கடன் அன்பை முறிக்கும் 62 – 2

அவன் விடவில்லை. பின்னாலேயே வந்து வீட்டின் கதவை அடைத்துவிட்டு, “சரி வா, என்னையே தந்து கடனைத் தீர்க்கிறன்.” என்றதும், “என்ன எல்லாம் கதைக்கிறீங்க. வெளுக்கோணும் உங்களுக்கு!” என்று அவனுக்கு நன்றாக நான்கு போட்டாள் யாழிசை.

 

“கட்டின மனுசனுக்குக் கைய நீட்டுறாய் என்ன? பொறு நாளைக்கு நேசன் அண்ணாட்ட நியாயம் கேக்கிறன்.” சந்தோசமாக அவளிடம் அடியை வாங்கிக்கொண்டு சிரித்தான் அவன்.

 

“நியாயம் கேப்பீங்களோ! நீங்க எனக்குச் செஞ்ச கொடுமைக்கு எல்லாம் நான் ஆரிட்ட போய் நியாயம் கேக்கிறது? அதுவும் உங்கட தாத்தா மோசம் போன நேரம் வந்த என்னை விரலால திரத்தினனீங்க எல்லா? சாகும் மட்டும் மறக்க மாட்டான்.” என்றவள் அவனை அடிப்பதை நிறுத்தவேயில்லை.

 

“அதுக்கும் சேத்துத் தானேடி இப்ப விழுந்து கிடக்கிறன். காணாதா உனக்கு?” என்று கேட்டு அவள் உதட்டில் அழுத்தி முத்தமிட்டான் அவன்.

 

“அதுக்காக எல்லாம் மன்னிக்கேலாது. அண்டைக்கு வீட்ட போயிருந்து அழுதனான். அதுவும் இந்தப் புருவம் என்னை என்ன பாடு படுத்தும் தெரியுமா?” என்றவள் எழுந்துபோய் புருவ முடிகளைப் பிடுங்குவதை(Eyebrow Plucker) எடுத்துக்கொண்டு வந்து, அவன் புருவ மத்தியில் இருந்த முடிகளைப் பிடுங்க ஆரம்பித்தாள்.

 

இதைக் கொஞ்சமும் எதிர்பாராத தூயவன், “அடியேய் உயிர் போகுதடி!” என்று கத்த கத்த அவள் விடவில்லை.

 

பழக்கமே இல்லாதவனுக்கு உண்மையில் உயிர் போனது. அவன் தடுக்க வந்தபோது, “ஒழுங்கா விட்டீங்க எண்டா அந்த இடத்தை மட்டும் பிடுங்கிட்டு விடுவன். இல்லையோ மீசை தாடி எல்லாம் பிடுங்குவன்.” என்று அவள் மிரட்டவும் சிரிப்புடன் விட்டுவிட்டான் தூயவன்.

 

என்னதான் அவள் எல்லாவற்றையும் கடந்து வந்திருந்தாலும் அவை இன்னுமே அவள் மனத்தில் காயமாகப் பதிந்திருப்பதை புரிந்துகொண்டான்.

 

தன் முகத்தருகில் முகம் வைத்து, வெகு தீவிரமாக முடிகளைப் பிடுங்கிக்கொண்டிருந்தவளைக் கண்ணில் சிரிப்புடன் பார்த்தான்.

 

“கண்ண மூடுங்க தூயவா!” அவன் பார்வை வீச்சு அவள் முகத்தைச் சூடாக்க முனைய அதட்டினாள்.

 

“ஏன், நான் பாத்தா உனக்கு என்ன?” அவளைக் கண்டுகொண்டவனின் குரல் நகைத்தது.

 

“எனக்கு ஒண்டும் இல்ல!”

 

“பேந்தென்ன?(பிறகு என்ன?)”

 

“தூயவா!”

 

சரி என்று கண்களை மூடிக்கொண்டான். உதட்டின் சிரிப்பு மட்டும் முடிவதாக இல்லை.

 

“இந்த வாய் ஏன் தேவை இல்லாம சிரிக்குது?”

 

“என்னடி இது அநியாயம்? பாக்கக் கூடாது. சிரிக்கக் கூடாது. இனி மூச்சும் விடக் கூடாது எண்டும் சொல்லுவியா?” உடல் சிரிப்பில் குலுங்க அதட்டினான் அவன்.

 

“என்ன டிஸ்டப் பண்ணினா அதையும் சொல்லுவன்.”

 

அவன் உதட்டு முறுவல் விரிந்துபோனது. அன்று தன் முன்னால் நிற்கவே பயந்தவன் இன்று அவனை என்ன பாடு படுத்துகிறாள்?

 

“இந்த ரெண்டும் வாழ்க்கைல சேரவே கூடாது. சேர விடமாட்டன்.” புருவ மத்தியில் ஒரு குட்டி முடியைக் கூட விடாது எடுத்துவிட்டு, அசல் வில்லியின் குரலில் சொன்னாள்.

 

“அது உன்ன என்ன செய்தது?” இரத்தமாய்ச் சிவந்து கிடந்த நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டபடி வினவினான்.

 

“என்ன செய்ததா? நீங்க பயம் காட்டினதை விட அதுதான் என்னப் பயம் காட்டினது கூட.” என்றவளைச் சரித்து அவள் இதழ்களில் அழுத்தி முத்தமிட்டவள், “அந்தக் கோபம் இப்ப போச்சா?” என்றான் கண்களில் கனிவுடன்.

 

கொஞ்சம் திகைத்துப்போய் அவனைப் பார்த்தாள் யாழிசை. அப்போதுதான் அவன் முகமே சிவந்துபோயிருப்பதைக் கவனித்தாள்.

 

சட்டென்று குற்றவுணர்ச்சி மேலிட, “சொறி விளையாட்டுக்குத்தான் செய்தனான். அது…” என்று தடுமாறினாள்.

 

“நீ சீரியஸா செய்தாலும் நான் தாங்குவன். இதெல்லாம் ஒண்டுமே இல்ல. விடு!” என்றான் அவன்.

 

அவளுக்கு மனம் ஆறவில்லை. “சும்மா எனக்காகச் சொல்லாதீங்க. உங்கட முகமே சிவந்து போச்சு. சொறி தூயவா.” கண்கள் கலங்க, குரல் கரகரக்கச் சொன்ன யாழிசை, அவன் கன்னங்களைத் தாங்கிப் புருவ மத்தியில் உதடுகளை ஒற்றி ஒற்றி எடுத்தாள்.

 

“கோவமா எண்டு வடிவா சொல்லத் தெரியேல்ல. ஆனா, என்னட்டப் போய் இப்பிடி நடந்தாரே எண்டு சின்னதா ஒரு மனக்குறை இருந்தது. ஆனாலும் அதுக்காக… சொறி தூயவா.”

 

அவள் கலக்கமும் கண்ணீரும் அவனைப் பாதித்தன. “உனக்கு விசர். பழக்கம் இல்லாததால முகம் சிவந்து போச்சுப் போல. மற்றும்படி நோ(வலி) எல்லாம் இல்ல.” என்ற அவன் சமாதானத்தை அவள் ஏற்கவேயில்லை.

 

இலேசாக வீங்க ஆரம்பித்திருந்த புருவ மத்தியைப் பார்க்க பார்க்க அவளுக்கு மனத்தைப் பிசைந்தது. திரும்ப திரும்ப தன் ஈர உதடுகளை ஒற்றி ஒற்றி எடுத்து, ஒத்தடம் கொடுத்தாள்.

 

சும்மாவே அவள் மீது பித்துப் பிடித்துத் திரிபவன் அவன். இப்படி அவள் முத்தங்கள் பதித்தால்? அவளைத் தனக்குள் மொத்தமாய்ச் சுருட்டியிருந்தான்.

 

 

*****

 

அடுத்த நாள் காலை இருள் பிரிந்தும் பிரியாத பொழுது. கூலர் அணிந்து, மண்வெட்டியோடு தோட்டத்துக்கு வந்தான் தூயவன்.

 

அவனைப் பார்த்த குருவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

 

“என்ன மச்சான் புதுசா?”

 

“அது… இப்ப எல்லாம் சூரியனப் பாத்தாலே கண் கூசுது மச்சான். அதான்.” அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி முன்னால் நடந்தான் தூயவன்.

 

“சூரியனே இன்னும் வந்து சேரேல்ல. உனக்குக் கண் குத்துதா?” தூயவன் எதிர்பாரா நொடியொன்றில் கண்ணாடியைக் கழற்றிய குரு அப்படியே நின்றுவிட்டான்.

 

வித்தியாசம் அப்படியே தெரிந்தது.

 

“டேய் என்னடா இது, நடுவுல கொஞ்சப் பக்கத்த காணேல்ல?” திகைப்பும் சிரிப்புமாக அவன் கேட்க, “பிடுங்கி விட்டுட்டாள் மச்சான்.” என்றான் இப்போதும் அவனைப் பாராமல்.

 

குருவுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ஆனாலும் குறுகுறு என்று தூயவனையே பார்த்தான்.

 

“என்னையே பாக்காத எருமை!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் தூயவன்.

 

“அது நீ புருவம் எல்லாம் ஷேப் பண்ணி நிக்க லைட்டா லவ்வு வர்ற மாதிரி இருக்கு மச்சான். கொஞ்சம் தப்பு பண்ணுவமாடா?” என்று அவன் கேட்டது வேறு நேற்றைய இரவை நினைவு படுத்திவிடவும் ஒரு கணம் திகைத்து நின்ற தூயவன், துரத்தி துரத்தி அடிக்க ஆரம்பித்தான்.

 

 

*****

 

நாள்கள் மாதங்களாக உருண்டோட ஆரம்பித்தன. எப்போதும்போல் அன்றும் இருள் பிரியாப் பொழுதில் எழுந்து தோட்டத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தான் தூயவன். முகம் கழுவிக்கொண்டு வந்த யாழிசை, தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து, அவனுக்கானதை வைத்துவிட்டுத் தன்னதை அருந்த ஆரம்பித்தாள்.

 

அப்போது தூயவனின் கைப்பேசி ஏதோ செய்தி வந்திருப்பதாகச் சிணுங்கிற்று. இந்த விடிகாலையில் குருவோ என்று அவசரமாக எடுத்துப் பார்த்தான். யாழிசை அனுப்பி இருந்தாள்.

 

வியப்புடன் திரும்பி அவளைப் பார்க்க, கையில் இருந்த தேநீர்க் கோப்பையில் மிகுந்த கவனமாக இருந்தாள் அவள்.

 

அவன் பார்வையைச் சந்திக்காத அவள் செய்கை மெல்லிய குறுகுறுப்பைக் கொடுக்க அதைத் திறந்தான்.

 

மெல்ல மெல்ல

என்னுயிரில்

உன்னுயிரும் அசையுதே!

துள்ள துள்ள என்னிதயம்

நம்முயிருள் நிறையுதே!

லாளி லாளி

நீ என் தூளி தூளி!

 

என்கிற பாடல் வரிகளை அனுப்பியிருந்தாள்.

 

அவனுக்குப் புரியவில்லை. “என்ன இசை?” என்று அவளிடம் திரும்பியவன் சட்டென்று அந்த வரிகளை உன்னிப்பாகக் கவனித்தான்.

 

மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே என்கிற இடத்தில் அவன் கவனம் குவிந்தது.

 

சட்டென்று நிமிர்ந்து “இசை!” என்றான் பரபரப்பும் படபடப்புமாக.

 

அவள் இப்போது உதட்டு முறுவலை அடக்கியபடி அவனையே பார்த்திருந்தாள்

 

“இசை” அவனுக்குப் பேச்சே வரவில்லை. ஐஸ் கட்டிகளை அவன் மீது யாரோ கொட்டியதுபோல் தேகம் முழுக்க சிலிர்த்துப் போயிற்று.

 

“என்ன இது?”

 

“இசை சொல்லு!”

 

“உண்மையாவா?”

 

கணவனின் ஆரவாரத்தையும் மகிழ்ச்சியையும் கண்குளிரப் பார்த்துவிட்டு, அவ்வளவு நேரமாக உள்ளங்கைக்குள் பொத்தி வைத்திருந்ததை அவன் புறம் நீட்டினாள்.

 

அதில் இரண்டு கோடுகள் விழுந்து கிடந்தன.

 

சட்டென்று அவளை அள்ளி அணைத்துத் தூக்கியிருந்தான் தூயவன். அவனுக்குச் சந்தோசத்தில் கைகால்கள் கூட இலேசாக நடுங்கின. அவள் முகம் முழுக்க முத்தங்கள் பதித்துத் தன் சந்தோசத்தை வெளிப்படுத்தினான்.

 

ஒற்றைக் கை அவள் சட்டைக்குள் புகுந்து, அந்த மணி வயிற்றை ஆசையாய் வருடிக் கொடுத்தது.

 

“தூயவா!” உடல் மொத்தமும் சிலிர்த்தது அவளுக்கு.

 

“என்ர இசையரசின்ர வயித்துக்க குட்டி இசை இருக்கிறாளா?” கண்களில் கண்ணீரின் பளபளப்புடன் வினவினான் அவன்.

 

அவளுக்கும் கணவனின் ஆர்ப்பரிப்பில் கண்ணீர் முட்டி மோதிற்று. “குட்டி தூயவன்தான் இருக்கிறான். அதுவும் உங்களுக்கு மாதிரியே புருவம் இணஞ்சு.” அவள் குரலிலும் சந்தோசக் கரகரப்பு.

 

“ஆரா வேணுமெண்டாலும் இருக்கட்டும். என்ர இசை எனக்குப் பெத்துத் தரப்போறாள். அது போதும் எனக்கு!” என்றவன் தன் இசையரசியைத் தன் நெஞ்சுக்குள்ளேயே பொத்திக்கொண்டாள்.

 

error: Alert: Content selection is disabled!!