கடன் அன்பை முறிக்கும் – 56

அத்தியாயம் 56

 

 

தூயவன் பாதிப் படிகள்தான் ஏறி இருப்பான். அதற்குமேல் முடியவில்லை. மனத்தில் அவ்வளவு போராட்டம். நின்று திரும்பி அந்த வீட்டைப் பார்த்தான். வீடே வெறிச்சோடிப்போயிருந்தது. துளசி, மகனை மடியில் வைத்துக்கொண்டு மௌனமாகக் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள்.

 

கருணாகரனை வீட்டை விட்டுப் போகக் சொல்கையில் எதுவும் தெரியவில்லை. அதுதான் அவருக்கான மிகச் சரியான தண்டனை என்று எண்ணித்தான் சொன்னான். ஆனால், அன்னை கையில் பையும் கண்ணில் நீருமாகத் தயாராகி வந்த காட்சி அவனைக் கொன்றது.

 

அவர்கள் ஒன்றும் சுற்றுலாப் பயணம் கிளம்பவில்லை. பெற்ற மகன், வீட்டை விட்டுப் போகச் சொன்னதால் புறப்பட்டுவிட்டார்கள். தந்தையைத்தான் விட்டாலும் அவன் தாய் என்ன தவறு செய்தார்? அவனுக்காகவும் கணவனுக்காகவும் என்று அவர் புறப்பட்டாலும் அவர் உள்ளம் என்ன பாடுபடும்?

 

இதே வீட்டிலேயே பிறந்து, இதே வீட்டிலேயே வளர்ந்து, இதே வீட்டிலேயே மணமாகி வாழ்ந்த வயதான தாய்க்குத் தனயனாக அவன் செய்தது பெரும் பாவம்.

 

கருணாகரன் செய்தது மகா தவறு. இன்னொரு வீட்டுப் பெண்ணின் வாழ்க்கையோடு, மானத்தோடு விளையாடி இருக்கிறார். போதாக்குறைக்குப் பெரிய பெரிய வார்த்தைகளையும் விட்டுவிட்டார். அதையெல்லாம் மன்னிக்கவே முடியாது. ஆனால், மகனாக அவன் ஆற்றிய காரியம்? அதை மட்டும் மன்னிக்க முடியுமா?

 

அவன் அனுப்பி, அவர்கள் இன்னொரு வீட்டில் தங்கிவிட்டால் அந்தத் தவறை அவனால் என்றைக்குமே நேராக்க முடியாது.

 

அதற்குமேல் யோசிக்கவில்லை. உடனேயே குருவுக்கு அழைத்து, “திரும்பி வாடா!” என்றுவிட்டுத் திரும்பவும் வந்து சோபாவில் அமர்ந்துகொண்டான்.

 

அப்போதுதான் புறப்பட்டதில் அவர்களின் ஊர் எல்லையைத்தான் தொட்டிருந்தான் குரு. நண்பன் சொன்னதும் உடனேயே வாகனத்தைத் திருப்பினான். கருணாகரன் என்ன, ஏது என்று எதையுமே கேட்கவில்லை. அப்படியே அமர்ந்திருந்தார்.

 

தேவகிதான் விசாரித்தார்.

 

“தூயவன்தான் திரும்பி வரட்டாம் எண்டு சொன்னவன் மாமி.” என்ற குரு, அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர்களின் வீட்டின் முன்னால் கொண்டு வந்து வேனை நிறுத்தினான்.

 

அப்போதும் கருணாகரன் வாகனத்திலேயே அமர்ந்திருக்க தேவகி இறங்கி மகனிடம் வந்தார்.

 

“என்னய்யா? ஏன் திரும்பி வரச் சொன்னனீங்க?”

 

ஒரு கணம் அப்படியே அமர்ந்து இருந்தவன் நிமிர்ந்து, “பெத்த தாய் தகப்பனை வீட்டை விட்டு அனுப்பிப்போட்டு அந்தப் பாவத்தைச் சுமக்கிற தெம்பு எனக்கு இல்லை அம்மா.” என்றான் கலங்கிய குரலில்.

 

மளுக்கென்று கண்ணீர் தள்ள மகனைப் பார்த்தார் தேவகி. அவர் உள்ளம் மகனுக்காய் அழ ஆரம்பித்தது.

 

“அவருக்கு இது வேணும் எண்டுதான் நினைச்சன். ஆனா மகனா போயிட்டனே அம்மா. அவர் எனக்கு அப்பாவா போயிட்டாரே. என்ன செய்ய?” என்றான் அவரிடமே.

 

அவன் அவர்களைப் போகச் சொல்லிவிட்டு தனக்குள் கிடந்து தவிக்கிறான் என்று புரிந்துவிட அன்னை கலங்கிப்போனார்.

 

அவனருகில் அமர்ந்து, அவன் கையை ஆறுதலாகப் பற்றிக்கொண்டு, “அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லை அப்பு. நீ நிறைய யோசிக்காத. அவருக்குத் தெரியுதோ இல்லையோ எனக்குத் தெரியும். எங்களுக்கு நீ அருமையான பிள்ளை தம்பி. கலங்காத.” என்றார் ஆறுதலாக.

 

அவர் சொன்னதை ஏற்க முடியாத அளவில் அவன் உள்ளத்தில் பெரும் கசப்பு. “அவர் இசைக்குச் செய்ததை என்னால எந்தக் காலத்திலையும் மன்னிக்கவோ மறக்கவோ ஏலாம்மா. அதைவிட அவர் இண்டைக்குக் கதைச்சதுகள்…” என்றவன் தன்னால் முடியாது என்பதுபோல் தலையை அசைத்தான்.

 

“உங்க ரெண்டு போரையும் அனுப்பிப்போட்டு இந்த வீட்டில என்னால வாழவும் ஏலாது. அந்தளவுக்கு நான் மிருகம் இல்ல. அதால இஞ்ச இருந்து நான் போறன் அம்மா.” என்றதும் அதிர்ந்துபோனார் தேவகி.

 

“இல்லை. இல்லையப்பு. அதுக்கு நான் விடமாட்டன். நீ போகக் கூடாது! நீ என்ன பிழை செய்தனி எண்டு இந்த வீட்டை விட்டுப் போக?” என்று பரிதவித்தார் அன்னை.

 

“அண்ணா என்ன கதைக்கிறீங்க. நீங்க இல்லாம நாங்க எல்லாரும் எப்பிடி இருக்கிறது? நானும் நீங்க போறதுக்கு விடமாட்டன்.” என்றாள் துளசியும் கண்ணீருடன்.

 

“அப்பிடி எங்க போகப் போறன் எண்டு பதறுறீங்க ரெண்டு பேரும்? இந்த ஊருக்கதான் இருக்க போறன். ஆனா தனியா. என்னால அவரோட ஒரே வீட்டில இருக்கேலாது.” முடிவாகச் சொன்னான்.

 

அதன் பிறகு அன்னை தங்கை இருவரும் எவ்வளவு கெஞ்சியும் கேட்கவில்லை அவன்.

 

எழுந்து மேலே சென்றான்.

 

அறையில் அவளைக் காணவில்லை. பால்கனி கதவு திறந்திருந்தது. அங்கே வந்து பார்க்க, பால்கனியின் தரையில் அமர்ந்திருந்தாள்.

 

அவளையே பார்த்தான். அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தாலும் அவன் அவளைத் தேடிக்கொண்டு வந்திருப்பதை அவள் உணராமல் இருக்கப் போவதில்லை. ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு அழுத்தம் அவன் உள்ளத்தையும் கவ்விக் பிடித்தது.

 

“இசை.” கனத்த குரலில் மெல்ல அழைத்தான்.

 

“…”

 

“நானும் அவரும் கதைக்கிறது வேற. நீயும் அவரும் கதைக்கிறது வேற இசை. நீ அவரிட்ட கோவப்பட, இன்னுமின்னும் அவர் உன்னைப் பாத்து மோசமா எதையாவது சொல்லிட்டா தாங்குவியா எண்டு யோசி. அந்த இடத்தில என்னால என்ன செய்யேலும் எண்டும் யோசி. என்ன இருந்தாலும் அவர் என்ர அப்பா. என்ர கண்ணுக்கு முன்னாலேயே உன்ன அவரோட சண்டை பிடிக்க விட்டுட்டு என்னால பாத்துக்கொண்டு இருக்கேலாது இசை. அதுக்காக நான் வாய மூடிக்கொண்டு இருக்கவும் இல்லையே. அதான் நான் கதைக்கிறன் நீ போ எண்டு சொன்னனான்.” என்று தன்னை விளக்கினான்.

 

அவன் பேச பேச அவள் விழிகளிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவன் சொல்வதில் இருக்கிற நியாயம் புரியாமல் இல்லை. ஆனால், அவர் சொன்ன வார்த்தைகளோடு சேர்த்து அந்த இடத்தில் கணவன் நடந்துகொண்ட முறையும் அவளைக் காயப்படுத்தியிருந்தது.

 

அவனுடைய தந்தையா அவளா என்று வந்தால் அவன் தன் தந்தை புறம் நிற்பதாகவே எண்ணினாள். அதைக் கடந்து வர முடியாமல் இதோ இப்போது வரை தனக்குள் போராடிக்கொண்டிருக்கிறாள்.

 

அவளின் அந்த அமைதி அவனையும் வதைத்தது. ஆசையாசையாக அவன் நேசித்த பெண். தன்னாலும் தன் குடும்பத்தாலும் அவள் அனுபவித்த துன்பங்கள், சந்தித்த கொடுமையான சூழ்நிலைகள் எல்லாமே கொஞ்ச நஞ்சமல்ல என்றும் தெரியும்.

 

திருமணத்திற்குப் பிறகு அவளைச் சந்தோசமாக மட்டுமே வைத்திருக்க வேண்டும், அவள் முகத்தில் சிரிப்பை மட்டுமே பார்க்க வேண்டும் என்றெல்லாம் கோட்டை காட்டியிருக்கிறான். இப்போதானால் மணமாகி அடுத்த நாளே அழ வைத்துவிட்டான்.

 

மனம் கனக்க, “இசை!” என்று அவளின் தோளில் கையை வைத்தான்.

 

அவனுக்குத் தன் கண்ணீரைக் காட்ட விரும்பாமல் வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டாள் அவள்.

 

“அழுறியா நீ?”

 

அவன் கேள்வியே அவள் கண்ணீர் சுரப்பிகளை இன்னும் திறந்துவிட்டது. உதட்டைப் பற்றி அடக்கியபடி அமர்ந்திருந்தாள்.

 

“உனக்கு என்ன விசரா? முதல் நீ எழும்பி உள்ளுக்கு வா!” பிடிவாதமாக அவளை எழுப்பி உள்ளே அழைத்து வந்து அணைத்துக்கொண்டான்.

 

அவள் விடவில்லை. அவன் கைகள் அவளை அணைப்பதைத் தடுத்தபடி அவனிடமிருந்து விலக முயன்றாள்.

 

அவளின் அந்தச் செல்லக் கோபம் அவன் உள்ளத்தைக் கவர்ந்தது. “சரி சரி! நான் கட்டிப்பிடிக்கேல்ல. ஆனா நீயும் அழக் கூடாது. என்ர இசையரசி எல்லா. கண்ணைத் துடை!” குழந்தைக்குச் சொல்வதுபோல் சொல்லி, அவள் கண்களையும் முகத்தையும் தானே துடைத்துவிட்டான்.

 

அப்போதும் அவள் விழிகள் கலங்கிக்கொண்டு வந்தன. தண்ணீர் எடுத்துக் கொடுத்தான். வாங்கி அருந்தினாள். சில்லென்று தொண்டையை நனைத்துக்கொண்டு இறங்கிய தண்ணீர், அவள் கண்ணீரை நிறுத்தியது. தானும் ஒருமுறை கண், முகமெல்லாம் துடைத்துக்கொண்டாள்.

 

அவளையே பார்த்திருந்தவன் அவள் முகம் தாங்கி நெற்றியில் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “வா போவம்!” என்று அழைத்தான்.

 

போவம் என்றால்? அவளுக்கு விளங்கவில்லை. கேள்வியாகப் பார்த்தாள்.

 

“வா!” எந்த விளக்கமும் சொல்லாமல் அவளைக் கரம்பற்றி அழைத்துக்கொண்டு கீழே வந்தவன் ஒரு கணம் நின்றான்.

 

இதற்குள் வாகனத்திலேயே இருந்த கருணாகரனை வீட்டுக்குள் அழைத்து வந்திருந்தான் குரு. அவர் நேராக அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டார். தேவகி அம்மா கொண்டு போன பையையும் உள்ளே வைத்துவிட்டு வந்தவனிடத்தில் அவசரம் அவசரமாகத் தமையனின் முடிவைப் பகிர்ந்துகொண்டிருந்தாள் துளசி.

 

அவர்களைத் திருப்பி அழைத்துவரச் சொன்னபோதே இதை ஏதோ ஒரு வகையில் குரு எதிர்பார்த்தான். அவனுக்கு அதில் உடன்பாடில்லை. என்றாலும் ஒன்றும் சொல்லாமல் மாடியிலிருந்து யாழிசையோடு இறங்கி வந்தவனையே பார்த்தான்.

 

அவன் பார்வையும் குருவைத் தொட்டு மீண்டது. ஆனாலும் நண்பனிடம் எதையும் சொல்லவில்லை அவன்.

 

தேவகியின் முன்னால் வந்து நின்று, “நடந்த எல்லாத்துக்கும் காரணமா இருந்தவரையே அப்பிடியே விட்டுட்டன் அம்மா. அப்பிடி இருக்க விமலையும் அகிலனையும் தண்டிக்க எனக்குத் தகுதியே இல்ல. அதால இவர் அவே ரெண்டு பேருக்கும் என்ன சொல்லி இதை எல்லாம் செய்ய வச்சாரோ அதை எல்லாம் செய்து குடுத்திடுங்க. சுவர்ணாட்ட வாங்கின சொத்தையும் திருப்பிக் குடுக்கச் சொல்லுங்க. இதோட எல்லாம் முடியட்டும்.” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

 

யாழிசைக்கு எதுவுமே விளங்கவில்லை. புரியாத மொழியில் படம் பார்ப்பதுபோல் கணவனையும் மாமியாரையும் மாறி மாறிப் பார்த்தாள். அவர்கள் வீட்டை விட்டுப் போகிறார்கள் என்றுகூடத் தெரியாமல் அவனோடு சென்றாள்.

 

 

*****

 

தேவகி அம்மா அப்படியே அமர்ந்துவிட்டார். கணவரோடு வெளியேறியபோது கூட இந்தளவில் வலிக்கவில்லை. ஆனால் நேற்றுத் திருமணமாகி வந்த மகன், இன்று வீட்டை விட்டுப் போனது நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.

 

அறைக்குள் இருந்த கருணாகரன் அத்தனையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.

 

மகன் பார்வை அவள் மீது விழுந்தபோது பெரும் அதிர்ச்சி அவருக்கு. கொஞ்சமும் கூட அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகனிடம் சொல்ல முடியாது. கேட்க மாட்டான். அதைவிட அவருக்குத் தெரியும் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டால் திருமணத்தையே முடித்துவிடுவானோ என்று பயம். அதனால்தான் அவளை அவன் பாதையிலிருந்து தூக்க நினைத்தார்.

 

அவளைக் கடத்த என்றெல்லாம் அவர் திட்டமிடவில்லை. அவளை அவன் கண்ணிலிருந்து ஒரு வாரத்துக்கு மறைக்க நினைத்தார்.

 

விமல் இரண்டு முறை சிறை சென்று வந்ததாலும், அவன் தமையன் நிரந்தரமாகச் சிறையில் இருப்பதாலும், மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணை அங்கே பிடித்திருக்கிறான் என்று ஊருக்கே தெரிய வந்ததாலும் அவனுக்குத் திருமணம் பொருந்தி வராமலேயே இருந்தது.

 

அதையெல்லாம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தித்தான் அவன் மனத்தை மாற்றினார். உன் அண்ணாவை வெளியில் எடுத்துத் தருகிறேன் என்று சொல்லி அவனை இதற்கு இணங்க வைத்தாலும், ஒரு வாரம் அவள் விமலோடு இருந்திருக்கிறாள் என்றான பிறகு, அவனுக்கு அவளை மணமுடித்து வைத்துவிடலாம் என்பதுதான் அவனுக்கே தெரியாத அவர் திட்டமாக இருந்தது. அகிலனையும் இதில் கூட்டுச் சேர்த்துக்கொண்டார்.

 

இத்தனையையும் வெகு சாதுர்யமாகத் திட்டமிட்ட மனிதர், மகனின் யாழிசை மீதான நேசத்தின் ஆழத்தைக் கணிக்கத் தவறியிருந்தார். அல்லது இலேசாக எடுத்துக்கொண்டிருந்தார். அதுவே அவரை அவனிடம் மாட்டிவிட்டிருந்தது.

 

அதன் பிறகுதான் அடிக்குமேல் அடிக்க ஆரம்பித்திருந்தான் அவர் மகன். அன்று மீன் தொட்டியை அவர் முன்னாலேயே தூக்கிப் போட்டு உடைத்தபோது அவரும் சேர்ந்து சில்லுச் சில்லாக உடைந்துபோனார்.

 

 

என் மகன் ஆளுமை மிக்கவன். அத்தனை போரையும் அடக்கியாளும் வல்லமை கொண்டவன் என்று மார் தட்டியவர், அதே ஆளுமையை அவன் தன்னிடம் பிரயோகித்தபோது மனத்தளவில் நொருங்கியே போனார்.

 

ஆனால் அதை வெளியில் காட்ட முடியவில்லை. எதுவும் என்னைப் பாதிக்கவில்லை என்பதுபோல்தான் நடமாடிக்கொண்டிருந்தார்.

 

அதே மகன் தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றும் அளவுக்குப் போவான் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. நான் என்கிற அவர் கர்வம் மொத்தமாக இடிந்து நொறுங்கிப்போன கணம் அது.

 

அவன் திருப்பி அழைத்திருக்கலாம். நடந்த எதுவும் ஊருக்குத் தெரிய வரப்போவதும் இல்லை. ஆனால் அவருக்குத் தெரியுமே. அவர் நெஞ்சுக்குத் தெரியுமே.

 

அவரை அவர் மகன் இந்த வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறான். நீ இனி ஒன்றுமே இல்லை என்று சொல்லியிருக்கிறான். இனியும் அவரால் ஊருக்கு முன்னால் சென்று தலை நிமிர்ந்து நிற்க முடியுமா? நான் தலைவன் என்று முன்னின்று ஒன்றை செய்யத்தான் முடியுமா? பழைய அதிகார தோரணை அவருக்கு வருமா?

 

கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டின் தலைமகனாக, அத்தனைக்கும் பொறுப்பானவராக, முடிவுகள் எடுக்கும் இடத்தில் இருந்தவர். இனி? செல்லாக்காசு!

 

அவரால் இனி அந்த வீட்டில் பழையபடி நடமாட முடியாது. என் வீடு, என் இடம் என்று உணர முடியாது. மகனோடான அவரின் உறவு கூட இனி என்றைக்கும் சீராகப் போவதே இல்லை. அவரின் ஆணவ அதிகாரத்தோடு மகனின் பாசத்தையும் சேர்த்து இழந்துவிட்டார். அப்படியே கட்டிலில் மெல்லச் சரிந்து விழிகளை மூடியவரின் கண்ணோரங்கள் இலேசாகக் கசிந்தன.

error: Alert: Content selection is disabled!!