அத்தியாயம் 8
தூயவனின் வெள்ளை நிற வேன் சரக்கென்று வந்து அவர்களின் தென்னந்தோப்பின் வாசலில் நின்றது. நின்ற வேகத்திலேயே இறங்கி, கதவை அறைந்து சாற்றிவிட்டு விறுவிறு என்று நடந்தான் அவன்.
அவன் அருகில் செல்வதை நினைக்கவே ட்ராக்ட்டரை ஓட்டியவனுக்கு நடுங்கியது. போகாமல் இருக்கவும் முடியாது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சென்று, “அண்ணா அது…” என்று மட்டும்தான் சொன்னான்.
அவன் தலையை வளைத்துப் பிடித்து, “ஒழுங்கா ஓட்ட மாட்டியா எரும? ஒரு பொம்பிளைப் பிள்ளைய இடிச்சு, அவளைக் காயப்படுத்தி, ஸ்கூட்டிய நாசமாக்கிப்போட்டு வந்து பெருசா ஒண்டும் நடக்கேல்ல எண்டு சொல்லிட்டாய் என்ன? உன்னை எல்லாம்… அடுத்த மூண்டு மாதத்துக்கு உனக்குச் சம்பளமும் இல்ல, வேலையும் இல்ல. ஓடிப்போ!” என்று அவன் முதுகிலே நன்றாக நாலு போட்டான்.
“அண்ணா ப்ளீஸ் அண்ணா. பயத்தில அப்பிடிச் சொல்லிட்டன். அதுக்காக வேலை இல்லை எண்டு சொல்லாதீங்க.” என்றவனின் கெஞ்சலில் அங்கே தென்னையிலிருந்து இறக்கிய தேங்காய்களை எண்ணிச் சாக்கில் கட்டிக்கொண்டிருந்த குரு ஓடி வந்தான்.
“என்னடா, என்ன பிரச்சினை?” என்றபடி அவனிடமிருந்து ட்ராக்டரை ஓட்டியவனைக் காப்பாற்றினான்.
இதற்குள் அங்கே வேலையில் இருந்தவர்களும் என்னவோ ஏதோ என்று இவர்களிடம் வர, “இஞ்ச எங்க வாறீங்க? போய் உங்க உங்கட வேலைகளைப் பாருங்க!” என்று, இருந்த சினத்துக்கு அவர்களையும் விரட்டியடித்தான் தூயவன்.
“என்னடா, ஏன் இவ்வளவு கோவம்? கொஞ்சம் அமைதியா இரு மச்சான்.” அவனை ஆற்றுப்படுத்த முயன்றான் குரு.
“முதல் இவனை என்ர கண்ணுக்கு முன்னால நிக்க வேணாம் எண்டு சொல்லு. இல்லையோ இருக்கிற விசருக்குக் கையக் கால உடைச்சு விட்டுடுவன்.” என்று உறுமினான் அப்போதும்.
“அதான் சொல்லுறான் எல்லா. நீ போ! போயிட்டுப் பிறகு வா.” என்று அவனை அனுப்பிவிட்டு, உடனேயே செவ்விளநீர் ஒன்றைப் பறித்து, அங்கே தென்னையில் கொத்தியபடி கிடந்த கத்தியை எடுத்துச் சீவி, நடுவில் கொத்தி ஓட்டையையும் போட்டு அவனிடம் நீட்டினான் குரு.
அதை வாங்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றான் தூயவன்.
“டேய் குடியடா முதல்!” என்று அதட்டி அவன் கையில் திணித்தான்.
அதை மடமடவென்று குடித்துவிட்டுக் கோம்பையைத் தூக்கி எறிந்தான்.
“இப்ப சொல்லு. என்ன பிரச்சினை? விடிய நல்லாத்தானே போனனீ.” அவனுக்கும் நேற்று நடந்த விபத்துப் பற்றித் தெரியும் என்பதில் விசாரித்தான்.
உண்மைதான். நேற்றே பணம் விளையாடிவிட்டதில் இந்த விசயம் எப்படி முடியும் என்றும் அவனுக்கு ஏற்கனவே தெரியும். காலையில் சும்மா ஒரு சாட்டுக்கு ட்ராக்ட்டரை ஓட்டியவனோடு காவல்நிலையத்துக்கு வரச் சொல்லியிருந்தார்கள் என்றுதான் போனான்.
நடந்த விபத்தைப் பற்றி நேற்று அவன் வந்து சொன்னபோது, பிடித்து நன்றாகத் திட்டியிருந்தான். கருணாகரனுக்கும் அவனில் கோபமே. இன்னுமொருமுறை இப்படி நடந்தால் அவரிடம் மட்டுமல்ல எங்குமே வாகனம் ஓட்ட முடியாதபடிக்குச் செய்துவிடுவேன் என்று மிரட்டித்தான் விட்டார்.
டிராக்டரை திருத்த வேண்டும். அதற்கொரு செலவு. போலீசையும் கவனிக்க வேண்டும். அது அடுத்த தலைவலி. இல்லையா, கேஸ் நடக்கிறது என்று சொல்லி ட்ராக்டரை கொண்டுபோனார்களோ அதை அவர்களிடமிருந்து மீட்பதற்குள் சீவன் போய்விடும். கோர்ட், கேஸ் என்று அலைவது அதைவிடப் பெரிய தலைவலி.
வேறு வழியில்லை. காவல்துறையைக் கவனித்துத்தான் காரியம் முடிக்க வேண்டும். நிறைய வாகனங்களை வைத்திருப்பதால் இப்படியான விபத்துகளும் அதைச் சமாளிப்பதும் எப்போதாவது நடப்பதுதான்.
அப்படியே எதிர்த்தரப்பின் செலவையும் நாமே பார்த்துக்கொண்டால் வேலை முடிந்தது என்றுதான் அவனும் நினைத்திருந்தான்.
அங்கே விபத்துக்குள்ளாக்கப்பட்ட பெண், யாழிசை மகேந்திரன் என்று பெயரைப் பார்த்ததும்தான் அவனுக்குள் பெரிய அதிர்ச்சி. நேற்றே இவன் கேட்டபோது டிராக்ட்டரை ஓட்டியவன் அவளை யார் என்று தெரியாது என்று சொல்லியிருந்தான்.
“அந்தப் பிள்ளைக்கு அடிப்பட இல்லையா?” என்றுதான் உடனேயே கேட்டான்.
“இல்ல அண்ணா. அந்தளவுக்கெல்லாம் சான்ஸே இல்ல. சும்மா தட்டினாலே ஸ்கூட்டி விழுந்திடும்தானே. அப்பிடித்தான் விழுந்தவா. வேணுமெண்டா சின்ன சின்ன சிராய்ப்பு இருக்கலாம்.” என்றான் அவன் வேகமாக.
ஆனால், கொஞ்ச நேரத்தில் காவல்நிலையத்துக்கு வந்தவள் அவன் சொன்னதற்கு முற்றிலும் மாறாக இருந்தாள்.
முகமெல்லாம் வாடிச் சிவந்து, உதடு வறண்டு, ஒடிந்து விழுந்துவிடுகிறவள் போன்று நடக்க முடியாமல் நடந்து வந்தவளைக் கண்டபோது, பக்கத்தில் நின்றிருந்தவனை இழுத்துப் போட்டுச் சாத்தலாமா என்கிற அளவில் ஒரு கோபம் மூர்க்கமாய் எழுந்தது. அவளின் முழங்கையில் பெரிய பேண்டேஜ் வேறு.
தன்னைக் கண்டதும் அவள் அதிர்ந்தது வேறு அவனை ஏதோ ஒரு வகையில் பாதித்தது. அதைவிடவும் அவள் கண்ணீருடன் நடந்த விபத்தைக் காவல்துறை அதிகாரியிடம் விபரித்தபோது, பக்கத்தில் நிற்கிறவன் தங்களிடமே பூசி மெழுகியிருக்கிறான் என்று கொதித்துப்போனான்.
ஆனால், அவனால் அங்கு வைத்து எதையுமே மாற்ற முடியாது. அந்தக் காவல்துறை அதிகாரியோடு பேசியது கருணாகரன். இவர்களுக்காக அந்தக் காவல்துறை அதிகாரி செய்த தகிடுத்தத்தங்களும் நிறைய. அதனால் அந்த இடத்தில் அவனும் சூழ்நிலைக் கைதிதான்.
பணத்தை அவள் வாங்காதது பற்றி அவனுக்கு ஒன்றுமில்லை. அவளிடம் இருக்கிற சொத்தில் இதெல்லாம் தூசு கூட இல்லை. ஆனால், காவல்துறை அதிகாரியிடம் அவள் கெஞ்சியதும், அவள் அண்ணி அவள் மீது கோபப்பட்டதும், கண்ணீருடன் தன் முன்னால் வந்து நின்று அவள் பார்த்த பார்வையும், கேட்ட கேள்வியும் அவனை நிம்மதியாக இருக்க விடவே மாட்டேன் என்றன.
“விடு, உன்ர சித்தியக்கொண்டு காசு குடுப்பிக்கலாம்.” அதற்காகத்தான் அவன் இப்படி இருக்கிறானோ என்றெண்ணிச் சொன்னான் குரு.
“அவளிட்ட இல்லாத காசாடா?”
“அப்ப பிறகென்ன? விடு. அதுதான் எல்லாம் நாங்க நினைச்ச மாதிரியே முடிஞ்சுதுதானே!”
பிரச்சனை முடிந்துவிட்டதுதான். அந்த ஆசுவாசம் ஏன் அவனுக்கு வரமாட்டேன் என்கிறது? ஒரு கோபம். ஒரு குமுறல். ஒரு ஆற்றாமை என்று அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏதோ ஒன்று அவனைப் போட்டு ஆட்டிவைத்தது.
அங்கே கிடந்த தேங்காய் ஒன்றைத் தூக்கித் தன்னால் முடிந்த மட்டும் தூர வீசி எறிந்தான்.
*****
இங்கே வீடு வந்து சேர்கிற வரையில் வாயே திறக்கவில்லை நளினி. வீட்டுக்குள் வந்ததுதான் தாமதம், “அவனே காசு தாறன் எண்டு சொல்லுறான். பெரிய இவள் மாதிரி வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டு வந்து நிக்கிறாய். உனக்கு என்ன எலிசபெத் மகாராணின்ர பேத்தி எண்டுற நினைப்பா?” என்று சீறினாள்.
கோகிலாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. மகளின் கலங்கிச் சிவந்திருந்த முகத்தைப் பார்த்துவிட்டு, “என்னம்மா? திரும்பவும் ஏதும் பிரச்சினையா?” என்று கலவரத்துடன் விசாரித்தார்.
“உங்கட மகளையே கேளுங்க மாமி. இவள்தான் பிழையாப் போய் மோதியிருக்கிறாளாம். எங்களிட்ட வந்து மாத்திச் சொல்லிப்போட்டாள். போதாக்குறைக்கு அந்தத் தூயவன் காசு தாறன் எண்டு சொல்லியும் வேண்டாமாம். இனிக் காசுக்கு என்ன செய்யப் போறாளாம் எண்டு கேட்டுச் சொல்லுங்க.”
நளினியும் இரந்து வாழ நினைக்கிறவள் இல்லைதான். ஆனால், எழுபத்தி ஐயாயிரம் ரூபாயைச் சாதாரணமாக எடுத்துக் கொடுக்கிற அளவுக்கு அவர்கள் வீட்டு நிலை இல்லை. அந்தக் கோபம் யாழிசை மீது நன்றாகவே பாய்ந்தது.
“ஏனம்மா அப்பிடிச் சொன்னனீங்க? அந்தத் தம்பி எண்டதாலையா?” மகளை ஒரளவிற்கு கோகிலாவினால் விளங்கிக்கொள்ள முடிந்ததில் கேட்டார்.
அவன் என்பதுதான் பெருங்காரணம். அதை அவளால் சொல்ல முடியவில்லை.
“அப்பிடி அளவுக்கதிகமா ரோசம் பாத்து நாங்க என்ன மாமி காணப்போறம்? நாங்க என்ன சும்மா போய் அவன்ர வீட்டுக் காசக் கேட்டுக்கொண்டு நிக்கிறமா? அவேக்கு கோர்ட் கேஸ் எண்டு அலைய விருப்பம் இல்ல. அதால காசத் தந்து வேலைய முடிக்க நினைச்சவே. இவள் வேண்டாம் எண்டுபோட்டு வந்து நிக்கிறாள். எனக்கு நினைக்க நினைக்க எரிச்சலா இருக்கு. என்னவோ பெரிய ஆள் கணக்கு என்னக் கதைக்க விடவும் இல்ல.”
வாய் திறக்கவே முடியாமல் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் யாழிசை. பட்ட காயங்களினால் உடல் கொதிக்க ஆரம்பித்திருந்தது. காவல்நிலையம் சென்றதிலிருந்து அழுதுகொண்டு இருப்பதால் தலையை வேறு வலித்தது.
“நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. உன்ர அண்ணாவக் காசு கேக்கக் கூடாது சொல்லிப்போட்டன். ஆனா எனக்கு என்ர ஸ்கூட்டி வேணும். உன்ர ரோசம் எப்பிடிக் காசு தருது எண்டு நானும் பாக்கிறன்.” என்றாள் நளினி.
“அவே என்னில பிழை எண்டு சொல்லினம் அண்ணி. எப்பிடி அந்தப் பொய்யக் கேட்டுக்கொண்டு காச வாங்கிறது?” தாங்க முடியாமல் வினவினாள் அவள்.
“இப்ப மட்டும் அவே சொன்னது பொய்தான் எண்டு உன்னால நிரூபிக்க முடிஞ்சதா? இல்லைதானே. காச வாங்கியிருக்க ஸ்கூட்டியாவது வீட்டுக்கு வந்து சேந்திருக்கும். உனக்கு என்ன, இன்னும் ரெண்டு கிழமைல நீ போயிடுவாய். நான் எப்பிடி சுரபிய பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டு போவன், என்ர வேலைகளை எப்பிடிப் பாப்பன்? உனக்குக் கதைக்க வெக்கமா இருந்தா நீ ஒதுங்கிக்கொண்டு என்னை விட்டிருக்கோணும். என்னவோ பெரிய கிழடு கணக்கு தேவையில்லாத வேலை பாத்துப்போட்டு வந்து நிக்கிறாய்.”
அதற்குமேல் மகள் வாங்கும் பேச்சுகளைக் கேட்க முடியாமல், “விடுங்கோம்மா. நடந்து முடிஞ்சதக் கதைச்சு என்ன செய்யப் போறம்? அவாக்கும் ஏலாம இருக்குப் போல.” என்று கோகிலா சமாளிக்கப் பார்த்தார்.
“நடந்து முடிஞ்சதப் பற்றி இஞ்ச ஆர் மாமி கதைக்கிறது? ஸ்கூட்டியை எப்பிடி எடுக்கிறது? அதுக்கு ஒரு வழி சொல்லுங்க.” என்று நின்றாள் நளினி.
“நான் போட்டிருக்கிற செயினை அடவு வச்சு எண்டாலும் எடுத்துத் தாறன் அண்ணி. அண்ணாட்ட கேக்க மாட்டன்.” அதற்குமேல் தாங்க முடியாமல் சொன்னாள் யாழிசை.
“உந்த நகை மட்டும் நீ உழைச்சு வாங்கினதா?” பட்டென்று நளினி கேட்டுவிடவும் அவள் முகம் கன்றிப்போனது.
“அதுவும் அந்தத் தூயவன்ர சித்தி போட்டது. ஒரு வழில பாத்தா அதுவும் அவன்ர காசுதான்.” என்றதும் குன்றிப்போனாள் யாழிசை.
உண்மைதானே. இந்த நகைகளைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று அவளே நினைத்திருந்தாளே. ஏழைக்கு முதுகெலும்பு இருக்கவே கூடாது போலும்.
“பரவாயில்ல அண்ணி. இப்ப இத வச்சு ஸ்கூட்டிய எடுத்துத் தாறன். பிறகு எப்பிடியாவது அதத் திருப்பி எடுத்திடுவன்.” என்றுவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டாள்.
அவளால் அதற்குமேல் முடியவில்லை. நெஞ்சு விண்டுவிடும் போல் வலித்தது.
மாலை வீடு திரும்பிய தவநேசனுக்கும் தங்கை மீதுதான் கோபம். நேற்று அவன் விபத்து நடந்த இடத்துக்குப் போனதாலும், அங்கு வந்த காவல்துறையோடு பேசியதாலும் யாழிசையில் தவறில்லை என்று அவனுக்கே தெரியும்.
கூடவே, கோர்ட் கேஸ் என்று போக விரும்பாமல்தான் தூயவன் குடும்பம் விபத்தை இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்றும் புரிந்தது.
“நீ காச வாங்கியிருக்கலாம் இசை. இதுவே வேற ஆருமா இருந்தா வாங்கித்தானே இருப்பம். அதைவிட எங்கட பக்கம் பிழை இல்ல, முறையின்படி அவேதான் தரோணும் எண்டு எங்களுக்கே தெரியும். உன்னில பிழை எண்டு அவன் கதையை மாத்தினா மாத்திப்போட்டுப் போகட்டும் எண்டு விட்டிருக்கோணும்.” என்றவனுக்கும் இனி அந்தப் பணத்துக்கு என்ன செய்வது என்கிற தலைவலி வந்திருந்தது.
யாழிசை வாயைத் திறக்கவே இல்லை. கண்ணீருடன் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். படிப்பை முடிக்கவில்லை. அவளுக்காக நிற்க அப்பா இல்லை. சுயமாய் உழைப்பில்லை. இன்னொருவரில் தங்கியிருக்கும் அவள் ரோசப்பட்டிருக்கக் கூடாதுதான்.
ஆனால், அவன் முன்னால் அவளும் எத்தனை முறைதான் ஒடுங்கி, ஒடிந்து போவது?
“விடப்பு. தங்கச்சி அவான்ர செயின அடவு வச்சுப் பாக்கிறாவாம்.” என்றார் கோகிலா.
“அப்பிடித்தான் அம்மா செய்யோணும். எனக்கும் வேற வழி இருக்கிற மாதிரித் தெரியேல்ல.” மகளின் பெயரில் சின்னதாகச் சேமிப்பு ஒன்று போய்க்கொண்டிருந்தாலும் அதை எடுக்க மனைவி கடைசி வந்தாலும் சம்மதிக்க மாட்டாள் என்று தெரிந்ததால் சொன்னான் தவநேசன்.
அன்று இரவு தன்னோடு அணைந்துகொண்டு படுத்திருந்த மகளின் தலையை வருடிவிட்ட கோகிலா, “அம்மாச்சி, அம்மான்ர தாலிக்கொடி இருக்கன. அதக் கொண்டுபோய் வச்சுப்போட்டு காசு எடுங்கோவன்.” என்றார் மெல்லிய குரலில்.
அவளுக்கு அதற்கும் கண்ணீர் அரும்பிற்று. அதைத் தன் திருமணத்தின்போது தன் பங்காகத் தருவதற்கு வைத்திருக்கிறார் என்று அவளுக்கே தெரியும். அதைவிட அப்பாவின் நினைவாக அவர் வைத்திருப்பது அது.
அதைக் கொண்டுபோய் வைப்பதா?
“பரவாயில்ல அம்மா. இந்தச் செயினை வச்சே எடுக்கிறன்.” மூக்கை உறிஞ்சுக்கொண்டு சொன்னாள் அவள்.
“ஆனாம்மா அதப் பிறகு எப்பிடி மீட்கிறது? அதைவிட கம்பஸ் போகப்போற பிள்ளை. கழுத்தில ஒண்டும் இல்லாம போவியா?”
“பரவாயில்ல அம்மா. நாங்க இல்லாத மனுசர். இல்லாத மாதிரியே இருக்கிறதுதான் சரி.” எனும்போதே கேவல் வெடித்தது அவளுக்கு.
அன்னைக்கும் மனம் கனத்துப்போனது.
“அழாத பிள்ளை. இன்னும் ஒரு மூண்டு வருசம். பல்லைக் கடிச்சுப் படிப்பை முடிச்சிட்டாய் எண்டு வை. அதுக்குப் பிறகு சொந்தமா உழைச்சு, உனக்கு நீயே ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கிப் போடலாம்.” என்றார் அவர் ஆறுதலாக.
அவளும் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டாள்.

