கலிங்கனின் காவியம் 11

அத்தியாயம் 11

நேராக நிர்வாகியைச் சென்று சந்தித்து நடந்தவற்றையெல்லாம் பகிர்ந்துகொண்டாள் வருணா.

அவள் சொன்னவற்றைக் கேட்ட நிர்வாகி சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “சமாளிச்சுப் போங்க டொக்டர்!” என்று சொன்னார்.

அவரை அதிர்ந்து பார்த்தாள் வருணா. அவரின் பதில் அவளுக்கு மிகுந்த அதிருப்தியை உண்டாக்கிற்று. தான் அதிகாரத்தில் இருப்பவன் என்று காட்டாமல், அங்கு பணிபுரிகிற அனைவரிடமும் மரியாதையுடன் நடந்துகொள்ளும் நபர் அவர். அவரா இப்படிச் சொன்னார் என்று பார்த்தாள்.

அவர் முகம் இலேசாகக் கன்றியது. அவள் பார்வையைத் தவிர்த்துக்கொண்டு, “பேஷன்ட்டின்ர மனநிலையை விளங்கி, அதுக்கு ஏற்ற மாதிரி மருத்துவம் பாக்கோணும் எண்டுறது எங்கட கடமையில் முக்கியமானது எண்டு உங்களுக்குத் தெரியாதா டொக்டர்?” என்று கேட்டார் அவர்.

இப்போது என்ன அவள் மீதுதான் தவறு என்கிறாரா? வருணாவுக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால், அவரும் எப்போதும்போல் இல்லையே. அவர்களிடம் எதற்கோ மாட்டிக்கொண்டு நிற்கிற மனிதரிடம் இதைத்தானே எதிர்பார்க்க முடியும்?

மனம் விட்டுவிட வேறு பேசாமல் வந்துவிட்டாள். ஏதோ ஒரு வகையில் அவளுக்கும் அந்த வைத்தியசாலைக்குமான நெருக்கம் குறைந்துகொண்டிருப்பது தெரிந்து உள்ளே வலித்தது.

எப்போதும் கம்பீரமாகவும் உறுதியாகவும் பேசும் அவர், அவர்களுக்கு முன்னால் மட்டும் ஏன் தயங்குகிறார்? அவர்களிடம் அப்படி என்ன இருக்கிறது? அவருக்கு எதிராக அப்படி என்ன நடந்திருக்கிறது?

எத்தனை யோசித்தும் வருணாவுக்குப் பதில் கிடைக்கவில்லை.

அப்போது அவள் கைப்பேசி இலேசாக அதிர்ந்து அடங்கிற்று. அணிந்திருந்த வெள்ளை கோட்டின் பொக்கெட்டில் இருந்த கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். திரையில் மாறன் என்கிற பெயர் மின்னிற்று.

முகத்தில் புன்னகை விரிய, அழைப்பை ஏற்றுக் கைப்பேசியைக் காதுக்குக் கொடுத்தாள்.

“மேடம், எங்க நிக்கிறீங்க?” என்று துள்ளலான குரலில் கேட்டான் மாறன்.

“ஹொஸ்பிடல்லதான் மாறன்!” காலையில் பேசும்போது அவளின் டியூட்டி நேரம் குறித்துச் சொல்லியிருந்தாள். பிறகும் ஏன் கேட்கிறான் என்கிற கேள்வியோடு பதில் சொன்னாள்.

“நாங்களும் உன்ர ஹொஸ்பிடல் கேன்டீன்லதான் நிக்கிறம்.” என்றான் அவன்.

உடனேயே தான் இருந்த இரண்டாவது மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தாள். அங்கே மாறனும் அவளுடைய அம்மா, அப்பாவும் கேன்டீனில் அமர்ந்திருந்தார்கள்.

வருணா தங்களைப் பார்த்துவிட்டதைக் கண்ட மாறன் உற்சாகமாகக் கையை அசைத்தான். அவளும் புன்னகையுடன் கையை அசைத்துவிட்டு, வேகமாகக் கீழே இறங்கிச் சென்றாள்.

பெற்றவர்கள் கவனிக்காதபோதும் அவள் முக வாட்டத்தைக் கவனித்துவிட்டுக் கண்ணாலேயே விசாரித்தான் மாறன். அப்படி அவன் தன்னைக் கண்டுகொண்டது மனத்திற்கு இதம் சேர்க்க, மலர்ந்த முறுவலோடு ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள் வருணா.

நால்வருக்கும் குளிர்பானத்திற்குச் சொல்லிவிட்டு வந்து அன்னையின் அருகில் அமர்ந்தாள். அவளுக்கு அப்படித் திடீரென்று அவர்கள் மூவரையும் கண்டது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.

“வருவம் எண்டு சொல்லவே இல்ல.” என்றாள் மூவருக்கும் பொதுவாக.

“கலியாண கார்ட் குடுக்கப் போனனாங்க. தம்பி உங்களைப் பாக்க வரப்போறன் எண்டார். சரி எண்டு நாங்களும் வந்திட்டம்.” என்றதும் அவள் பார்வை மாறனைத் தொட்டது.

அவன் கண்களால் சிரித்தான். அவன் அவளோடான ஒரு பொழுதை எதிர்பார்த்திருப்பான். அதைப் புரிந்துகொள்ளாமல் அவள் பெற்றவர்கள் புறப்பட்டு வந்திருக்கிறார்கள். அவன் சிரிப்பில் அவளுக்கு முகம் சூடாகிவிடும் போலாயிற்று.

பார்வையை அவள் வேகமாகத் திருப்பிக்கொள்ள, “வேலை கூடவாம்மா?” என்றார் மதியழகன்.

“எப்பவும் உள்ளது தானேப்பா.” சலுகையுடன் அவர் தோள் சாய்ந்துகொண்டு பதில் சொன்னாள் வருணா.

அதன்பிறகு அவர்களுடைய நேரம் மிகவும் இதமாகக் கழிந்தது.
திருமண ஏற்பாடுகள், மீதமிருக்கும் வேலைகள், அடுத்து வரப்போகும் நாட்கள் என்று பேச்சு நீண்டது.

மாறன் அவ்வப்போது ஏதாவது சொல்லி அவளைச் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தான். இதுதான் அவனிடம் அவளுக்குப் பிடித்ததே. மனத்தளவில் அவள் எதற்கோ சோர்ந்துபோயிருக்கிறாள் என்று அறிந்து அதை நேராக்க முயல்கிறானே.

இப்படி அன்பானவர்கள் தன்னைச் சுற்றி இருக்கையில் யாரோ ஒரு ரவுடிக்காக தான் சோர்ந்து போவதா என்று எண்ணியவள், அதன் பிறகு அவர்களோடு இனிமையாக நேரத்தைக் கழித்துவிட்டு அவர்களை அனுப்பிவைத்தாள்.

கிட்டத்தட்ட ஐந்து வாரங்கள் கடந்திருந்தன. சூர்யாவின் மறைமுக ஆட்டம் ஓயவேயில்லை. பெருமளவில் ராயனின் தொழிலைச் சீர்குலைத்திருந்தான். அத்தனையையும் அறிந்துகொண்டு வைத்தியசாலையிலேயே குடியிருந்தான் கலிங்கராயன்.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால் அவனை எப்போதோ வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். இன்னுமே கட்டுகள் இருந்தாலும் காயங்கள் பெருமளவில் ஆறி, உடலும் தேறியிருந்தது.

அளவான நடை, போதுமான ஓய்வு, தேவையான உடற்பயிற்சி, சத்தான உணவு என்று அனைத்தையும் கவனித்ததில் நன்றாகியிருந்தான். ஆனாலுமே நிர்வாகமும் அவனை அனுப்புவதாக இல்லை, அவனும் போவதாக இல்லை.

போகிற போக்கைப் பார்த்தால் பாலைக் காய்ச்சிவிட்டு வைத்தியசாலையிலேயே பாயைப் போட்டு நிரந்தரமாகப் படுத்துவிடுவான் போலும் என்று எண்ணிக்கொண்டாள் வருணா.

அவனுடைய உடல் நிலையைப் பொறுத்து, கனமான வேலைகளைத் தவிர்த்து, மேற்கொள்ள வேண்டிய ஒவ்வொரு பயிற்சிக்கும் தனித்தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவனுக்குக் கொடுக்கப்படும் கவனிப்புகளும் வசதிகளும் வருணாவையே வியப்பில் ஆழ்த்தின.

இவனுக்கு ஏன் இத்தனை கவனிப்புகள்? பணம் கொடுக்கிறான் என்பதற்காக இப்படியா? அப்படியே பணம் கொடுத்தாலும் வீட்டுக்குப் போகாமல் ஏன் இங்கேயே தங்கியிருக்கிறான் என்று அவளுக்குள் நிறையக் கேள்விகளும் குழப்பங்களும்.

அன்று நிர்வாகியைத் தேடிப்போய்ப் பேச்சு வாங்கிக்கொண்டதே போதும் என்பதில், யாரிடமும் எதையும் கேட்டுத் தெரிந்துகொள்ள அவள் முயலவில்லை.

முன்பெல்லாம் ஒரு மருத்துவராக ராயனின் உடல்நிலை குறித்து ஆதியிடம் நேரடியாகச் சொல்வாள். அவன் கேட்கிற சந்தேகங்களுக்குத் தெளிவாகவும் பொறுமையாகவும் பதிலளிப்பாள்.

அன்று அவள் முகத்திற்கு நேரே கதவைச் சாற்றியதிலிருந்து அவனை முற்றிலுமாகப் புறக்கணித்தாள். கலிங்கராயனிடமும் அவளுடைய அணுகுமுறை மாறியிருந்தது.

தன்னுடைய மருத்துவக் கடமையைச் சரியாகச் செய்வாள். அவனுடைய உடல் நிலையைப் பரிசோதிப்பாள். தேவையான சிகிச்சைகளையும் பயிற்சிகளையும் கண்காணிப்பாள். ஆனால், அந்தக் கடமையைத் தாண்டிய பரிவோ, கனிவோ, தனிப்பட்ட அக்கறையோ அவளிடம் இப்போது இல்லை.

அவனும் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. நீ உன் வேலையைப் பார்க்கிறாய், நன்றாகப் பார் என்பதைப் போலத்தான் அவனுடைய போக்கிருந்தது. அதைவிட அவளைக் கவனித்து ஆராயும் மனநிலையில் அவனைச் சூர்யா வைக்கவுமில்லை.

*****

அன்றோடு அவளுக்கு விடுமுறை ஆரம்பிக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் அவளுக்குத் திருமணம். மூன்று வாரங்கள் விடுமுறை எடுத்திருந்தாள்.

அதுவரையில் அவள் தேவையற்று விடுமுறை எடுத்ததேயில்லை. அந்தளவில் நேசித்து வேலையைச் செய்வாள் என்பதாலும், அன்று அவளுக்குத் தான் நியாயமாக நடக்கவில்லை என்கிற குற்றவுணர்ச்சியிலும் அவள் கேட்ட விடுமுறையைக் கொடுத்திருந்தார் நிர்வாகி.

அன்றைய தன் பணிகளை முடித்துக்கொண்டு புறப்படுவதற்குத் தயாரானாள். அதுவரையில் அவளுடைய பொறுப்பில் இருந்த நோயாளிகளைத் தன்னுடைய தோழி மருத்துவரிடம் ஒப்படைத்தாள். ஒவ்வொருவருடைய உடல்நிலை, அவர்களுக்குத் தொடர்ந்து வழங்க வேண்டிய சிகிச்சைகள் என அனைத்தையும் தெளிவாக விளக்கினாள்.

இனிப் புறப்பட வேண்டியதுதான். திருமணம், புதிய வாழ்க்கை, புதிய உறவுகள் என்று தன் வாழ்க்கையின் புது அத்தியாயத்தினுள் அடியெடுத்து வைக்கப்போவதை நினைக்கையில் அவளுக்குள் மெல்லிய குறுகுறுப்பும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் எழுந்தன.

இன்னும் மூன்று நாட்களில் மாறனின் மனைவியாகப்போகிறாள். இந்த வைத்தியசாலைக்கு மீண்டும் திரும்பி வரும்போது, அவள் திருமதியாகியிருப்பாள் என்பதே வித்தியாசமான உணர்வை உண்டாக்கிற்று.

அப்போது அவளுடைய அறைக் கதவு இலேசாகத் தட்டப்பட்டது. நிமிர்ந்து பார்த்தாள். ஆதிதான் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். அவனுடைய கையில் மிக அழகான பூங்கொத்து ஒன்று இருந்தது.

அவளுடைய பார்வை ஆதியையும் அவன் கையில் இருந்த அந்தப் பூங்கொத்தையும் மாறி மாறித் தொட்டது.

“டொக்டர், அண்ணாவ எங்களுக்குத் திருப்பித் தந்தது நீங்கதான். நீங்க அவ்வளவு அர்பணிப்போடயும் கவனமாயும் கவனிக்காட்டி என்ன ஆகியிருக்குமோ தெரியாது. அதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் காணாது. அதுதான் இத உங்களுக்குத் தந்து நன்றி சொல்லிப்போட்டுப் போக வந்தனான்.” என்றபடி பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்.

வருணாவுக்குச் சம்பிரதாயத்துக்காகக் கூட அதை வாங்கிக்கொள்ளப் பிடிக்கவில்லை. அன்று அவன் அவளை அறையை விட்டு வெளியேற்றிக் கதவைச் சாற்றிய காட்சி கண் முன்னே வந்து போக, “நான் என்ர கடமையைத்தான் செய்தனான். அதுக்கு எனக்குத் தாராளமாகச் சம்பளம் கிடைக்கிது. சோ, இதெல்லாம் தேவையில்ல.” என்றாள்
அவன் கையில் இருந்த பூங்கொத்தைக் காட்டி.

அவள் கோபம் ஆதிக்கு மிக நன்றாகவே புரிந்தது. அதிலிருக்கும் நியாயமும்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போன்று அவர்களுக்கிடையில் எதுவுமே சரியாக அமையவில்லை. ஆனாலும் கூட அவள் மிக அருமையான பெண் என்பதையும், அர்ப்பணிப்பு நிறைந்த மிக நேர்மையான வைத்தியர் என்பதையும் அறிந்தே இருந்தான்.

அப்படியான ஒருத்தியின் முன்னால் தாம் தவறானவர்களாக நிற்பதை எண்ணி மிகவுமே வருந்தினான்.

அதில், “நடந்த எல்லாத்துக்கும் சொறி டொக்டர். நீங்க பாக்கிற எல்லா விசயத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கும். அந்தப் பக்கம் தெரிய வந்தா, உங்கட எண்ணங்கள், வெறுப்புகள், விருப்பங்கள் மாறலாம். நாங்க ஏதாவது ஒரு வகையில உங்கட மனதை நோகடிச்சிருந்தா அதுக்கு சொறி. நீங்க எங்களுக்கு நல்லது மட்டுமே செஞ்சிருக்கிறீங்க. உங்களுக்கும் உங்கட வாழ்க்கையில எப்பவும் நல்லது மட்டுமே நடக்கும். நடக்கோணும்.” என்று மனத்திலிருந்து சொன்னவன் அந்தப் பூங்கொத்தை அவள் அனுமதி இல்லாமலேயே அவள் மேசையில் வைத்துவிட்டுப் போனான்.

error: Alert: Content selection is disabled!!