அத்தியாயம் 61
நாமாகத் தேர்ந்தெடுக்கும்போது தனிமை மிக மிக இனிமையானது. அதுவே நம்மைச் சுற்றி இருக்கிறவர்கள் நம்மைத் தனிமைப்படுத்துகிறபோது அதைப் போலொரு நரகம் வேறில்லை.
இன்று கருணாகரனுக்கு அதுதான் நடந்துகொண்டிருந்தது. அவரை யாரும் கவனித்துக்கொள்ளத் தயாராக இல்லை. கண்டுகொள்ளவும் தயாராக இல்லை. அதுவும் தேவகி அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தார்.
அன்று ஒருநாள் வீட்டில் யாருமே இல்லை. மாதவி, நேசன் வீட்டுக்குப் போயிருந்தார். குருவும் துளசியும் கூட மிதிலனை நேசரி விட்டுவிட்டு அப்படியே வெளியே போயிருந்தார்கள்.
தேவகி சமைத்துக்கொண்டிருந்தார். உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் என்பது மருந்துக்கும் இல்லை. மகள் தாய்மை உற்றிருக்கிறாள். உண்மையில் அது எத்தனை பெரிய சந்தோசத்தைத் தந்திருக்க வேண்டும். அவருக்கானால் கண்ணீர்தான் வந்தது.
அவர் உள்ளத்தின் அல்லல்களை யாரிடமும் சொல்ல வழியில்லை. அப்படிச் சொல்லி, அது மகன் காதுக்குப் போவதில் விருப்பமும் இல்லை. அவனாவது நிம்மதியாக இருக்கட்டும்.
ஆனாலும் கூட, போனவன் கொஞ்ச நாள்கள் கழித்து, கோபம் தணிந்து வந்துவிட மாட்டானா என்று ஒரு ஏக்கம்.
ஆனால், தோட்ட வீட்டை அச்சறுக்கையான வீடாக மாற்றியமைக்கச் சொல்லியிருக்கிறான் என்று அறிந்ததிலிருந்து, அவன் அங்கேயேதான் இருக்கப் போகிறான் என்பது உறுதியாகிப்போனதில் இன்னுமே தனக்குள் அழுதுகொண்டிருந்தார்.
அப்போதுதான் அங்கே வந்தார் கருணாகரன்.
“தேவகி!”
தேவகியின் கைகள் சட்டென்று வேலை நிறுத்தம் செய்தன. முகம் சினத்திலும் சீற்றத்திலும் சிவந்து கொதிக்க ஆரம்பித்தது. ஆனாலும், திரும்பாமல் தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்.
“தேவகி!”
“…”
“கதைக்க மாட்டியா?”
தேவகிக்கு நெஞ்சு அனலெனக் கொதிக்க ஆரம்பித்தது. இத்தனை வருடங்களும் அவர் என்ன சொன்னாலும் செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பிக்கொண்டு, காலைச் சுற்றும் நாய்க்குட்டியைப் போல அவரின் காலையே சுற்றியவர் இல்லையா. அதுதான் திடீரென்று அவர் கதைக்காமல் விட்டதும் ஏற்க முடியவில்லை போலும்.
சற்று நேரம் கருணாகரனிடம் சத்தம் இல்லை. போய்விட்டார் போலும் என்று தேவகி நினைக்கையிலேயே அவர் தோளில் கருணாகரனின் கரம் படிந்தது. அடுத்த வினாடியே பட்டென்று தட்டிவிட்டார் தேவகி. “என்ன?” என்றார் கொஞ்சமும் குறையாத சீற்றத்துடன்.
கொஞ்சம் திகைத்துத்தான் போனார் கருணாகரன். முகம் கறுத்தும் போயிற்று. கூடவே சுருக்கென்று வலித்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு, “இப்பிடிக் கதைக்காம இருக்காத தேவகி.” என்றார் தழைந்த குரலில்.
“ஓ! உங்களோட கதைக்கோணுமா? என்ன கதைக்கோணும்? அந்தப் பிள்ளையைப் பாத்து நீங்க கதைச்சீங்களே அப்பிடியா? இல்ல, இவ்வளவு மோசமா நீங்க நடந்தும் ஒரு சின்ன விசயத்தக் கூட வெளில விடாம வெளில போய்ட்டானே என்ர மகன், அவனைப் பற்றிக் கதைக்கிறதா? அப்பா கூட மாதவியச் சேர்க்கேல்லையே தவிர இப்பிடிக் கேவலமான எந்த வேலையையும் பாக்கேல்லை. ஆனா நீங்க? சீ!” வெறுப்புடன் சொல்லிவிட்டு அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
அப்படியே நின்றுவிட்டார் கருணாகரன். அந்தச் சீயில் விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்தார். என்னவோ முகத்திலேயே காரி உமிழ்ந்தது போலிருந்தது. அதன் பிறகு தேவகியிடம் பேச முயலவேயில்லை.
இதேதான் துளசி விசயத்திலும் நடந்தது. சொல்லாமல் இருக்கக் கூடாது என்று குருதான் அவரைத் தேடி வந்து அவள் தாய்மை உற்றிருப்பதைச் சொன்னான்.
அதைக் கேட்ட கருணாகரனின் உள்ளமெல்லாம் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும். அவரின் செல்லப் பெண் துளசி. அவள் வாழ்க்கை மலர்ந்துவிட வேண்டும் என்று அவர் பட்ட பாடுகள் நிறைய. இன்று மலர்ந்து பூக்கவும்
ஆரம்பித்துவிட்டதே!
அவள் அந்தப் பக்கத்தால் போகவும், “துளசி!” என்று நெகிழ்ந்துபோய் அழைத்தார்.
அவள் காதில் விழுந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை.
“துளசி நில்லம்மா. எவ்வளவு பெரிய விசயம். அத அப்பாட்டச் சொல்லோணும் எண்டு இருக்கேல்லையா உங்களுக்கு?” என்ன இருந்தாலும் அவள் தன்னிடம் இதைச் சொல்லியிருக்க வேண்டும் என்கிற ஆதங்கத்துடன் வினவினார்.
ஒருகணம் அப்படியே நின்றுவிட்டாள் துளசி. அவளுக்கு யாரையும் நோகடிக்கத் தெரியாது. எல்லோரையும் எல்லாவற்றையும் அனுசரித்துப் போகும் பெண். மற்றவர்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்கிறவள்.
நொந்து வந்த தந்தையின் குரல் அவளைத் தாக்கினாலும் அவளால் அவரை மன்னிக்க இயலவில்லை.
“எனக்கு உங்கட முகமே பாக்க விருப்பம் இல்லாம இருக்கே அப்பா. பிறகு எப்பிடி வந்து சொல்லுவன்?” கண்ணீருடன் அவள் கேட்கவும் விக்கித்து நின்றார் மனிதர்.
“எனக்குத் தானேப்பா உங்கள் எல்லாரையும் விட இது சந்தோசமான விசயம். ஆனா என்னால சந்தோசப்பட ஏலாம இருக்கே. அழுகைதான் வருது.”
நெஞ்சில் அடிவாங்க வேதனையுடன் அவளைப் பார்த்தார் கருணாகரன்.
“ஏன் அப்பா இப்பிடி எல்லாம் நடந்தனீங்க? எனக்குத் தெரிஞ்ச எங்கட அப்பா எங்களில உயிரா இருக்கிற மனுசன். எங்களுக்குச் சின்னதா ஒரு காயம் வந்தாலே துடிச்சுப்போற ஆள். அப்பிடியான நீங்க எப்பிடி இப்பிடி மாறினனீங்க? அந்த அருள் என்னை என்ன பாடுபடுத்தினவன் எண்டு உங்களுக்குத் தெரியும் எல்லாப்பா. அவனால எவ்வளவு அழுதானான்? அவன்ர தம்பியோட உங்களால எப்பிடிக் கதைக்க முடிஞ்சது? இதெல்லாம் தெரிய வந்தா என்ர மனம் என்ன பாடுபடும் எண்டு கூட நீங்க யோசிக்கேல்ல என்ன?”
அவளும் இத்தனை நாள்களும் உள்ளத்தில் இருப்பதைக் கொட்ட முடியாமல் தனக்குள்ளேயே குமுறுக்கிக்கொண்டு இருந்தவளாயிற்றே. இன்று தன்னை மறந்து கொட்டினாள்.
“நீங்க தூக்கிப் பிடிக்கிற அதே சாதி தானே நீங்க? நீங்க நல்ல மனுசனா? அந்த அருளும் எங்கட சாதி தானே. அவன் நல்ல மனுசனா? பிறகு என்னப்பா சாதி? என்னையும் அண்ணாவையும் விட, எங்கட சந்தோசத்தை விட உங்கட கௌரவமும் சாதியும் தானே உங்களுக்கு முக்கியம். பிறகு என்னத்துக்கு என்ர வயித்தில இருக்கிற குழந்தையைப் பற்றி உங்களிட்டச் சொல்லோணும்?” என்றுவிட்டு நடந்தவள் நின்று,
“எனக்கு உங்கட முகம் பாக்கவே விருப்பம் இல்ல. ஏன், நீங்க இருக்கிற இந்த வீட்டில இருக்கக் கூட விருப்பம் இல்ல. நாங்களும் போயிட்டா அம்மா பாவம், தனிச்சுப் போவா எண்டுதான் இஞ்ச இருக்கிறன்.” என்றுவிட்டுப் போகவும் அப்படியே தள்ளாடி, சுவரில் மோதுண்டு நின்றார் கருணாகரன்.
நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார் தேவகி. நடுவில் வரவில்லை. தாய் தகப்பன்தான் பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும். அந்தத் தாய் தகப்பனே தவறான வழியில் போனால் இப்படித்தான் பிள்ளைகளிடம் வாங்கிக் கட்ட வேண்டும். இனியாவது மண்டையில் உறைகட்டும்.
அவரும் தன் பங்குக்கு, “தம்பி குரு!” என்று குருவை அழைத்து, “நாங்க வாழ வழியில்லாமத்தானே இருக்கிறம். அதாலதான் உங்கட மாமா ஊரை அடிச்சு உலைல போட்டவர். ஆனாலும் அடுத்தவேட்ட பிதுங்கின சொத்தை எல்லாம் திருப்பிக் குடுக்கச் சொல்லுங்க. அப்பிடியே சண்முகம் அண்ணான்ர மகனை வெளில எடுத்துவிட்டு, அகிலனுக்கு பஸ் வாங்கிக் குடுத்து, அருள் வெளில வாறத்துக்கான வேலையையும் பாக்கட்டாம் எண்டு சொல்லிவிடுங்க. செய்த பாவங்களில் கொஞ்சமாவது கழியட்டும்.” என்று சொல்லிவிட்டுப் போனார்.
அன்று முழுக்க அசையவில்லை கருணாகரன். ஆனால், அடுத்த நாளே மனைவி சொன்ன வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார். மாதவியிடம் வாங்கிய சொத்துகளைக் கூடத் திருப்பிக் கொடுத்திருந்தார். அத்தனையும் தூயவனின் காதுக்கு உடனுக்குடன் வந்து சேர்ந்தது.
அதன் பிறகு வந்த நாள்களில் அத்தியாவசியம் தவிர்த்து அவர் வெளியில் போவதில்லை.
ஊருக்குள் அரசல் புரசலாகக் கதைகள் அடிப்பட ஆரம்பித்தன. தூயவன் குறைந்த சாதிப் பெண்ணை மணந்தது கருணாகரனுக்குப் பிடிக்கவில்லையாம், மாதவிக்கு நடந்தது போலவே அவனையும் வீட்டை விட்டு அனுப்பிவிட்டாராம், யாழிசை காணாமல் போனதன் பின்னால் கூட அவர் இருக்கலாம் என்று பல கதைகள்.
அந்த வீட்டு மனிதர்கள் யாருமே வாயைத் திறக்காததால் அந்தப் பேச்சுகள் எல்லாம் வதந்தி வடிவத்திலேயே உலவிக்கொண்டிருந்தன.
இங்கே கருணாகரனைத் தனிமை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்ல ஆரம்பித்தது. தவறாமல் அவர் செய்த தவறுகளை எல்லாம் நினைவுபடுத்தியது. அதில் தனக்குள் தானே வெம்பி வேக ஆரம்பித்தார்.
இப்போதெல்லாம் அவரால் மற்றவர்களை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. மன அழுத்தம் போட்டு அழுத்தியது.
மனைவி, பிள்ளைகள், வீடு எல்லாம் அவர் கட்டுப்பாட்டில் இருக்கையில் கௌரவமும், ஊருக்குள் கிடைக்கும் போலி மரியாதையும், சாதியும் பெரிதாகத் தெரிந்தன. அவற்றைத் தன் அடையாளமாக நினைத்தார்.
அதுவே வீடு அவர் கட்டுப்பாட்டைத் தாண்டி, மனைவி பிள்ளைகள் அவரை ஒதுக்கி வைத்துவிட்டு. அவரவர் வாழ்க்கையைப் பார்க்க ஆரம்பித்தபோது, வீடும் குடும்பமும் அதன் நிம்மதியும் எத்தனை முக்கியம் என்று புரிய ஆரம்பித்தது.
வலிக்க வலிக்க அடித்துவிட்டுத்தான் காலம் கற்றுத்தரவே ஆரம்பிக்கும். அதன் வழியில் இப்போதெல்லாம் சுய அசலில் அடிக்கடி ஈடுபட்டார். அப்படி அவரை அவரே பிரட்டிப் பார்க்கிற ஒவ்வொரு முறையும் தனக்குள் வெட்கித் தலை குனிந்தார்.

