அத்தியாயம் 12
மாறன், வருணா திருமண நாள் மிக அழகாக விடிந்திருந்தது. திருமண மண்டபம் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் வண்ணம் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காற்றில் மிதந்து வந்த பூக்களின் நறுமணமும், மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்த நாதஸ்வரத்தின் மங்கல ஓசையும் மனத்துக்கு இதம் சேர்த்தன.
வாயிலின் இருபுறமும் கட்டப்பட்டிருந்த வாழை மரங்கள் குலை தள்ளி நிற்க, தோரணங்களும், செவ்வந்திப் பூக்களும் காற்றிலாடி வரவேற்றன. வண்ண வண்ண மலர்களால் அமைக்கப்பட்ட அலங்கார வளைவுகள் வரவேற்பு வாயிலை அழகுபடுத்தின.
மண்டபத்தின் உட்புறம் முழுவதும் மலர் அலங்காரங்களால் நிறைந்திருந்தது. மேலிருந்து தொங்கிய மலர் மாலைகளும், அழகழகான சரவிளக்குகளும், ஒளிரும் மின்விளக்குகளும் மண்டபத்திற்கு மேலும் மெருகூட்டின.
பாரம்பரியத்தையும் நவீன அலங்காரத்தையும் இணைத்த வகையில் மணமேடை அமைக்கப்பட்டிருந்தது. ஐயர் திருமணச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்.
இரண்டு குடும்பங்களினதும் அடுத்த தலைமுறையில் நடைபெறும் முதல் திருமணம் என்பதால், தங்களால் முடிந்தவரை சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
திருகோணமலையின் முக்கிய புள்ளிகள், பிரபல தொழிலதிபர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், அரசியல் பிரமுகர்கள், காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் என்று பலரும் அங்கே கூடியிருந்தார்கள்.
பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளைக்கே உரிய கம்பீரமும் அழகுமாய் மணமேடையில் அமர்ந்திருந்து, ஐயர் சொற்படி சடங்குகளை செய்துகொண்டிருந்தான் மாறன்.
அந்த நேரத்தில் மங்கள வாத்தியங்கள் சத்தமாக முழங்கத் தொடங்கின. நாதஸ்வரமும் தவிலும் இணைந்து இசைத்த மங்கல இசை மண்டபம் முழுவதும் எதிரொலிக்க, பட்டுச் சேலையில் மணப்பெண்ணிற்கான முழுமையான அலங்காரத்துடன் மண்டபத்துக்குள் பிரவேசித்தாள் வருணா.
அவள் முகத்தில் மெல்லிய வெட்கமும் புன்னகையும் படர்ந்திருந்தன. மணமேடையில் அமர்ந்திருந்த மாறனின் பார்வை அவள் மீது விழுந்தது.
அவனது பார்வையில் தெரிந்த மகிழ்ச்சியில் வருணாவின் உதடுகளிலும் புன்னகை விரிந்தது.
இருவர் உள்ளத்திலும் தங்களுடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயம் ஒன்று தொடங்கப்போகிறது என்கிற மகிழ்ச்சி நிறைந்திருந்தது.
உறவினர்களின் துணையுடன் மணமேடை ஏறி, மாறனின் அருகில் வந்து அமர்ந்தாள் வருணா.
அதற்குள் ஐயர் திருமணச் சடங்குகளை ஆரம்பித்தார். மந்திரங்கள் ஒலிக்கத் தொடங்கின. ஹோமகுண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டு, அடுத்தடுத்து நடைபெற வேண்டிய சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திடீரென்று மண்டபத்தின் மின்விளக்குகள் அத்தனையும் அணைந்தன. அடுத்த கணம் கலிங்கராயனின் புத்தம் புதிய கறுப்பு நிற ரேஞ்ச் ரோவர், மண்டபத்தின் முன்னால் க்ரீச்சென்ற சத்தத்துடன் வந்து நின்றது. அதன் பின்னால் இன்னும் சில வாகனங்களும் வந்து நின்றன.
அதிரடியாகத் தடதடவென்று நுழையும் இராணுவத்தினரைப் போன்று, ராயனின் ஆட்கள் கிடுகிடுவென மண்டபத்துக்குள் நுழைந்தனர். என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்று அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்கு முன்னரே, ராயனின் ஆட்கள் வரதனையும் அவனுடைய சகோதரனின் குடும்பத்தினரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தினார்கள்.
வந்திருப்பது கலிங்கராயன்தானா என்பதை அதிர்ச்சியுடன் உணர்ந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தான் வரதன். இத்தனை நாள்களாக அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்த, கலிங்கராயன் இருக்கிறானா இல்லையா என்கிற கேள்விக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.
அதற்குள் ராயனின் ஆட்கள் சிலர் மாறனை வலுக்கட்டாயமாக மணமேடையிலிருந்து தூக்கிச் சென்றார்கள். அந்த இடத்தில் வந்து அமர்ந்த கலிங்கராயன், கையோடு கொண்டுவந்திருந்த தாலிக்கொடியை எடுத்து, வருணாவின் கழுத்தில் கட்டினான்.
வருணாவிற்கு அதிர்ச்சி என்பதெல்லாம் சிறிய வார்த்தையாயிற்று. ஒன்றும் புரியாமல் இவன் என்ன செய்கிறான் என்று பார்த்தாள்.
அவன் அவளையோ அவளின் அதுர்ச்சியையோ பொருட்படுத்தவே இல்லை. தாலியைக் கட்டியது மாத்திரமல்லாமல், அவள் தாலியிலும் உச்சியிலும் குங்குமத்தை இட்டு, மொத்தமாய் அவளைத் தன் மனைவியாக்கிக்கொண்டான்.
அதன் பிறகுதான் வருணா தன் கழுத்தைக் குனிந்து பார்த்தாள். அங்கே கிடந்த தாலி நடந்ததைச் சொல்லத் திகைத்து நிமிர்ந்தாள்.
இப்போது கூட அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்காக இங்கே வந்தான்? ஏன் அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டினான்? என்ன நடக்கிறது? எதையுமே உள்வாங்கிக்கொள்ள முடியாமல் குழப்பமும் கேள்வியாக கலிங்கனைப் பார்த்து விழித்தாள்.
நடந்ததைக் கண்டு அங்கே இருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். வரதனுக்கோ கலிங்கராயன் உயிருடன் திரும்பி வந்துவிட்டது மட்டுமன்றி, அத்தனை பேரின் முன்னிலையிலும் அவன் செய்துவிட்ட காரியமும் பேரிடியாக இறங்கியது.
மதியழகனுக்கும் சிவசுந்தரிக்கும் நடந்த எதையும் கிரகிக்கவே முடியவில்லை. மகளின் கழுத்தில் தொங்கிய தாலிக்கொடி, நடந்த அசம்பாவிதம் உண்மைதான் என்பதை உணர்த்தியது.
பதறிப்போனவர்கள், மனம் பதைக்க மகளின் அருகே ஓடிவர முயன்றனர். ஆனால், அவர்களையும் ராயனின் ஆட்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
வருணாவின் கையைப் பற்றி எழுப்பிய கலிங்கராயன், அங்கிருந்த யாரையும் கவனத்தில் கொள்ளாமல், வரதனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான். “செத்திட்டன் எண்டு நினைச்சியோ? இனி தினம் தினம் நீ சாவாய்!” என்றுவிட்டு வருணாவைத் தன்னோடு இழுத்துக்கொண்டு நடந்தான்.
அப்போதுதான் நடப்பதை முழுமையாக உணர்ந்த வருணா, அவனுடன் செல்வதற்கு மறுத்தாள். அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு பெற்றோரிடம் ஓடிச் செல்ல முயன்றாள்.
ராயன் விடவில்லை. ஒரே சுழற்றில் சுழற்றி அவளைத் தன் ஒற்றைக் கைக்குள் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தான். அது போதாது என்று சரியாக மதியழகனின் நெற்றிப்பொட்டுக்கு நேராகத் துப்பாக்கியை நீட்டிய ஆதி, அவளைத் திரும்பிப் பார்த்தான்.
அப்படியே நின்றுவிட்டாள் வருணா. அவனும் அவன் துப்பாக்கி தந்தையின் நெற்றியில் அழுந்தி நின்ற விதமும் அவளுக்குச் சொன்ன செய்தி பேரிடியாய் அவளுக்குள் இறங்கிற்று. அவனை மிகுந்த வெறுப்புடன் நோக்கினாள். ஒவ்வொரு முறையும் அவர்களின் அதிகாரத்தின் முன்னே தான் கையாலாகாதவளாக நிற்பதை எண்ணி வெந்துபோனாள்.
கலிங்கராயனுடன் செல்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை. கண்களில் கண்ணீர் வழிய, பெற்றோரைத் திரும்பிப் பார்த்தபடியே அவனோடு இழுபட்டாள் வருணா.
அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் கூட நடப்பதை உணர்ந்து எதிர்வினையாற்றுவதற்குள் அத்தனையையும் நடத்தி முடித்திருந்தான் கலிங்கராயன்.
*****
அவர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறிய கணத்தில் அணைந்திருந்த மின்விளக்குகள் அனைத்தும் மீண்டும் ஒளிரத் தொடங்கின. ஆனால், சற்று முன்னர் மங்கள வாத்தியங்களின் இசையாலும், மகிழ்ச்சியான பேச்சுகளாலும், சிரிப்பொலிகளாலும் கலகலத்துக்கொண்டிருந்த அந்த மண்டபம் இப்போது மயான அமைதியில் மூழ்கியிருந்தது.
யாருக்கு என்ன பேசுவது, என்ன செய்வது என்றே புரியவில்லை. நடந்த சம்பவத்தை இன்னமும் நம்ப முடியாதவர்களாக அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.

