மனம் பொறுக்காமல், “வெக்கமே இல்லாம அப்பிடி என்னத்தக் காட்டி…” என்றவரின் பேச்சை, “அப்பா!” என்று அந்த வீடே அதிரும்படியாக ஓங்கி ஒளித்த தூயவனின் உறுமல் அடக்கியது.
நடுச்சபையில் ஆடை அவிழ்ந்ததுபோல் கூசிப்போனாள் யாழிசை. “என்ன கதைக்கிறீங்க? அதுவும் ஒரு பொம்பிளைப் பிள்ளையப் பாத்து?” என்று குமுறினாள்.
“நீ மேல போ இசை!” அவனும் அவரும் பேசுப்படுவது, பிரச்சனைப்படுவது கூட வேறு. அவளும் அவரும் சண்டையிட்டுவிடக் கூடாது. வார்த்தைகள் தடித்துவிட்டாளோ, இன்னும் பிழையாக வந்துவிட்டாளோ வாழ்வுக்கும் முகம் பார்க்க முடியாமல் போய்விடும். அதில் அவளை அதட்டினான்.
அவள் போகவில்லை. போக முடியவில்லை. அவள் இனத்தைக் குறித்து அவர் பேசியபோது பெரிது படுத்தவில்லை. சொத்துக்காக அவனை வளைத்தாள் என்று சொன்னபோது கூட உடையவில்லை. ஆனால் இது? அவளின் ஒழுக்கத்தைக் கலங்கப்படுத்தியிருக்கிறார்.
அதைக் கேட்டுக்கொண்டு எப்படிப் போவது?
“அவர் என்ன சொன்னவர் எண்டு நீங்களும் கேட்டுக்கொண்டுதானே இருந்தனீங்க. அத என்ன எண்டு கேக்க மாட்டீங்களா?” அவனிடமே கேட்டாள்.
“அத நான் கேக்கிறன். நீ கதைக்காத!”
“அவர் கேவலப்படுத்தினது என்னை. நான் கேக்கக் கூடாதா?”
“இல்ல! கேக்கக் கூடாது!” என்றவன் விறுவிறு என்று படிகளை ஏறி வந்து, அவளைப் பற்றித் திருப்பி மேலே போகச் சொன்னான்.
தேவகியும் இந்தப் பேச்சை விடச் சொன்னார். பிரச்சனையைப் பெரிதாக்க வேண்டாம் என்று கெஞ்சினார். ஆயினும் கூட அவளால் அதை விட்டுவிட முடியவில்லை.
“இவ்வளவு நேரமா என்னைப் பற்றி என்னவெல்லாமோ சொன்னவர். ஆனா இது? இதக் கேட்டுக்கொண்டு என்னால போகேலாது தூயவா.” கண்ணீருடன் சொன்னாள்.
“உனக்காகக் கதைக்க நான் இருக்கிறன். நீ போ எண்டு சொல்லுறது உனக்கு விளங்கேல்லையா?” அவ்வளவு சொல்லியும் கேளாதவளின் செய்கை சினமூட்ட அவள் கையைப் பற்றி இழுத்துச் சீறினான்.
அவனையே கண்ணீர் நிரம்பிய விழிகளால் வெறித்தவள் அவன் கையைத் தன்னிடமிருந்து எடுத்து விட்டுவிட்டு விறுவிறு என்று படிகளை ஏறிப் போனாள்.
அதன் பிறகு அவன் தாமதிக்கவில்லை. குருவை அழைத்து உடனடியாக வரச் சொன்னான். துளசி மிதிலனோடு வந்தவனை வாகனத்தை எடுக்கச் சொல்லிவிட்டு, கருணாகரனைப் புறப்படச் சொன்னான். அவர் மறுத்து அடம் பிடித்தார்.
“நீங்க போகத்தான் போறீங்க. அது மாறாது. நீங்களா போகப் போறீங்களா, இல்ல நான் தூக்கிக்கொண்டு போய் வேனுக்க ஏத்துறதா எண்டுறதை மட்டும் நீங்க முடிவு செய்ங்க.” என்றான் தூயவன்.
இதற்குள் அறைக்குள் போன தேவகி, திரும்பி வரும்போது கையில் ஒரு பையுடன் அவரும் தயாராகி வந்தார். தூயவன் கேள்வியாகப் பார்த்தான்.
“இத்தினை வருசம் வாழ்ந்தாச்சு தம்பி. பிடிக்குதோ பிடிக்கேல்லையோ மிச்ச வாழ்க்கையும் எனக்கு அவரோடதான். நானும் போறன்.” என்றவர் கணவரின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு நடந்தார்.
அவனிடம் சிறு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு அவர்களோடு புறப்பட்டான் குரு.
அப்படியே தொய்ந்துபோய் சோபாவில் விழுந்தான் தூயவன். பெரும் பாராங்கல்லையே தூக்கி நெஞ்சில் வைத்ததுபோல் ஒரு பாரம்.
துளசிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது.
“என்ன அண்ணா நடக்குது இஞ்ச?”
அங்கே நேசன் வீட்டில் பகல் உணவை முடித்த உடனேயே கணவன் புறப்பட்டதற்கான காரணமே அவளுக்குப் பிடிபட்டிருக்கவில்லை. சரி, ஏதோ வேலை போலும் என்று அவள் நினைக்க, அவன் அவர்களை அழைத்துப்போனது அவன் வீட்டுக்கு.
அதுவும் உறக்கத்துக்குச் சிணுங்கிய மிதிலனைக் காட்டி, “அவனோட நீயும் கொஞ்சம் படுத்து எழும்பு.” என்றதும் குழம்பிப்போனாள். இதற்குப் பேசாமல் அவர்களின் வீட்டுக்கே போயிருக்கலாமே என்று கேட்டதற்கு அவன் ஒன்றும் சொல்லவில்லை.
நண்பர்கள் இருவரும் எதையும் சொல்லிவிட்டுச் செய்கிறவர்கள் இல்லையே. எதையாவது செய்யட்டும் என்று அவளும் உறங்கிப்போனாள். எழுந்து பார்த்தால் யாரோ இருவர் காணியைத் துப்பரவு செய்துகொண்டிருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தபோதுதான் காணி துப்பரவாக்குகிற பெயரில் அவர்கள் இருவரும் இவர்கள் இருவருக்கும் காவலுக்கு நிற்கிறார்கள் என்று புரிந்தது. குருவைக் காணவில்லை.
கொஞ்ச நேரத்தில் வந்தவன், “வா, வீட்டை போவம்.” என்று இங்கே கூட்டிக்கொண்டு வந்திருந்தான்.
இங்கு நடந்தவற்றைத் தூயவன் சொல்லத் துளசியும் அழுதாள். என்ன இருந்தாலும் அப்பா. அவரின் தவறுகளும் இவர்களுக்கு வலித்தது.
அம்மா அப்பா இல்லாத வீடு வெறிச்சோடிக்கிடந்தது.
“செய்த பிழைகள அப்பா உணரவே மாட்டாரா அண்ணா?”
“அவர் எல்லாம் உணருற ஆள் இல்ல துளசி. சாதி வெறியும், நான் எண்டுற அகங்காரக் குணமும் ரெத்தத்தில ஊறிட்டுது. இப்பிடி அடக்கி வைக்கிறது மட்டும்தான் இருக்கிற ஒரே வழி.” என்றவன் இதயத்திலும் பெரும் வலி.
‘என்ர மகன் எண்டு மார் தட்டியிருக்கிறன். ஆனா இண்டைக்கு?’ என்று கேட்டு அவர் உடைந்தது திரும்ப திரும்ப அவன் கண் முன்னே வந்து போனது.
அவனும்தானே அவரின் செய்கைகளாலும் பேச்சாலும் சுக்கு நூறாக உடைந்து நிற்கிறான்.
நெஞ்சு முட்ட அவர் மீது வெறுப்பும் கோபமும் இருந்தாலும் பாசம் இல்லாமல் இல்லையே. திரும்பவும் இந்த வீட்டுக்கு அவரைக் கொண்டு வந்து, பழையபடி கம்பீரமாக இந்த ஊருக்குள் நடமாட விட்டுப் பார்க்க அவனுக்கு ஆசை இல்லையா என்ன?
“இனி அம்மாவும் அப்பாவும் இஞ்ச வரவே வராயினமா அண்ணா?” கேட்கும்போதே அவள் குரல் உடைந்து போனது.
“அப்பிடி எப்பிடி விடுறது துளசி? எங்களைப் பெத்து, கஷ்டப்பட்டு வளத்து ஆளாக்கி விட்ட மனுசரை அப்பிடி விடேலுமா? அப்பாவும் இந்த விசயத்த தவிர்த்து எங்களுக்கு என்ன குறை வச்சவர் சொல்லு? கொஞ்ச நாள் போகட்டும். எல்லாரின்ர கோபமும் ஆறட்டும். இது பக்கத்திலேயே இருந்தா சண்டை சண்டை எண்டு வெறுப்பு மட்டும்தான் மிஞ்சும். அதான் போகச் சொன்னனான்.” என்றவனுக்குத் தன் செய்கை தவறோ என்கிற தவிப்பு மனத்தில்.
என்ன இருந்தாலும் அப்பா. அவரை வீட்டை விட்டு அனுப்பியிருக்கிறான். நிச்சயம் மனம் உடைந்திருப்பார்.
ஆனால் வேறு வழியில்லை. இதை அவனும் அவரும் கடந்து வந்துதான் ஆக வேண்டும். அன்னையும் கூடவே போவது பெரும் ஆறுதல்.
யாழிசையின் நினைவு வந்தது. அவளும் உடைந்துதான் இருப்பாள். அவள் இடத்தில் இருந்து யோசிக்கையில் அவள் கோபம் சரிதான். அவளையும் சமாதானம் செய்ய வேண்டும். ஒரு நெடிய மூச்சுடன் எழுந்து மனைவியைக் காண மாடியேனான்.

