“அதுதான் சரியப்பு. மனதில கோபதாபம் இருந்து, அது தீருற வரைக்கும் விலகி இருக்க நினைச்சாலும் இப்பிடி இஞ்சயா வந்து இருக்கிறது. அங்க வாங்கோ. ஒண்டுக்கு ரெண்டு வீடு இருக்கு.” என்று தன் வீட்டையும் மனத்தில் வைத்து மாதவியும் அழைத்தார்.
“டேய் என்ன வாயே திறக்காம இருக்கிறாய். இல்லை என்ர வீட்டுக்காவது வா. இப்பிடி ஒண்டுக்கும் உதவாத இந்த வீட்டில இருக்கேலாது.” குருவும் தன் பங்குக்கு அதட்டினான்.
உண்மையில் தூயவனுக்குத் தலையை வலித்தது. எத்தனை பேரை, எத்தனை விடயத்தைச் சமாளிப்பது என்று தெரியவேயில்லை.
“ப்ச்! எல்லாரும் நான் சொல்லுறதக் கேளுங்க. எனக்கு எங்க வந்தும் இருக்கிற ஐடியா இல்ல. அப்பிடி வந்து இருந்தாத்தான் நான் வீட்டை விட்டு வெளில வந்திருக்கிறன் எண்டு ஊருக்குத் தெரிய வரும். இது இஞ்ச எண்டா வேலைக்கும் ஈஸி, கலியாணம் ஆன புதுசுக்குத் தனியா இருக்க ஆசைப்படுறன் எண்டுற மாதிரி முடிஞ்சிடும். அதவிட அங்க எங்கட வீட்டுக்கு நான் போகாமயே இருக்கப் போறதும் இல்ல. கொஞ்சம் விலகி இருக்க நினைக்கிறன். அவ்வளவுதான். அதோட இந்த வீட்டைக் கொஞ்சம் திருத்தினா போதும். நானும் அவளும் மட்டும்தானே. எங்களுக்கு இது காணும்.” என்று எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லி முடித்தான்.
“அதெல்லாம் சரியா வராது. என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறாய் நீ? நீ நினைக்கிறதுதான் எப்பவும் நடக்கோணும் எண்டா. நீ இருக்கிறது எண்டா இஞ்சயே இரு. நான் இசையைக் கூட்டிக்கொண்டு போறன்.”
அப்போதாவது இறங்கி வருவான் என்று எண்ணி நேசன் சொல்ல, “சரி கூட்டிக்கொண்டு போங்க!” என்றான் தூயவன்.
பற்றிக்கொண்டுதான் வந்தது நேசனுக்கு. அசைக்கிறானே இல்லையே. அந்தக் கொதிப்பில், “நீ வா இசை. ஆகத்தான் சேட்டை விட்டுக்கொண்டு இருக்கிறான். இஞ்ச இருக்கோணும் எண்டு உனக்கு என்ன தலையெழுத்தா?” என்றான்.
பதறிப்போய்க் கணவனைப் பார்த்தாள் யாழிசை. அவன் அவள் புறம் திரும்பவே இல்லை. இனி அவனையும் நம்ப மாட்டேன் என்று சொன்னாள் தானே. போக விருப்பம் என்றால் போகட்டும் என்றொரு வீம்பு.
“அவனை என்னத்துக்குப் பாக்கிற? நீ வா. நீ வந்தா பின்னால அவன் வருவான். கொழும்பு வரைக்கும் விடாமத் தேடிக்கொண்டு வந்தவன் இஞ்ச இருக்கிற எங்கட வீடு வரைக்கும் வரமாட்டானா?” என்றதும் தூயவனுக்குச் சின்னதாய்ச் சிரிப்பு அரும்பிற்று.
திரும்பி யாழிசையைப் பார்த்தான். அவள் அவனைப் படு பயங்கரமாக முறைத்தாள். அண்ணா அழைக்கிறான். இவன் தடுக்கலாம் தானே. அதை விட்டுவிட்டுச் சிரிக்கிறான்.
“அதான் உன்ர அண்ணா கூப்பிடுவார் எல்லா. போ!” என்றான் அவனும்.
பார்வையாலேயே அவனைப் பொசுக்கிவிட்டு, “நான் அவரோடயே இருக்கிறன் அண்ணா. எனக்கு ஒரு குறையும் இல்ல.” என்றாள் அவள்.
அதன் பிறகு யார் என்ன சொல்லியும் தூயவன் அசையவில்லை. தேவகியும் அழைத்து அழுது கெஞ்சினார். கோகிலா எடுத்துப் பேசிப் பார்த்தார். நளினியும் சொன்னாள். எல்லோரையும் இவன் சமாதானம் செய்தானே தவிர்த்துத் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.
கடைசியில் அவர்களுக்கான உணவு, மாற்றுடைகள், படுக்கப் பாய், அதன் மேல் விரிக்க ஒரு மெல்லிய மெத்தை, போர்வை என்று அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
மூன்று ஆண்களுமாகச் சேர்ந்து அங்கிருந்த மூட்டைகளை எல்லாம் ஒதுக்கி, உண்டு, உறங்கி, வாழ்வதற்கு ஏற்ற இடமாக அந்த வீட்டை மாற்ற முயன்றார்கள்.
நேசனுக்கு மனம் ஆறவேயில்லை. அங்கிருந்த நேரம் முழுவதும் எதையாவது சொல்லி, அவன் மனத்தை மாற்றிவிடவே முயன்றான். பலன் மட்டும் சுழியம்தான்.
மாதவிக்கும் நடப்பதை எல்லாம் பார்க்க பார்க்க மனது வலித்தது. அவன் பெறாமகன் என்றால் அவள் அவரின் பாசத்துக்குரிய பெண்ணாயிற்றே. அவர்களின் வாழ்க்கை இப்படியா இருக்க வேண்டும் என்று தனக்குள் அழுதார்.
யாழிசைக்கும் இனி என்னென்ன பேச்சை எல்லாம் கேட்கவேண்டி வருமோ என்கிற பயம் நெஞ்சை ஆட்டினாலும் கணவனின் நடமாட்டத்தைக் கண்களுக்குள் நிரப்பியபடி அமர்ந்திருந்தாள்.
குருவும் நேசனும் புறப்பட ஆயத்தமானார்கள். நேசன் தன்னுடன் வரும்படி மாதவியை அழைத்தும் குருவோடு தேவகி வீட்டுக்குப் புறப்பட்டார் அவர்.
“ஒரு ரெண்டு நாள் போகட்டும் சித்தி. இப்ப போனா அப்பா என்ன கதைப்பார் எண்டு தெரியாது.” என்று தூயவன் சொல்லியும் கேட்கவில்லை.
“பரவாயில்லை அப்பு. ஆனா அக்காக்கு ஒரு துணை கட்டாயம் இப்ப தேவை.” என்றவரின் பேச்சில் அன்னையை எண்ணி அவனும் மௌனமாகிப் போனான்.
நிச்சயமாக அன்னையும் துளசியும் நொருங்கித்தான் போயிருப்பார்கள். தான் விலகி வந்ததைத் தனக்காகப் பொறுத்துக்கொண்டாலும் தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள் அழுதுகொண்டிருப்பார்கள்.
ஒரு நெடிய மூச்சு ஒன்று அவனிடமிருந்து வெளியேறியது. திரும்பி யாழிசையைப் பார்த்தான். இப்போதும் அதே வாசற்படியில் அமர்ந்திருந்தாள். பார்க்கப் பாவமாக இருந்தது. அவன் மீது மனத்தாங்கல் இருந்தபோதும் தமையனோடு போகவில்லையே.
அவளையே சில கணங்கள் பார்த்தவன், “குளிக்கப் போறியா?” என்று கேட்டான்.
“குளிக்கோணும்தான்.” இங்கே எங்குக் குளிப்பது என்று தெரியாததால் இழுத்தாள்.
“ரெண்டு பேருக்கும் உடுப்பும் துவாயும் எடுத்துக்கொண்டு வா.” என்று அவன் அழைத்துப்போனது கிணற்றடிக்கு.
அது சாதாரண கிணறு இல்லை. தோட்டக்கிணறு. இருள் கவிய ஆரம்பித்துவிட்ட பொழுதிலும் எட்டிப் பார்த்தவள் மின் விளக்கின் உபயத்தில் மிரண்டு போனாள். அத்தனை ஆழமாக இருந்து அவளை நடுங்க வைத்தது.
அங்கு மோட்டாரைப் போட்டுவிட்டான். அங்கிருந்த மோட்டார் அறையில் உடையை மாற்றிக்கொண்டு வந்து குளித்தாள். அவன் முன்னால் குறுக்குக் கட்டுடன் குளிக்கக் கூச்சமாக இருந்தாலும் அவர்களைச் சூழ்ந்திருந்த இருள் அவளைக் கொஞ்சம் காப்பாற்றியது.
அவனும் குறுகுறு என்று பார்த்தோ, சீண்டியோ அவளைச் சங்கடப்படுத்தப் போகவில்லை. மோட்டாரிலிருந்து குபுகுபு என்று பாய்ந்து வந்த தண்ணீர் சில்லென்று உடலையே நடுங்க வைத்தாலும் இருவரும் நன்றாகக் குளித்து, உடையை மாற்றிக்கொண்டு வந்தார்கள்.
அமைதியாகவே வாங்கி வந்த உணவைச் சாப்பிட்டு முடித்தார்கள். அவன் வெளி விளக்குகளை எல்லாம் அணைத்து, கதவுகளை எல்லாம் நன்றாகச் சாற்றி, சுற்றி எல்லாம் பார்த்துக்கொண்டு வந்தபோது, பாய் விரித்து, அவனுக்கு இடம் விட்டுப் படுத்திருந்தாள் அவள்.
தூயவனுக்குத் தானாக நேற்றைய இரவின் நினைவுகள். ஒரு நெடிய மூச்சுடன் தன் பக்கம் வந்து சரிந்தான். விழிகளை மூடினாலும் மனம் விழித்தே கிடந்தது.
நேசன் சொன்னது போல யாழிசை மட்டுமல்லாமல் அவனைச் சுற்றி இருக்கும் அத்தனை பேரின் இன்றைய துன்பத்துக்கு அவன்தான் காரணம். சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த அவன் மனைவியையும் அவனால் சந்தோசமா வைத்துக்கொள்ள முடியவில்லை. பெற்ற அன்னைக்கு வயதான காலத்தில் நிம்மதியான நாள்களைக் கொடுக்கவும் முடியவில்லை. கூடப் பிறந்தவளையும் கண்ணீரில் ஆழ்த்திவிட்டான்.
அவனால் முடியவில்லை. உள்ளம் ஒரு ஆறுதலைத் தேடியது. திரும்பி யாழிசையைப் பார்த்தான்
அவனுக்கு முதுகு காட்டி, ஒதுங்கிப் படுத்திருந்தாள்.
அவன் யோசித்தது ஒரு கணம்தான். ஒரே இழுவையில் அவளை இழுத்துத் தன் கைகளுக்குள் கொண்டுவந்திருந்தான்.
அவள் திகைப்புடன் பார்க்க, ஒன்றும் சொல்லாமல் ஆறுதல் தேடும் குழந்தையாக அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
அவள் தேகம் கூசிச் சிலிர்த்தது. அது அவனுக்கே தெரிந்தது. தொண்டையும் ஏறி இறங்க அந்தத் தொண்டைக் குழியில் முத்தமிட்டான்.
அவள் திகைப்புடன் பார்க்க, “என்ன கோவம் எண்டாலும் என்ர கைக்கையே இருந்து கோவப்படு.” என்றான் அவன்.
“நீ எனக்கு ஆரோவா இருந்த நேரமே உன்ன ஒதுங்கிப் போக விடாதவன் இப்ப விடுவன் எண்டு நினைச்சியா?” என்றவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அவளிடமிருந்து வந்த சுகந்தமான நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தவாறே குட்டி குட்டி முத்தங்கள் பதித்தான்.
அவள் தடுக்கவில்லை. அவளுக்கும் அவன்தானே ஆறுதல். நடுவில் கிடைத்த இடைவெளி அவளையும் கொஞ்சம் நிதானமாக்கியிருந்தது.
நடந்த விடயத்தால் அவள் காயப்பட்டது காயப்பட்டதுதான். என்ன, அவன் நிலையை அவளால் யோசித்துக்கொள்ள முடிந்தது. பெற்ற தந்தைக்கும் தனக்கும் நடுவில் நின்று அல்லாடுகிறான். ஒன்றுமே சொல்லாமல் அவன் கேசம் கோதிக்கொடுத்தாள் யாழிசை.
இதை அவன் எதிர்பார்க்கவில்லை. வியப்புடன் தலையைத் தூக்கி அவளைப் பார்த்தான். அவள் இருக்கும் மனநிலைக்கு அவன் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. அவள் தன் கைக்குள் வேண்டுமாக இருக்கவும்தான் இழுத்து அணைத்தான். திமிறுவாள் என்று நினைக்கத் தலையைக் கோதுகிறாளே.
இப்போதும் அவன் கேசத்துக்குள் இருந்து கைகளை எடுக்காமல் என்ன என்றாள் புருவங்களை மாத்திரமே உயர்த்தி.
மயங்கியே போனான் தூயவன். தன்னிடம் கேள்வி கேட்ட புருவங்களில் முத்தமிட்டான். அவள் நாணத்துடன் பார்வையைத் தழைத்துக்கொள்ள அந்த விழிகளிலும் முத்தமிட்டான். உதட்டைப் பற்றியபடி அவள் முகம் திருப்பப்போனாள். அதற்கு விடாமல் அவள் இதழ்களைத் தான் பற்றிக்கொண்டான்.
அவளைக் காயப்படுத்தியதற்காக மன்னிப்பைக் கேட்டானா, தன்னை அவளுக்கு உணர்த்த முயன்றானா, இல்லை இறப்பின் இறுதி வரையில் உனக்கென நான் இருப்பேன் என்கிற நம்பிக்கையைக் கொடுக்க முயன்றானா தெரியாது.
அவசரமே இல்லாமல் ஆழ்ந்து முத்தமிட்டான். தன்னை மறந்து அவள் இதழ்களில் லயித்தான். அவளை விடுவிக்க அவன் அவசரம் காட்டவேயில்லை. மெல்ல அவன் விலகியபோது இருவர் விழிகளும் இலேசாக நீர் திரையிட்டிருந்தது.
“இன்னும் கோவமா?” உதட்டோடு உதடு உரசக் கிசுகிசுத்தான்.
அவள் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி மறுப்பாகத் தலையை அசைத்தாள். முகம் மலர அவளை அள்ளியெடுத்து ஆரத்தழுவி ஆக்கிரமித்தான். அவன் நடத்தியது ஆத்மார்த்தமான தேடல்.
நேற்றைய நாள் அவன் கைகளில் அவள் குழைந்தாள். உருகினாள். மயங்கிக் கிடந்தாள். ஆனால் இன்று அவளும் அவனைக் கிறங்கடித்தாள். மயக்கினாள். அவனைப் பிதற்ற வைத்தாள். சத்தியமாகச் செத்துவிட்டால் என்ன என்று இருந்தது அவனுக்கு.
அடுத்த நாள் இருவருக்கும் மற்றவரைப் பார்க்கையில் வெட்கமும் சிரிப்பும் ஒருங்கே வந்தன. கண்களாலேயே மற்றவரைக் களவாடினர்.
காலையிலேயே எழுந்து மண்வெட்டியோடு தோட்டத்துக்குள் நுழைந்த தூயவன், சித்தம் கலங்கி பித்து பிடித்தவன் போல் நின்றான். நேற்றைய நாள் அவள் காட்டிய நெருக்கம் அவனைப் பைத்தியக்காரனாக்கியது.
எந்த வேலையையும் செய்ய முடியாமல் மண்வெட்டியைத் தூக்கிப் போட்டுவிட்டு அவளைத் தேடிக்கொண்டு வந்தான்.
அவள் வியப்பும் மலர்ச்சியுமாக விழிகளை விரிக்க, அவள் உதட்டில் அழுத்தி முத்தமிட்டான் தூயவன். “இரவை மறக்கவே ஏலாம இருக்கு இசை!” என்றான் நெருக்கமான குரலில்.
அவள் நிலையும் அதேதான் என்பதில் அவன் மார்பினில் முகத்தை மறைத்துக்கொண்டாள்.

