கடன் அன்பை முறிக்கும் – 57

அத்தியாயம் 57

 

 

‘ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி’ இது தூயவனுக்கு அப்படியே பொருந்தும். அப்படித்தான் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான்.

 

இன்று தன் தந்தையோடு ஒரே வீட்டில் இனித் தன்னால் இருக்கவே முடியாது என்று தெரிந்த கணத்தில் வெளியே வந்துவிட்டான்.

 

ஆனால், எங்கே போவது? பெரும் சொத்துகளுக்குச் சொந்தக்காரன் அந்த நொடியில் இருக்க ஒரு வீடில்லாமல் நின்றான்.

 

மனம் ஏதோ ஒரு வகையில் மொத்தமாக அடி வாங்கிச் சுருண்டிருக்க நேராகக் கோயிலுக்கு வந்தான். நேற்றுத் திருமணம் நடந்த அதே கோயில். காலையிலும் வந்திருந்தார்கள். காலையில் வருகையில் இருந்த பூரிப்பும் சந்தோசமும் இருவரிடத்திலும் இப்போது மருந்துக்கும் இல்லை.

 

அன்னையின் சன்னிதானத்தில் வந்து நின்றனர். யாழிசையால் மனத்தை ஒருமுகப்படுத்திச் சுவாமி கும்பிட முடியவில்லை. கருணாகரன் விட்ட வார்த்தைகள் திரும்ப திரும்பக் காதினுள் எதிரொலித்தது. எப்போதும் எந்தத் தப்பும் செய்யாமலேயே எல்லோராலும் காயப்பட்டு நிற்கிறாள். இந்தமுறை கணவனும் சேர்ந்து நோகடித்துவிட்டான். அதுதான் அதிகமாய் வலித்தது.

 

நிறைய நேரமாக நின்று கும்பிட்டான் தூயவன். அப்படி என்ன அவன் மனத்தில் கிடந்து அரிக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அவன் மீது மனம் சுணங்கி இருந்த இந்தக் கணத்திலும் அவனுக்கான அமைதியைக் கொடு அன்னையே என்று வேண்டிக்கொண்டாள்.

 

அவளோடு சேர்ந்து பிரகாரத்தையும் சுற்றி வந்துவிட்டு அங்கே கோயில் மண்டபத்திலேயே அமர்ந்துகொண்டான். அவன் உள்ளத்தில் என்ன ஓடுகிறது, ஏன் இங்கே அழைத்து வந்திருக்கிறான் என்று எதுவுமே யாழிசைக்குப் புரியவில்லை.

 

கருணாகரனின் மோசமான வார்த்தைப் பிரயோகத்தில் வெடித்துக்கொண்டு கிளம்பிய அவள் கோபத்தை வெளியேற்ற விடாமல், அவன் அதட்டி அடக்கியிருந்தான். இதோ வெடிக்கிறேன் என்று குமுறிய நெஞ்சுடன் மேலே வந்தவளுக்கு கீழே நடக்கும் எதுவும் கேளாத அளவுக்கு எங்காவது ஓடிவிடும் ஆவேசம் வந்ததில் பால்கனியில் சென்று அமர்ந்துகொண்டாள்.

 

அதில் கீழே நடந்த பேச்சு வார்த்தையோ, பெரியவர்கள் இருவரும் வீட்டை விட்டுப் போய்விட்டுத் திரும்பி வந்ததோ அவளுக்குத் தெரியாது.

 

வாகனம் புறப்பட்ட சத்தம் கேட்டாலும் அவள் இருந்த மனநிலை அதைக் கவனத்தில் எடுக்க விடவில்லை. அதில் இங்கே எதற்கு வந்திருக்கிறான் என்கிற கேள்விதான் அவளைக் குடைந்தது.

 

தூயவனையும் தந்தையின் வார்த்தைகள்தான் புரட்டிப் போட்டுக்கொண்டு இருந்தன. தன் தகப்பன் இந்தளவில் தரமிறங்கிப் பேசுவாரா என்கிற அதிர்ச்சி. இந்தளவில் சின்னத்தனமாக நடந்துவிட்டாரே என்கிற தவிப்பு. அவர் விட்ட வார்த்தைகளை இனி எப்படிக் கடந்து வருவது என்று தெரியாத தடுமாற்றம் என்று அவன் அவனாக இல்லை.

 

இசையின் அத்தனை துன்பங்களுக்கும் அவர்தான் காரணம் என்று தெரிந்தாலும் அவரை வீட்டை விட்டு வெளியேற்றவோ, இல்லை அவன் இப்படி வெளியே வரவோ அவன் நினைக்கவில்லை. அவர் வாயாலேயே அனைத்தையும் ஒப்புக்கொள்ள வைத்து, அவர் செய்த தப்பின் ஆழத்தை அவருக்கு உணர்த்த நினைத்தான். அவரானால்… ஆழ்ந்த மூச்சினை இழுத்துவிட்டும் அவன் உள்ளத்தின் பாரம் குறையவில்லை.

 

அவரின் கோரமான இந்த முகம் தனக்குத் தெரியாமலேயே இருந்திருக்கலாமோ என்று கூட நினைத்தான். இனி எப்படி அவர் முகம் பார்ப்பான்? அப்பா என்று அழைப்பான்? மனதே விட்டுப் போயிற்று. நெஞ்சு கசந்து வழிந்தது.

 

இன்னுமின்னும் வெறுப்பையும் கசப்பையும் சம்பாதிக்க வேண்டாம் என்றுதான் வெளியில் வந்தான். அப்படி வெளியில் வந்தும் உள்ளம் அமைதியடைவதாக இல்லை. மனம் அந்த வீட்டையே சுற்றிக்கொண்டு நின்றது.

 

திரும்பி யாழிசையைப் பார்த்தான். அவனுக்கு எதிர்ப்புறத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.

 

அவளுக்கும் அவன் மீதுதான் கோபம். நெடிய மூச்சு ஒன்று வெளியேற, “வா!” என்றுவிட்டு எழுந்து நடந்தான்.

 

யாழிசைக்குக் குழப்பத்துக்கு மேல் குழப்பம். அவன் நடவடிக்கைகள் எதுவும் புரிவதாக இல்லை.

 

இப்போது அவன் அவளை அழைத்து வந்தது அவர்களின் தோட்ட வீட்டுக்கு. அந்த வீட்டின் கதவைத் திறந்து உள்ளே வந்ததும், “இனி நாங்க இஞ்சதான் இருக்கப் போறம்.” என்றான் அவன்.

 

அவளுக்கு அதிர்ச்சி. ஏன் என்கிற கேள்வியை விழிகளில் தாங்கிப் பார்த்தாள்.

 

“இனியும் எனக்கு அங்க இருக்க விருப்பமில்லை இசை. அதான் தனியா வந்தாச்சு.”

 

“இது என்னத்துக்கு? இன்னும் உங்கட அப்பா என்னை மோசமா கதைக்கவா?” கசப்புடன் கேட்டாள். “இல்ல, என்னைச் சமாளிக்கிறதுக்காக இதையெல்லாம் செய்றீங்களா?”

 

அவன் முகம் இறுகியது. மெல்லிய கோபமும் வந்தது. ஆனாலும் அடக்கினான். “இப்ப என்ன சொல்லுறாய்? உன்னப் பார்த்து அவர் கதைச்ச கதை என்னைப் பாதிக்காது எண்டா? இல்ல, என்ர மனுசிய அவர் என்ன சொன்னாலும் நான் பாத்துக்கொண்டு பேசாம இருப்பன் எண்டு சொல்ல வாறியா?”

 

“அதைத்தானே செய்தனீங்க. கதைக்க வந்த என்னைக் கூடக் கதைக்க விடேல்லையே.” இலேசாகக் கலங்கிவிட்ட விழிகளோடு சொன்னாள். தன் மனத்தின் குமுறலைக் கொட்டவிடாத கோபம் அவளுக்குள் இன்னுமே இருந்தது.

 

“என்ன கதைக்கிறாய் இசை? நீ நியாயம் கேட்டதும் அவர் அடங்கிப் போவார் எண்டா? இன்னுமின்னும் மோசமாத்தான் கதைப்பார். அதுக்கு என்ன செய்வாய்?” என்னவோ அவன் மனைவியை அடக்கி வைக்கும் நோக்குடன் பேசவிடாமல் செய்ததுபோல் அவள் சொன்ன குற்றச்சாட்டு அவனையும் காயப்படுத்திற்று.

 

“அப்ப அவர் கதைக்கிறதை எல்லாம் கதைப்பார். நான் வாய மூடிக்கொண்டு இருக்கோணுமா?”

 

“அப்பிடி அவர் கதைக்கவும் வேண்டாம். நீ வாய மூடிக்கொண்டு இருக்கவும் வேண்டாம் எண்டுதான் இப்பிடித் தனியா வந்திருக்கிறன்.” என்றவனின் பேச்சுக்குப் பதில் சொல்லாமல் முகத்தைத் திரும்பினாள் யாழிசை.

 

தப்பாகப் பேசிய மனிதனைத் தட்டிக் கேட்க மாட்டானாம். அவளைக் கூட்டிக்கொண்டு தனியாக வருவானாம். இதற்கும் சேர்த்து ஊரே அவளைப் பேசும். என்ன நியாயம் இது?

 

அவளின் முகத்திருப்பல் அவனைக் கோபப்படுத்தியது. வேகமாய்ச் சென்று அவள் முகத்தைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தான்.

 

“இப்பிடி விலகி வராம என்ன செய்திருக்கோணும் எண்டு நினைக்கிறாய்? நீ நியாயம் கேக்கப்போய் அவர் இன்னுமின்னும் மோசமாக் கதைச்சிட்டா என்னால என்ன செய்யேலும் எண்டு யோசி. அதைக் கேட்டுக்கொண்டு நிக்கவும் ஏலாது. இப்பிடிக் கதைப்பீங்களா எண்டு கேட்டுக் கையை நீட்டவும் ஏலாது. சாவுக்கும் அவரின்ர முகத்தில முழிக்க விருப்பம் இல்லாத நிலை வந்திடும் இசை. நான் உனக்கு மனுசன் எண்டா அவருக்கு மகன். அப்பிடி விடேலாது. எனக்குப் பெத்த கடன் இருக்கு. உனக்கும் காலத்துக்கும் அழியாத காயமா அது தங்கிடும். அதுலதான் உன்னைக் கதைக்க விடேல்ல. நானும் கதைக்கேல்ல.” என்று, அந்த இடத்தில் தன் இக்கட்டான நிலை என்ன என்று விளக்கினான்.

 

அவன் என்ன விளக்கம் சொல்லியும் யாழிசையின் உள்ளத்தில் படர்ந்துவிட்ட கசப்புப் போவதாக இல்லை.

 

“இது எல்லாத்தையும் விட முக்கியமான விசயம் அவர் நிதானத்தில இல்ல இசை. இந்தக் கொஞ்ச நாளாவே அவருக்கு நான் குடுத்தது எல்லாம் அடிக்கு மேல அடி. நேற்று அவருக்கே தெரியாம நடந்த எங்கட திடீர் கலியாணம், இண்டைக்கு ஒரே நேரத்தில எல்லாரையும் வர வச்சு, கள்ளனக் கையும் களவுமா பிடிக்கிற மாதிரி, அவர் செய்ததை எல்லாம் ஒத்துக்கொள்ள வச்சனான். எனக்கு முன்னால தான் கெட்டவனா நிண்டுடக் கூடாது எண்டுதான் எனக்குத் தெரியாம அத்தனை வேலையையும் செய்தவர். ஆனா இண்டைக்கு அதே என்னட்ட மொத்தமா மாட்டிட்டார். அந்தப் பதட்டம் அவரை நிலையிழக்க வச்சு, இப்பிடி எல்லாம் கதைக்க வச்சிட்டுது. அவரை நான் நியாயப்படுத்தேல்ல. அவரின்ர நிலைய உனக்கு விளங்கப்படுத்தப் பாக்கிறன்.” என்றவனுக்குத் தந்தையை எண்ணியும் நெஞ்சை அடைத்தது.

 

அவனுடைய பாசமான தந்தை. அவனை மார்பிலும் நெஞ்சிலும் போட்டு வளர்த்தவர். அவர் பார்வையில் அவன் தவறான வழியில் போக முயல்கிறான். அப்படியானவனைத் திரும்பவும் நேர்வழிப்படுத்த, தான் சரி என்று நினைக்கும் பாதையில் அவனைச் செலுத்த, அவனறியாமல் என்ன செய்யலாம் என்று யோசித்து, புத்திசாலித்தனசமாக நடப்பதாக எண்ணி அவர் செய்த மோசமான காரியம், இன்றைக்கு அந்த மகன் முன்னாலேயே அவரைச் சிறுத்துப்போக வைத்துவிட்டதே. கண்கள் கலங்கும் போலிருக்க, போய் அங்கிருந்த தண்ணீரை எடுத்து அருந்தினான்.

 

அவர் செய்தது மகா மோசமான, மன்னிக்கவே முடியாத செயல். ஆனால், அதன் பின்னிருப்பது அவன் மீதான பாசமாயிற்றே!

 

“அவர் நிதானத்தில இல்ல. எல்லாமே அவரின்ர கைய விட்டுப் போயிட்டுதே எண்டுற தடுமாற்றத்தில இருந்தவர். அவரின்ர அந்த நிலைய விளங்கிக்கொள்ளாம இன்னுமின்னும் நாங்களும் கேள்வி கேட்டுக்கொண்டு போனா, அவர் தன்ர பிழைய உணந்து பதில் சொல்லப் போறதே இல்லை. அதுக்கு மாறா இன்னுமின்னும் வார்த்தைகளத்தான் விடுவார். அத உன்னாலயும் தாங்கேலாது. என்னாலயும் தாங்கேலாது.”

 

இந்தளவு தூரத்துக்குத் தன் தந்தைக்காக அவன் பேசுவதும் அவளைக் காயப்படுத்தியது. இதில் கொஞ்சமாவது அவன் அவளுக்காகவும் யோசித்திருக்கலாம்.

 

உள்ளம் கசந்து வழிய, “பரவாயில்ல விடுங்க. எந்தப் பிழையும் செய்யாம கேவலப்படுறது, அவமானப்படுறது எல்லாமே எனக்குப் பழக்கம்தான். இனி எனக்கு நீங்க இருக்கிறீங்க, அப்பிடி எல்லாம் நடக்காது எண்டு நினைச்சன். அப்பிடி இல்லை எண்டு சொல்லிட்டீங்க. இனி உங்களிட்டையும் எதுவும் எதிர்பாக்க மாட்டன்.” விழிகள் கலங்க அவள் சொல்லவும் அவன் துடித்துப்போனான்.

 

“இப்பிடி எல்லாம் கதைக்காத இசை.” தவித்துப்போனவன் அவளை இழுத்து அணைத்தான். அவன் உள்ளம் அவளுக்காகத் துடித்தது. அவள் மனத்தின் குறைகளைக் களைய ஆசைப்பட்டான். உனக்கு எல்லாமாய் நான் இருக்கிறேன் என்று சொல்ல நினைத்தான். அப்படித்தான் இருக்கிறானும் கூட! என்ன, அவன் அவன் அப்பாவுக்கு மகனுமாயிற்றே!

 

ஒரு வேகத்துடன் அவள் முகத்தைத் தாங்கி, “அப்ப உனக்கு என்ன நடந்தாலும் நான் பாத்துக்கொண்டு பேசாம இருப்பன் எண்டு சொல்லுறியா நீ? உன்ர தூயவன் உனக்காக நிக்கமாட்டான் எண்டுறியா?” என்று பரிதவித்தான்.

 

அவள் பதில் சொல்லவில்லை. அழுகையில் நடுங்கும் இதழ்களைப் பிடிவாதமாக அழுத்தி மூடிக்கொண்டு, பார்வையை வேறொங்கோ வைத்துக்கொண்டு பேசாமல் நின்றாள்.

 

அவனுக்குத் தாங்கவில்லை. அவள் கன்னங்களை இன்னும் அழுத்தமாகப் பற்றி, “இசை என்னைப் பார். உனக்கு என்னைத் தெரியாதா? இல்ல நீ என்ர உயிர் எண்டுதான் தெரியாதா? இப்படித்தான் கதைப்பியா?” என்றான் மனத்தாங்கலோடு.

 

அவன் விழிகளில் தெரிந்த தவிப்பும் பேச்சில் தெரிந்த வேண்டுதலும் அவளை அசைக்கவில்லை. அவனையே பார்த்தபடி மௌனம் காத்தாள்.

 

“இனி அவர் அப்பிடிக் கதைக்க மாட்டார் இசை.” ‘நான் சொல்வதைக் கேள்’ என்று மன்றாடுவது போலிருந்தது அவன் பேச்சு.

 

“அதான் எல்லாத்தையும் கதைச்சிட்டாரே. இன்னும் என்ன கதைக்கக் கிடக்கு?” கசப்புடன் புன்னகைத்தாள் அவள்.

 

அவனுக்குக் கோபம்தான் வந்தது. என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று நிற்கிறவளை என்ன செய்ய? “இப்ப என்னை என்ன செய்யச் சொல்லுறாய்? சொல்லு, என்ன செய்யோணும் உனக்கு நான்?” என்று சீறினான்.

 

“அதான் சொல்லிட்டனே, உங்களிட்ட இனி எனக்கு எந்த எதிர்பாப்பும் இல்லை எண்டு. அதால இனி நீங்க எனக்காக ஒண்டும் செய்ய வேண்டாம்.” என்றதும் கொதித்துவிட்டான் அவன்.

 

“கொஞ்சம் கூட உன்னால என்னை விளங்கிக்கொள்ள ஏலா என்ன? அந்த இடத்தில மகனாவும் உனக்கு மனுசனாவும் நான் பட்ட பாடும், இப்ப வரைக்கும் நான் படுற பாடும் உனக்கு விளங்கேல்ல என்ன? உனக்காகத்தான் நானே. ஆனா நீ… போ, நீ கதைக்காத என்னோட!” என்றுவிட்டு அந்தத் தோப்பு வீட்டை விட்டு வெளியேறினான். மனம் கிடந்து புழுங்கியது.

 

தந்தையாய் இருந்தாலும் சரி தாரமாய் இருந்தாலும் சரி அவனை விளங்கிக்கொள்வதாக இல்லை. காயப்பட்டுப் போனான் தூயவன். ஒவ்வொருவரிடமாகப் போராடிக்கொண்டே இருக்கிறான். எப்போதுதான் இதெல்லாம் ஒரு முடிவுக்கு வரும் என்று தெரியவே இல்லை.

 

தென்னந்தோப்பினூடு நடக்க ஆரம்பித்தான். சிலுசிலு என்று வீசிய காற்றும், சோலையாகக் காட்சி தரும் தோப்பும் அவன் மனத்தின் புழுக்கத்தை ஆற்றமுடியாமல் தோற்று நின்றன.

 

 

error: Alert: Content selection is disabled!!