கலிங்கனின் காவியம் 13.1

அத்தியாயம் 13

ராயனின் உடல்நிலை ஓரளவுக்குச் சீராகி, சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்யலாம் என்கிற அளவுக்கு முன்னேற்றம் கண்டிருந்த நேரம், நடைப்பயிற்சியை ஆரம்பித்திருந்தான்.
அன்றைக்கு ஆதியின் துணையோடு தான் தங்கியிருந்த வைத்தியசாலையின் மூன்றாவது மாடி அறைக்குள்ளேயே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான்.

அப்போதுதான் தற்செயலாகக் கீழே கேண்டீனில் வருணா தன் பெற்றோருடனும் இன்னோர் ஆணுடனும் இருப்பதைக் கண்டான்.
எப்போதுமே வருணாவிடம் ஒரு வைத்தியருக்குரிய நிமிர்வும், கனிவும், கரிசனையும் இருக்கும்.

அதேநேரம், ஒரு விதக் கம்பீரமும் இருக்கும். யாரும் அவளை எளிதில் நெருங்கிவிட முடியாதபடி, அவள் சொல்வதைக் கேட்டுக்கொள்ள வைக்கும் தோற்றம், நடை, உடை, பாவனை என்று எல்லாமே இயல்பாக அமைந்திருந்தன.

ஆனால் இப்போது, அவற்றில் எதுவுமே இல்லாமல், ஏதோ சின்ன பிள்ளையைப் போல மாறிவிட்டவளாகத் தந்தையின் தோளில் சாய்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தாள். அந்தக் காட்சிதான் ராயனின் கவனத்தை ஈர்த்தது.

முதலில் அவர்களோடு இருந்த இளைஞனை அவளுடைய சகோதரன் என்றுதான் நினைத்தான். ஆனால், அவனுடைய முகத்தை உற்றுக் கவனித்தபோது எங்கேயோ பார்த்திருப்பதைப் போலத் தோன்றியது. உடனே ஆதியை அழைத்து அவனுக்குக் காட்டினான்.

ஊன்றிக் கவனித்த ஆதிக்கு அதிர்ச்சி. அவன் வரதனின் அண்ணா மகன் மாறன். அவன்தானா என்கிற கேள்வியும் குழப்பமுமாக கலிங்கராயனைப் பார்த்தான். அவனேதான் என்பதுபோல் தலையை அசைத்த கலிங்கராயன், தன்னைக் கண்காணிக்க வந்திருக்கிறானோ என்றுதான் முதலில் சந்தேகித்தான்.

என்ன நடக்கிறது என்று இருவருமாகக் கவனித்துக்கொண்டேயிருந்தார்கள். வந்த மூவரும் இவளிடம் நலஜில மாதிரிச் சொல்லிக்கொண்டு புறப்பட்ட காட்சி, அவர்களுக்குள் நல்ல பழக்கம் உண்டு என்று சொல்லிற்று.

அது வேறு என்ன வகையான பழக்கம் என்று அறியத் தூண்டிற்று. அதில் அவர்களைப் பற்றி விசாரிக்கச் சொன்னான். அப்படி விசாரித்தபோதுதான் மாறனுக்கு வருணாவுக்கும் திருமணம் நடக்கப்போவது தெரிய வந்தது.

அதைவிட முக்கியமான விசயம், மாறன் என்றால் வரதனுக்கு உயிர் என்பதும், அவனுடைய திருமணத்தைத் தனது செல்வாக்கையும் அதிகாரத்தையும் காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்த இருக்கிறான் என்றும் தெரியவந்தது.

அப்போதே ராயன் முடிவு செய்துவிட்டான். அதனால்தான் வைத்தியசாலையை விட்டு வெளியேறவே இல்லை. வரதனின் தலையில் இடி விழுந்ததைப் போல இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் காரியத்தைக் கச்சிதமாக முடித்திருந்தான்.

ஆனால், அவனுக்கு இது மட்டும் போதாது. வரதனும் சூர்யாவும் நிதானித்து நிமிர்வதற்கு முன்னரே அடுத்தடுத்து அடிகளைக் கொடுக்க வேண்டும். இத்தனை நாட்களாக அவர்கள் தனக்கு என்ன செய்தார்களோ, அதைப் போலப் பத்து மடங்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

வைத்தியசாலையில் இருந்த அத்தனை நாள்களும் அதற்கான வேலையைத்தான் கவனித்துக்கொண்டிருந்தான். இனி அவற்றைப் பார்க்க வேண்டும்.

கலிங்கராயனின் ரேஞ்ச் ரோவர் அவன் கைகளில் பறந்துகொண்டிருந்தது. அவன் அருகில் அமர்ந்திருந்த வருணாவினால் இன்னுமே தன் வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று புரிந்துகொள்ள முடியவேயில்லை.

மெல்லக் குனிந்து தன் கழுத்தைப் பார்த்தாள். அங்கே தொங்கிக்கொண்டிருந்த தாலி, நடந்ததெல்லாம் கனவல்ல நிஜம் என்று சொல்லிக்கொண்டிருந்தது. தன் வாழ்க்கையையே சிதைத்துவிட்ட அந்தத் தாலியைக் கண்டு கண்ணீர் பெருகிற்று.

சற்றுக்கு முன் வரைக்கும் மாறனின் கையால் தாலி வாங்கப்போகும் மகிழ்ச்சியில் இருந்தாள். ஆனால் இப்போது, யாரோ ஒருவனின் கையால் தாலியை வாங்கிக்கொண்டு, மனைவியாக அவன் அருகில் அமர்ந்திருக்கிறாள்.

திரும்பிப் பார்த்தாள். புருவங்கள் சுளித்திருக்க, தாடை இறுகியிருக்க, ஸ்டியரிங்கைப் பற்றியிருந்தான் கலிங்கராயன். அவன் தோற்றமே அவளுக்குள் நடுக்கத்தை விதைத்தது. அதே நேரத்தில் அவனைக் கண்டு ஆத்திரமும் அழுகையும் பொங்கின.

ஒரே நொடியில் அவள் வாழ்க்கையைச் சிதைத்துவிட்டானே.

“ஏன் இப்பிடிச் செய்தனீங்க?” அழுகைக்கு மத்தியில் அவளுக்குக் குரல் எழும்பவேயில்லை.

“அப்பிடி உங்களுக்கு என்ன பாவம் செய்தனான்? உங்கட உயிரைக் காப்பாத்தினதத் தவிர வேற ஒண்டும் செய்யேல்லையே?”

அவன் வாகனத்தைச் செலுத்துவதில் மாத்திரம் கவனமாயிருந்தான். அவள் பேசுவதற்கு சின்னதாகத் தன்னும் அவனிடம் எந்தப் பிரதிபலிப்பும் இல்லை. அது ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் கொடுத்தது. செய்வதையும் செய்துவிட்டு இப்படி இருக்க அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?

“நான் கதைக்கிறது கேக்குதா இல்லையா? மரியாதையா காரத் திருப்புங்க! நான் உங்களோட வரமாட்டன். எனக்கு என்ர அம்மா அப்பாவைப் பாக்கோணும்!” என்று கத்தினாள்.

அவன் அசைய வேண்டுமே. அவளுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது.

“கலிங்கராயன்! இப்ப காரை நிப்பாட்டப் போறீங்களா இல்லையா? சொல்ல சொல்ல செவிடு மாதிரி இருக்கிறீங்க. நிப்பாட்டுங்க முதல். நிப்பாட்டுங்க எண்டு சொல்லுறன் எல்லா!” என்று ஆத்திரத்தில் அவன் கையைப் பிடித்து உலுக்கினாள்.

கிரீச்சென்ற சத்தத்துடன் ரேஞ்ச் ரோவர் சட்டென்று நின்றது. நின்ற வேகத்திலேயே திரும்பி, “ஷ்ஷ்ஷ்!” என்று தன் உதடுகளின் மீது ஒற்றை விரலை வைத்து அவளை அடக்கினான்.

அவனுடைய முகத்தில் துளியும் இரக்கமில்லை. அவள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் எண்ணமுமில்லை. அவளுடைய கண்ணீரோ, வேதனையோ, அவளுடைய பெற்றோரைப் பிரிந்த தவிப்போ எதுவுமே அவனை அசைக்கவில்லை

ஆனாலும், பெற்றோரிடம் சென்றுவிட வேண்டும் என்கிற துடிப்பு அவளை விடவில்லை. “எனக்கு… என்ர… அம்மா அப்பாட்டப் போகோணும்.” என்று கண்ணீருடன் அழுதாள்.

அவனிடத்தில் இப்போதும் மாற்றமில்லை. “இன்னொருக்காச் சொல்ல மாட்டன். மூச்சு விடுற சத்தத்தைத் தவிர வேற ஏதாவது சத்தம் வந்துது…” என்று விரலை எச்சரிக்கும் விதமாக ஆட்டிக் காட்டினான் அவன்.

அவளுக்கு அந்த மூச்சுக்கூட அதன் பிறகு வரவில்லை. இருக்கையோடு ஒன்றியபடி அவனையே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மீண்டும் அவன் கையில் ரேஞ்ச் ரோவர் உறுமிக்கொண்டு பறந்தது.

பெற்றோரின் நினைவில் கண்ணீர் பெருகிற்று. எப்படி இருக்கிறார்களோ, அவர்களுக்கு என்னாயிற்றோ என்று ஒன்றும் தெரியவில்லை. இப்போது எங்கே போகிறாள், இனி என்ன நடக்கப்போகிறது என்று அதுவும் தெரியவில்லை.

error: Alert: Content selection is disabled!!