ஓடி வந்து நின்ற தேவகியிடம், “அவன் மட்டும் வாறதா இருந்தா வரட்டும். கண்ட நிண்டதுகள் எல்லாம் இந்த வீட்டுக்க கால் வைக்கேலாது!” என்று சீறினார்.
தூயவனின் தாடை இறுகியது. அதுவும் பக்கத்தில் நின்ற யாழிசை, கண்ணீரை அடக்கியபடி தமையனைத் திரும்பிப் பார்க்க, அவன் கொதிப்பின் அளவு கூடிப்போயிற்று.
ஆனாலும் அடக்கி, அவள் கரத்தைப் பற்றி, நான் இருக்கிறேன் என்று உணர்த்தினான். இத்தனையும் சத்தமில்லாமல் நடந்தபோதிலும் கருணாகரனுக்குப் பதில் சொல்லாமல் அப்போதும் அன்னையைத்தான் பார்த்தான் தூயவன்.
இதற்குள் துளசி ஆரத்தித் தட்டுடன் வந்தாள்.
“இந்த வீட்டுக்கே சொந்தக்காரன் நீதானப்பு. உன்னை வராத எண்டு சொல்லுறதுக்கு எனக்கே உரிமை இல்ல. நீங்க ரெண்டு பேரும் வலது காலை எடுத்து வச்சு உள்ளுக்கு வாங்கோ!”
என்று அவர்களுக்கு ஆரத்தி எடுத்து, யாழிசையின் குடும்பத்தையும் சேர்த்து வீட்டினுள் அழைத்துக்கொண்டு போனார் தேவகி.
கருணாகரன் அப்படியே நின்றுவிட்டார். அவர் சொல்லுக்கு அடுத்த வார்த்தை பேசாத மனைவியின் பேச்சில் அவருக்குப் பேச்சற்றுப் போனது.
கருணாசாரணைக் கடந்து அந்த வீட்டுக்குள் நுழைகையில் கோகிலா குடும்பத்துக்குப் பெரும் நடுக்கம்தான். ஆனாலும், உள்ளே சென்றார்கள்.
மாதவியால் ஓடியாடி ஒன்றும் செய்ய முடியாமல் போனாலும், துளசியோடு அங்கிருந்த அவர்களின் உறவுப் பெண்களையும் சேர்த்துக்கொண்டு யாருக்கும் ஒரு குறை இல்லாதபடிக்குக் கவனித்துக்கொண்டார்.
தூயவனும் கறி விருந்துக்கான வேலைகளை நிறுத்த விடவில்லை. வீட்டில் வைத்து மணமக்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகள், சுவாமி கும்பிடுவது எல்லாம் முடிந்ததும் வந்த சனங்களைப் போக விடாமல், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வேலையில் இறங்கிவிட்டான்.
முதல் கொஞ்ச நேரத்துக்குச் செய்வதறியாது நின்றாலும் அதன் பிறகு நேசனும் தயங்கவில்லை. குருவோடு சேர்ந்து தூயவனுக்குத் தோள் கொடுத்தான்.
யார் எப்படித் தலைகீழாக நின்றாலும் யாழிசை இனி அந்த வீட்டு மருமகள். அப்படி இருக்க அவன் தயங்கி ஒதுங்கி நின்றால் அதுவே கருணாகரனுக்கு ஏற்றமாகிவிடும். அதற்கு விடக் கூடாது என்கிற முடிவில், அவன் தங்கையின் திருமண நாள் என்கிற எண்ணத்தோடு வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.
அதன் பிறகு நளினி, கோகிலா, இரு தரப்பு உறவுகள் என்று எல்லோருமே மெல்ல மெல்லச் சேர்த்துக்கொண்டனர்.
யாழிசைக்குத்தான் என்ன செய்வது என்று தெரியாத நிலை. மிதிலன் மட்டும்தான் சின்ன ஆறுதல். அதுவும் இவளைத் தம் வீட்டில் கண்டதும் ஓடி வந்து, “இசை, நாங்க இசுக்கூட்டில போவமா?” என்று ஆவலாகக் கண்கள் இரண்டையும் விரித்து வினவியவனின் மழலையில் அவள் முகத்தில் புன்னகை.
அவன் பின்னால் ஓடி வந்த சுரபிக்கும் அப்படி ஒரு சிரிப்பு.
“அது ஸ்கூட்டி.” என்று சொல்லிக்கொடுத்தாள்.
“ச்கூட்டி.”
“இல்ல. அப்பிடி இல்ல. ஸ்…கூ…ட்டி.”
“ஷ்…க்கூ…ட்டி”
சின்னவர்களின் நேரம் ஸ்கூட்டியை படிப்பதில் கழிய, அவள் பொழுது அவர்களோடு கொஞ்ச நேரம் கரைந்தது.
மணப்பெண்ணாகிப் போனதில் அவளை ஒரு இடத்தில் அமர்த்தியிருந்தனர். நேரா நேரத்துக்கு அருந்த, உண்ண என்று ஏதோ வந்துகொண்டே இருந்தது. கடைசியில் அவளுக்கு வந்த குளிர்பானத்தை அருந்த முடியாமல், சுரபியின் கையில் கொடுத்து, “இதக் கொண்டுபோய்த் தூயவன் மாமாட்டக் குடுத்துக் கட்டாயம் குடிக்கட்டாம் எண்டு அத்தை சொன்னேனாம் எண்டு சொல்லுங்கோ.” என்று சொல்லி அனுப்பிவிட்டாள்.
அவளும், “மாமா, இந்தாங்க ஜூஸ். மறக்காமக் குடிக்கட்டாம் எண்டு அத்த சொன்னவா.” என்றுவிடவும் அந்த நொடியில்தான் அவர்களுக்குத் திருமணமாகிவிட்டதன் இனிமையை உணர்ந்தான் தூயவன்.
“சரி, நீங்க போங்கோ.” என்று அவளை அனுப்பிவிட்டு, குளிர்பானத்தோடு வீடு நோக்கி நடந்தான்.
அங்கே சோபாவில் தனியாக அமர்ந்திருந்தாள் யாழிசை. இவனைக் கண்டதும் அவள் பார்வை அவன் கையில் இருந்த குவளைக்குத்தான் சென்றது. கண்ணோரங்கள் நகைப்பில் சுருங்க அவளருகில் வந்து அமர்ந்து, பாதியை அருந்திவிட்டு மீதியை அவளிடம் நீட்டினான் அவன்.
அன்று காலையிலிருந்து இருந்த மனநிலை மொத்தமாய் மாறிவிட, இனிமையான வெட்கம் ஒன்று யாழிசையின் உள்ளத்தைச் சூழ்ந்தது. அவனையும் கோப்பையும் மாறி மாறிப் பார்த்தாள்
“ம்!” திரும்பவும் நீட்டினான் அவன்.
அவனைப் பாராமல் வாங்கிப் பருகினாள் அவள். குளிர்பானம் குளிர்ந்ததோ இல்லையோ. அவன் அருந்திவிட்டுத் தந்தது என்கிற அந்த நினைப்பு அவளுக்குள் ஜில்லிட்டுக்கொண்டு இறங்கிற்று.
அவன் விழிகள், மணப்பெண்ணின் முழு அலங்காரத்தில், அவன் அணிவித்த தாலியோடும் தீட்டிவிட்ட குங்குமத்தோடும் நெஞ்சை நிறைத்தவளை வருடின.
அன்றைய நாளை மொத்தமாகத் திட்டமிட்டவன் அவன்தான். அதன்படிதான் அத்தனையையும் நடத்தியும் முடித்தான். ஆனாலும் ஆசைப்பட்டவளோடான திருமணத்தின் ஒரு நொடியைக் கூட ரசித்துச் செய்யவில்லை. வெளியில் காட்டாவிட்டாலும் தந்தையும் அவரைச் சார்ந்தவர்களும் என்ன செய்வார்களோ என்கிற அழுத்தம் இருந்துகொண்டேதான் இருந்தது.
மனைவி குளிர்பானம் கொடுத்துவிடும் வரையிலும் கூட அது இருந்துகொண்டேதான் இருந்தது. ஆனால் இப்போது? மேகத்தில் மிதக்கும் உணர்வு. அந்தளவில் மனத்துக்குச் சுகம் சேர்த்தாள் மனைவி.
“தூயவா!” அவனின் விடாத பார்வை தந்த இனிய படபடப்பில் மெல்லிய குரலில் அழைத்தாள் யாழிசை.
அவன் உதட்டில் அழகான புன்னகை. “என்ர இசையரசி கண்ணுக்கு நிறைஞ்சு தெரியிறாளே. நான் என்ன செய்ய?” என்றான் அவளிடமே.
“இந்த கப்பை கொண்டுபோய் வச்சிட்டு வேலைய பாருங்கோ.” பொய்யாக அவனை விரட்டினாள்.
அவனுக்கும் உண்மையில் அங்கே கவனிக்கவேண்டி இருந்தது. “என்ன எண்டாலும் துளசியக் கூப்பிடு என்ன.” என்று அவளிடம் சொல்லிவிட்டு எழுந்துபோனான்.
பகல் உணவு தயாராகி முடிய கொஞ்சம் நேரம் பிந்தித்தான் போனது. ஆனாலும் யாரையும் விடாமல் வந்த எல்லோருக்கும் வயிறு நிறைய உணவு கொடுத்துத்தான் அனுப்பிவைத்தான் தூயவன். எல்லாவற்றையும் ஒதுக்கி, வேலைகளையெல்லாம் முடித்தபோது இரவாகியிருந்தது.
அதுவரையில் நேசனின் குடும்பம் அங்கேதான் இருந்தார்கள்.
சமையல் வேலை ஆரம்பித்தபோதே அறைக்குள் புகுந்துகொணட கருணாகரன், அது வரையில் வெளியில் வரவும் இல்லை, கொடுத்த உணவைச் சாப்பிடவும் இல்லை. தேவகி மனம் கேளாமல் திரும்ப திரும்பக் கொண்டு போனபோது, மனம் நோகும் வார்த்தைகளால் அவரைக் காயப்படுத்தி அனுப்பியிருந்தார். அதன் பிறகு அவரும் போகவில்லை.
ஒரு வழியாக வந்தவர்கள் எல்லோரும் புறப்பட்டு, இரு தரப்புக் குடும்பங்கள் மட்டுமே என்றளவுக்குச் சுருங்கிய பிறகு, மனம் முழுக்க நிறைந்து கிடந்த தவிப்பும் கண்ணீருமாக நேசனின் குடும்பம் புறப்பட ஆயத்தமாகியது.
ஒரே ஊர்தான். நினைத்த நேரத்தில் பார்க்க முடியும். ஆனாலும் இனி அவள் அவர்களோடு இருக்க மாட்டாள். அதைவிட அவள் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்கிற கலக்கம் இன்னுமே எல்லோருக்குமே இருந்தது.
தேவகியும் அவர்களின் மனத்தில் இருக்கும் கவலையை அறியாமல் இல்லை. அதில், “எல்லாரும் பயந்தது இண்டைய நாளை நினைச்சுத்தான். அதையே நல்லபடியா கடந்து வந்திட்டம். இனி ஒண்டும் நடக்காது. இதச் சும்மா உங்கள தேற்றுறதுக்காக வாய் வார்த்தையா சொல்லேல்ல. உண்மையாத்தான் சொல்லுறன். கவலைப்படாம போயிட்டு வாங்கோ. அதே மாதிரி, ஆர் என்ன சொன்னாலும் ஒதுங்கி இருந்திடாதீங்கோ. இது உங்கட வீட்டுப் பிள்ளையின்ர வீடு. உரிமையா வந்து போகோணும்.” என்று இதமாகச் சொல்லி எல்லோரையும் அனுப்பிவைத்தார்.
யாழிசையும் கண்ணீரும் அணைப்புமாக விடைகொடுத்தாள்.

