தன்னையும் ஒரு முறை விடுவார்களா என்று சுவர்ணாவின் முகத்தையே பார்த்தாள் யாழிசை. அவளுக்கு இவள் ஒருத்தி நிற்பது தெரியவே இல்லை போலும். அழுதுகொண்டிருந்த தேவகியின் அருகில் அமர்ந்துகொண்டாள்.
“அதுதான் கொண்டு வந்ததுக்கு இப்ப எவ்வளவோ பரவாயில்லை எண்டு டொக்டர் சொல்லிட்டார் எல்லா. பிறகும் என்னத்துக்கு அழுதுகொண்டு?” என்று கருணாகரன் அவரை அதட்டியதில்தான் மாதவிக்குப் பரவாயில்லை போலும் என்று யாழிசை அறிந்துகொண்டாள்.
என்னவோ நொடியில் தான் அந்த இடத்துக்குச் சம்மந்தமே இல்லாத ஒருத்தியாக மாறிவிட்டது போலிருக்கவும் சட்டென்று கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது அவளுக்கு.
இனி என்ன செய்வது? அதற்குள் நேரம் மூன்று மணியாகியிருந்தது. அவள் போவதா, இல்லை நிற்க வேண்டுமா? அதைவிட வீட்டுடையில் நின்று புல்லைச் செருக்கிக்கொண்டிருந்தவள் அப்படியே ஓடி வந்திருந்தாள்.
சும்மா தூக்கிப் போட்டிருந்த கொண்டை, அழுக்காகிப்போன உடை, காய்ந்துபோன வியர்வை, அழுத முகம், இரவிரவாக விழித்திருந்தது என்று அவர்கள் கண்களில் படவே வெட்கியவள் முடிந்தவரை அவர்களிடமிருந்து தள்ளி நின்றுகொண்டாள்.
இதற்குள் குரு எல்லோருக்கும் பால் தேநீர் வாங்கிக்கொண்டு வந்தான். ஒரு பேப்பர் கப்பை இவளிடம் கொண்டு வர, “இல்லை அண்ணா. இந்த நேரம் நான் குடிக்கிறேல்ல.” என்று மறுத்தாள்.
“நாங்க மட்டும் ஒவ்வொரு நாளும் முழிச்சிருந்து சரியா இந்த நேரம் டீ குடிச்சுக்கொண்டாம்மா இருக்கிறம். விடியிற வரைக்கும் தாங்க வேண்டாமா. சும்மா குடிங்க.” என்று சிரித்துக்கொண்டு நீட்டவும் அவள் முகத்திலும் மென் முறுவல் அரும்பிற்று.
“நன்றி அண்ணா. கா…சு தரட்டா?” என்று தயங்கிக் கேட்டவளைப் பொய்யாக முறைத்துவிட்டுப் போனான் அவன்.
அப்படி அவன் இலகுவாய்ப் பேசியதும், பொய்யாக முறைத்துவிட்டுப் போனதும் மனதுக்கு இதமாக இருக்க தேநீரைப் பருகினாள்.
“என்னடா முறைப்பெல்லாம் பலமா இருக்கு?” குருவிடம் விசாரித்தான் தூயவன்.
“இல்ல, டீக்கு காசு தரவா எண்டு கேட்டவா. அதான். பாவமடா, பயந்துபோய் நிக்குது பெட்டை.”
அவனும் அதைக் கவனித்தான்தான். அதுவும் அவர்கள் வரும்போது அவள் விழிகளில் தெரிந்த அச்சம் அவனுக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்திருந்தது. அதில், “பயம் நல்லதுதான். அப்பதான் எங்களிட்டயும் சேட்டை விடுற தைரியம் வராது.” என்றான் தேநீரைப் பருகிக்கொண்டு.
“ஆனா பாரன், கோடிய நெருங்கிற சொத்தைச் சத்தமே இல்லாம வாங்கினவள் டீக்கு காசு தரப்போறாளாம்.” என்றான் இகழ்ச்சியாக ஒரு சிரிப்போடு.
“அந்தப் பிள்ளையா கேட்டு வாங்கினதா, உன்ர சித்தியா எழுதி வச்சாவா எண்டு தெரியாம இப்பிடிக் கதைக்காத வைட்.” என்றான் குரு.
“சித்திதான் எழுதிக் குடுத்திருக்கிறா. அதெல்லாம் விசாரிச்சாச்சு. ஆனா, சித்தி குடுத்தாலும் இவள் வாங்குவாளா? உடுப்பு, செருப்பு, நகை கூட ஓகே. ஏன் அவளுக்குக் கலியாணம் எண்டு வந்து சித்தி கொஞ்சம் பெருசா ஏதும் செய்தாலும் எனக்கு ஒண்டும் இல்ல. காலம் காலமா அவேயோடதான் சித்தி இருந்திருக்கிறா. அந்த அன்பில, நன்றில செய்யலாம். அதுக்காகச் சொத்தக் குடுக்கிறது… அத இவளும் வாங்கிக்கொள்ளுறது… எனக்குச் சித்திலயும்தான் கோவம். உனக்கே தெரியும், அது பரம்பரைச் சொத்தடா. நாங்க பாத்து பாத்துக் காத்தது. அத எவளோ ஒருத்தி சொந்தம் கொண்டாட, நாங்க வெளில ஆரோவா நிண்டு வேடிக்கை பாக்கிறதா சொல்லு?” என்று அவனிடமே தூயவன் நியாயம் கேட்டபோது குருவிடம் பதில் இல்லை.
“எனக்கே இப்பிடி எண்டா அப்பாவை யோசி. அந்த மனுசன்தானே நாயா உழைச்சு எல்லாத்தையும் பாதுகாத்து வச்சிருந்தவர். அப்பாக்குச் சித்தில சரியான கவலையும் கோவமும். ஆனாலும் காட்டாம இருக்கிறார்.” என்றான் தகப்பன் மீது பார்வை சென்று வர.
அவனின் இந்தக் கோபத்தில் நியாயம் இருப்பதாகவே குருவுக்கும் பட்டது. அதுவும் அந்தக் காலத்துச் சொத்தில் மார்க்கண்டேயர் பாகம் பிரிக்கவில்லை. அவர் பிரித்த அந்த நாளில் அவர்களிடம் எவ்வளவு சொத்துப் பத்து இருந்ததோ அதில் கிட்டத்தட்ட சரி பாதியை மாதவிக்குக் கொடுத்திருந்தார்.
அப்படி பார்க்கையில் அதில் கருணாகரனின் உழைப்பே அதிகம். அதில், “விடு மச்சான். நடந்து முடிஞ்சது கதைச்சு என்ன பிரயோசனம்.” என்று சமாளித்தான்.
தன்னைப் பற்றி அங்கு நடந்த பேச்சை அறியாத யாழிசை அங்கேயே அமர்ந்திருந்தாள். வருகிற வழியில் விழுந்த பேச்சில் சுவர்ணா இவள் பக்கம் வரவேயில்லை.
ஒரு வழியாகப் பொழுது புலர ஆரம்பித்தது. இருளும் விலகிவிட, “இன்னும் என்னத்துக்கு அந்தப் பிள்ளை சும்மா நிக்கிறா. அவாவை போகச் சொல்லுங்கோ சுவர்ணா. எங்கட இனசனம் மாதவியைப் பாக்க வந்து, அவாவைக் கண்டா என்ன நினைக்கும்?” என்றார் கருணாகரன்.
அவள் அங்கு நிற்பது அவரைத் தொந்தரவு செய்துகொண்டேயிருந்தது. ஒருவிதச் சினம். இரவு என்பதால்தான் அவ்வளவு நேரமும் பேசாமல் இருந்தார். விடிந்ததும் அவளை அகற்ற முனைந்தார்.
சுவர்ணாவும், “நீ வெளிக்கிடு இசை!” என்றாள் இவளிடம்.
பதற்றத்தில் வேகமாகச் சரியென்று தலையசைத்தவளுக்கு எப்படிப் போவது என்று தெரியவில்லை. ஆனாலும் வேகமாக அங்கிருந்து வெளியே வந்திருந்தாள்.
அவள் இருக்கும் கோலத்தில் பஸ்ஸில் ஏறுவதை நினைக்கவே வெட்கமாய் இருந்தது. வேறு வழியில்லை. பணம்? பர்ஸை திறந்து பார்த்தாள். சில நூறுகள்தான் இருந்தன. நாளாந்த தேவைக்கு அவளுக்கு அது போதும்.
ஆனால், இங்கிருந்து பேருந்து தரிப்பிடம் சென்று, அங்கிருந்து வவுனியா சென்று, வவுனியா டவுனிலிருந்து வீடு வரைக்குமான பயணத்துக்கு?
என்னவோ அநாதரவாக நடு வீதியில் நிற்பது போலிருக்கக் முகம் கலங்கிச் சிவந்துபோனது. ஏடிஎம் எங்கிருக்கிறது என்று கேட்டுத் தெரிந்துகொண்டு போய்ப் பணம் எடுத்துக்கொண்டு திரும்பி வருகையில் அவளருகில் வேகமாக வந்து நின்றது தூயவனின் வேன்.
ஒரு கணம் பயந்துதான் போனாள். என்ன என்று இவள் பார்க்க, “வவுனியாக்குப் போகாம நடு ரோட்டில நிண்டு என்ன செய்றாள் எண்டு கேளடா!” என்று அவன் அதட்டுவது இவளுக்கே கேட்டது.
குரு கேட்க முதல், “காசு எடுக்கப் போனனான் அண்ணா. இனிப் போயிடுவன்.” என்றாள் வேகமாக.
தூயவனுக்கு சுவர்ணாவில் அப்படி ஒரு கோபம் வந்தது. “பின்னால ஏறச் சொல்லு. பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விடலாம்.” என்றான் தூயவன்.
அவர்களின் வீட்டு வாசலையே மிதிக்க விடாதவனின் வேனில் அவளா? அவளுக்கு அவன் என்றால் பயம்தான். நடுக்கம்தான். ஆனால், போதுமான அளவுக்கும் மேலேயே சுயமரியாதை உண்டே! “இல்ல இல்ல. நான் ஆட்டோவிலயே போயிடுவன்.” என்றாள் இசை அவசரமாக.
“பழக்கமில்லாத ஊர்ல ஆர் எண்டு தெரியாத ஆட்டோவில் போவாளாமா? சொல்ல மாட்டியாடா?” என்று குருவின் பிடறியிலேயே படார் என்று ஒன்று போட்டான் தூயவன்.
அவன் இப்படி இறங்கி வந்து பேசுவதே பெரிது. இதில் திமிர் காட்டுவாளா என்று ஏறிக்கொண்டு வந்தது அவனுக்கு.
“டேய், அதுக்கு ஏன்டா எனக்கு அடிக்கிறாய்.” என்று குரு பிடறியைத் தடவ, இரண்டடி பின்னால் ஓடியிருந்தாள் இசை.
“வந்து ஏறுங்கம்மா. இல்ல இவன் என்னை அடிச்சே கொன்டுடுவான்.” என்றான் குரு அப்போதும் பிடறியை அழுத்திவிட்டபடி.
அது தன்னால் என்பதில், “சொறி அண்ணா. ஆனா, நான் பஸ்ஸிலயே பஸ் ஸ்டாண்ட்டுக்கு போய் வவுனியா பஸ்ஸ பிடிக்கிறன்.” என்றவள் நிற்கவில்லை. விறுவிறு என்று நடக்க ஆரம்பித்தாள்.
இறங்கி வந்து தனக்கும் அடித்துவிடுவானோ என்று அவ்வளவு பயம். அவன் கொஞ்சம் சண்டித்தனமானவன் என்று அவளுக்குத் தெரியும். அவன் பற்றிய செய்திகள் அடிக்கடி காதில் விழும்தான்.
ஆனால், இதுதான் நேரில் பார்த்தது. கிட்டத்தட்ட அவனிடமிருந்து தப்பித்து ஓடுவதுபோல் குடுகுடு என்று நடந்தாள் யாழிசை.
“நீயெல்லாம் டீ குடுக்க மட்டும்தான் லாயக்கு. ஏறு எண்டு அதட்டிச் சொல்ல மாட்டியா? எரும மாதிரி அங்கேயும் இஞ்சையும் தலையை மட்டும் திருப்பி திருப்பிப் பாக்கிறாய்!” என்றவனுக்கு அத்தனை சினம்.
“நீ அதட்டியே அந்தப் பிள்ளை ஏறேல்லயாம். நான் சொல்லியா ஏறப் போறா.” என்றான் குரு.
அதுதான் தூயவனின் கோபமும். அவ்வளவு திமிர் அவளுக்கு. வாகனத்தை மறித்து ஏறு என்று சொன்ன அவனைச் சொல்ல வேண்டும். எந்த ஆட்டோவில் போய், என்ன ஆனால் எனக்கென்ன என்று இருந்திருக்க வேண்டும் என்று உள்ளே குமுறினாலும் அவள் பின்னால் வாகனத்தை உருட்டி, அவள் யாழ்ப்பாணப் பேருந்துதரிப்பிடத்துக்கான பஸ்ஸில் ஏறுவதைப் பார்த்துட்டே அங்கிருந்து புறப்பட்டான்.

