கடன் அன்பை முறிக்கும் 9 – 1

அத்தியாயம் 9

 

 

விசயம் அறிந்த மாதவி, சுவர்ணாவின் துணையுடன் யாழிசையைப் பார்க்க ஓடி வந்தார். காவல்நிலையத்தில் நடந்ததை அறிந்திருந்தவருக்கு அந்த வீட்டு மனிதர்களை இலகுவாய் எதிர்கொள்ள முடியவில்லை.

 

அதுவும் நளினி அவரையும் சுவர்ணனையும் கண்டதும் விருட்டென்று உள்ளே சென்றுவிடவும் அவருக்கு ஒரு மாதிரியாகிப்போனது.

 

எல்லாவற்றையும் சமாளித்துப் போகும் கோகிலாவுக்கே இவராலும் இவர் உறவுகளாலும்தானே மகள் இத்தனை துன்பங்களை அனுபவிக்கிறாள் என்று ஒரு நொடி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

 

ஆனால், மாதவி மகளுக்குச் செய்திருப்பவையும் சாதாரணமானவை இல்லையே. அதில் சமாளித்துக்கொண்டு அவர்களை வரவேற்று அமரவைத்தார்.

 

“நளினி, குடிக்க ஏதாவது கொண்டு வாங்கோம்மா!” என்று சொல்லி அவளையும் சமாளித்தார்.

 

அவரின் அந்தப் பக்குவமான நடத்தையில் மாதவிக்கு இன்னுமே குற்றவுணர்வாகிப் போனது. அவர் கையைப் பற்றிக்கொண்டு, “குறை நினைக்காதீங்கோ கோகிலா அக்கா. திரும்ப திரும்ப உங்களிட்ட மன்னிப்புக் கேக்கிற மாதிரியே ஒவ்வொண்டும் நடக்குது. ஆனா, நடந்த எதுவும் எனக்குத் தெரியாதக்கா.” என்றார் மெய்யான வருத்தத்தோடு.

 

இதற்கு என்ன சொல்வது என்று கோகிலாவுக்குத் தெரியவில்லை. விழுந்து காயப்பட்டு உடல் புண்ணாகிப்போனது ஒரு பக்கம் என்றால், தவறே செய்யாமல் அவள் பக்கம்தான் தவறு என்று காவல்நிலையத்தில் சொன்னது யாழிசையை மிகவுமே பாதித்திருந்தது.

 

போதாக்குறைக்கு வீட்டில் நளினி பேசிய பேச்சும், ஸ்கூட்டியை திருத்தி எடுக்க வழியில்லா நிலையும் என்று உடலும் சோர்ந்து, மனமும் சோர்ந்து அன்று முழுக்கப் படுத்தே கிடக்கும் மகளை வைத்துக்கொண்டு, பரவாயில்லை என்று சொல்ல அவரால் முடியவில்லை.

 

மாதவிக்கும் கோகிலாவை விளங்க, “எங்க இசை? ஆள் இல்லையோ?” என்று சமாளித்துக் கேட்கையில் உள்ளே நல்ல காய்ச்சலில் படுத்திருந்த யாழிசை, சுரபியின் துணையுடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

 

அவளைக் கண்ட மாதவி அதிர்ந்துபோனார். “அம்மாச்சி! என்னம்மா இது கோலம்? முகமெல்லாம் வீங்கிப்போய்… அழுதனீங்களா? முதல் இதென்ன கை கால் எல்லாம் இவ்வளவு காயம்.” கையில்லா, முழங்கால் வரையிலான சட்டை ஒன்றில் இருந்தவளைத் தன்னருகில் அமர்த்திக்கொண்டு வினவியவரின் பார்வை அவள் உடலைத்தான் மொத்தமாக ஆராய்ந்தது.

 

அவளுக்குத் திரும்பவும் நாசி சிவந்து, கண்ணீர் வரப் பார்த்தது. அதை அடக்கிக்கொண்டு, “அது கம்பி வேலில போய் விழுந்திட்டன் அத்த. அதான்.” என்றாள்.

 

“தூயவன் கையில கட்டு, காச்சலும் போல எண்டுதான் சொன்னவன். இந்தளவுக்கு நான் எதிர்பாக்கவே இல்ல.” என்றவருக்குமே கண்கள் கலங்கிவிடும் போலாயிற்று.

 

அவன் பெயரைக் கேட்டதுமே கசந்துகொண்டு வந்தது அவளுக்கு. உடல்தான் காயப்பட்டுக் கிடக்கிறது என்றால் மனத்தையும் காயப்படுத்துவிட்டு அத்தையிடம் போய் அவளுக்குக் காய்ச்சல், காயம் என்று சொல்லியிருக்கிறான். அவளுக்கு ஒரு விதமாய் அவன்மீது வெறுப்பு மூண்டது.

 

 

 

சுவர்ணாவுமே இந்தளவில் எதிர்பார்க்கவில்லை. “உனக்கு இன்னும் உடம்பு கொதிக்குது. குளுசை போடேல்லையா?” அவளைத் தொட்டுப் பார்த்துவிட்டு வினவினாள்.

 

“போட்டனான் மச்சாள். ஆனாலும் காச்சல் விடுது இல்ல.” மிகவும் சோர்வாகச் சொன்னாள் யாழிசை.

 

“இன்னொருக்கா டொக்டரிட்ட காட்டிக்கொண்டு வருவமா? அப்பிடி என்னெண்டு மருந்து போட்டும் காச்சல் விடாம இருக்கும்?” கலைந்து கிடந்த அவள் தலையை ஒதுக்கி விட்டபடி அக்கறையாக வினவினார் மாதவி.

 

“இல்லை அத்த. சில இடங்களில கம்பி குத்திக் கிழிச்சிருக்கு. அதால ரெண்டு நாளுக்குக் காய்ச்சல் காயும் எண்டு டொக்டர் சொல்லித்தான் விட்டவர். நீங்க எப்பிடி இருக்கிறீங்க? இப்ப நடக்கக்கூடிய மாதிரி இருக்கா?” என்று யாழிசை அவரை விசாரித்தாள்.

 

“ஓமாச்சி வீட்டுக்க என்ர வேலைகளை நானே பாக்கிற மாதிரி இருக்கு. இப்ப பரவாயில்ல.”

 

இதற்குள் அவர்கள் அருந்துவதற்கு பானம் கொண்டுவந்து கொடுத்தாள் நளினி. அப்போதும் அவள் அவர்களுக்கு முகம் கொடுக்காமல் இருக்க, “அம்மாச்சி நளினி, என்னோட என்னம்மா கோவம்? நான் என்ன செய்தனான்?” என்று தன்மையாக வினவினார் மாதவி.

 

“உங்களோட எனக்கென்ன கோவம் அக்கா? ஆனா, உங்கட பெறா மகன் தன்ர ஆளக் காப்பாத்துறதுக்காக இசைல பழியப் போட்டுட்டார். உங்கட மகள் ஆஸ்பத்திரில நீங்க மயங்கிக் கிடக்கிற நேரம் நீங்க இசைக்குப் போட்ட நகை நட்டுக்காகத்தான் நாங்க பழகிறமாம் எண்டு சொல்லிட்டா. பிறகும் எப்பிடி உங்கட முகம் பாத்துக் கதைக்கச் சொல்லுறீங்க?” என்று பட்டென்று சொன்னதும் திகைத்துப் போனார் மாதவி.

 

அவருக்கு இது தெரியாது. சுவர்ணாவைத் திரும்பிப் பார்த்தவரின் விழிகளில் மிகுந்த கோபம். “என்ன சுவர்ணா இது கத பேச்சு? எத்தின தரம் வாய அடக்கிக் கதைக்கப் பழகு எண்டு சொல்லுறது?” என்று அவளிடம் சினந்தவர், “சுவர்ணான்ர குணம் உங்களுக்குத் தெரியாதா நளினி? நன்றி கெட்ட பிள்ளை அவா. அதுக்காக என்னோட கோவிப்பீங்களா?” என்றார் நளினியிடம்.

 

“அம்மா!” என்று அதட்டினாள் சுவர்ணா. அவளுக்கு அவர்கள் முன் அவர் அப்படி அவளைப் பற்றிச் சொன்னது பிடிக்கவில்லை.

 

“என்ன அம்மா? இந்தக் குடும்பமே எங்களுக்கு எவ்வளவு செய்திருக்கினம் எண்டு எத்தின தரம் எடுத்துச் சொல்லி இருப்பன். அப்பிடி இருந்தும் இப்பிடிக் கதைச்சா என்ன அர்த்தம்? நன்றி கெட்டு நடந்தா கடவுள் கூட மன்னிக்கமாட்டார் சுவர்ணா.” என்று கடுமையாகச் சொன்னார் மாதவி.

 

சுவர்ணாவுக்கு அவமானத்தில் முகம் கறுத்துப்போனது. “நீங்க நெடுக இப்பிடித்தான். எல்லாருக்கும் முன்னால வச்சுக் கேவலப்படுத்துங்க!” என்றுவிட்டு விருட்டென்று எழுந்து தங்கள் வீட்டுக்குப் போனாள்.

 

அவள் கோபம் அவருக்கு முக்கியமாகப் படவில்லை. யாழிசையிடம் திரும்பி, “அம்மாச்சி, உங்களுக்கு உங்கட அத்தையத் தெரியும் எல்லா. சுவர்ணான்ர வாய் சரியில்ல எண்டும் தெரியும்தானே. அதை எல்லாம் பெருசா எடுக்கக் கூடாது என்ன.” என்று இன்னொரு முறை அவர்கள் மூவரிடமும் மன்னிப்புக் கேட்டார்.

 

“அதோட ஸ்கூட்டி திருத்திற காச தூயவன் தாறன் எண்டு சொல்லிவிடச் சொன்னவரம்மா. நீங்க எண்டு அவருக்கு முதல் தெரியாதாம். தெரிஞ்சிருக்க போலீசுக்கே போகாம விசயத்த முடிச்சிருக்கலாம் எண்டு சொன்னவர்.”

 

“இல்ல அத்த. வேண்டாம்.” திரும்பவும் நளினி கோபப்படுவாளோ என்று பயமாக இருந்தாலும் மெல்லிய குரலில் சொன்னாள் யாழிசை.

 

அவள் பயந்தது சரிதான் என்பதுபோல், “அவ்வளவு சொல்லியும் நீ திருந்திற மாதிரி இல்லை என்ன?” என்று சீறினாள் அவள்.

 

“அண்ணி ப்ளீஸ். எனக்கு அவரின்ர காசு வேண்டாம். செயினை வச்சு இப்ப ஸ்கூட்டியை எடுத்தாலும் எப்பயாவது அத நான் திருப்பி எடுத்திடுவன். அவரிட்டக் காசு வாங்கினா திருப்பிக் குடுக்கேலாது. முதல் நான் வாங்க மாட்டன்.” என்றாள் அவள் கண்ணீருடன்.

 

“உன்ன எல்லாம் திருத்தவே ஏலாது.”

 

மாதவி நடுவில் போகவில்லை. ஆனால், ஸ்கூட்டியால் அந்த வீட்டில் யாழிசைக்குப் பெரும் பிரச்சனை உருவாகியிருக்கிறது என்று மட்டும் தெரிந்தது.

 

அவர் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே யாழிசைக்கு அழைத்த ஜீவன், அவள் பெயருக்குப் பணம் அனுப்பியிருப்பதைச் சொன்னான்.

 

மாதவியால் தனியாக வெளியில் நடமாட முடியாது என்பதால் ஜீவன் யாழிசைக்குத்தான் எப்போதுமே அனுப்புவான். அவள் அதை மாதவிக்கு எடுத்துக்கொடுப்பதுதான் வழமை என்பதில் அவளின் வங்கிக் கணக்கு இலக்கங்கள் அவனிடம் இருந்தன.

 

“ஏன் மச்சான்? எனக்கு வேண்டாம் ப்ளீஸ். நான் அத அத்தேட்டையே குடுக்கிறன்.” என்றாள் யாழிசை சங்கடத்துடன்.

 

முதல் கூட உரிமையாக, உறவாக எண்ணி வாங்கியிருப்பாளாக இருக்கும். இப்போதெல்லாம் மாதவியும் அவர் பிள்ளைகளும் அந்த வீட்டுக்காரர்களாக மனத்தில் பட ஆரம்பித்ததில் அவர்கள் யாரிடம் வாங்கினாலும் அது தூயவனிடம் வாங்குவது போலவே இருந்தது அவளுக்கு.

error: Alert: Content selection is disabled!!