கலிங்கனின் காவியம் 14.1

அத்தியாயம் 14

அதுவரை திருமண மண்டபத்துக்குள் மட்டுமே அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்தச் சம்பவம், அடுத்த சில மணி நேரங்களிலேயே இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீயாகப் பரவத் தொடங்கியது.

திருமண மண்டபத்துக்குள் கலிங்கராயன் தன் ஆட்களுடன் அதிரடியாக நுழைந்தது, துப்பாக்கி முனையில் அனைவரையும் மிரட்டியது, மணமேடையில் இருந்த மாறனைத் தூக்கி வீசியது, வருணாவின் கழுத்தில் தாலி கட்டியது என்று அனைத்துமே துண்டு துண்டுக் காணொளிகளாக வெளிவர ஆரம்பித்தன.

எல்லாவற்றையும் விட வரதராஜனை நேருக்கு நேர் பார்த்து,
“நான் செத்திட்டன் எண்டு நினச்சியா? இனி தினம் தினம் நீ சாவாய்!” என்று கலிங்கராயன் எச்சரித்துவிட்டுச் சென்ற காட்சி வைரலானது.

இளசுகள் ‘ஹீரோடா!’ என்று கொண்டாட, சமூக ஆர்வலர்கள் கலிங்கராயனை மிக வன்மையாகக் கண்டித்தார்கள்.

ஒரு திருமணத்தை இப்படிக் வந்து குழப்புவது சாதாரண விஷயம் கிடையாது. அதுவும், நூற்றுக்கணக்கான பிரபலங்கள் முன்னிலையில், ஒரு பெண்ணுக்கு அவள் விருப்பமே இல்லாமல் தாலி கட்டி, அவளை இழுத்துச் செல்வது என்பது மிகப்பெரிய குற்றம்.

அந்தக் குற்றத்தைத் செய்த கலிங்கராயன் தண்டனைக்கு உரியவர். காவல்துறை கலிங்கராயனை உடனேயே கைது செய்ய வேண்டும். அந்தப் பெண்ணை அவன் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துப் பெற்றோரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள்.

கூடவே வரதனையும் விட்டுவைக்கவில்லை. அதுவரை ஏழைகளுக்கு உதவுபவர், பலருடைய வாழ்க்கைக்கு விளக்கேற்றியவர், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெற்ற தொழிலதிபர் என்கிற பெயருடன் வலம் வந்த வரதராஜனைப் பற்றிய கேள்விகள் இப்போது எழத் தொடங்கின.

‘யார் இந்தக் கலிங்கராயன்? வரதராஜனுக்கும் அவருக்கும் என்ன பகை?’

‘எல்லோருக்கும் நல்லவராகத் தெரியும் வரதராஜனின் உண்மை முகம் என்ன?’

ஊரே நல்லவன் என்று நம்பிக்கொண்டிருந்த வரதனைப் பார்த்து, ஒருவன் இவ்வளவு பகிரங்கமாகச் சவால் விடுகிறான் என்றால், அவர்களுக்கிடையில் அப்படி என்ன பகை?

சில மாதங்களுக்கு முன்னர் கலிங்கராயனின் வாகனம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதையும், அதைத் தொடர்ந்து அவர் காணாமல் போனதையும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்போது திடீரென அவர் உயிருடன் திரும்பியிருப்பது மட்டுமல்லாமல், வரதராஜனின் குடும்பத் திருமணத்தையே சீர்குலைத்திருக்கிறார்!

அப்படியானால், கலிங்கராயனின் வாகனம் எரிந்ததற்கும், அவர் காணாமல் போனதற்கும் பின்னால் வரதராஜனின் கரம் இருக்கிறதா?

இத்தனை காலமும் மக்கள் மத்தியில் கட்டிக்காத்து வந்த வரதராஜனின் ‘நல்லவர்’ என்ற பிம்பத்துக்குப் பின்னால் மறைந்திருப்பது என்ன?

நான் செத்திட்டன் எண்டு நினச்சியா? என்கிற கேள்விக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

கேள்விகள் பல. பதில்கள் இன்னும் மர்மம்!

வரதராஜனின் மறுபக்கம் விரைவில் வெளிவருமா? உண்மையைத் தேடி அதிர்ச்சியில் திருகோணமலை!”

இப்படி, கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக எழத் தொடங்கின. செய்தி இணையத்தளங்களும் இந்தச் சம்பவத்தை முக்கியச் செய்தியாக வெளியிட ஆரம்பித்தன.

‘திருகோணமலையில் பிரமாண்ட திருமணத்தில் பரபரப்பு! மணப்பெண்ணுக்குத் தாலி கட்டி அழைத்துச் சென்ற மர்ம நபர்!’

‘திருமண மண்டபத்தில் துப்பாக்கி முனையில் அரங்கேறிய அதிர்ச்சி! வரதனுக்கும் ராயனுக்கும் இடையில் என்ன பகை?’

‘பிரபல தொழிலதிபர் வரதனுக்குப் பகிரங்க மிரட்டல்! உயிருடன் திரும்பிய கலிங்கராயன் யார்?’ என்று விதவிதமான தலைப்புகளில் செய்திகள் வெளியாகின.

இதுவரை வரதராஜனைப் பற்றிக் கேள்விப்பட்டிராதவர்கள் கூட இப்போது அவனுடைய பெயரைத் தேடத் தொடங்கினர். அவனுடைய தொழில் நிறுவனங்கள், சமூகப் பணிகள், அரசியல் மற்றும் அதிகார வட்டாரத் தொடர்புகள் எனப் பலவற்றையும் ஆராயத் தொடங்கினர்.

சிலர் வரதனுக்கு ஆதரவாகப் பேசினர். சிலர் ராயன் செய்தது தவறு என்றாலும், அவன் அப்படியொரு நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம் என்னவென்று விசாரிக்க வேண்டும் என்றனர்.

இன்னும் சிலர், வரதனின் கடந்தகாலத்தைப் பற்றியே கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

“ஒருவர் சமூக சேவை செய்கிறார் என்பதற்காக அவருடைய வாழ்க்கையில் எந்த இரகசியங்களும் இருக்காது என்று நம்பிவிட முடியுமா? இந்தக் காலத்தில் நல்லவன் போர்வைக்குள் நரிகள் இருப்பது எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டன.

எல்லாவற்றையும் விட அந்தப் பெண் வருணாவின் நிலை என்ன, அவள் வெட்டினரின் நிலை என்ன என்று காவல்துறை உடனடியாக விசாரிக்க வேண்டும். இதில் சம்மந்தமே இல்லாமல் பாதிக்கப்பட்டது அந்தக் குடும்பம்தான்.

ஒரு பெண்ணின் வாழ்க்கை எல்லோருக்கும் அவ்வளவு சாதாரணமாகப் போய்விட்டதா? நாம் என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் என்று பலதரப்பட்ட கேள்விகள்.

இது வரதராஜனின் காதுகளுக்கு வந்தபோது அவனுக்குள் எரிமலை வெடித்தது. இப்படி ஒரு திருப்பத்தை அவன் எதிர்பார்க்கவேயில்லை.

அவன் கண்ணில் படுகிற ஒவ்வொரு காணொளியிலும் கலிங்கராயன் அவனை அவமானப்படுத்திக்கொண்டிருந்தான். ஒரேயொருமுறை நடந்த நிகழ்வு ஓராயிரம் முறை திருப்பி திருப்பிக் காட்டப்பட்டு அவனைக் கூனிக் குறுக வைத்தது.

கலிங்கராயன் தன்னை மிரட்டிவிட்டுச் சென்றதைவிட, அந்த மிரட்டல் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருப்பதே அவனை அதிகமாகக் கொதிக்க வைத்தது. “உன்னை விட மாட்டனடா! விடவே மாட்டன்! ” என்று பற்களைக் கடித்தபடி உறுமினான்.

அவன் பல ஆண்டுகளாகக் கவனமாக உருவாக்கியிருந்த நல்லவன் என்கிற பிம்பம், அவன் கண் முன்னேயே சிதையத் தொடங்கியிருந்தது. அவன் மீதான மக்களின் நம்பிக்கையின் அடித்தளத்திலேயே கலிங்கராயன் பெரும் விரிசலை உண்டாக்கியிருந்தான்.

தொழில் கூட்டாளிகள் அவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அரசியல்வாதிகள் இவனைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்களா? அதிகாரிகள் அவனைப் பார்க்கும் பார்வை மாறிவிடாதா?

அவனுக்குள் அச்சம் தலைதூக்கியது. அந்த அச்சத்தை ஏற்றுக்கொள்ள அகங்காரம் மறுத்தது. ஆத்திரத்தில் அங்கிருந்த பொருட்களை எல்லாம் விசிறி அடித்தான். யாராலும் அவன் முன்னே சென்று நிற்க முடியவில்லை. அந்தளவில் வெறி கொண்டு நின்றான்.

என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று வெறி வந்தவன் போன்று அங்குமிங்குமாக நடந்தான்.

மிச்சமிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த விவகாரத்தை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்று முயன்றான். காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், உயர் பதவிகளில் இருப்பவர்கள் என்று தனக்குச் சாதகமாகச் செயல்படக் கூடிய அனைவரையும் தொடர்புகொண்டு, என்ன செய்யலாம் என்று கலந்தாலோசித்தான்.

அவனிடம் கைநீட்டிப் பணம் வாங்கி, அவனிடம் தம் பிடியைக் கொடுத்துவிட்டு நிற்பவர்களால் அவனுக்குச் சாதகமாகச் செயல்படுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஆனாலும், அவர்களாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை.

அந்த அளவுக்கு நொடிக்கு நொடி வேகமாகச் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பரவிக்கொண்டிருந்தது.

வரதனின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் மீறி, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு காவல்துறை தள்ளப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, ஒரு பெண்ணின் சம்மதமின்றி அவரைத் திருமணம் செய்துகொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கலிங்கராயனைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்தது.

error: Alert: Content selection is disabled!!