கடன் அன்பை முறிக்கும் 7 – 1

அத்தியாயம் 7

 

 

யாழிசையை வீட்டுக்குப் போகச் சொன்னபோது தூயவனுக்கும் அதுதான் சரி என்று தோன்றிற்று. அவள் அங்கு நிற்பது அவனைத் தொந்தரவு செய்துகொண்டுதான் இருந்தது.

 

ஆனால், அவள் போவதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யாமல் போ என்று சுவர்ணா சொன்னதை அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் விடிந்துவிட்டது, 21 வயதாகும் பெண், அவளுக்குத் தனியாகப் போகத் தெரியும் போலும், அதுதான் சுவர்ணா சொல்லியிருக்கிறாள் என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.

 

ஆனாலும் கூட, போனவள் பாதுகாப்பாகப் போயிருப்பாளா என்கிற கேள்வி அவனுக்குள் நின்று இடறிக்கொண்டே இருந்தது.

 

அவனுக்கு அவளைப் பிடிக்காது. அவள் மீது மதிப்புமில்லை; நம்பிக்கையுமில்லை. அது வேறு. அதற்காக ஒரு பெண் பிள்ளையைக் கண் முன்னாலேயே எப்படிக் கவனமில்லாமல் விடுவது?

 

சட்டென்று எழுந்தவன், “அப்பா, டீசல் அடிச்சுக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு குருவோடு வெளியே வந்தான்.

 

“வேனுக்க பாதிக்கு மேல டீசல் இருந்ததேடா.” அவனோடு நடந்தபடி குழப்பமாய் வினவினான் குரு.

 

“அத நான் குடிச்சிட்டன்.”

 

“என்னது?” அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டான் குரு.

 

அடுத்த கணமே அவன் தன்னைச் சீண்டுகிறான் என்று தெரிந்து, “மச்சான், லைட்டரை ஒருக்கா தட்டி பாக்கட்டா?” என்றான் வேண்டுமென்றே.

 

நடந்துகொண்டிருந்தவன் பதில் எதுவும் சொல்லவில்லை. மாறாகத் திரும்பி வந்து, குருவின் ஜீன்ஸ் பொக்கெட்டில் இருந்த லைட்டரை தானே எடுத்து, அவன் முன்னுச்சி முடியைப் பற்றி முகத்தை நிமிர்த்தி, வாய்க்குள் லைட்டரை தட்டப்போக, “ஐயோ விடடா! நான் இன்னும் கலியாணமே கட்டேல்ல.” என்று சத்தமில்லாமல் அலறினான் குரு.

 

“நாங்க மட்டும் கட்டி பத்துப் பதினஞ்ச பெத்துப்போட்டு வச்சிருக்கிறமா?” அவன் மீதே லைட்டரை தூக்கி எறிந்துவிட்டு நடந்தான் தூயவன்.

 

அதைப் பொறுக்கி ஜீன்ஸ் பொக்கெட்டினுள் போட்டுக்கொண்டு ஓடி வந்து, தானும் வேனில் ஏறி அமர்ந்துகொண்டான் குரு.

 

தூயவன் வாகனத்தை இயக்க, டீசல் டாங்கின் அளவை எட்டிப் பார்த்தான். அது அவன் சொன்னதுபோல் பாதி நிறைந்து நின்றது.

 

அவன் தலையிலேயே ஒன்றைப் போட்டு, “என்ன பார்வை? ஒழுங்கா இரு!” என்றுவிட்டு ரிவர்ஸில் எடுத்து, வைத்தியசாலை பார்க்கிங்கிலிருந்து வெளியே கொண்டு வந்து, வீதிக்கு ஏற்றியவனின் விழிகள் வீதியையே அலசின.

 

இதற்குள் போயிருப்பாள் என்று தோன்றினாலும் தேடாமல் இருக்க முடியவில்லை. மெதுவாக அவன் வேனை உருட்ட “என்னடா, அந்தப் பிள்ளையைத் தேடுறியா?” என்றான் குரு சட்டென்று ஊகித்து.

 

“வேற வேல இல்ல எனக்கு…” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை, “அந்தா போறா பார்.” என்று காட்டினான் குரு.

 

அதன் பிறகு அவள் அவன் வேனில் ஏறாமல் பஸ்ஸில் ஏறிய பிறகு, கருணாகரனிடம் சொன்னதற்காக டீசலை நிரப்பிக்கொண்டு வந்தவன், “அந்தப் பெட்ட வந்தது சித்திக்காக. நேற்று முழுக்க நித்திரை கொள்ளாம முழிச்சிருந்திருக்கு. திரும்பிப் போறதுக்குக் காசு இருக்கா, போகத் தெரியுமா எண்டெல்லாம் கேக்காம போ எண்டு துரத்திவிட்டாச்சு. தப்பித்தவறி ஏதாவது நடந்தா?” என்று சுவர்ணாவிடம் சீறினான்.

 

அவள் திகைத்து நிற்க, “என்ன தம்பி?” என்று விசாரித்தார் கருணாகரன்.

 

அவன் விடயத்தைச் சொல்ல, “ப்ச்! நானும் அத யோசிக்கேல்ல பார்.” என்று நெற்றியைத் தேய்த்துவிட்டார் அவர்.

 

உண்மையில் அதை யோசிக்கத் தவறியிருந்தார்தான். தன் கண்ணில் அவள் உறுத்துவது அவருக்குப் பிடிக்கவில்லையே தவிர, ஒரு பெண் பிள்ளையை அப்படி விட்டதைத் தவறாகவே உணர்ந்தார்.

 

“நீங்க ஏனப்பா யோசிக்கோணும்? இண்டைக்குப் பிள்ளைகளை எங்க விட்டுட்டு இஞ்ச வந்து நிக்கிறாள்? அத மாதிரி நேற்றும் செய்திருக்கோணுமா இல்லையா? தன்ர சுகத்துக்கு அந்தப் பிள்ளையை வேலை வாங்கிப்போட்டு இப்பிடிக் கவனமில்லாம விட்டு ஏதாவது நடந்தா எங்கட தலையும் சேந்து எல்லா உருளும்?” என்னவோ அவனுக்குக் கோபம் அடங்கவே மாட்டேன் என்றது.

 

அவன் சொல்வது உண்மைதான். அதை விடவும் மகன் யாழிசைக்காகப் பேசுவது கருணாகரனுக்குப் பிடிக்கவில்லை.

 

அதில், “இனிக் கவனமா இருக்கோணும் சுவர்ணா. உங்களுக்கு வயது காணும். இப்பிடித் தேவையில்லாம வாங்கிற உதவிகள்தான் எங்களை மற்றவேட்ட கடமைப்பட்டு நிக்க வைக்கிறது.” என்று அவளை அதட்டியவர், “விடு தம்பி, இனி நாங்க இருக்கிறம் தானே. கவனிச்சாப் போச்சு.” என்று முடித்துக்கொண்டார் கருணாகரன்.

 

*****

 

வவுனியா செல்லும் பஸ்ஸில் அமர்ந்திருந்தாள் யாழிசை. பயம், பதற்றம் எல்லாம் அடங்கியிருந்தன. இனி வீட்டுக்குப் போய்விடுவோம் என்கிற நிம்மதியும்.

 

சுவர்ணா இப்படித்தான் என்று தெரியுமென்றாலும் தேவை என்றால் மட்டுமே தேடும் மெழுகுதிரியைப் போல், தன் தேவைக்கு இவளைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கிப்போட்ட அவளின் அக்கறையற்ற செய்கை மிகவுமே காயப்படுத்தியிருந்தது. அங்கிருந்த பெரிய மனிதர்கள் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே. அந்தளவில் அவள் எதில் குறைந்துபோனாள்?

 

சாதியும் ஏழ்மையும் இந்தளவில் ஒருவரைப் போட்டு மிதிக்க வைக்குமா என்ன? நெஞ்சுக்குள் என்னவோ அடைத்துக்கொண்டு வந்தது.

 

என்னவோ இந்தக் கொஞ்ச நாள்களாக வாழ்க்கை அவளுக்கு மிக ஆழமான பாடங்களைக் கற்பிப்பது போலொரு தோற்றம்.

 

வீடு வந்தவள் மாதவியின் நிலையையும் தூயவன் வீட்டினர் வந்துவிட்டதையும் சொன்னாளே தவிர்த்துச் சுவர்ணா செய்ததைப் பற்றிச் சொல்லப் போகவில்லை.

 

நளினிக்கு இங்கே வவுனியா வைத்தியசாலையில் வைத்துச் சுவர்ணா பேசியதே பெரும் கோபம். மாதவி வீடு திரும்பிய பிறகு அதைக் கேட்டு நிச்சயம் பிரச்சனை எடுப்பாள் என்று தெரியும். அதோடு இதுவும் சேர வேண்டாம் என்று எண்ணிக்கொண்டாள்.

 

 

*****

 

வைத்தியர்கள் முடிந்தவரையில் சத்திர சிகிச்சை செய்யாமல் மருந்துகள் மூலமே மாதவியின் கால் நரம்பில் உறைந்துவிட்ட இரத்தத்தைக் கரைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். அதில் அந்த வாரம் முழுக்க மாதவி யாழ்ப்பாண வைத்தியசாலையில்தான் இருந்தார்.

 

இனிச் சத்திர சிகிச்சை தேவையில்லை என்கிற நிலையில் அதற்கு அடுத்த வாரம் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். தவநேசன் தன் மொத்தக் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்க வந்தான்.

 

அப்போது தூயவனும் துளசியும்தான் அங்கிருந்தார்கள். யாழிசைக்கு அவனைக் கண்டதும் ஒரு கணம் திக்கென்றிருந்தது.

 

என்னவோ தெரியவில்லை, அவனையும் அவன் பார்வையையும் இணைந்துகிடந்தே மிரட்டும் அவன் புருவங்களையும் கண்டால் அவளுக்குள் நடுக்கமோடுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

 

அவனும் அவர்களைக் கண்டதும் கணமும் தாமதிக்கவில்லை. “நீங்க கதைச்சுக்கொண்டு இருங்க சித்தி, நாங்க கொஞ்சம் வெளில போயிட்டு வாறம்.” என்றுவிட்டுத் துளசியோடு உடனேயே வெளியேறியிருந்தான்.

 

கோகிலா, தவநேசன், நளினி மூவர் முகங்களும் சட்டென்று கன்றிப்போயின. அப்படி என்ன அவர்கள் குறைந்து போனார்களாம் என்பதுதான் எல்லார் மனத்திலும் உதித்த கேள்வி.

 

நன்றாகச் சுடுவதுபோல் மாதவியை ஏதாவது கேட்டால் என்ன என்றுதான் நளினிக்கு இருந்தது. அவர் இருக்கும் நிலையை எண்ணி வாயை அடக்கிக்கொண்டாள்.

 

மாதவிக்கும் அவன் செயலில் சங்கடம்தான். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் அவர்களோடு பேசினார்.

 

அதுவும் யாழிசையின் கரத்தைப் பற்றிய கணத்தில் உடைந்து அழுதார்.

 

“ஏன் ஆச்சி என்னப் பாக்க இவ்வளவு நாளும் வரேல்ல.”

 

அவரின் அந்தக் கேள்வியே தினமும் தன் வரவை எதிர்பார்த்திருக்கிறார் என்று சொல்ல, “அது… கம்பஸ் கிடைச்சிருக்கு அத்த. அடுத்த மாசம் போகோணும். அதான்…” என்று வாய்க்கு வந்ததைச் சொன்னவள் விழிகளும் கலங்கி வழிந்தன.

 

அவளும் அவர் இல்லாமல் தவித்துத்தான் போனாள். போய்ப் பார்த்துக்கொண்டு வருவோமா, அண்ணாவிடம் கேட்போமா என்று தினமும் நினைப்பாள். தூயவன் குடும்பம் கண்முன்னால் வந்து நின்று, அவள் நினைப்பைச் செயலாக்க முடியாமல் செய்துவிடுவார்கள். அதைச் சொல்லவா முடியும்?

 

அவளுக்குப் பல்கலையில் இடம் கிடைத்துவிட்டதில் அவருக்கு மிகுந்த சந்தோசம். அவள் கையை விடவேயில்லை. அவர்கள் பேசிக்கொண்டு இருந்துவிட்டுப் புறப்பட்டபோதும், “இசை, இன்னும் கொஞ்ச நேரம் என்னோடயே இருங்கோம்மா.” என்றார் கெஞ்சலாக.

 

அவளைப் போல் உள்ளன்போடு அவரைத் தாங்குகிறவர்கள் யாருமில்லை. பெற்ற பெண்ணுக்கு ஒப்பாகக் கூடவே இருந்தவளை விட்டு இருப்பதும் அவருக்கு இலகுவாக இல்லை.

 

சங்கடத்துடன் தன் வீட்டினரையும் அவரையும் பார்த்தாள் அவள்.

 

நேசனுக்கும் வைத்தியசாலையில் இருக்கிறவரிடம் உறுதியாக மறுக்க முடியவில்லை. ஆனாலும், “நாங்க வந்ததுமே தூயவன் வெளில போய்ட்டார். அவருக்கு இசை நிக்கிறது பிடிக்குமோ தெரியா மாமி. வீண் பிரச்சினைகள் வேண்டாமே. நீங்க வீட்டுக்கு வந்திட்டா உங்களோடதானே இசை இருப்பாள்.” என்று தன்மையாகவே சொன்னான்.

 

தூயவனின் நினைவு வந்ததும் அவரும் ஒன்றும் சொல்லவில்லை. தன்னால் இன்னொரு முறை யாழிசை அவமானப்படவோ துன்பப்படவோ வேண்டாம் என்று நினைத்தார். ஆனாலும் அவர் முகம் வாடிப்போயிற்று.

 

அதை யாழிசையால் பார்க்க முடியவில்லை. “அண்ணா, நான் ஸ்கூட்டிலதானே வந்தனான். வகுப்புக்கு எனக்கு இன்னும் பத்து நிமிசம் இருக்கு. அது வரைக்கும் அத்தையோட நிண்டுட்டே போகட்டா?” என்று வினவினாள்.

 

அவளுக்கு வகுப்பு இருந்ததில் அவள் ஸ்கூட்டியில் அவர்கள் ஆட்டோவிலும்தான் வந்தார்கள்.

 

“வீண் பிரச்சினை என்னத்துக்கு இசை?” அப்போதும் தயங்கினான் நேசன்.

 

“இன்னும் அவே வரேல்லத்தானே. அவே வந்ததும் நான் வெளிக்கிடுறன்.”

 

“சரி. கவனம்.” என்று அரை மனமாகச் சொல்லிவிட்டு அன்னை தாரத்தோடு புறப்பட்டான் அவன்.

 

“அங்க வச்சு தூயவன் ஏதும் சொன்னவனாம்மா? அதா என்னைப் பாக்க வரேல்ல.” அவர்கள் போனதும் வினவினார் மாதவி.

 

“அச்சோ அத்த. அவர் ஒண்டுமே சொல்லேல்ல. அவே எல்லாரும் உடனேயே அங்க வந்திட்டினம். பிறகும் நான் நிண்டு என்ன செய்யப் போறன் எண்டுதான் வெளிக்கிட்டு வந்தனான்.” என்று சொல்லிக்கொண்டிருக்கையில் பழங்கள் அடங்கிய ஒரு பையும் துளசியுமாக உள்ளிட்டான் தூயவன்.

 

அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து சட்டென்று எழுந்துகொண்டவள், “சரி அத்த, நான் வாறன் போயிற்று.” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.

 

“அது சோடா… குடிக்கிறீங்களா?” அது நாள் வரையில் பேசிப் பழக்கமில்லாததில் வாங்கிவந்த சோடா போத்தலை அவள் புறமாக நீட்டியபடி தடுமாறினாள் துளசி.

 

“இல்ல… எனக்கு கிளாசுக்கு நேரமாயிற்றுது.” என்று பதில் சொன்னவள் விழிகள், தன்னையறியாது துளசியின் புருவங்களைத்தான் முதல் வேலையாகக் கவனித்தன.

 

அவை இணைந்திருக்கவில்லை என்று கண்டபிறகே அவளால் துளசியின் முகத்தை எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் பார்க்க முடிந்தது.

 

“போயிற்று வாறன்!” இப்போது சின்ன முறுவலுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள். வேகமாக வைத்தியசாலைக்குள் இருந்து வெளியேறிய பிறகு என்னவோ மிக ஆபத்தான ஒரு பகுதியிலிருந்து வெளியேறிய ஒரு ஆசுவாசம்.

 

*****

 

அன்று மாலை வகுப்புக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தாள் யாழிசை. மனத்தில் இன்னதுதான் என்று சொல்லிவிட முடியா வருத்தமும் வெற்றிடமும் பரவிக்கிடந்தன.

 

வவுனியா வைத்தியசாலையில் மேலும் ஒரு வாரம் இருந்த மாதவியைத் தூயவன் குடும்பத்தினர் நேராகத் தங்கள் வீட்டுக்கே அழைத்துச் சென்றிருந்தார்கள்.

 

இடையில் ஒருமுறை மனம் கேளாமல் அவள் அவரைப் பார்க்க வைத்தியசாலைக்குச் சென்றபோது, அங்கு நின்றிருந்த கருணாகரன், “அலுவலாம்மா?” என்று கேட்ட விதமே அலுவல் இல்லாமல் இங்கு வராதே என்று சொல்லிற்று.

 

முகம் கன்றிச் சிவந்துவிட மாதவியைப் பாராமலேயே திரும்பி வந்திருந்தாள். அடுத்து வந்த நாள்களெல்லாம் அவள் மனம் நல்ல நிலையிலேயே இல்லை.

 

ஏன் இப்படி அவமானப்படுத்தித் துச்சமாக நடத்துகிறார்கள் என்று பரிதவித்துக்கொண்டேயிருந்தது.

 

ஆனால், ஏதோ ஒரு வகையில் தானோ, தன் குடும்பமோ மாதவியை நெருங்குவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று மட்டும் தெரிந்தது அவளுக்கு.

 

அதில் அவளும் விலகியே நின்றுகொண்டாள். மாதவியாக அழைத்தால் மட்டும் பேசுவாள். ‘ஏன் அம்மாச்சி எனக்கு எடுக்கிறதே இல்ல?’ என்ற அவர் கேள்விக்கு ஏதேதோ சொல்லிச் சமாளித்தாள்.

error: Alert: Content selection is disabled!!