கடன் அன்பை முறிக்கும் – 53

அத்தியாயம் 53

 

 

பகல் உணவு முடிந்த கையுடன் குரு குடும்பம் புறப்பட்டுவிட, தூயவனும் யாழிசையும் ஓய்வெடுக்க அவள் அறைக்கு வந்தார்கள்.

 

கட்டில், மெத்தை, அலமாரி என்று எல்லாம் புதிதாகப் போடப்பட்டு, யாழிசைக்கு அவள் அறையே வேறாகக் காட்சி தந்தது. இதையெல்லாம் ஒற்றை இரவுக்குள் எப்படி ஆயத்தம் செய்தார்கள் என்கிற ஆச்சரியத்துடன் விழிகளைச் சுழற்றினாள்.

 

“உன்ர அறைய நான் புதுசா பாத்தா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. நீயே இப்பிடிப் பாத்தா என்ன கதை இது?” சின்ன சிரிப்புடன் கேட்டபடி தானும் உள்ளே வந்தான் தூயவன்.

 

“இல்ல, நேற்று விடிய வரைக்கும் இதே அறைலதான் இருந்தனான். அப்ப இந்தக் கட்டில், அலுமாரி எல்லாம் இருக்கேல்ல. அதான்.”

 

தூயவனுக்குமே அன்று அவன் பார்த்த அறையாக அது இல்லை என்று முதல் பார்வையிலேயே பிடிபட்டிருந்தது. கூடவே காரணமும். அதில், “கலியாணம் முடிஞ்ச பிறகு இஞ்ச வருவம் எண்டு தெரியும்தானே. அதால நேற்றே எல்லாத்தையும் யோசிச்சு, வேற ஆரையும் கொண்டு நேசன் அண்ணா இதையெல்லாம் செய்திருப்பாரா இருக்கும் இசை.” என்றபடி அறையின் கதவைச் சாற்றினான் அவன்.

 

அவன் அப்படிக் கதவைச் சாற்றவும் வெளியே இருக்கும் தன் குடும்பம் என்ன நினைக்குமோ என்று அவளுக்குக் கொஞ்சம் சங்கடமாயிற்று. இது வரையில் உடை மாற்றுகிற பொழுதுகளைத் தவிர்த்து அவள் அறையின் கதவு இப்படிச் சாற்றப்பட்டதே இல்லை.

 

 

“திறந்து வச்சுக்கொண்டு நாங்க இருந்தாத்தான் அவேக்குச் சங்கடமா இருக்கும் இசை.” அவள் மனத்தைக் கண்களிலேயே படித்த தூயவன், அணிந்திருந்த சேர்ட்டை கழற்றி அங்கிருந்த கொழுவியில் மாட்டியபடி சொன்னான்.

 

அதையும் அவளால் மறுக்க முடியவில்லை. ‘உள்ளுக்குக் கூட்டிக்கொண்டு போய்த் தம்பியப் படுக்க விடுங்கோ!’ என்று சொல்லி அனுப்பி வைத்ததே அவள் அன்னைதான். ஆனாலும்…

 

அவன் வீட்டில் இப்படி அவள் உணரவில்லை. அங்கே மாடியில் நடுவில் வரவேற்புப் பகுதி போன்று ஒன்று இருக்க, ஒரு பக்கம் துளசியின் அறையும் அதன் எதிர் பக்கம் இவன் அறையும் என்பதில் எந்தச் சங்கடமும் இருக்கவில்லை.

 

கடந்தது ஒரு இரவுதான். ஆனாலும் கணவனின் அறையில் அவன் கைகளுக்குள் இருக்கையில் பாதுகாப்பாகவும், அவளுக்கான இடத்தில் அவள் இருப்பது போலவும்தான் உணர்ந்திருக்கிறாள். அந்த அறையைத் தாண்டி வெளியே வருகையில்தான் என்னவோ சிங்கம் புலிகள் நிறைந்து கிடக்கும் காட்டுக்குள் காலை வைப்பது போலிருக்கும்.

 

ஆனால் இங்குக் கதவைச் சாற்றிவிட்டு உள்ளே இருப்பதும் சங்கடம்தான். திறந்துகொண்டு இருப்பதும் சங்கடம்தான். இதில் அவன் வேறு வெள்ளை பெனியன், ஜீன்ஸ், அதை இடையோடு கவ்வி நின்ற பெல்ட்டு என்று நிற்க, அவள் உள்ளுக்குள் தடுமாறினாள்.

 

இல்லற இரவொன்று அவர்களுக்குள் கடந்துபோயிருந்தாலும் அத்தனையும் இரவின் இருளில் அரங்கேறியிருக்க இப்போது அவன் விழிகளை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் நின்றாள்.

 

அந்தப் புதுக் கட்டிலில் முதுகுக்கு ஒரு தலையணையைக் கொடுத்து அமர்ந்த தூயவன், அவளையும் தன் கைகளுக்குள் கொண்டு வந்து, “என்ன குடையுது இந்த மண்டைக்க?” என்றான் அவள் தலையைத் தொட்டுக்காட்டி.

 

“இல்ல, அங்க உங்கட வீட்டில தெரியேல்ல. இஞ்ச ஒரு மாதிரி இருக்கு. அதான்…”

 

“இவ்வளவு காலமும் சுரபி மாதிரி நீயும் ஒரு பிள்ளையா இந்த வீட்டில இருந்திருக்கிறாய். அது வேற. இப்ப உனக்குக் கலியாணம் ஆயிற்றுது. அதால இது இப்பிடித்தான் நடக்கும். ஏன் நாளைக்கு சுரபி வளந்து, கலியாணம் நடந்தாலும் இதேதான் நடக்கும். நீயே சொல்லு, இந்த வீடு முழுக்க சுதந்திரமா இருந்த நீ, உன்ர அண்ணா அண்ணின்ர அறைக்க அவே கூப்பிடாமயோ, கதவைத் தட்டாமயோ போயிருக்கிறியா?”

 

“அச்சோ நானா போனதே இல்ல. அண்ணியா எதுக்கும் கூப்பிட்டா மட்டும்தான் போறனான்.” அவன் கைக்குள் இருந்தவள் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்துகொண்டு சொன்னாள்.

 

“ஏன்?”

 

“அது அண்ணா அண்ணி ரெண்டு பேரும் மனுசன் மனுசி.”

 

“அப்பா நாங்க?” என்றான் சின்ன சிரிப்புடன்.

 

அதுதானே! அதுவும் புதிதாகத் திருமணமானவர்கள். இப்போது அவளால் அவன் பார்வையைத்தான் எதிர்கொள்ள இயலவில்லை.

 

“என்ர இசையரசி வெக்கப்படுறாளா?” மெல்லிய குரலில் கேட்டபடி அவளைத் தன் அணைப்புக்குள் கொண்டு வந்தவன் அவள் இதழ்களில் ஆழ்ந்து முத்தமிட்டான். அதற்கு மேலே போகும் எண்ணம் இல்லைதான். அதே நேரம் ஒற்றை முத்தத்தோடு அவளிடமிருந்து விலகவும் முடியவில்லை. அவளைத் தன் இறுக்கமான அணைப்பில் வைத்தபடியே சத்தமில்லாமல் கொஞ்சித் தீர்த்தான்.

 

சுரபி பள்ளிக்கூடத்தால் வரும்போது, அப்படி அவர்கள் சாற்றப்பட்ட அறைக்குள் இருப்பதில் யாழிசைக்கு விருப்பமில்லை. அவள் வரும் நேரம் தெரியுமாதலால் தூயவனின் கைப்பேசியில் அலாரம் வைத்துவிட்டு, அவனோடு சேர்ந்து தானும் உறங்கிப்போனாள்.

 

அலாரச் சத்தத்தில் தூயவனும் விழித்து, “என்னம்மா நேரமாயிற்றுதா?” என்றான் உறக்கம் விலகாக் குரலில்.

 

“இல்ல இல்ல. நீங்க படுங்க. நான் தேத்தண்ணி கொண்டு வாறன்.” என்றுவிட்டு எழுந்து வெளியில் வந்தாள்.

 

அவள் முகம் கழுவிக்கொண்டு வரவும் சுரபி பள்ளிக்கூடத்தால் வரவும் சரியாக இருந்தது. இவளைக் கண்டுவிட்டு ஓடிவந்து, “அத்தை!” என்று கட்டிக்கொண்டாள் சுரபி.

 

“நேற்றிரவு நான் உங்களை மிஸ் பண்ணினான்.” என்றாள் முகத்தைச் சுருக்கியபடி.

 

யாழிசைக்கும் கொஞ்சம் கவலையாகிப் போயிற்று. அவளின் கவலை நிறைந்த நாள்களில் எல்லாம் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தவள் இந்தக் குட்டிப் பெண்தானே. அதில், “இனி எப்ப அத்தைய மிஸ் பண்ணினாலும் ஒரு கோல் போடுங்கோ. அத்தை பிள்ளையைப் பாக்க வருவன். சரியா?” என்று சொன்னாள்.

 

சுரபியின் குரல் கேட்டதும், “பெரிய மனுசி பள்ளிக்கூடத்தால வந்தாச்சா?” என்று கேட்டபடி தூயவனும் எழுந்து வந்தான்.

 

அவனைக் கண்டதும் சின்னதாய் ஒரு பயம் சுரபிக்குள். கோயிலில் வைத்துப் பெரிதாக மிரட்டி எல்லாம் இருக்கிறாளே. யாழிசையின் பின்னால் மெதுவாக அவள் மறைய, முகம் கழுவிக்கொண்டு வந்த தூயவன், அவள் கரம் பற்றித் தன்னிடம் கொண்டு வந்து, “என்ன?” என்றான் சின்ன சிரிப்புடன்.

 

ஒன்றுமில்லை என்று இடமும் வலமுமாகத் தலையை அசைத்தாள் அவள்.

 

பள்ளிச் சீருடை. வெய்யிலில் நன்றாக விளையாடி இருக்கிறாள் என்பதற்கு அடையாளமாக மடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல் கலைந்து கிடைக்க, முகம் நன்றாகக் களைத்து வாடியிருந்தது.

 

“மாமாவைப் பாக்கப் பயமா இருக்கா?” அவள் விழிகளில் தெரிந்த பயத்தைக் கண்டு வினவினான்.

 

இல்லை என்பதுபோல் தலையை ஆட்டியவள் பின் மெதுவாக ஆம் என்று மேலும் கீழுமாக அசைத்தாள்.

 

“என்னத்துக்குப் பயப்பிட? பிள்ளையின்ர மாமா தானே? இன்னும் சொல்லப்போனா எனக்கு உங்கட அப்பாவைப் பாத்தாத்தான் பயம். இதுல நீங்க என்னைப் பாத்துப் பயப்பிடுவீங்களா?” என்றான் பார்வை ஒருமுறை நேசனைத் தொட்டு வர.

 

“பொய் சொல்லுறீங்க.” அதற்கு மட்டும் உடனேயே மறுத்தாள் சின்னவள்.

 

“பார், சுரபிக்கே தெரியுது. இதில இவன் என்னைப் பாத்துப் பயப்பிடுவானாம்.” பக்கத்தில் நின்ற மனைவியிடம் பல்லைக் கடித்தான் நேசன்.

 

நளினி ஒன்றும் சொல்லவில்லை. என்னதான் அவனுக்கு யாழிசையைக் கட்டிக்கொடுத்தாலும் அவன் தம் சொந்தம் என்கிற அந்த உணர்வு அவளுக்குள் அப்போது வரை வந்திருக்கவில்லை. ஆனால் இப்போது, சுரபியோடு அவன் உரையாடும் அந்தப் பாங்கு அந்த உணர்வை அவளுக்குள் உண்டாக்கிற்று.

 

அங்கே அவனும், “நான் சும்மா சொல்லேல்ல. எனக்கு உங்கட அப்பாவக் கண்டாலே நடுங்கும். அவர் எவ்வளவு பெரிய டெரர் எண்டு உங்களுக்குத் தெரியாது.” என்று சுரபியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

 

“இல்ல நீங்கதான் டெரர். எனக்குத் தெரியும்.” கொஞ்சம் பயம் அகல அவளின் இயல்பான குணம் தலை தூக்கிற்று.

 

தூயவன் உதட்டில் சிரிப்பு. “அப்பிடியா?” என்று கேட்டு அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டான். “ஆனா அதெல்லாம் வெளில. பிள்ளையிட்ட இல்ல. பிள்ளைக்கு நான் பிள்ளையின்ர மாமா மட்டும்தான். இப்ப போய்ச் சாப்பிடுங்க.” என்று அவளை அனுப்பிவைத்தான்.

 

சுரபிக்கு நளினி உணவைக் கொடுக்க, இவர்கள் இருவருக்கும் தேநீரும் சிற்றுண்டியும் வைத்துக் கொடுத்தார் கோகிலா.

 

அவன் தேநீரை அருந்தி முடிப்பதற்காகவே காத்திருந்த நேசன், பத்திரம் ஒன்றைக் கொண்டுவந்து அவனிடம் நீட்டினான்.

 

என்ன என்று தூயவனாலும் ஓரளவுக்குக் கணிக்க முடிந்தது. ஆனாலும் கேள்வியாகப் பார்த்தான்.

 

“இந்த வீடு இசையின்ர சீதன வீடு. நகையும்…” என்று அவன் திரும்பிப் பார்க்க, நளினி ஒரு தட்டில் வைத்து நகைகளைக் கொண்டு வந்தாள்.

 

பார்த்துக்கொண்டிருந்த யாழிசைக்கு நெஞ்சு அடைத்துக்கொண்டு வந்தது. இருந்த எல்லாவற்றையும் வழித்துத் துடைத்து அவளுக்குத் தருகிறார்கள். எத்தனை முறை இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பாள்? கணவனும் வாங்க மாட்டான் என்று நம்பினாள். ஆனாலும் ஒருவிதக் கலக்கத்துடன் அவனையே பார்த்தாள்.

 

“வாங்கு தூயவா!” அவன் பேசாமல் இருக்கவும் அழுத்திச் சொன்னான் நேசன்.

 

“தம்பி!” என்று அதட்டினார் கோகிலா.

 

‘முடியவில்லை’ என்பதுபோல் தலையை இடம் வலமாக அசைத்துவிட்டு, “வாங்குங்க தூயவன்ன்ன்!” என்றான் நேசன்.

 

தூயவனின் உதட்டில் மெல்லிய சிரிப்பு. ‘சீதனம் கேட்டேனா?’ என்று வந்த கோபம் கூடக் கரைந்து போயிற்று. அருகில் இருந்த நாற்காலியை இழுத்துத் தன்னருகில் போட்டு, அதில் நேசனை அமர்த்தினான்.

 

“என்ன பிரச்சினை உங்களுக்கு?” என்றான் அவன் முகம் பார்த்து.

 

“டேய்…” என்றவன் அன்னையை நினைத்துத் தன்னை அடக்கிக்கொண்டு, “இது எங்கட கடைமை தூயவா. நீ…ங்க உங்கட தங்கச்சிக்குச் செய்யேல்லையா? அதே மாதிரி… அந்த அளவுக்குச் செய்ய என்னட்ட வசதி இல்ல. என்னால முடிஞ்சது. வாங்கு…ங்க ப்ளீஸ்.” என்றான்.

 

திரும்பி யாழிசையைப் பார்த்தான் தூயவன். கணவன் என்ன முடிவெடுப்பானோ என்கிற கலக்கத்துடன் இப்போதும் அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் அவள்.

 

தலையை அசைத்து அவளைத் தன்னருகில் அழைத்தான் தூயவன். வந்து நின்றவளிடம், “நான் என்ன செய்ய?” என்று கேட்டான்.

 

“வாங்க வேண்டாம் ப்ளீஸ்.” கண்ணீரில் கரகரக்கும் குரலில் சொன்னாள் அவள்.

 

“இசை, உனக்கு என்ன விசரா? அதவிட இதெல்லாம் உனக்கு எண்டே சேர்த்ததுகள்.” என்று அதட்டினாள் நளினி.

 

“எல்லாத்தையும் எனக்குத் தந்துபோட்டு நீங்க என்ன செய்வீங்க அண்ணி? சுரபிக்கு என்ன செய்வீங்க?”

 

தூயவனையும் வைத்துக்கொண்டு இப்படிக் கேட்கும் அவள் மீது அவள் வீட்டினருக்குக் கோபம்தான் வந்தது.

 

“அத அண்ணா பாப்பானம்மா. நீங்க வெறுங்கையோட அங்க போறது அழகில்லை. சும்மாவே சொத்துக்கு ஆசைப்பட்டு… என்று ஆரம்பித்த கோகிலா சட்டென்று நிறுத்திவிட்டு, “வாங்கு பிள்ளை.” என்று முடித்தார்.

 

இலேசாக முகம் மாறினாலும், “நான் அப்பிடி இல்லை எண்டு எனக்குத் தெரியும் அம்மா. அவருக்கும் அது தெரியும். எனக்கு அவேன்ர சொத்துப் பத்திலையும் ஒண்டும் வேண்டாம். நீங்களும் எதுவும் தர வேண்டாம். அவர் உழைக்கிற காசில் ஏதாவது வாங்கித் தரட்டும். அது போதும் எனக்கு.” என்றாள் யாழிசை.

 

அப்படிச் சொன்ன மனைவியை நெஞ்சம் கனியப் பார்த்தான் தூயவன்.

 

அந்தக் கணமே அவன் இசையரசிக்கு அவன் பணத்தில் அத்தனையையும் செய்து பார்க்கும் ஆசை எழுந்தது.

 

“அவர் வாங்கித் தாறது வேற. அதுக்காகச் சும்மா உன்னை அனுப்பேலுமா? இனி நான் உழைக்கிறது எல்லாம் உன்ர அண்ணிக்கும் சுரபிக்கும் தானே. அவேய யோசிக்காம வாங்கு இசை.” என்றான் தமையன்.

 

யாழிசைக்குத் தமையனின் பாசத்தில் கண்கள் கலங்கின. ஏதாவது சொல்லுங்களேன் என்பதுபோல் தூயவனைப் பார்க்க, “அண்ணா, முதல் இந்த வீட்டுப் பத்திரத்தை உள்ளுக்கு வைங்க. இத நீங்க எங்களுக்குத் தாறதால எந்தப் பிரயோசனமும் இல்ல. நானோ உங்கட தங்கச்சியோ இஞ்ச வந்து இருக்கப் போறேல்ல. பிறகு என்னத்துக்கு இது?” என்று முதலில் அதை மறுத்தான்.

 

நகையைக் காட்டி, “இதுல எல்லாத்திலயும் ஒவ்வொன்று எடு இசை.” என்றான் யாழிசையிடம்.

 

“இல்ல தூயவா. வீடாவது நீ சொல்லுறது எனக்கு விளங்குது. ஆனா நகை கட்டாயம் நீ வாங்கியே ஆகோணும். இல்லாட்டி என்னால நிம்மதியா இருக்கவே ஏலாது.” அவனுக்கு மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்று மனத்தில் பதிய வைத்தது மறக்க அவசரமாகச் சொன்னான் நேசன்.

 

ஒரு அண்ணனாக நேசனின் எண்ணப்பாடு தூயவனுக்கும் புரிந்தது.

 

“நீங்க எதையுமே கேக்கேல்லை எண்டு எங்களுக்குத் தெரியும் தம்பி. ஆனா, எங்களுக்கும் ஒரு சந்தோசம் வேணும் எல்லா. முதல் இது சீதனம் இல்ல. எங்களால முடிஞ்சத எங்கட பிள்ளைக்குக் குடுக்க ஆசைப்படுறம். எங்கட திருப்திக்காக வாங்குங்கோப்பு.” என்ற கோகிலா அம்மாவின் பேச்சும் அவனுக்கு நியாயமாகவே பட்டது.

 

“சரி, சுரபின்ரயும் நளினி அக்கான்ர நகைகளையும் விட்டுட்டு உன்ரய மட்டும் எடு இசை.” என்றான் யாழிசையிடம்.

 

அப்போதும் எல்லாவற்றையும் கொடுக்க அவர்கள் எடுத்த முயற்சி தோல்வியிலேயேதான் முடிந்தது.

 

error: Alert: Content selection is disabled!!