அத்தியாயம் 1
நள்ளிரவைத் தாண்டிய நேரம் அது. திருகோணமலை துறைமுகத்தின் கொடவுன்களைச் சுற்றியிருந்த விளக்குகள் மங்கலாக எரிந்துகொண்டிருந்தன. கடல் காற்றுப் பலமாக வீசியது. மழையும் குளிரும் அந்த இரவை இன்னும் மோசமாகக் காட்டிப் பயமூட்டிற்று.
அந்த நேரத்தில் கிட்டத்தட்ட பதினைந்து பேர் கொண்ட வரதனின் குழு, கைகளில் கூர்மையான ஆயுதங்களுடன் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர்.
“டேய்! ஆர் அங்க? சத்தம் கேக்குது பார்!” காவலுக்கு இருந்தவன் கையில் இருந்த இரும்பு ராடை இறுக்கிப் பிடித்தபடியே மற்றவனிடம் முணுமுணுத்தான்.
அவனும் மெதுவாக வந்து எட்டிப் பார்த்தான். யாரையும் காணவில்லை. ஆனாலும் காதுகளைத் தீட்டிக்கொண்டு உன்னிப்பாகக் கவனித்தனர்.
மனிதர்களின் குரல்களோ பேச்சுச் சத்தங்களோ கேட்கவில்லை. ஆனால், பெரிய இரும்புப் பெட்டிகளுக்குப் பின்னால் ஏதோ ஒன்று அசைவது போன்ற நிழலின் அசைவும், மெல்லிய காலடிச் சத்தங்களும் பயமூட்டும் வண்ணம் இலேசாய் எதிரொலித்தன.
சட்டென்று இருவரும் உசாரானார்கள். வருகிறவர்களைத் தாக்குவதற்கு ஏதுவாகக் கையில் இருந்த ஆயுதங்களை உயர்த்திப் பிடித்தபடி தயாராக நின்றார்கள்.
அதே நேரத்தில் யார் கவனத்தையும் கவராமல், கறுப்பு நிற ரேஞ்ச்ரோவர் ஒன்று, அந்த இடத்துக்குச் சற்றுத் தள்ளி வந்து நின்றது. சற்றும் பதட்டமின்றி அதன் கதவைத் திறந்துகொண்டு இறங்கினான் கலிங்கராயன்.
ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான். அது கொடுத்த கிளிக் சத்தத்தில் அந்தக் கோடவுன் முழுக்கப் பதுங்கியிருந்த தலைகள் விழுக்கென்று திரும்பிப் பார்த்தன.
அவனது முகத்தில் எந்தக் கோபமும் இல்லை. ஒருவகை அலட்சியமும், நிதானமும் நிறைந்திருந்தன. இழுத்துவிட்ட புகைக்கு நடுவே எதிரில் நின்றவர்களைப் பார்வையால் அளவெடுத்தான்.
அவனைப் பார்த்தவர்கள் அதிர்ந்துபோனார்கள். ராயன் ஊரில் இல்லை, தைரியமாகத் தாக்குங்கள் என்று வரதனிடமிருந்து வந்த தகவலை நம்பி வந்தவர்களாயிற்றே.
“டேய் ராயன்!” சத்தமில்லாமல் அதிர்ச்சியில் அலறினான் அந்தக் குழுவைத் தலைமை தாங்கி, முன்னணியில் நின்னிருந்தவன்.
அவன் குரல் அவனுக்குப் பின்னால் அடுத்ததாக நின்றிருந்தவனுக்குக் கேட்டு அடங்குவதற்குள் அவனை அடித்து வீழ்த்தியிருந்தான் கலிங்கராயன்.
அடுத்த விநாடி அந்தத் துறைமுகமே அதிர்ந்தது. அப்போதுதான் கோடவுனை இவர்கள் சூறையாட வந்திருக்க, அவன் தம்மை வேட்டையாட ஆரம்பித்துவிட்டது புரிந்தது.
அவர்கள் சுதாரிப்பதற்குள் ராயனின் ஆட்களும் கடல் பக்கத்திலிருந்து மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தனர்.
இரு தரப்புக்கும் இடையே மூர்க்கமான சண்டை வெடித்தது.
இரும்பு ராடுகளும் கூர்மையான கத்திகளும் மனிதச் சதைகளைக் கிழித்தன. அங்கிருந்த சரக்குப் பெட்டிகளுக்கு இடையே ஓடி ஓடிச் சண்டையிட்டனர்.
ஒருவன் ராயனைப் பின்னால் இருந்து கத்தியோடு தாக்க முயன்றான். அவனுடைய கையைப் பிடித்து முறித்த ராயன், அவனை அப்படியே தூக்கி வீசினான். மற்றொருவன் இரும்பு ராடோடு பாய்ந்தான். அவனது அடிக்குத் துளியும் அசைந்து கொடுக்காமல், அவன் கழுத்தைப் பிடித்துத் தூக்கிச் சுவரில் மோதினான்.
ராயனின் முகத்தில் இரக்கம் மருந்துக்கும் இல்லை. பயம் அதைவிட இல்லை. அவன் மீது விழுகிற அடிகள் அவனை ஒன்றுமே செய்யவில்லையா என்று எதிரிக் குழு சந்தேகித்தது. அந்தளவில் அசையாமல் நின்று ஒவ்வொருவராக வீழ்த்தினான்.
பத்து நிமிடப் போராட்டத்தில் வரதனின் ஆட்கள் திசைக்கு ஒன்றாகச் சிதறி ஓடினார்கள்.
அப்போது வேகமாய் வந்து கிறீச்சிட்டு நின்றது சூர்யாவின் கார். “டேய் மச்சான்!” என்று ஓடி வந்தான் அவன். நொடியில் அவன் விழிகள் சுற்றிச் சுழன்று அந்த இடத்தின் சூழ்நிலையை ஆராய்ந்திருந்தது.
“உனக்கு ஒண்டும் இல்லையே?” பார்வையால் அவனை அலசியபடி பதட்டமாக வினவினான்.
“அப்பிடி என்ன வரக்கிடக்கு?” நெஞ்சில் கையில் எல்லாம் பட்டுத் தெறித்திருந்த இரத்தத்தைத் தட்டிவிடட படியே கேட்டான் அவன்.
அவனை நம்பாமல் அவனை முழுமையாக ஆராய்ந்தான் சூர்யா.
அவன் பார்வையை அலட்சியம் செய்துவிட்டு, காயப்பட்டிருந்த தன் ஆட்களை மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தான் கலிங்கராயன்.
மிகுதியாக இருந்தவர்களை சேர்த்துக்கொண்டு, சண்டை நடந்ததற்கான சிறு தடயமும் இல்லாது அந்த இடத்தை மாற்றிவிட்டுத் தன் ரேஞ்ச்ரோவரை நோக்கி நடந்தான்.
கூட நடந்தபடி, “ஆர் மச்சான்?” என்று வினவினான் சூர்யா.
வாயில் இன்னொரு சிகரெட்டைப் பொருத்தி புகையை ஊதி விட்டவன் பதில் சொல்லவில்லை.
“வரதனா?”
அதற்கும் பதில் சொல்லாமல் காரில் ஏறி அமர்ந்தான். சுளித்திருந்த புருவங்களும் தாடையின் இறுக்கமும் கண்டு அவன் இன்னுமே நடந்த சண்டை உண்டாக்கிய அந்த மூர்க்கமான மனநிலையிலிருந்து வெளியில் வரவில்லை என்று கணித்தான் சூர்யா.
தன் காரின் திறப்பை அங்கிருந்த அவர்களின் ஆள் ஒருவனிடம் தூக்கிப் போட்டுவிட்டு இவன் காரில் தானும் ஏறிக்கொண்டான்.
இருப்பது நிமிடப் பயணத்தில் அவர்களின் மாளிகை வந்து சேர்ந்தது. அந்த நேரத்திலும் விழிப்புடன் இருந்த காவலாளி, ஓடி வந்து கேட்டை திறந்துவிட்டான்.
உள்ளே நுழைந்த அவன் கார், மாளிகையின் முன்னே சென்று அணைந்து நின்றது. உள்ளே உள்ளிட்டதும் அங்கிருந்த ஒரு அறையின் பக்கமாக சூர்யா திரும்ப, “அவளை எழுப்பாத!” என்று உத்தரவிட்டுவிட்டுப் படபடவென்று மாடியேறிப் போனான் கலிங்கராயன்.
அறைக்குள் நுழைந்த கணத்தில் அணிந்திருந்த உடைகளைக் கழற்றி, அழுக்கு உடைகள் போடும் கூடைக்குள் எறிந்துவிட்டுப் போய்க் குளித்துவிட்டு வந்தான். இடையில் கட்டிய துண்டோடு நின்று, உடலில் காயம் பட்ட இடங்களுக்கு அவனே மருந்திட்டான்.
உடல் ஆங்காகங்கே எரிச்சலைக் காட்டியது. ஆனால், அவன் முகத்தில் சிறு மாற்றமும் இல்லை. என்னவோ இன்னொருவருக்கு மருந்திடுவது போன்று மருந்துகளை இட்டுக்கொண்டு சென்று கட்டிலில் விழுந்தான்.
*****

