அத்தியாயம் 58
தன் திருமணமும் திருமண வாழ்க்கையும் எல்லோருக்கும்போல் இருக்காது என்பதும், நிறையப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் தூயவனுக்குத் தெரியும். போராடிப் பார்த்துவிடலாம் என்கிற முடிவுடன்தான் அத்தனைக்கும் தயாரானான்.
ஆனாலும் கூட இந்தளவில் சண்டை சச்சரவுகளை, வாக்குவாதங்களை, மனக்காயங்களை, மனக்கசப்புகளை எதிர்பார்க்கவில்லை. அதுவும் யாழிசையின் கோபமும், அவனை நம்பாத அவள் வார்த்தைகளும் அவனைப் புண்படுத்தின. இனி அவனையும் நம்ப மாட்டாளாமே!
அவனும் அவளுக்காகத்தான் அவளைப் பேச விடாமல் தடுத்தான் என்பதை அவள் புரிந்துகொள்ளவில்லையே. அதுதான் மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.
அங்கேயே இருந்தால் பேச்சு வளர்ந்து சண்டையாகி விடுமோ என்று பயந்துதான் நடக்க வந்தான். அதுவும் முடியவில்லை. இது அவளுக்குப் புதிய இடம். பயப்படுவாள் என்று தோன்ற திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
அப்போதுதான் குருவும் அங்கே வந்து சேர்ந்தான். அவர்களைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறான். நண்பனின் செயல் மனத்தை இதமாக்க, சின்ன புன்னகையுடன் அவனை நெருங்கினான்.
“பல்லைக் காட்டாத மாடு! வாயிலேயே இடிச்சு விட்டுடுவன். என்னடா இதெல்லாம்?” என்று அதட்டினான் அவன்.
“சூடா இருக்கிறாய் போல. ஒரு செவ்விளநீ வெட்டவா?”
“விளையாடாத தூயவா. நீ செய்றது ஒண்டும் எனக்குப் பிடிக்கேல்ல. இஞ்ச என்னத்துக்கு வந்திருக்கிறாய்?”
“வேற எங்க போறது?”
“ஏன், என்ர வீடு இல்லையா உனக்கு?” தேவகி மூலம் என்ன நடந்தது என்று அறிந்துகொண்ட குருவால் அவன் வீட்டை விட்டு வெளியில் வந்ததைத் தவறு என்று சொல்ல முடியவில்லை.
ஒன்றும் சொல்லாமல் அங்கே இறக்கி வைக்கப்பட்டிருந்த செவ்விளநீர் குலையிலிருந்து செவ்விளநீர் ஒன்றைப் பிடுங்கி, தென்னையில் கொத்தியபடி இருந்த கத்தியை எட்டி எடுத்து, இலாவகமாகச் சீவி, நடுவில் கொத்தி ஒட்டையைப் போட்டு, குருவிடம் நீட்டினான்.
அதை வாங்காமல் அவனை முறைத்தான் குரு.
“ஆறுதலா என்னை முறைக்கலாம். இப்ப இதப் பிடி மச்சான். எனக்கும் தாகமா இருக்கு.” என்று அதை அவனிடம் கொடுத்துவிட்டு, “இசை!” என்று தோட்ட வீட்டுக்குள் பார்த்துக் குரல் கொடுத்தான்.
கணவன் தனக்காகப் பரிதவித்ததும், தன் வார்த்தைகளால் காயப்பட்டுத் துடித்ததும் யாழிசையின் விழிகளைக் கலங்கவைத்துக்கொண்டே இருந்தன. அதே நேரம் அவன் தகப்பனால் காயப்பட்டு நிற்பவளால் அதை அவனிடம் வெளிக்காட்டாமல் இருக்க முடியவும் இல்லை. அதில்தான் குருவின் குரல் கேட்டும் வெளியே வரவில்லை.
இப்போது தூயவன் அழைத்தபிறகு வெளியே போகாமல் இருக்க முடியாது. அதே நேரம், ‘என்னோடு பேசாதே’ என்றுவிட்டுப் போனவன் இப்போது மட்டும் எதற்குக் கூப்பிடுகிறானாம் என்று மனம் சலுகையோடு சிணுங்கியும் கொண்டது.
ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுத் தன்னைக் கொஞ்சம் சமாளித்துக்கொண்டு வெளியே வந்தாள்.
“வாங்கண்ணா!” வேறு என்ன சொல்வது என்று தெரியாது அழைத்தாள்.
“நீங்களாவது சொல்லுறேல்லையா இசை? இப்பிடி இஞ்ச வந்திருக்கிறது சரியா வராதெல்லாம்மா.” என்றான் அவன்.
“நாங்க தனியா வந்திருக்கிறம் எண்டு எனக்கே இப்பதான் அண்ணா தெரியும்.” கணவன் மீது கோபமிருந்தாலும் குருவிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் சொன்னாள்.
இப்போது குருவின் கோபம் மறுபடியும் தூயவன் புறம் திரும்பிற்று.
“ஏன்டா ஒண்ட செய்ய முதல் எங்களிட்ட எல்லாம் கேக்க மாட்டியா?”
“என்ன கேக்கோணும் உன்னட்ட?” இன்னொரு செவ்விளநீரை எடுத்துச் சீவியபடி வினவினான்.
“எரிச்சலக் கிளப்பாத தூயவா. இது சும்மா கொட்டில் வீடு. அவசரத்துக்கு எங்கட தேவைகளுக்குப் போட்டது. அந்தப் பிள்ளையையும் வச்சுக்கொண்டு இதில எப்பிடி இருப்பாய் நீ?” என்று சீறினான் குரு.
“ஏன் நீ இஞ்ச இருக்க மாட்டியா?” திரும்பி யாழிசையைப் பார்த்து வினவினான் தூயவன்.
‘இது என்ன கேள்வி’ என்று அவனைப் பார்த்தாள் அவள்.
இதற்குள் சீவிய செவ்விளநீரில் கத்தியால் ஓட்டை போட்டிருந்தவன், “இப்பிடியே குடிப்பியா? இல்ல செம்புல ஊத்தித் தரவா?” என்று வினவினான்.
அப்படியே குடிப்பாள்தான். கூடவே நெஞ்சுப் பகுதியை நனைத்தும் விடுவாள். அதில், “செம்புல குடிக்கிறன்.” என்றாள்.
“உள்ளுக்கு ஒரு செம்பு இருக்கும். எடுத்துக்கொண்டு வா!”
உள்ளே சென்று செம்பினை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். இளநீரை அப்படியே அதன் மீது கவிழ்த்து ஊற்றினான் தூயவன். கோம்பையை இரண்டாகப் பிளந்து, அதிலிருந்த வழுக்கைகளையும் சீவிப்போட்ட செவ்விளநீர் மட்டையால் வழித்துப் போட்டு அவளிடம் கொடுத்தான்.
கண்கள் கணவனின் செய்கைகள் ஒவ்வொன்றையும் களவாடினாலும் பேசாமல் வாங்கி ருசித்துக் குடித்தாள்.
தனக்கும் ஒன்றைச் சீவி, அண்ணாந்து ஒரே மடக்கில் குடித்துவிட்டு, கோம்பையைத் தூக்கி எறிந்தான் தூயவன்.
இதற்குள் நேசன் ஒரு பக்கத்தாலும் மாதவி அம்மா சுவர்ணாவோடு இன்னொரு பக்கத்தாலும் அடித்துப் பிடித்து ஓடி வந்தார்கள்.
கோயிலில் அவர்களின் திருமணம் முடிந்த கையோடு நேசனின் குடும்பம் இவன் வீட்டுக்கு வந்ததில் மாதவியைச் சுவர்ணா வீட்டுக்கு அனுப்பியிருந்தான் தூயவன். தன் மீது இருக்கும் கோபத்தில் இதற்கெல்லாம் காரணம் என்று மாதவியைக் கருணாகரன் காயப்படுத்திவிடுவாரோ என்று நினைத்தான்.
இன்று இவன் வீட்டுக்குக் கணவன், விமலோடு வந்துவிட்டுப் போன சுவர்ணா நடந்ததை எல்லாம் சொல்ல மாதவிக்கும் அதிர்ச்சிதான். தன் தமக்கையின் கணவர் பொல்லாதவர் என்று அவருமே உணர ஆரம்பித்திருந்தார்தான். ஆனால், இத்தனை தூரத்துக்கு மோசமானவராக இருப்பார் என்று யோசிக்கவே இல்லை.
கூடவே, தன் மருமகன் மீது மிகுந்த வெறுப்பும் கோபமும் உண்டாயிற்று. அதுவும் அவர் உயிரையே வைத்திருக்கும் யாழிசையைக் கடத்துவதற்கு முதன்மையான காரணமே அகிலன்தான் என்பதில் நன்றாகச் சுட்டுவிடுவதுபோல் நான்கு வார்த்தைகள் கேட்டுவிட்டுத்தான் விட்டார்.
மகள் வாழ்க்கை, மருமகனாயிற்றே என்று பார்க்க முடியவில்லை. அந்தளவில் மனம் வெறுத்திருந்தது.
சாதி குறைந்தவர் என்கிற ஒற்றைக் காரணத்துக்காகத் தன் தந்தை கடைசி வரையிலும் ஒதுக்கியே வைத்துவிட்ட தன் கணவரின் அருமையையும், அவர்களின் சாதி என்று பார்த்து, அருமை பெருமையாகக் கட்டிக்கொடுத்த கருணாகரனின் கோரமான முகத்தையும் அவரால் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்கவே முடியவில்லை.
அப்படிப் பார்க்கையில் அவர் வாழ்ந்தது எத்தனை அருமையான வாழ்க்கை? இப்படி அவர் தனக்குள் தானே எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டு இருக்கையில்தான் குரு அழைத்து, தூயவன் வீட்டை விட்டுப் புறப்பட்டதைச் சொல்லியிருந்தான். நேசனுக்குச் சொன்னதும் குருதான்.
தூயவன் எப்படியும் தோட்ட வீட்டுக்குத்தான் போவான் என்று தெரியும். தன்னால் மட்டுமே அவன் முடிவை மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இல்லை. அதனால்தான் அவர்கள் இருவரையும் வரவழைத்தான். கூடவே இது மறைக்கும் விடயமும் இல்லையே.
அவர்கள் இருவரும் வருவதைக் கண்ட தூயவன் குருவை முறைத்தான்.
“என்ன முறைப்பு? நேசன் அண்ணா கேள்வியா கேப்பார், பதில் சொல்லு!” அவன் கோபத்துக்கு அசராமல் சொன்னான் குரு.
“என்னய்யா இது? ஏன் இப்பிடிச் செய்தனீங்க? என்ன சண்டை எண்டாலும் இப்பிடித்தான் வீட்டை விட்டு வெளில வாறதா? அதெல்லாம் கூடாது தம்பி.” என்றுகொண்டு வந்தார் மாதவி.
அதிலேயே குரு நடந்த எதையும் சொல்லாமல்தான் அவர்களை வரவழைத்திருக்கிறான் என்று புரிந்தது தூயவனுக்கு.
யாழிசைக்கு மாதவியைக் கண்டதும் கண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது. காயப்பட்டிருந்த மனது தனக்கு நெருக்கமானவரைக் கண்டதும் உடைந்தது.
திருமணமான அடுத்த நாளே யாழிசை இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதை அவராலும் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
சுவர்ணா காலையில் தமையனின் ருத்ரதாண்டவத்தைப் பார்த்த நடுக்கத்தில் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, வந்ததை விடவும் வேகமாக அங்கிருந்து நழுவியிருந்தாள்.
“இதுக்குத்தான் இந்தக் கலியாணம் வேண்டாம் வேண்டாம் எண்டு நிண்டனான். கேட்டியா நீ?” வந்ததும் வராமல் பாய்ந்தான் நேசன்.
“அண்ணா!” பெரும்பாடுபட்டு அவன் நடத்திக்கொண்ட திருமணத்தையே அவன் கேள்விக்குள்ளாக்கிய கோபத்தில் அதட்டினான் தூயவன்.
“என்ன அண்ணா? இனி என்ன, கலியாணமாகி வந்த முதல் நாளே குடும்பத்தைப் பிரிச்சிட்டாள் எண்டு என்ர தங்கச்சியப் பற்றி எல்லாரும் கதைக்கோணுமா உனக்கு?” என்று அவனுக்கு மேலால் சீறினான் நேசன்.
அவனுக்கு ஒன்றும் சொல்லாமல் திரும்பி யாழிசையைப் பார்த்தான் தூயவன். தோட்ட வீட்டின் வாசலில் மாதவியோடு அமர்ந்திருந்தவளுக்குத் தமையனின் பேச்சைக் கேட்டுத் திரும்பவும் கண்ணீர் சுரந்தது.
“சும்மா சும்மா அழுறேல்ல!” என்றான் உடனேயே.
அதற்கும் அவளுக்கு அழுகைதான் வந்தது.
“இசை!” சட்டென்று அதட்டினான்.
“டேய் அவளை என்னத்துக்கு அதட்டுறாய்? நீ செய்ற எல்லாத்துக்கும் அனுபவிக்கிறது அவள். அழாமச் சிரிப்பாளா? இப்பிடி எல்லாம் நடக்கும் எண்டுதான் பயந்தனான். கடைசில… இதுக்குப் பேசாம அவள் என்ர வீட்டில நிம்மதியா இருந்திருக்கலாம்.” என்றதும் தூயவனின் முகம் இறுகிப் போயிற்று.
“முதல் ஒரு சண்டை எண்டதும் இப்பிடித்தான் வெளில வருவியா நீ? என்ன பிரச்சினை எண்டாலும் சமாளிச்சு இருக்கிறேல்லையா? வீட்டுக்குப் போ தூயவா! என்ன இருந்தாலும் அவே உன்ர அம்மா அப்பா. அவேயப் பாக்கிறதும் உன்ர பொறுப்புத்தான்.”
நேசனுக்கும் கருணாகரன் மீது மதிப்பே இல்லைதான். ஆனாலும் தூயவன் இப்படி வெளியே வந்ததை ஏற்க முடியவில்லை. எப்படியாவது அவனைத் திரும்பவும் அங்கே அனுப்பி, அவன் தவறையும் நேராக்கி, தங்கை மீது வரப்போகிற வீண் பழியையும் வரவிடாமல் தடுக்க நினைத்தான்.
இறுகிப்போய் அமர்ந்திருந்தானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை தூயவன்.
“தூயவன், என்ர பொறுமையச் சோதிக்காத. உன்ர அப்பா எப்பிடியான மனுசன் எண்டு தெரிஞ்சும் இசையை உனக்குக் கட்டி வச்சத்துக்குக் காரணம் நீ மட்டும்தான். உன்னை நம்பி மட்டும்தான் அவளை உனக்குத் தந்தனான். அவளைச் சந்தோசமா வச்சிருக்க வேண்டியது உன்ர பொறுப்பு. இப்பிடி நீ நினைச்ச மாதிரியெல்லாம் நடக்கேலாது!”
ஆண்கள் மூவரும் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில்தான் அமர்ந்திருந்தார்கள். அதன் கைப்பிடியில் கையை ஊன்றி, நெற்றியைப் பற்றியிருந்த தூயவன், விழிகளை மூடியிருந்தான். நேசனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் முகம் இன்னுமின்னும் இறுகிக்கொண்டு போயிற்று.
“நீ ஏன் முதல் வெளில வந்தனி? அப்பிடி என்ன நடந்தது?” அதையாவது அறிய முயன்றான் நேசன்.
அதற்கும் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.
“இவன் என்ர பொறுமையைச் சோதிக்கிறான் குரு!” என்று அவனிடம் சொல்லிவிட்டு, “என்ன நடந்தது இசை? நீயாவது சொல்லு.” என்றான்.
பார்வை ஒருமுறை கணவனிடம் சென்று வர, “எனக்குத் தெரியா அண்ணா. நான் மேல பால்கனில இருந்ததால கீழ நடந்த ஒண்டும் கேக்கேல்லை.” என்று மெல்லச் சொன்னாள் யாழிசை.
என்ன சொல்லியும் தூயவன் அசைவதாக இல்லை என்றதும், “சரி வெளிக்கிடு, கொஞ்ச நாளைக்கு வந்து எங்கட வீட்டில இரு. பிறகு உங்கட வீட்டுக்கே போகலாம்.” என்று கடைசியில் நேசன்தான் இறங்கி வந்தான்.

