வேகமாக இடைவெட்டினான் தூயவன். “வார்த்தை… ஒரு வார்த்தை பிழைக்கக் கூடாது. பிறகு எல்லாமே மாறிடும்!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு, “நேசன் அண்ணா, இஞ்ச வாங்க!” என்று நேசனை அழைத்தான்.

 

அவன் பக்கத்தில் வந்து நின்றான் நேசன்.

 

“உங்களிட்ட ஆர் வந்து இசையைப் பற்றிக் கதைச்சது?”

 

“இவர்தான்.”

 

சட்டென்று தடுமாறிப்போனார் சண்முகம். அவர் பார்வை வேகமாகக் கருணாகரனைத் தொட்டு வந்தது. இதை அவர் மட்டுமில்லை கருணாகரனும் எதிர்பார்க்கவில்லை.

 

“இப்ப சொல்லுங்க. நீங்க ஆர் இசையைப் பற்றிக் கதைக்க?”

 

“இப்ப அதா முக்கியம்? இப்ப நடக்கிற பிரச்சினையைப் பற்றிக் கத தூயவன்!” பெரிய தகப்பனாக மாறி, அவனை அதட்டி அடக்க முயன்றார் அவர்.

 

“இந்தப் பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியே அதுதான். இப்ப எனக்கு நீங்க சொல்ல வேண்டியது, அப்பிடி உங்களைக் கதைக்கச் சொல்லி ஆர் சொன்னது?”

 

“தூயவன்.”

 

“உங்களைக் கதைக்கச் சொல்லி ஆர் சொன்னது?”

 

“தூயவா.” அவர் அவன் பெயரைச் சொல்லி முடிப்பதற்குள் அவர் பக்கத்தில் நின்ற அவரின் கடைசி மகனுக்குத் தூயவன் பளார் என்று கொடுத்த அறையில் அவன் கழுத்துத் திரும்பியிருந்தது.

 

“தூயவா!” நேசன் பதறிப்போனான். அதைவிட இது அடிதடியில் முடிந்துவிடுமோ என்றும் பயந்துபோனான்.

 

“எல்லாம் முடிஞ்சிது. நீ ஆசைப்பட்ட மாதிரிக் கலியாணமும் நடந்தாச்சு. இதை எல்லாம் விடு ப்ளீஸ்!” என்று கெஞ்சினான்.

 

அவனுக்கும் அவர்கள் மீது தீராக் கோபம் உண்டுதான். அதைவிடவும் இன்றுதான் திருமணமான தங்கை வாழ்க்கை இனியாவது எந்தத் துன்பங்களும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருந்ததில் தூயவனைக் கட்டுப்படுத்த முயன்றான்.

 

“கொஞ்சம் பொறுங்க அண்ணா.” என்று அவனை விலக்கிவிட்டு, “அடுத்த வீட்டுப் பொம்பிளைப் பிள்ளையைப் பற்றிக் கேவலமாக் கதைக்க வெக்கமா இல்லையோ, அதுவும் இந்த வயதில. இதுல உங்களுக்கு வேட்டி சட்டை வேற!” என்று அவரை நெருங்கினான் அவன்.

 

வேட்டியை உருவிவிடுவானோ என்று பயந்தவர் சட்டென்று கருணாகரனுக்குப் பின்னால் மறைந்தார்.

 

“இப்ப சொல்லுறன். ஆருக்கு என்ன பிரச்சினையா இருந்தாலும் என்னோடதான் கதைக்கோணும். இனியும் என்ர மனுசிக்கோ, அவளின்ர குடும்பத்துக்கோ சின்னதா ஒரு பிரச்சினை வந்தாலும் ஆர் என்ன எண்டெல்லாம் பாக்க மாட்டன். தூக்கிப்போட்டு மிதிச்சிட்டுப் போயிடுவன்.” என்று அவன் சொன்னது என்னவோ சண்முகத்துக்குத்தான். ஆனால், செய்தி கருணாகரனுக்கானதாய் இருந்தது.

 

“என்ன தம்பி, வெருட்டுறியா?” இத்தனை நாள்களாக வாயே திறக்காமல் இருந்த கருணாகரன் கேட்டார்.

 

அப்பாவும் மகனும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளப் போகிறார்களோ என்று ஒரு நொடி தேவகி நடுங்கியே போனார். என்ன இருந்தாலும் இத்தனை பேர் மத்தியில் அப்படி ஒன்று நடந்தால் யாரில் சரி பிழை என்பதைத் தாண்டி, அவர்களின் குடும்ப மானமும் மரியாதையும் போய்விடுமே!

 

ஆனால், அப்படி ஒரு மனிதன் நிற்பது போலவே காட்டிக்கொள்ளவில்லை தூயவன். அன்னை எங்கே என்று திரும்பிப் பார்த்து, “ஆரத்தி எடுத்துக்கொண்டு வாங்கம்மா!” என்றான் அவரிடம்.

 

கருணாகரனின் முகம் கறுத்துச் சிறுத்துப் போனது. கூடவே ஆக்ரோசமும். திரும்ப திரும்ப எல்லோர் முன்னும் கேவலப்படுத்துவானா?

 

“என்ன தம்பி? பெத்த பிள்ளை, என்னவோ கூடாத காலம், தலை தெரியாம ஆடுறான் எண்டு பொறுத்துப் போனா துள்ளுவியா நீ?” என்றவரை அப்போதும் பொருட்படுத்தாமல் இருந்து அசிங்கப்படுத்தினான் தூயவன்.

 

அவனின் அந்த உதாசீனம் தந்த கொதிப்பில், “தேவகி!” என்று கர்ஜித்தார் கருணாகரன்.

error: Alert: Content selection is disabled!!