அத்தியாயம் 55
கணவனின் கட்டளைக்கு இணங்க மேலே அறைக்கு வந்துவிட்டாலும் பெரும் பதற்றத்துடன்தான் அமர்ந்திருந்தாள் யாழிசை. கீழே நடப்பதை நேரிடையாகப் பார்க்கவில்லையே தவிர அத்தனையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தது.
அதைவிட அகிலனையும் விமலையும் காயங்களும் கட்டுகளுமாகப் பார்த்தது பெரும் அதிர்ச்சி. அதற்குக் காரணம் கணவன்தான் என்று யாரும் சொல்லவா வேண்டும்? அவள் அனுபவித்த துன்பங்களுக்கு நிச்சயமாக இது அவர்களுக்கு வேண்டும்தான். அவர்கள் மீது அவளுக்கு இரக்கம் சுரக்கவில்லை.
ஆனால், இதெல்லாம் வேண்டாம் என்று நினைத்தாள். இப்படி கணவன் கடுமையாக நடப்பது பயமூட்டியது. எல்லோரும் எல்லா நேரமும் அடியை வாங்கிக்கொண்டு மட்டுமே இருப்பார்களா? திருப்பி ஏதாவது செய்துவிட்டால்?
இப்படி இருக்கையில்தான் கருணாகரனின் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. கைகால்கள் எல்லாம் உதற ஆரம்பிக்க அறை வாசலுக்கு ஓடி வந்து கீழே எட்டிப் பார்த்தாள்.
அப்போதுதான் தேவகி ஓடி வந்து அப்பா மகனுக்கிடையில் புகுந்துகொண்டு கருணாகரனைப் பேசுவதும், அத்தனையையும் செய்தது தான்தான் என்று கருணாகரன் ஒப்புக்கொண்டதும் நடந்தது.
அது அவளைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. தெரிந்த விடயம்தானே. ஆனால் அதற்கு அவள் கணவன் செய்த வேலை? என்னவோ சுவாமி வந்து இறங்கியதுபோல் அவ்வளவு பெரிய தொலைக்காட்சியைத் தூக்கிப் போட்டு உடைத்துவிட்டானே!
அவன் மூர்க்கத்தை முதன்முறையாக நேரில் பார்த்தவளுக்கு சுவாசமே நின்று போயிற்று.
அங்கே அவன், “ரெண்டு பேரும் நடவுங்க முதல்!” என்று அகிலனையும் விமலையும் விரட்டினான்.
மறுத்துப் பேசும் அளவுக்கு அவர்களுக்குத் தைரியம் இல்லை. பெற்ற தந்தை மீதான கோபத்தையே தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கிப்போட்டு உடைத்துக் காட்டுகிறான் என்றால் அவர்களை அவன் இந்தளவில் விட்டதே பெரிய விடயம். அதில் அகிலனும் விமலும் வேகமாக எழுந்துகொண்டனர்.
சுவர்ணாவுக்கும் உள்ளே நடுங்கியதுதான். ஆனால், சொத்தையும் இழந்து நிற்கிறாளே. “அண்ணா!” என்று தயக்கத்துடன் இழுத்தாள்.
“கூட்டிக்கொண்டு போ சுவர்ணா!” அவன் இறுக்கிச் சொன்ன விதம் அவளை அடுத்த வார்த்தை பேச விடவில்லை.
மூவரும் புறப்பட்டிருந்தார்கள். தரையில் மிகக் கவனமாகத்தான் கால் வைக்க வேண்டியிருந்தது. அந்தளவில் கண்ணாடிச் சில்லுகள் தரை முழுக்கப் பரவிக் கிடந்தன.
அவர்கள் போனதும், “நீங்களும் நடவுங்க பெரியப்பா!” என்றான்.
“என்ர மகன்ர நிலை.” அவர் பேச்சும் தயங்கித்தான் வந்தது. அந்தளவில் அவரும் அவனின் ஆக்ரோசத்தில் நடுங்கிப்போயிருந்தார்.
“அத நீங்கதான் பாக்கோணும்.”
“தூயவா? அவன் உன்ர தம்பி.”
“அத நீங்க யோசிக்கேல்லையே. நான் உங்களுக்கு மகன் எல்லா? அதைவிட ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர வாழ்க்கையைக் கெடுக்கிற அளவுக்கு உங்களுக்குத் தைரியம் வந்ததெல்லா? அதே தைரியத்தோட போய் அவனை வெளில எடுக்கிற அலுவலப் பாருங்க. போங்க!” என்று துரத்திவிட்டான்.
இப்போது அந்த வீட்டில் அவர்கள் நால்வர் மட்டும்தான். சற்று முன் வெடித்துச் சிதறும் எரிமலையின் சீற்றத்தைச் சுமந்திருந்த அந்த வீடு இப்போது மயானத்தின் அமைதியைச் சுமந்திருந்தது.
தோட்டக்காரரைக் கூப்பிட்டு முதல் வேலையாக மூவருக்கும் செருப்புகளைக் கொண்டு வரச் சொன்னான். அதை அணிந்துகொண்டு அவரோடு சேர்ந்து விறாந்தையைத் துப்பரவு செய்து முடித்தான்.
சோபாவில் வந்து அமர்ந்தவன் கொஞ்ச நேரத்துக்கு ஒன்றுமே பேசவில்லை. சோபாவின் கைப்பிடியில் ஊன்றிய கையால் தலையைத் தாங்கி அமர்ந்திருந்தான்.
மகனின் அந்தச் சோர்வு பெற்ற அன்னையின் நெஞ்சைக் கசிய வைத்தது. அவன் தலையெடுக்க ஆரம்பித்த நாளிலிருந்து இப்படி உடைந்த தோற்றத்தில் அவனை அவர் பார்த்ததேயில்லை. கண்ணீருடன் மகன் முகத்தையே பார்த்து நின்றார்.
அவரை நிமிர்ந்து நோக்கி, “என்னம்மா செய்ய? எனக்கு இவரை மன்னிக்க மனமில்லை.” என்றான் தூயவன்.
அவர் கன்னத்தில் கண்ணீர் பொலபொலவென்று இறங்கிற்று. “என்னவாவது செய்யப்பு. செய்ததெல்லாம் பெரும் பாவம். இன்னும் அத அவர் உணரக்கூட இல்ல.” என்றார் அழுகையினூடு.
கொதித்துவிட்டார் கருணாகரன். “என்ன உணரோனும் நான்? உன்ர தங்கச்சி அந்தச் சாதிக்காரனை விரும்புறாள் எண்டு தெரிஞ்சதும் எங்கட இனத்திலேயே ஒருத்தனைக் கட்டி வைக்கப் பாத்தவர் உன்ர அப்பா. அதேதான் நானும் நினைச்சனான். என்ன அவா பொம்பிளை, ஓடிப் போயிட்டா. இவன் ஆம்பிளை. ஆரும் என்னை ஒண்டும் செய்யேலாது எண்டுற திமிர்ல வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான். அவளும் எவனை வளைக்கலாம், எப்பிடிப் பிடிக்கலாம் எண்டு…” என்றவரின் பேச்சு, துள்ளி எழுந்த தூயவனின் ஆக்ரோசத்தில் அப்படியே நின்று போயிற்று.
“என்ன சொன்னனீங்க?” வேகமாக அவன் அவரை நெருங்க தேவகிக்குத் திரும்பவும் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. “தம்பி!” என்று திரும்பவும் ஓடிப்போய் அப்பா மகனுக்கு நடுவில் நின்றார்.
“கொஞ்சம் பொறுமையா இரப்பு.”
அவர் கெஞ்சல் அவனிடம் எடுபடவில்லை. ஒற்றைக் கையால் அவரை விலக்கி விட்டுவிட்டு, “சொல்லுங்க! இப்ப என்ன சொன்னனீங்க?” என்று கருணாகரனை நெருங்கினான்.
கருணாகரன் தன்னை அறியாமலேயே பின்னால் நகர ஆரம்பித்தார்.
தேவகியால் அந்தக் காட்சியைப் பார்க்கவே முடியவில்லை.
“தூயவா! இதை எல்லாம் அம்மாவால பாக்கேலாது தம்பி. வேணாம் அப்பு.” என்று அழுதார்.
அப்படியே நின்றான் தூயவன். அன்னையின் மனம் புரிந்தது. அதைவிட நடப்பது அவனுக்கே பிடிக்கவில்லை. அதில், “அப்பாவா போயிட்டீங்க. ஆனா இனியும் சும்மா விடேலாது. அதால இனி நீங்க இஞ்ச இருக்கேலாது. உங்கட ஊருக்கே வெளிக்கிடுங்க. இப்பவே!” என்றான் அவன்.
கருணாகரன் அதிர்ந்து பார்த்தார். இதை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
“இவ்வளவு ஆணவமும் அகங்காரமும் எங்க இருந்து வந்தது? மார்க்கண்டேயரின்ர மருமகன் எண்டுற பெயராலயும் இந்தச் சொத்துப்பத்தாலயும் தானே? இனி அது இல்ல உங்களுக்கு. இஞ்ச நான் பாக்கிறன். நீங்க போய் உங்கட ஊர்ல இருந்து ராஜாங்கம் பண்ணுங்க. சரியா?”
மகன் சொல்வதை அவரால் ஏற்கவே முடியவில்லை. இந்த மதிப்பு, மரியாதை இல்லாமல் அவரால் வாழவே முடியாது!
“என்ன? நீ சொன்னா நான் கேக்கோணுமா? இது எல்லாம் உன்ர தாத்தான்ரயா இருந்தாலும் நான் பெருக்கிச் சேர்த்தது. நீ சொன்னதும் அதையெல்லாம் விட்டுட்டுப் போவன் எண்டு நினைச்சியா?” என்று சீறியவரின் பார்வையில் பட்டாள் யாழிசை.
அவள் மேலேதான் நின்றாள். ஆனால், அவன் கருணாகரனைக் கேள்வி கேட்டபடி நெருங்கவும் பயந்துபோனாள். கோபத்தில் நிதானமிழந்து கையை நீட்டிவிட்டான் என்றால் காலத்துக்கும் அழியாத பழியாகிப் போகுமே. அது நடந்துவிடக் கூடாது, அவனைத் தடுத்துவிட வேண்டும் என்று படிகளில் கிடுகிடு என்று இறங்கி வந்தவள், தேவகி அவனைத் தடுத்துவிடவும் அப்படியே நின்றுவிட்டாள்.
அப்படி நின்றவள்தான் கருணாகரனின் பார்வையில் பட்டாள். அவரின் மொத்தக் கோபமும் அவள் புறம் திரும்பிவிட,
“இப்ப சந்தோசமா உனக்கு? உன்ர பேராசைக்கு என்ர மகனை எனக்கு எதிராவே நிக்க வச்சிட்டாய் என்ன?” என்றவரின் பேச்சில் சட்டென்று அவள் விழிகள் தளும்பிப் போயின.
‘நான் என்ன செய்தனான்?’ என்று கணவனையும் அவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“அவளைக் கதைக்காதீங்க அப்பா!” என்று எச்சரித்தான் தூயவன்.
“ஏன் கதைக்கக் கூடாது? இத்தின வருசத்தில எனக்கு எதிரா ஒரு வார்த்த கதைச்சிருப்பியா? என்ர மகன் எண்டு மார் தட்டியிருக்கிறன். ஆனா இண்டைக்கு…” என்றவருக்குச் சட்டென்று நெஞ்சு அடைத்துக்கொண்டது.
இத்தனை காலமும் எத்தனை பாசமாக இருந்தான். இனி அந்தப் பாசமும் பற்றும் இருக்காதே! எல்லாம் சிதறு தேங்காயாகச் சிதறிப் போயிற்றே.

