அத்தியாயம் 6
அந்த மருத்துவ ஊர்தி யாழ்ப்பாணம் நோக்கி மிக வேகமாய் விரைந்துகொண்டிருந்தது. ஏதேதோ மருந்துகள் ஏறிக்கொண்டிருக்க, அரை மயக்க நிலையில் அவருக்கான கட்டிலில் படுத்துக் கிடந்தார் மாதவி.
அவரின் தலைப்பகுதியில் இருந்த இரு இருக்கைகளில் ஒன்றில் வைத்தியர் ஒருவர் அமர்ந்திருக்க மற்றையதில் யாழிசை அமர்ந்திருந்தாள்.
அவள் விழியோரங்கள் கரித்துக்கொண்டேயிருந்தன. எத்தனை பெரிய பழியைத் தூக்கி அவள் மீது போட்டுவிட்டாள்.
அத்தைக்கு ஏதாவது நடந்தால்? அதற்குமேல் சிந்திக்க விரும்பாமல் மாதவியின் ஒற்றைக் கரத்தைத் தன் ஆறுதலுக்குப் பற்றிக்கொண்டாள். அவளுக்கு அவர் வேண்டும். அவர் நன்றாகி வந்துவிட வேண்டும். இனி அந்த வீட்டுக்குப் போனாலும் விடாமல் கவனித்துக்கொள்வாள்.
பிறந்ததிலிருந்து எப்படி அப்பா, அம்மா முகங்களைப் பார்த்து வளர்ந்தாளோ அப்படித்தான் அவளுக்கு அவரும் அரசரட்ணமும். அவர்கள் அவளுக்கு இன்னொரு தாய் தந்தைக்கு ஒப்பானவர்கள்.
அப்படியானவரைக் கவனிக்காமல் விடுவாளா?
மாதவி அவரின் தமக்கை வீட்டுக்குப் போனால் மட்டும் எந்த வீண் பேச்சுகளும் வேண்டாம் என்றெண்ணித் தள்ளி நிற்பாள். மிக மிக முக்கியம் என்றால் மட்டும் குறுந்தகவல் அனுப்பிவிடுவாள்.
அப்படி, ‘அத்த மருந்து போட்டுட்டீங்களா?’ என்று கேட்டு அனுப்ப அவள் மறந்ததேயில்லை. அவர் பைக்குள் பார்த்து பார்த்து மருந்துகளை வைத்துவிடுவதும் அவள்தான்.
அங்கே அவர் போட்டாரா இல்லையா என்று அவள் எப்படி அறிவாள்?
‘ஏன் அத்த கவனமில்லாம இருந்தீங்க. இப்ப பாருங்க, நீங்கதானே இப்பிடிப் படுத்துக் கிடக்கிறீங்க.’ அவர் புறங்கையைத் தடவிவிட்டவளுக்குக் கண்ணீர் நிற்பதாக இல்லை.
வைத்தியர் இடையிடையே அவர் உடல் நிலையைச் சரி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போதெல்லாம் ஒருவிதக் கலவரத்துடன் அவர் முகத்தையே பார்த்தாள் யாழிசை.
“கொஞ்சம் கிரிட்டிக்கள்தான். எண்டாலும் பயப்பிடாதீங்க. யாழ்ப்பாணம் போய்ட்டம் எண்டா ஓகே. ஒப்பரேஷனுக்கு அங்க எல்லாம் ரெடியாத்தான் இருக்கு.” என்றார் அவர் மெல்லிய குரலில்.
சின்ன ஆறுதலுடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவளின் கை இயல்பாகக் கழுத்தில் கிடந்த செயினை எடுத்து வருடியது. அது அவளின் பதினெட்டாவது பிறந்தநாளுக்கு மாதவி போட்டுவிட்டது. அதன் பிறகுதான் அவளின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நகை வாங்கித்தர ஆரம்பித்தார்.
பத்தொன்பதாவது பிறந்தநாளுக்கு ஒரு சோடி ஜிமிக்கியும் உயர்தரத்தில் நல்ல பெறுபேறு எடுத்தபோது ஒரு கைச்செயினும் வாங்கித் தந்திருந்தார்.
இதைத் தாண்டிச் சின்ன சின்ன மூன்று சோடித் தோடுகள், மெல்லிய வளையத்தில் அத்தனை விரல்களுக்கும் மோதிரங்கள் போடுவதுதான் இப்போது ட்ரெண்ட் என்று சொல்லி, ஐந்து மோதிரங்கள் வாங்கிக் கொடுத்திருந்தார்.
அந்த ஐந்துமே மொத்தமாய் ஒரு பவுனுக்குள்தான் வரும். அதைப் பார்த்துச் சுவர்ணா அவரோடு சண்டை பிடித்ததில் அவளுக்கும் வாங்கிக் கொடுத்திருந்தார்.
அதை நகை, பெறுமதியான ஒன்று என்று பார்த்ததை விடவும் அவரின் பாசத்தின் பரிசாகத்தான் பார்த்திருக்கிறாள்.
அப்படி இருந்தும்கூட மறுத்திருக்கிறாள். சுவர்ணாவின் வாய்க்கு அவ்வளவு பயம். இதற்குப் பதிலாகத் தனக்குப் பிடித்த பலகாரத்தைச் சொல்லி, அதைச் செய்து தாருங்கள், இது வேண்டாம் என்றுதான் சொல்வாள்.
ஆனால், அன்னைக்கு ஒப்பானவராக நின்று, பெண் பிள்ளை, நாளைக்கு திருமணமாகப் போகிறவள், காதில் கழுத்தில் ஒன்றும் இல்லாமல் இருக்கக் கூடாது என்று சொல்லி, கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய், அவளுக்குப் பிடித்த மாதிரி பார்க்கச் சொல்கையில் முடிந்த வரையில் குறைந்த பவுனில் வாங்குவது மட்டுமே அவளால் முடிந்திருக்கிறது.
கோகிலா நளினிக்குக் கூட இதில் உடன்பாடில்லை. அதுவும் நட்புக்குள் பணம் வரவே கூடாது என்று கடைசிவரை பிடிவாதமாக நின்ற மகேந்திரத்தின் மனைவி கோகிலா.
“இதெல்லாம் வேண்டாம் மாதவி. நாங்க எல்லாரும் ஒற்றுமையா ஒரு குடும்பம் மாதிரி பாசமா இருக்கிறதே போதும்.” என்று அவரே சொல்லியிருக்கிறார்.
“உங்களிட்ட சொல்லுறதுல என்ன கோகிலா அக்கா. நான் பெத்த பிள்ளை சுவர்ணா கூட என்னை இப்பிடிக் கவனமாவும் பாசமாவும் பாக்கிறேல்ல. ஆனா இசை எனக்கும் உங்களுக்கும் வித்தியாசம் கடடுறதே இல்ல. அதுக்காக அவா என்ன பாக்கிறதுக்குப் பதிலா செய்றன் எண்டு அர்த்தம் இல்ல. அவா எனக்கும் பிள்ளைதான். அந்த உரிமைலதான் ஆசையா செய்றன். இன்னும் சொல்லப்போனா எனக்கு இன்னும் செய்யத்தான் ஆசை. நீங்கதான் விடுறேல்ல.” என்று சொல்வார் மாதவி.
அவளும் அந்த வயதுக்கே உரிய ஆசையில் உடை முதற்கொண்டு செருப்பு வரை பொறுத்தமாக அணிந்து தன்னை எப்போதுமே பொலிவாக வைத்துக்கொள்வாள்.
அதற்கு என்ன சொல்லிவிட்டாள் சுவர்ணா? என்னவோ இந்த நகைகளுக்காகவும் அவரிடம் இருக்கும் வசதிக்காகவும் மட்டுமே அவள் மாதவியோடு இருப்பதுபோல் உருவகப்படுத்திவிட்டாளே.
இதனால்தான் அவள் அப்பா, தான் கைப்பிடித்துத் தூக்கிவிட்ட உற்ற நண்பனிடம் கூட எந்த உதவியையும் வாங்கவில்லை போலும். இது அவளுக்குத் தெரியாமல் போயிற்றே. என் அத்தை என்று உரிமையாக எண்ணியதால் வந்தது அத்தனையும். சட்டென்று கன்னத்தில் இறங்கிவிட்ட கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டாள்.
இனியும் அவர் நகைகள் அவளுக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம். அவர்கள் ஏழைகள்தான். அவள் அப்பா இல்லாத பெண்தான். அதற்கென்று முதுகெலும்பும் இல்லாதவளா? இல்லை, சுயமரியாதை அற்றவளா?
அந்த நிமிடமே அவளிடம் இருக்கும் எல்லாவற்றையும் கழற்றிவிட ஆசைப்பட்டாள். கழற்றி எங்கு வைக்க? அவளின் மாதவி அத்தை வீட்டுக்கு வரட்டும். பிடிவாதமாக நின்று அத்தனையையும் கொடுத்துவிட வேண்டும்.
ஒரு வழியாக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மருத்துவ ஊர்தி வந்து சேர்ந்தது. அதன் பிறகு வைத்தியர்கள் மாதவியை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றார்கள். வெளியே இருந்த இருக்கையில் பரிதவிப்புடன் அமர்ந்திருந்தாள் யாழிசை.
நிமிடங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. உள்ளே போன யாரும் வெளியே வரவே இல்லை.
இதற்குள் இரண்டு மூன்று தடவைகள் அழைத்திருந்தாள் சுவர்ணா.
“நான் வெளிக்கிட்டன். வந்துடுவன். நீ பொறுப்பில்லாம எங்கயும் போயிடாத. அங்கேயே இரு.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
சுவர்ணாவின் கணவன் அகிலன் ஒரு பேருந்து ஓட்டுநர்.
மதியம் போய் இரவு பத்து மணிபோல் வேலை முடித்துக்கொண்டு வருவான். அவனுக்குத்தான் முதலில் அழைத்துச் சொன்னாள். அவன் அங்கே வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை ஆரம்பித்திருந்தான்.
அதில், “நீ பிள்ளைகளோட நில்லு. நான் யாழ்ப்பாணம் போனதும் ஓடிப்போய்ப் பாத்திட்டு என்ன நிலவரம் எண்டு சொல்லுறன்.” என்றிருந்தான்.
தேவகிக்கும் அழைத்துச் சொல்ல, விடயம் அறிந்த கருணாகரனுக்கு அவ்வளவு கோபம்.
“போயிருக்கிறது உங்கட அம்மா. அவாவோட என்னத்துக்கு அந்தப் பிள்ளையை அனுப்பி வச்சனீங்க சுவர்ணா? வெளிக்கிடுங்க, எல்லாரும் போவம்.” என்றவர் உடனேயே தூயவனுக்கு அழைத்து வரச் சொன்னார்.
துளசியோடு சுவர்ணாவின் இரட்டையர்கள் ரூபன் ரூபிணியை விட்டுவிட்டு, தூயவனின் வேனில் அவன் நண்பன் குரு, கருணாகரன், தேவகி, சுவர்ணா என்று ஒரு கும்பல் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டது.
இப்படி யாரோ ஒருத்தியின் பொறுப்பில் பெற்றவரை விட்டுவிட்டு இருப்பாயா, இதுதான் உன் பொறுப்பா என்று கேட்டு, அந்தப் பயணம் முழுக்க கருணாகரன் சுவர்ணாவுக்கு நல்ல மண்டகப்படி கொடுத்தார்.
மாதவி எடுக்கும் மருந்துகளின் விபரம் என்ன என்று தெரியாததும் சேர, சுவர்ணாவின் காதில் இரத்தம் வராததுதான் குறை.
அவர்கள் அங்குச் சென்று சேர்ந்தபோது நேரம் இரவு பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. அதுவரையில் யாழிசை இரவு சாப்பிடக்கூட இல்லை. ஏன், இருந்த இடத்தை விட்டு அசையவேயில்லை. அவசரத்துக்கு மட்டும் மலசலகூடம் சென்றுவந்தாள்.
சுவர்ணா சொன்ன வார்த்தை அந்தளவில் அவளைப் பயப்படுத்தியிருந்தது.
சுவர்ணாவை எதிர்பார்த்திருந்தவள் அவள் தூயவன் குடும்பத்தோடு கும்பலாக வரவும் மிரண்டுபோனாள். அவர்கள் வந்த வேகத்தைக் கண்டு, தன்னை அடிக்கப் போகிறாளோ என்று ஒரு கணம் நடுங்கியே போனாள். கைகால்கள் உதற வேகமாய் எழுந்து நின்றாள்.
தூயவன் புறம் அவள் திரும்பவேயில்லை. ஆனாலும் அன்றைய அவன் பார்வை நினைவில் வந்து இன்றும் அவளுக்குள் நடுக்கமோட வைத்தது.
“என்னவாம்? ஆரும் ஏதும் சொன்னவையா?” மற்ற எல்லோரும் தள்ளி நின்றுகொள்ள இவளிடம் வேகமாக வந்து வினவினாள் சுவர்ணா.
“இ…ல்ல மச்சாள். இன்னும் அத்த ஐசியுக்க தான் இருக்கிறா. என்னவோ மருந்து குடுத்து அடைப்பை நீக்கப் பாக்கினமாம். அது சரி வராட்டித்தான் ஒப்ரேஷனாம்.” என்றவளுக்கு வார்த்தைகள் தந்தியடித்தன.
“தம்பி வா, என்ன எண்டு கேட்டுக்கொண்டு வருவம்.” என்றபடி கருணாகரன் வைத்தியரைத் தேடிக்கொண்டு செல்ல, தேவகி அங்கிருந்த இருக்கையில் தொய்ந்து அமர்ந்தார்.
இப்போதுதான் ஒன்றாகச் சேர்ந்தார்கள். அதற்குள் தங்கைக்கு நடக்கக்கூடாத எதுவும் நடந்துவிடுமோ என்றெண்ணி அவர் நெஞ்சு அடித்துக்கொண்டது. சுவர்ணா ஆண்களின் பின்னால் நடந்தாள்.
கொஞ்ச நேரத்தில் வைத்தியருடனே திரும்பி வந்தவர்கள் தேவகியையும் அழைத்துக்கொண்டுபோய் மாதவியைப் பார்த்துவிட்டு வந்தார்கள்.
பார்த்திருந்த யாழிசைக்கு விழிகள் இரண்டும் விரிந்து போயிற்று. அவள் எத்தனை முறை கேட்டிருப்பாள். கெஞ்சியிருப்பாள். விடவேயில்லையே. அதிகாரமும் செல்வாக்கும் இருக்கிறவர்கள் கேட்டால்தான் எல்லாம் நடக்கும் போலும்.

