அத்தியாயம் 51
நேசன் வீட்டினரிடம் சொன்னதுபோல் அன்றைய நாளை நினைத்துத் தேவகி அம்மா மிகவுமே பயந்துகொண்டுதான் இருந்தார். வாழ்க்கையில் முதன் முதலாகக் கணவரை மீறி ஒன்றைச் செய்கிறாரே.
அவரும் சாதி பார்ப்பவர்தான். தம் வசதிக்கு ஏற்ற இடத்தில் மகனுக்குப் பெண்ணெடுக்க ஆசைப்பட்டார்தான். அதேபோல், மகன் யாழிசையை விரும்புகிறான் என்று அறிந்த நேரம் கோபப்பட்டதும் உண்மை.
ஆனால், சாதிதான் முக்கியம் என்றெண்ணி, இன்னோர் வீட்டுப் பெண்ணை இத்தனை தூரத்துக்கு அவமானப்படுத்தி, கேவலப்படுத்தி, காயப்படுத்திப் பார்க்குமளவுக்குச் சாதி வெறி அவருக்குள் இருந்ததில்லை.
அவர்கள் வேறு நாம் வேறு. சாதாரணமாகக் கலந்து பழகுவது வேறு. திருமணம் என்று வருகையில் நாம் நம்மினத்தில் கட்டி வாழ்ந்தால்தான் அது நிலைக்கும், சுமூகமாகப் போகும். அதுதான் பெருமையும் என்று நினைப்பார். இன்றும் அவரின் இந்த எண்ணங்கள் மாறிவிட்டதா என்றால் இல்லைதான்.
அதற்கென்று மகா அநியாயமாகக் கணவர் செய்த வேலைகளுக்கு அவரால் துணை போக முடியவில்லை. தானாவது நியாயமாக நடக்க வேண்டும் என்று எண்ணித்தான் அத்தனைக்கும் துணிந்தார்.
கூடவே ஒரு கோபமும். இத்தனை வருடங்கள் வாழ்ந்து, இரண்டு பிள்ளைகளைப் பெற்று, அவர்களை வளர்த்து, அவர்களுக்கும் கட்டிக்கொடுத்து, ஒரு பேரப்பிள்ளையைக் கண்டு என்று அந்த மனிதரோடு அவர் பயணித்து வந்த தூரம் என்பது நெடுந்தூரம்.
அந்த நெடுந்தூரப் பயணத்தில் தன் கெட்ட முகத்தை மறைத்து, இவரோடு அவரால் வாழ முடிந்திருக்கிறது என்றால், ‘வாழ்ந்த மொத்த வாழ்க்கையிலும் ஏமாற்றப்பட்டு இருக்கிறேனா?’ என்கிற கேள்வி, அவரை அடியோடு அடித்துச் சாய்த்திருந்தது.
கூடவே ஒரு தைரியமும். கணவனையே அடக்கி வைக்கக் கூடிய அளவு வல்லமை கொண்ட மகன் இருக்கிறான் அவருக்கு. பிறகும் ஏன் அவர் அடங்கி இருக்க என்றுதான் அத்தனையையும் செய்தார்.
இப்போது பிள்ளைகளை அவரவர் துணைகளோடு மேலே அனுப்பிவிட்டு அறைக்கு வந்தார். பயம் இல்லாமல் இல்லை. என்னவோ சிங்கத்தின் குகைக்குள் நுழையும் உணர்வுதான். அங்கே கருணாகரன், கட்டிலில் நீட்டி நிமிந்து படுத்திருந்தார்.
இவர் அறையின் கதவைச் சாற்றியதுதான் தாமதம், படக்கென்று எழுந்தமர்ந்து, “என்ன, மகன் தலையெடுத்திட்டான், இனியும் இவருக்கு அடங்கி இருக்கத் தேவையில்லை எண்டு நினைச்சிட்டியோ?” என்று சீறினார்.
ஒருகணம் நெஞ்சு பயத்தில் சில்லிட்டுப் போனது. ஆயினும், தேவகி வாயே திறக்கவில்லை. கொண்டு வந்த தண்ணீர் போத்தலை அங்கே வைத்துவிட்டு, இரவு உடைக்கு மாறினார். அப்படியே விளக்கையும் அணைத்துவிட்டுச் சென்று படுத்துக்கொண்டார்.
“நான் உன்னோட கதைச்சுக்கொண்டு இருக்கிறன் தேவகி!”
“…”
“அம்மாவும் மகனும் என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க? அவன் எவளோ ஒருத்திய இழுத்துக்கொண்டு வாறான். நீயும் ஆராத்தி எடுக்கிறாய். வெக்கமா இல்லையோ? இத்தின வருசம் எல்லாத்தையும் கட்டிக் காத்து உழைச்சுத் தர, சுகமா வாழ்ந்துபோட்டு இண்டைக்கு எனக்கே திருப்பி அடிக்கிறீங்களா?”
“…”
“தேவகி!” பொறுமை பறந்துவிட தேவகியின் கையைப் பிடித்து உலுக்கினார் கருணாகரன்.
மெல்ல எழுந்து அமர்ந்த தேவகி, “எனக்குக் கொஞ்ச நாளா நிறைய வேல. உங்களுக்கே தெரியும். ஆன நித்திரையும் இல்ல. நான் ஒண்டும் 20 வயசுக் குமரி இல்ல. இப்பிடி இரவிரவா முழிச்சிருந்திட்டு அடுத்த நாளும் தெம்பா ஓட. எனக்குப் படுக்கோணும். தேவையான ஓய்வும் நிம்மதியும் வேணும். என்னைப் படுக்க விடுங்க.” என்றார் கணவரிடம்.
“நான் கேட்ட கேள்விக்குப் பதிலச் சொல்லிப்போட்டுப் படு நீ.”
“என்ன சொல்லோணும்? அம்மா எனக்கு இசையப் பிடிச்சிருக்கு, கட்டி வைங்க எண்டு தம்பி கேட்டான். எனக்கு எல்லாத்தையும் விட என்ர பிள்ளையின்ர சந்தோசம் முக்கியமாத் தெரிஞ்சது. அதால அவன் கேட்டதைச் செய்து குடுத்திருக்கிறன். அவ்வளவுதான். வேற என்ன கேக்கிறதா இருந்தாலும் தம்பி மேலதான் இருக்கிறான், அவனிட்ட போய்க் கேளுங்க.” என்றுவிட்டுப் படுத்துக்கொண்டார் அவர்.
*****
தூயவன் யாழிசையைத் தன் அறைக்கு அழைத்து வந்திருந்தான். நடுக்கதவு கண்ணாடியோடு கூடிய பெரிய அலமாரி, ஒருவர் தாராளமாகப் படுக்கக் கூடியதான கட்டில், இன்னொரு பக்கச் சுவரோரமாக ஒரு மேசை நாற்காலி என்று, அளவான பொருள்களோடு கச்சிதமாக இருந்தது அவன் அறை.
“அப்பாக்குத் தெரியாம எல்லா ஏற்பாடும் செய்தபடியா அறையில ஒண்டும் மாத்தேல்ல. எல்லாமே நான் பவிச்ச மாதிரியே இருக்கு. இனிப் பெரிய கட்டில் மாத்துவம். வேற ஏதும் வேணுமெண்டாலும் சொல்லு, செய்யலாம்.” அவன் என்னவோ எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருக்கும் அறையைக் கண்டு குறையாக ஏதும் நினைப்பாளோ என்றுதான் சொன்னான்.
ஆனால், வந்ததும் வராததுமாக அவன் கட்டிலைப் பற்றிப் பேசியது அவள் முகத்தைச் சூடாக்கிற்று. அவ்வளவு நேரமாகத் தன் குடும்பத்தினரிடம் சிக்குப்பட்டு நின்ற அவள் சிந்தை கூட மாறிற்று.
அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து முகத்தைத் திருப்பினாள். அங்கே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த புகைப்படம் ஒன்று பார்வையில் பட்டது.
அதில் பள்ளிக்கூடச் சீருடையில் தூயவனும் குருவும் ஒருவர் தோளில் மற்றவர் கையைப் போட்டபடி நின்றிருந்தனர். இருவர் முகத்திலும் அடங்காத சிரிப்பு.
“அண்ணா உங்களுக்கு நிறைய உதவி என்ன?” பார்வை புகைப்படத்திலேயே இருக்கச் சொன்னாள் யாழிசை.
அவளைப் பின்னிருந்து அணைத்து, “உதவி எண்டுறதை விட அவன் இல்லாட்டி நான் இல்ல இசை. அவன்தான் எனக்கு எல்லாம். அவன் இருக்கிறான் எண்டுற தைரியத்திலதான் நிறைய விசயங்களில யோசிக்காம இறங்குவன்.” என்றான் அவன்.
தேகம் கணவனின் கதகதப்பைச் சுகமாக உள்வாங்க, மெல்லத் திரும்பி அவன் முகம் பார்த்தாள் யாழிசை.
“அவனைப் பற்றி இப்பிடிச் சொல்லுறன் எண்டு கோவமா உனக்கு?”
மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டு, “எனக்கே தெரியும்!” என்று புன்னகைத்தாள்.
அவன் அணைப்பு இலேசாக இறுகிற்று. அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து இளைந்தபடி துளசி மீதான குருவின் நேசத்தை, அதை வெளியில் காட்டாமல் அவன் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டதை, அதன் பின் துளசியின் திருமணம், அருள் செய்த நம்பிக்கைத் துரோகம், பிரிவு, அதன் பிறகு குருவைத் தான் கண்டுகொண்டது, அவனிடம் நேராகவே கேட்டு மணமுடித்து வைத்தது என்று அனைத்தையும் சொன்னான்.
நம்ப முடியா வியப்புடன் விழிகளை விரித்தாள் யாழிசை.
“முதல் எனக்கு அவன் அவளை விரும்பினது தெரியாது இசை. தெரிஞ்சிருக்க முதலே அவனுக்கு அவளைக் கட்டிக் குடுத்திருக்கலாம். யோசிச்சுப் பார், மனசு முழுக்க நிறைஞ்சு இருக்கிறவள் இன்னொருத்தனைக் கட்டி, கண்ணுக்கு முன்னாலேயே வாழுறதப் பாக்கிறது எவ்வளவு பெரிய நரகம் எண்டு. அதை நான் அவனை அனுபவிக்க விட்டுட்டன். இதைப் பற்றி அவனிட்ட நான் கதைச்சது இல்ல. ஆனா அந்தக் கவலை எனக்கு எப்பவும் இருக்கு.” யாரிடமும் திறக்காத மனத்தை அவளிடம் திறந்தான் தூயவன்.
அவன் கைகளுக்குள்ளேயே திரும்பி அவன் முகம் பார்த்தாள். இப்போதும் அந்த வேதனையைச் சுமந்து நின்றான் அவன். அவன் கன்னத்தில் தன் ஒற்றைக் கரத்தை வைத்து, “சிலது நடக்கோணும் எண்டு இருக்கும். அதத் தவிர்க்கவே ஏலாது. அப்பிடித்தான் போல இதுவும். நீங்க தெரிஞ்சுகொண்டு எதையும் செய்யேல்லத்தானே. அதாலை கவலைப்படாதீங்க.” என்று தேற்றினாள்.
“அதுதான் கவலை. எப்பிடி அப்பிடி அவனைக் கவனிக்காம விட்டன் எண்டு. ஆனா இப்ப ரெண்டு பேரும் அவ்வளவு சந்தோசமா இருக்கினம்.” என்றான் முகம் மலர.
அவர்களுக்குள் இருக்கும் அந்நியோன்யத்தை அவளும் கவனித்திருக்கிறாள். அதில் ஆமென்று தலையை அசைத்தாள்.
அப்படி, சிறிதாய்த் தலையை அசைத்து, அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்ட விதம் ஈர்க்க, “என்ர இசையரசி இந்தத் தூயவனுக்குச் சொந்தமானத்தில சந்தோசமா இருக்கிறாளா?” என்றான் அவள் முகத்தையே பார்த்து.
அவள் உதட்டில் சின்ன முறுவல். “சந்தோசமா மட்டுமில்ல நிம்மதியாவும் இருக்கிறன்.” அவன் இடுப்பைத் தானும் கட்டிக்கொண்டு அவன் முகம் பார்த்துச் சொன்னாள்.
அவன் முகம் மலர்ந்து போயிற்று. “உண்மையாவா?” என்றான்.
“ஏன் இப்பிடிக் கேக்கிறீங்க?” இதில் நம்பாமல் இருக்க என்ன இருக்கிறது என்கிற தொனியில் வினவினாள்.
“இல்ல, இண்டைக்கு விடிஞ்சதில இருந்து ஒரே பரபரப்பாத்தான் இந்த நாளே போனது. சண்முகம் பெரியப்பா, அப்பா எண்டு அடுத்தடுத்துப் பிரச்சினைகளும் நடந்ததால பயந்திட்டியோ எண்டு நினைச்சன்.”
“பயமாத்தான் இருந்தது. அதுவும் அந்த அண்ணாவை நீங்க அறைஞ்சதப் பாத்து எனக்குக் கைகால் எல்லாம் நடுங்கவே தொடங்கிட்டுது. ஆனாலும் நீங்க இருக்கிறீங்க எண்டுற தைரியமும் இருந்தது.” என்று சொன்னவள் முகத்தையே இமைக்காது பார்த்தவன் அவளை அப்படியே அள்ளிக்கொண்டுபோய்க் கட்டிலில் கிடத்தினான்.
அவள், பயமும் இனிய படபடப்புமாக அவனைப் பார்த்தாள். அவனுக்கும் அந்த நிமிடமே அவளை அள்ளிக்கொள்ள ஆசைதான். ஆனால், இன்று இருவருமே மிகவும் களைத்திருந்தனர். அவளும் பாவம். என்ன அவசரம் என்று நினைத்தான்.
விளக்கணைத்து, அவளருகில் தானும் வந்து சரிந்து, அவளைத் தன் கைகளுக்குள் கொண்டு வந்து, “முதல் நிம்மதியா நித்திரை கொண்டு எழும்பு. எல்லாத்தையும் ஆறுதலா பாக்கலாம் என்ன?” என்றான் அவள் கன்னம் வருடி.
ஒன்றும் சொல்லாமல் கணவனையே கண்ணிமைக்காமல் பார்த்தாள் யாழிசை.
அப்படி, அவளிடமிருந்து பதில் வராமல் போக, அவள் எதிர்பார்ப்பு வேறோ என்றெண்ணி, “இசை?” என்றான் கேள்வியாக.
அவளும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “உங்களை இன்னுமின்னும் பிடிக்குதே. என்ன செய்வம்?” என்றாள் அவனிடமே.
இனிமையாய் அதிர்ந்த தூயவன் தன் பல் வரிசை தெரியச் சிரித்தான். மனைவியின் அணைப்பில் சுகமாய் அடங்கியபடி, “அந்தளவுக்கு இப்ப நான் என்ன செய்திட்டனாம்?” என்று கேட்டான்.
அவள் அதற்குப் பதில் சொல்லவில்லை. மாறாக விடிவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தெரிந்த அவனின் இணைந்திருந்த புருவங்களைத் தன் ஒற்றை விரலினால் வருடினாள். புருவ முடிகளை மெலிதாய் நீவி விட்டாள்.
தூயவனின் மொத்த மனநிலையும் மாறிற்று. அவளின் வருடல் அவன் உயிரையே தீண்டிற்று. விழிகளை மூடி அந்த உணர்வை உள்வாங்கியபடி, “இசை!” என்றான் தன் ஆழ்ந்த குரலில். அவன் கரங்கள் அவளை இன்னும் தன்னிடம் நெருக்கமாகக் கொண்டு வந்தன.
அவளும் தடுக்கவில்லை. அவன் அணைப்புக்கு ஏற்ப வளைந்து கொடுத்தபடி, “இந்தப் புருவம் ரெண்டும் இப்பிடிச் சேந்திருக்கிறது எனக்குப் பிடிக்காது தெரியுமா?” என்றாள்.
அவனுக்கு இது தெரியாதே. அதில் சிரித்தான். “அந்தளவுக்கு அது உன்ன என்ன செய்தது?”
“என்ன செய்ததா? இதுதான் என்னை எப்பவும் வெருட்டும், பயப்பிடுத்தும், உங்களை நேரா நிமிந்து பாக்க விடாமச் செய்றதும் இதான். ஆனாலும் கொஞ்சமே கொஞ்சம் இது இப்பிடிச் சேர்ந்து இருக்கிறது பிடிக்கும்.”
அநாவசிய வெட்கமோ கூச்சமோ இல்லாமல், தன் அணைப்புக்குள் அடங்கி, இயல்பாக நெருக்கம் காட்டிக் கதை பேசியவளின் இயல்பு உள்ளத்தைக் கவர, “வேறென்ன என்னட்ட உனக்குப் பிடிக்கும், பிடிக்காது எண்டு சொல்லு.” என்றான் அவன்.
“உங்களப் பிடிக்காது, உங்கட கோபம் பிடிக்காது, நீங்க முறைச்சுப் பாக்கிறது பிடிக்காது, நீங்க வாகனம் ஓட்டுற வேகம் பிடிக்காது…”
“பிடிச்சதும் ஏதாவது சொல்லடி!”
“அதான் யோசிக்கிறன். அப்பிடி ஒண்டும் இருக்கிற மாதிரித் தெரியேல்ல!” என்றதும் முறைத்தான் அவன்.
“திமிர் பிடிச்சவளே. என்னட்ட பிடிச்சது ஒண்டுமே இல்லையா உனக்கு? ஆனா, எனக்கு உன்னட்டப் பிடிச்சது நிறைய இருக்கு, சொல்லவா!” அவளைத் திருப்பிப் போட்டு அவன் சொன்ன விதமே அவளுக்குள் இனிமையாகக் கலவரமூட்டின.
“படுப்பம் எண்டு சொன்னீங்க.” அவனைப் பாராமல் முணுமுணுத்தாள்.
“நித்திரை வருதா உனக்கு?” அவள் உதட்டோடு உதடு உரச வினவினான்.
ஒற்றை அணைப்பில் உணர்வுகள் மொத்தத்தையும் தூண்டி விட்டுவிட்டு இப்படிக் கேட்பவனிடம் என்ன சொல்வது? உதட்டைப் பற்றியபடி அவள் முகம் திருப்பப் போக, அதற்கு விடாமல் தடுத்து, அவள் இதழ்களைத் தான் பற்றிக்கொண்டான்.
‘தூயவா!’ அவள் உள்ளம் அவன் தரும் சுகத்தில் கிறங்கித் தவித்தது.
அணைப்பு இறுக, ஒருவர் மற்றவருள் புதைய, அவளை ஆரத்தழுவி அவன் தந்தது ஆழ்ந்த முத்தம். அவள் உடல் தொட்டு, உயிர் தீண்டி, உணர்வுகளைச் சீண்டிவிட்டுவிட்டுச் சுகம் கண்டான்.
இனி அவனால் முடியாது. அவனுக்கு இது மட்டுமே போதாது. வயதும் வாலிபமும் அவளைக் கேட்டன. மெல்ல விலகி அவள் முகம் பார்த்தான். அவன் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் முகம் திருப்பினாள் அவள்.
“உன்னட்ட என்ன எல்லாம் பிடிக்கும் எண்டு சொல்லவா?” முகத்தில் இரகசிய முறுவல் இழைந்தோட அவள் காதுக்குள் கிசுகிசுத்தான்.
“தூயவா!”
“இல்ல, என்ன எல்லாம் எனக்கு உன்னட்ட வேணும் எண்டு சொல்லவா?”
“தூயவா!”
அவள் அழைப்பு அவனைத் தூண்டிவிட்டது. கணவனின் காதோர இரகசியப் பேச்சுகள் அவளைச் சினுங்க வைத்தன. அதன் பிறகு அவன் தயங்கவில்லை. அவளை அள்ளியணைத்து ஆரத்தழுவினான்.
மனைவியின் வனப்பும் வாளிப்பும் அவனை மயக்கியது என்றால் கணவனின் ஆளுமையும் ஆளுகையும் அவளைக் கிறங்கடித்தன.

