கலிங்கனின் காவியம் 12.2

சில நிமிடங்களுக்கு முன்னர் மகிழ்ச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருந்த திருமணம் இப்படியொரு விபரீதத்தில் முடியும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

மாறனால் தலையை நிமிர்த்தவே முடியவில்லை. யாரோ ஒருவன் திடீரென்று தன்னுடைய திருமணத்தில் புகுந்து, தன்னைத் தூசு போலத் தட்டிவிட்டுவிட்டு, தான் ஆசைப்பட்ட பெண்ணைத் தாலிகட்டி மனைவியாக்கிக்கொண்டு போகிறான். அவனானால் எதிர்த்து நிற்க முடியாதவனாக, ஒரு பேடியைப் போல அடங்கி நின்றுவிட்டான். அந்த எண்ணமே அவனுடைய நெஞ்சை அறுத்தது.

மகனை அப்படியொரு நிலையில் பார்க்க முடியாமல் தவித்த விஜயராஜன், தன் மனைவி சாந்தகுமாரியுடன் வரதனை நோக்கி ஆத்திரத்துடன் விரைந்து வந்தார்.

“என்ன நடக்குது இஞ்ச?” என்று சீறியவர், “அவன் கலிங்கராயன் எல்லா? அவன் ஏன் இஞ்ச வந்தவன்? ஏன் என்ர மகனின்ர கலியாணத்தைக் குழப்பினவன்? என்ன நடக்குது? என்ன பிரச்சினை அவனுக்கும் உனக்கும்? அவனைத்தானே காணேல்ல எண்டு தேடிக்கொண்டு இருந்தனி நீ?” என்று ஆத்திரமும் மனக்கொதிப்புமாக வரதனின் சட்டையைப் பிடித்து உலுக்கினார்.

“அண்ணா, பொறுமையா இருங்க!” சமூகத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் பலரும் கூடியிருந்த அந்த இடத்தில் எதையும் வெளிப்படையாகப் பேச முடியாமல் வரதன் அவரைச் சமாதானப்படுத்த முயன்றான்.

ஆனால், விஜயராஜனோ அதற்கெல்லாம் செவிசாய்க்கும் நிலையில் இல்லை. மகனின் முகத்தில் படிந்திருந்த அவமானத்தையும், ஒற்றை மகனின் திருமணம் இப்படியாகிபோனதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அதைவிட தான் உண்டு, தன் தொழில் உண்டு என்று இருப்பவர் அவர். உலகுக்கு நல்லவன் வேடம் போட்டுக்கொண்டு நாசகார வேலைகளை செய்பவன் தன் சகோதரன் என்று அவருக்குத் தெரியும். பலமுறை சொல்லிப் பார்த்துவிட்டார். அவன் கேட்பதாக இல்லை என்றதில் அவரும் ஒதுங்கியிருந்தார். ஆனால், அவன் செய்த அத்தனை பாவங்களும் அவர் மகன் தலையில் விடிந்ததை எப்படித் தங்குவார்?

“எப்படியடா பொறுமையா இருப்பேன்? எப்பிடி என்னைப் பொறுமையா இருக்கச் சொல்றாய்? எனக்கு இருக்கிறது ஒரே ஒரு மகன்! அவன் ஆசைப்பட்ட பெட்டையோட அவனுக்குக் கலியாணம் செய்து வைக்கோணும் எண்டு எவ்வளவு ஆசையோட இருந்தனான்! இப்பிடி எல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டியே!” அவருடைய குரல் கோபத்தில் நடுங்கியது.

“ஐயோ அண்ணா, நான் ஒண்டும் செய்யேல்ல. அவன் ஒரு ரவுடி. அவன் ஏன் இஞ்ச வந்தான், ஏன் இப்பிடி…” என்று அப்போதும் நடிக்க முயன்ற வரதனை அவர் விடவில்லை.

“நடிக்காத! செத்திட்டன் எண்டு நினைச்சியோ? இனி தினம் தினம் நீ சாவாய் எண்டு சொல்லிப்போட்டுத்தானே போனவன். அதுவும் உன்னைப் பாத்து. அப்ப நீதான் என்னவோ செய்திருக்கிறாய். சொல்லு! இதுக்கெல்லாம் நீ எனக்குப் பதில் சொல்லியே ஆகோணும்! சொல்லு! மரியாதையா எனக்குப் பதில் சொல்லு!” என்று ஆத்திரத்தில் கத்தினார் விஜயராஜன்.

என்ன சொல்வான் வரதன்?

நயவஞ்சகமாக நடந்து, தான் நிலாவினியை அபகரித்துக்கொண்டதற்கு பழி தீர்க்கும் வண்ணம், அனைவரின் முன்னிலையிலும் வைத்துத் தக்க பதிலடி தந்துவிட்டான் என்றா சொல்ல முடியும்?

அவமானத்திலும் ஆத்திரத்திலும் அவனுடைய உள்ளம் பற்றி எரிந்தது. அத்தனை பேர் முன்னிலையிலும் தன்னுடைய உண்மையான முகத்தைக் காட்டிக்கொள்ள முடியாமல், உள்ளுக்குள் எரிமலையாகக் கொதித்தபடி நின்றான்.

அங்கே கூடியிருந்த மற்றவர்களுக்கு இன்னுமே நடந்த சம்பவத்தின் பின்னணி எதுவும் புரியவில்லை. ஆனால், ராயன் சொல்லிவிட்டுப் போன விடயம் அனைவரின் சதேகப் பார்வையையும் வரதன் புறமே திருப்பிற்று.

அதில் அவர்களில் உயர் பதவியில் இருந்த ஓர் அதிகாரி, “என்ன நடக்குது வரதன்? கலிங்கராயனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை? விஜயன் சொல்லுற மாதிரி அவன் ஏன் உங்களிட்ட அப்பிடிச் சொன்னவன்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினார்.

வாழ்க்கையில் முதன்முறையாக நடிக்க வராமல் அதிர்ந்து நின்றான் வரதன்.

தன்னுடைய வீட்டுக்கு மருமகளாக வரவேண்டிய பெண்ணை அபகரித்துச் சென்றதோடு மட்டுமல்லாமல், இத்தனை காலமாகத் தான் கட்டியெழுப்பியிருந்த ‘நல்லவன்’ என்ற பிம்பத்தையும் உடைத்தெறியத்தான் இதைச் செய்திருக்கிறான் என்று உணர்ந்த வரதராஜனின் உள்ளம் கொந்தளித்தது.

அவமானம் அவனைக் கூனிக்குறுகச் செய்தது. ஆத்திரம் அவனுடைய நரம்புகளை முறுக்கேற்றியது. ராயன் மீது ஏற்கெனவே இருந்த வெறுப்பு பல மடங்காகப் பெருகியது.

மதியழகனுக்கும் சிவசுந்தரிக்கும் இன்னமும் அங்கே நடந்துகொண்டிருப்பவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. விஜயராஜனின் கோபம், வரதனின் அழுத்தமான அமைதி, அங்கே நிலவிய பதற்றம் என எதுவுமே அவர்களுக்குப் புரியவில்லை.

இதையெல்லாம்விட, தங்கள் மகளைத் தாலிகட்டி இழுத்துச் சென்றவன் யார் என்பதுதான் அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது.

அவன் ஏன் அப்படிச் செய்தான்? வரதனுக்கும் அவனுக்கும் இடையில் ஏதோ பெரிய பகை இருக்கிறது என்பது வரை அவர்களுடைய பேச்சிலிருந்து புரிந்தது. அந்தப் பகைக்குத் தங்கள் மகள் பலியாக்கப்பட்டுவிட்டாளோ என்ற பயத்தில் அவர்களின் நெஞ்சமெல்லாம் நடுங்கியது.

அதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியாமல், மதியழகன் வேகமாகச் சென்று வரதனின் முன்னால் நின்றார்.
“வரதன், உங்கட குடும்பம் நல்ல குடும்பம், நீங்க நல்ல மனுசர், நியாயமா நேர்மையா வாழுற ஆக்கள் எண்டு நம்பித்தான் என்ர பிள்ளைய உங்களுக்குத் தர ஓம் எண்டு சொன்னனாங்க. இப்ப என்ன நடந்திருக்கு? எங்கே எங்கட மகள்? முதல் ஆர் அவன்? பாக்கவே ரவுடி மாதிரி இருக்கு. இனி என்ர பொம்பிளைப் பிள்ளையின்ர நிலம என்ன? எனக்கு இப்பவே என்ர பிள்ளை வேணும்.” என்றவருக்கு மேலே பேச முடியாமல் குரல் அடைத்துப்போனது. நெஞ்சுக்குள் தாங்க முடியாத வலி குமுறலாக வெளிப்பட்டது.

சிவசுந்தரிக்கோ கண்ணீரைத் தவிர வேறெதுவும் வரவில்லை. கண்ணீரும் கலக்கமுமாக அவன் கையில் இழுபட்டுப் போன மக்களே கண்களுக்குள் நின்றாள். இனி அவளுடைய வாழ்க்கை என்னவாகும்? அவளுடைய எதிர்காலம் எப்படி அமையப்போகிறது?

கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக மனத்துக்குள் எழ, அவற்றுக்குப் பதில் தெரியாமல் தவித்தார் அந்தத் தாய்.

error: Alert: Content selection is disabled!!