கலிங்கனின் காவியம் 15.1

அத்தியாயம் 15

காவல்துறை அதிகாரிகள் கலிங்கராயனைக் கைது செய்வதற்காக அவனுடைய வீட்டுக்கு வந்தபோது, அவன் வீட்டில்தான் இருந்தான். எங்கும் ஓடி ஒளியவில்லை. அவர்கள் அவனைக் கைது செய்யப்போவதாகச் சொன்னபோது, “காரணம் என்ன எண்டு நான் தெரிஞ்சுகொள்ளலாமா?” என்று நிதானமாக விசாரித்தான்.

என்னதான் அவனைக் கைது செய்வது என்று முடிவுசெய்து வந்தாலும் அவனுடைய உயரமும் செல்வாக்கும் என்னவென்பதை அவர்கள் அறிந்துதான் இருந்தார்கள். அதனால், அவன் மீதான குற்றச்சாட்டினைச் சொன்னார்கள்.

“ஓ!” என்று கேட்டுக்கொண்டுவிட்டு, “இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லுறதை விட அவளே சொல்லுறதுதான் சரியா இருக்கும்.” என்றுவிட்டு மாடியைப் பார்த்து, “வருணா!” என்று குரல் கொடுத்தான்.

நடப்பது எல்லாவற்றையும் மேலிருந்து படபடக்கும் நெஞ்சோடு கேட்டுக்கொண்டுதான் இருந்தாள் வருணா. என்னவோ காலங்காலமாக அவளை அப்படி அழைத்துப் பழகியவனைப் போன்ற இயல்புடன் அவன் அழைத்தபோது, அவளுக்குத்தான் பதறியது.

ஏற்கெனவே அவன் கொண்டுவந்து தந்திருந்த சுடிதார் செட் ஒன்றினை மாற்றிக்கொண்டு, முகத்தைக் கழுவி, தன்னைத் தயார் நிலையில்தான் வைத்திருந்தாள். என்றாலும், கீழே இறங்கிச் சென்று, காவல்துறை அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பயப்படாமல், தடுமாறாமல், அவர்கள் நம்பும்படி பதில் சொலல் வேண்டும் என்று நினைக்கையிலேயே நடுங்கியது.

ஆழ்ந்த மூச்சுகளைப் பலமுறை இழுத்துவிட்டுக்கொண்டு இறங்கி வந்தாள். ராயனுக்கு எதிரே காவல்துறை அதிகாரிகள் இருவர் அமர்ந்திருந்தனர். அந்த மாளிகைக்கு வெளியே ஊடகவியலாளர்கள், பத்திரிகை நிருபர்கள் எனப் பலரும் நிற்பது கண்ணில் பட்டது. அவர்கள் உள்ளே நுழைந்துவிடாதபடி ஆதி வாசலில் தடுப்புப் போட்டு அவர்களைத் தடுத்துக்கொண்டிருந்தான்.

இதையெல்லாம் கண்டு மிகவுமே பயந்தாள் வருணா.
இப்படியான சூழ்நிலைகளை இதுவரையில் அவள் எதிர்கொண்டதே இல்லை. ஒரே நாளில் எத்தனை சம்பவங்கள் நடந்துபோயிற்று. அவள் வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போயிற்று.

ஒவ்வொரு நிகழ்வும் அவளை அச்சுறுத்திக்கொண்டிருந்தது. நிதானமாக எதையும் யோசிக்க முடியவில்லை. தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. தான் எடுக்கும் முடிவுகள் சரியானவையா என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாமல் நின்றாள்.

வருணா மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட பெண். எத்தனையோ சவாலான அறுவைச் சிகிச்சைகளைக் கூடக் கைகள் நடுங்காமல், மனம் தடுமாறாமல், பதற்றமோ பயமோ இன்றி நிதானமாகச் செய்திருக்கிறாள்.

அப்படிப்பட்டவள் இன்று தன்னுடைய தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் மொத்தமாக இழந்து, உள்ளுக்குள் உடைந்துபோயிருந்தாள்.

அவளுடைய பயத்தை வெளியே காட்டிவிடாமல் தைரியமாக நிற்பது பெரும் பாடாக இருந்தது. அவளை அறியாமலேயே கலிங்கராயனின் அருகில் சென்று நின்றாள்.

“என்ன விசாரிக்கோணுமோ விசாரிங்க.” அவளைக் காட்டி அவர்களிடம் சொன்னான் கலிங்கராயன்.

“சொல்லுங்கம்மா, உங்கட கல்யாணத்தக் குழப்பி, உங்கட விருப்பம் இல்லாம, உங்கட கழுத்தில வலுக்கட்டாயமா தாலி கட்டி, உங்களக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார் எண்டு எங்களுக்குப் புகார் வந்திருக்கு. என்ன நடந்தது எண்டு சொல்லுங்க.” என்று கேட்டார் காவல்துறை அதிகாரி.

வருணாவுக்குத் தொண்டைக்குழிக்குள் வார்த்தைகள் சிக்கிக்கொண்டன. அவளால் பேசவே முடியவில்லை. அத்தனை உண்மைகளையும் போட்டு உடைத்துவிடத்தான் விரும்பினாள். அவளால் உண்மைக்குப் புறம்பாகப் பேசவே முடியவில்லை. ஆனால், அதன் பிறகு அவள் பெற்றோருக்கு என்ன நடக்குமோ என்று யோசிக்கக்கூட முடியவில்லை.

கலக்கத்துடன் கலிங்கராயனைத் திரும்பிப் பார்த்தாள். அவனும் அவள் சொல்வதைக் கேட்பதற்கு காத்திருக்கிறவன் போன்று அவளையே பார்த்திருந்தான்.

எவ்வளவு தைரியம் இவனுக்கு என்று அவள் உள்ளம் கொதித்தது. அவனைப் போட்டு உலுக்குமளவுக்கு ஆவேசம் வந்தது.

ஆனால், அவளால் இது எதையும் செய்ய முடியாது. அவளுடைய குரல்வளை நசுக்கப்பட்டிருந்தது. அவன் சொல்லித் தந்ததை மட்டுமே சொல்லும் நிலையில் இருக்கிறாள். உள்ளுக்குள் வெடிக்கும் உணர்வுகளை அடக்கத் தன் விரல்களை இறுகப் பற்றிக்கொண்டாள். நகங்கள் உள்ளங்கையில் அழுந்தின. அந்த வலிகூட அவளுக்குள் கொதித்துக்கொண்டிருந்த வேதனையுடன் ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை.

“இஞ்ச பாருங்கம்மா, நீங்க ஒரு டொக்டர். பல உயிர்களக் காப்பாத்துற ஒரு ஆள். நீங்களே உண்மையைச் சொல்ல யோசிக்கலாமா? என்ன நடந்திருந்தாலும் பயப்பிடாம சொல்லுங்க. நாங்க இருக்கிறம்.” என்று இதமாகவே கேட்டார் காவல்துறை அதிகாரி.

“இல்லை… என்ர விருப்பம் இல்லாம அவர் எதையும் செய்யேல்ல.”

அதன் பிறகு அவள் தயங்கவில்லை. மேடையேறியாயிற்று; நாடகத்தை நடித்து முடித்துத்தானே ஆக வேண்டும்!

கலிங்கராயன் சொல்லித் தந்தது போலவே அதிகாரி கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்னாள். தாங்கள் இருவரும் காதலித்ததாகவும், தன்னுடைய தந்தைக்குக் கூட அந்தக் காதலில் விருப்பமில்லை என்றும், வரதன் குடும்பத்தினர் வரதனின் அண்ணன் மகனான மாறனுக்குத் தன்னைப் பெண் கேட்டுவந்தபோது, தன் தந்தை சம்மதித்ததாகவும் கூறினாள்.

தனக்கு விருப்பம் இல்லாமலேயே திருமண மேடை ஏறியதாகவும், கலிங்கராயன் வந்து தாலி கட்டித் தன்னைக் கூட்டிக்கொண்டு வந்ததில் மகிழ்ச்சியே என்றும் சொன்னாள்.
இன்னும் சொல்லப்போனால் அவன் சொல்லித் தந்ததை விடவும் நன்றாகவே சமாளித்தாள் வருணா.

அவளே அவ்வளவு தெளிவாகச் சொன்னபிறகு அதைக் கேட்டுக்கொள்வதைத் தவிர்த்து அவருக்கு வேறு வழியிருக்கவில்லை.

மெல்லிய புன்னகையுடன் அவனுக்கும் வருணாவுக்கும் திருமண வாழ்த்தினைத் தெரிவித்துவிட்டுத் தன்னுடைய ஆட்களோடு புறப்பட்டார்.

அவர்கள் வெளியே வந்ததற்காகவே காத்திருந்தவர்கள் போன்று பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் மைக்குகளை நீட்டியபடி அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்.
“சேர், என்ன நடந்தது? வலுக்கட்டாயமா ஒரு பெண் கழுத்தில தாலி கட்டினதுக்கு என்ன சொல்லுறார்? இப்ப அவா எங்க? ஏன் இன்னும் நீங்க அவரைக் கைது செய்யேல்ல?” இப்படிப் பல கேள்விகள் ஒரே நேரத்தில் எழுந்தன.

அதிகாரி அவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, சுருக்கமாகப் பதிலளித்தார்.

“நீங்க நினைக்கிற மாதிரி ஒண்டும் இல்லை. அவே ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி இருக்கினம். வருணான்ர அப்பாக்கு அது பிடிக்காததால வேற கலியாணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அது பிடிக்காத மிஸ்டர் கலிங்கராயன் நேரடியா மண்டபத்துக்கே போய், தாலியைக் கட்டிக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். இது வருணாவே தந்த வாக்குமூலம்.” என்று சொல்லிவிட்டு
அதற்கு மேல் எந்தக் கேள்விக்கும் இடமளிக்காமல், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.

அதிகாரமும் பணமும் செல்வாக்கும் நிறைந்தவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவது என்பது அவ்வளவு இலகு இல்லையே.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த கணத்தில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைப் போன்று பரபரப்பாக இருந்தாலும், இன்னும் ஓரிரு நாட்களில் இரு தரப்பினரில் யாராவது ஒருவர் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, முடிந்தவரை இந்தப் பிரச்சினையை மூடி மறைக்கவே முயற்சிப்பார்கள்.

error: Alert: Content selection is disabled!!