அத்தியாயம் 63
தூயவன் யாழிசைக்குத் திருமணம் நடந்த அதே கோயில். ஜீவனின் திருமணத்திற்காகத் தயாராகியிருந்தது.
மாதவி அம்மாவோடு சேர்ந்து தூயவன், சுவர்ணா, தேவகி அம்மா, நேசன், நளினி, கோகிலா அம்மா என்று எல்லோரும் கேட்கிற ஒவ்வொரு முறையும் இதோ வருகிறேன் இதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த ஜீவன், இப்போதுதான் சொன்னதுபோல் வந்திருந்தான்.
இப்போதும் ஊருக்கு வந்தவரிடம் ஏன் இத்தனை காலம் இழுத்தடித்தாய் என்று கேட்கிற எல்லோரிடமும் எதையெதையோ சொல்லிச் சமாளித்தவனுக்கு மட்டுமே உண்மைக் காரணம் தெரியும். அது யாழிசை.
அன்று முதன் முதலாக அவன் இலண்டன் புறப்பட்டபோது அவன் தன் மனத்தை வெளிக்காட்டியபோது, பளிங்குபோல் மலர்ந்து சிவந்த அவள் முகத்தை நேரில் பார்த்தவன் அவன்.
அதன் பிறகும் ஒரு சிலமுறை வீடியோ கோளில் பேசியபோது ஆவலில் மின்னிய அவள் விழிகளும் அவன் பார்க்கையில் இலேசாக வெட்கம் படர்ந்த அவள் முகமும் கூட அவன் கண்களுக்குத் தப்பியிருக்கவில்லை.
அப்படி இருக்க அவன் இன்னொரு பெண்ணை நேசித்து மணந்து, ஒன்றாக வாழ ஆரம்பித்தபோது அவள் சண்டைக்கு வரவில்லை. குறைந்த பட்சமாக என்னை ஏன் ஏமாற்றினாய் என்று கூடக் கேட்கவில்லை.
அதுவும் சேர்ந்து அவனைக் குத்த ஆரம்பித்திருந்தது. இன்னும் அவள் ஒற்றையாக நிற்கையில் அவனால் மனைவியோடு சென்று அவள் முன்னால் நிற்க முடியாது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளை எதிர்கொள்வான்? எப்படி அவள் முகம் பார்ப்பான்? அதனால்தான் இலங்கைப் பயணத்தைக் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தான்.
அதுவே தூயவனோடு அவளுக்குத் திருமணமாகி, இப்போது குழந்தையும் வந்துவிட்டதாம் என்று அறிந்ததும் அவன் கண்கள் கலங்கிய போயின.
அப்போதுதான் அவன் உள்ளத்தில் இருந்த பாரமும், அவளுக்குத் தான் நியாயமாக நடக்கவில்லை என்கிற குற்ற உணர்ச்சியும் காணாமல் போயிற்று. அதன் பிறகு அவன் தாமதிக்கவில்லை.
இதோ வந்திறங்கி, மனைவி கழுத்தில் தாலி கட்டுவதற்காக மாப்பிள்ளை கோலத்தில் தயாராகவும் நிற்கிறான்.
மாதவி அம்மாவுக்கு மகன் மனத்தில் இருந்தவை எதுவும் தெரியாது. அவரை இப்போதெல்லாம் கையிலேயே பிடிக்க முடியவில்லை. அத்தனை சந்தோசத்தில் இருந்தார். அவரின் செல்லப் பெண் யாழிசை தாய்மை உற்றிருக்க, மகன் திருமணத்திற்கு வந்திருக்கிறான். வேறு என்ன வேண்டும் அவருக்கு?
தூயவன் வேறு, ஒரு ஆட்டோவை வாங்கி விட்டு, அதை ஓட்டுவதற்கும் அவரைக் கவனித்துக் கொள்வதற்கும் மாதச் சம்பளத்திற்கு என்று ஒருவனைப் பிடித்துவிட்டிருந்தான்.
அவர் எங்கு, எப்போது, எந்த நிமிடத்தில் போக ஆசைப்பட்டாலும் அவனுடனேயே போய் வருவார். இப்போது அவருக்கு யாரினதும் துணை கூடத் தேவை இல்லை. அவனே கரம் பற்றி அழைத்துப்போய், ஆட்டோவில் ஏற்றி, அவர் சொல்கிற இடத்துக்கு அழைத்துப் போய்வருவான்.
இன்னும் சொல்லப்போனால் இருக்க நிற்க நேரம் இல்லாமல் யாழிசையைக் கவனித்துக்கொள்வது, துளசியைக் கவனித்துக்கொள்ளாது, இங்கே நேசன் வீட்டுக்கு வந்துபோவது, கோயில் குளங்களுக்குச் செல்வது என்று அவரைக் கையிலேயே பிடிக்க முடிவதில்லை.
“என்ர வீட்ட மட்டும் நீங்க வாறேல்ல அம்மா.” என்று எப்போதும் போல் சுவர்ணா முகத்தைச் சுருக்கும் அளவில் நேரமில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தார்.
யாழிசைக்கு அவனைப் போல் அந்த நாள்களின் எந்த நினைவும் தற்போது இல்லை. எல்லாமே மண்ணோடு மண்ணாய் உக்கிப்போயிருந்தன. தன் அன்பாலும் அரவணைப்பிலும் ஆளுமையாலும் உலகையே மறக்க வைத்திருந்தான் அவள் கணவன்.
அதில் அவனை முதன் முறை பார்த்தபோது மலர்ந்து விகசித்த முகத்துடன் வரவேற்று உபசரித்திருந்தாள். இதோ இன்றும் கணவன் வாங்கித் தந்திருந்த பட்டுச் சேலை, நகை நட்டில் புத்தம் புது பூவெனத் தயாராகி, நான்கு மாத மணிவயிற்றைச் சுமந்தபடி ஜீவனின் திருமணத்திற்கும் அவள் தயார்.
“இசை ரெடியா? நேரமாகுது.” என்றுகொண்டு வந்த தூயவன் அவளைக் கண்டுவிட்டு விசிலடித்தான்.
“தூயவா!” சிரிப்புடன் சிணுங்கினாள் அவள்.
“அச்சோ என்ர இசையரசி அப்படியே மனசப் பறிக்கிறாளே!” என்று வந்து அவளுக்கு நெட்டி முறித்தான்.
“நீங்களும் அப்பிடியே மாப்பிள்ளைதான்.” வேட்டி சட்டையில் இருந்த கணவனைக் கண்களில் நிறைத்துக்கொண்டு எம்பி அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.
அவள் தாய்மை உற்ற செய்தி அறிந்ததும் அதுவரை அடங்கியிருந்த வீட்டுக்குத் திரும்பிவிடு என்கிற பேச்சு திரும்பவும் சூடு பிடித்தது.
நேசன் அதட்டிச் சொன்னான். கோகிலா அம்மாவும் நளினியும் வந்து தாய்மை உற்ற பெண் தலை சுற்றல், சத்தி(வாந்தி) என்று இருக்கையில் தனியாக இருப்பது ஆபத்து, பார்த்து பார்த்து நேரா நேரத்துக்கு யாராவது சத்தான உணவாகக் கொடுக்க வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்கள். அதற்கும் அவளுக்குத் துணைக்கு என்று வயதான அம்மாவை வேலைக்கு வைத்தான் தவிர்த்து அசைந்தான் இல்லை.
குறைந்த பட்சமாக அவளைத் தம்மோடு அனுப்பப் கேட்டும் விடவில்லை அவன்.
அந்த விடயத்தில் அத்தனை பேருக்கும் அவனில் மிகுந்த அதிருப்தி. இவ்வளவு காலமும் நண்பனின் மனதறிந்து அமைதியாக இருந்த குரு கூடக் கோபப்பட்டான்.
“நீங்களாவது சொல்லுங்கோம்மா. அவர் செய்தது மகா பிழைதான். அங்க போறதால அவரை மன்னிக்கிறம், நடந்ததை மறக்கிறம் எண்டு அர்த்தமில்லை. காலத்துக்கும் இப்பிடி இருக்கேலாது. மாமி வாய் திறந்து கேக்கேல்லையே தவிர இவன் இல்லாம ஏங்கிப்போறா. அந்த மனுசியப் பற்றியாவது இவன் யோசிக்கோணும் எல்லா.” என்று யாழிசையிடமும் முறையிட்டுப் பார்த்தான் குரு.
என்ன சொல்வது என்று தெரியாது யாழிசை கணவனைத்தான் பார்த்தாள்.
காரணம் இதைப் பற்றி அவள் ஏற்கனவே எத்தனையோ முறை தூயவனிடம் பேசியிருக்கிறாள். மாதவி இவளைப் பார்க்க இங்கு வருகிற ஒவ்வொரு முறையும் தேவகி அம்மாவின் கண்ணீரையும், மகனுக்காக அவர் ஏங்கும் ஏக்கத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
கருணாகரனைத் தன்னால் மன்னிக்க முடியும் என்கிற நம்பிக்கை அவளுக்கு இல்லை. அதற்காகக் காலத்துக்கும் கணவனை அவன் குடும்பத்திலிருந்து பிரிப்பதிலும் அவளுக்கு உடன்பாடில்லை.
இன்று குரு சொன்னதுபோல் அவள் வீட்டினரும் ஒவ்வொருமுறையும் எடுத்துச் சொல்ல சொல்ல, அமைதியாக இருந்து தானும் தவறு செய்கிறோமோ என்று இப்போதெல்லாம் அவளுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.
அதில், நான் சமாளித்துக்கொள்வேன். வீட்டுக்குப் போவோம் என்று எத்தனையோ தடவை அவளே கேட்டுவிட்டாள். அமைதியாக அவளைத் தன் கைகளுக்குள் வைத்துக்கொள்வானே தவிர அவள் கணவன் வாய் திறந்து எதையும் சொன்னதில்லை.
கடைசியாக ஒருமுறை அவள் கண்ணீருடன் வற்புறுத்திக் கேட்டபோது, “எனக்கும் காலத்துக்கும் பிரிஞ்சு இருக்கிற ஐடியா இல்ல இசை. அங்கதான் போகோணும். அதாலதான் தனியா காணி வீடு எண்டு புதுசாக் கட்டாம இந்த வீட்டிலேயே இருக்கிறன். ஆனாலும் கொஞ்சக் காலம் பொறு.” என்றிருந்தான்.
அதுவே அவன் எதற்கோ காத்திருக்கிறான் என்று சொல்லிற்று.
காலை ஒன்பது மணிக்குத்தான் முகூர்த்தம். அதிகாலையிலேயே குருவும் அவனும் தம் ஆள்களோடு சென்று அத்தனையையும் தயார் செய்து வைத்துவிட்டுத்தான் வந்திருந்தார்கள். இப்போது இவர்கள் கோயிலுக்குச் சென்று சேர்ந்தபோது சொந்தபந்தங்கள், குற்றம் சுற்றம் எல்லோரும் கூடியிருந்தனர்.
யாழிசைக்கு மெல்லிய படபடப்பு. “தூயவா!” கோயிலை நோக்கி அவனோடு நடக்கையில் மெல்லிய குரலில் அழைத்தாள்.
“என்ன?”
“உங்கட அப்பா ஏதாவது கதச்சாலும் கோவப்படாதீங்க ப்ளீஸ்.”
அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்தான் அவன். அதற்கே அவளுக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்தது.
“தூயவா!”
“என்ன இசை?”
“எனக்கு இப்பவே நெஞ்சு படபட எண்டு அடிக்குது. வயித்தில பிள்ளையும் இருக்கு. சத்தியமா உங்கட கோபத்தை பாக்கிற சக்தி எனக்கு இல்ல.” விழிகள் இலேசாகக் கலங்க அவள் சொல்லவும் நின்றுவிட்டான் அவன்.
“அந்தளவுக்கு உன்னையும் எங்கட பிள்ளையையும் யோசிக்காம நடப்பன் எண்டு நினைக்கிறியா நீ? முதல் நீ பயப்பிடுற மாதிரி ஒண்டும் நடக்காது. பேசாம வா நீ!” என்று அழைத்துப்போனான்.
பட்டு வேட்டி சட்டையில் அவனும், பட்டுச் சேலை, ஒருவர் ஒரு குறை சொல்லாதபடிக்கு நகை நட்டு அணிந்து, நேர்த்தியாகவும் அழகாகவும் அலங்கரித்து அவளும் சோடியாக நடந்து வருவதை அங்கு கூடியிருந்த எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள் என்றால் நேசனுக்கும் கோகிலா அம்மாவுக்கும் விழிகள் கசிந்தே போயின.
அவள் அணிந்திருந்த அத்தனை நகையும் தூயவன் வாங்கிப் போட்டது. அது நேசனின் கவனத்தைக் கவரவே இல்லை. தங்கையின் முகத்தில் இருந்த பூரிப்பும், கோயில் மண்டபத்தின் படிகளை ஏறுகையில் அவன் கையைப் பற்றிக்கொண்டு அவள் ஏறிய அழகும் அவனோடு அவள் வாழும் கருத்தொருமித்த காதல் வாழ்க்கையைச் சொல்ல, நெஞ்சு நிறைந்தே போயிற்று.
“ரெண்டு பேருக்கும் கட்டாயம் சுத்திப் போடோணும் அம்மா.” என்று அன்னையிடம் உடனேயே சொன்னான்.
கருணாகரனும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லையே தவிர அவர்கள் இருவரையும்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக மகனைப் பார்க்கவேயில்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் அவர் கண்ணில் படும்படியாக வரவில்லை. இன்று, பட்டு வேட்டி சட்டையில் மனைவியோடு சேர்ந்து வந்தவனைக் கண்டதும் தடுமாறிப்போனார். சட்டென்று விழிகள் கலங்கின.
என்ன இருந்தாலும் அவரின் செல்ல மகன். மார்பிலும் தோளிலும் தூக்கி வளர்த்தவர் அவர். அவன் மீது அவர் கொண்ட பாசத்தில் என்றும் கறை படிந்ததே இல்லையே.
தேவகிக்கும் அவர்களைப் பார்த்ததும் கண்கள் கலங்கிப் போயின. அங்குக் கூடியிருந்த எல்லோரும் இன்றும் ஏதும் குழப்பங்கள் வந்துவிடுமோ என்று அப்பாவையும் மகனையும் உன்னிப்பாகக் கவனித்தனர்.
அவர்களின் வாய்க்குத் தன் குடும்பம் அவலாகிவிடக் கூடாது என்று, சட்டென்று முன்னுக்குப் போய், “வாங்கோம்மா! என்ன இன்னும் காணேல்ல எண்டு பாத்துக்கொண்டு நிக்க வந்திட்டீங்கள்.” என்று யாழிசையின் கரம் பற்றி அழைத்துக்கொண்டு போய்த் தன்னருகில் நிறுத்திக்கொண்டார்.
தூயவன் குருவுடன் சேர்ந்து திருமண வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். அங்கு அவன் வந்ததில் இருந்து தந்தையின் பார்வை தன்னை விடாமல் தொடர்வதை அவன் கவனிக்காமல் இல்லை. உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் என்று பார்க்கவே தெரிந்தது.
அவன் நிலையும் மோசம்தான். அவரைப் பார்க்காத வரையில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. இப்போதும் கோபம் ஒரு பக்கம் அப்படியே இருந்தாலும் பாசம் கண்முன்னே வந்து நின்று அவனைத் தடுமாற வைத்தது. அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி நடமாடிக்கொண்டிருந்தான்.
திருமணச் சடங்குகள் ஆரம்பமாகின. ஜீவனின் அம்மா அப்பாவாகக் கருணாகரனும் தேவகியும் நிற்பது என்றுதான் முதலில் ஏற்பாடாகியிருந்தது. அப்படி மாப்பிள்ளையின் அம்மா அப்பாவை ஐயா அழைத்தார்.
அந்த நொடியில் கருணாகரன் தன் மனத்தின் மாற்றத்தை உணர்த்த முயன்றாரா, இல்லை மகனிடம் மன்னிப்பு கேட்க நினைத்தாரா தெரியவில்லை.
“தம்பியும் அவன்ர மனுசியும் அம்மா அப்பாக்கு நிக்கட்டும்.” என்று சபையிலேயே சத்தமாகச் சொன்னார்.
இதை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு நேரமும் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்திருந்த தூயவன் கூடத் தகப்பனைக் கேள்வியுடன் பார்த்தான்.

