அப்படியிருக்க, இப்போது தேவையில்லாமல் எதையாவது சொல்லி, தானும் இந்தப் பிரச்சினைக்குள் சிக்கிக்கொள்ள அவர் விரும்பவில்லை.
அதனால், தன்னுடைய கடமையை முடித்துக்கொண்ட திருப்தியுடன், மேலதிகக் கேள்விகளுக்கு இடமளிக்காமல் அங்கிருந்து வெளியேறினார் அவர்.
காவல்துறையினர் சென்றதும் கலிங்கராயனின் முன்னால் வந்து நின்றாள் வருணா. முற்றத்தில் நின்று அவனிடம் என்னவோ சொல்லிக்கொண்டிருந்த ஆதி, அவர்களை விட்டு விலகி வந்தான்.
“எனக்கு… எனக்கு என்ர அம்மா அப்பாட்டப் போகோணும்.” சம்மதிக்க மாட்டானோ என்கிற பயத்தில் அவளுக்குக் குரல் எழும்பவே இல்லை. அதே நேரத்தில் அவன் என்ன சொன்னாலும் கேட்காமல் எப்படியாவது அவர்களிடம் போய்விட வேண்டும் என்கிற பிடிவாதமும் அவளுக்குள் வந்திருந்தது.
அவளையே சில கணங்கள் பார்த்தவன், “இன்னும் கொஞ்ச நேரத்தில வருவினம்” என்றான் அமைதியாக.
அவ்வளவுதான்! சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் வருணா. அவளுடைய விழிகளில் பெரும் மலர்ச்சியும் வியப்பும் ஒருங்கே தோன்றின. “உண்மையாவா?” என்றாள் நம்ப முடியாத ஆனந்த அதிர்ச்சியில் திளைத்தபடி.
ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துத் தீயை மூட்டிப் புகையை இழுத்தபடி ஆம் என்று தலையை அசைத்தான் அவன்.
‘ஐயோ! இந்த நேரத்தில் இவன் பத்தக் கூடாதே.’ கத்திக் குத்தினால் அவன் சுவாசப்பை பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தவள் வைத்தியராகப் பதறினாள்.
அடுத்த நொடியே அவன் மீதிருந்த வெறுப்பும் கோபமும் அவளுக்குள் தலைதூக்கின. இவனை ஏன் அவள் தடுக்க வேண்டும்? நன்றாகப் புகைக்கட்டும்! இப்படியே புகைத்து புகைத்து ஏதாவது நடக்கட்டும் என்று மனத்துக்குள் கருவிக்கொண்டவள், அவனிடம் ஒன்றும் சொல்லாமல் திரும்பி உள்ளே சென்றாள்.
அதன் பிறகான நிமிடங்கள் அத்தனையும் வாசலைப் பார்ப்பதிலேயே அவளுக்குக் கழிந்தது. மேலே அவள் அறைக்குக் கூடப் போகவில்லை.
என்ன செய்கிறார்கள், இன்னும் காணவில்லையே என்று பெரும் தவிப்பு அவளுக்குள்.
தினமும் பார்த்துப் பேசிய பெற்றவர்கள்தான். அவர்களிடமிருந்து பிரிந்து வாழ்ந்தவளும் அல்ல. ஆனாலும், இனி அவர்களைப் பார்க்கவே முடியாமல் போய்விடுமோ என்கிற பயமும், அவர்களுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்கிற கலக்கமும் அன்று முழுக்க அவளை போட்டு ஆட்டிப்படைத்ததில் மிகவுமே ஏங்கிப்போனாள்.
சற்று நேரத்தில் மதியழகனின் கார் வந்து நின்றது.
பின் இருக்கைகளிருந்து இருவரும் இறங்கினார்கள்.
அவர்களைக் கண்ட அடுத்த நொடியே, “அம்மா… அப்பா!” என்று கூவிக்கொண்டு ஓடினாள்.
அந்தக் கணத்தில் அவளுக்கு இருபத்தொன்பது வயது என்பது நினைவில் இல்லை. அவள் ஒரு மருத்துவர் என்பதும் நினைவில் இல்லை. எத்தனையோ சிக்கலான அறுவைச் சிகிச்சைகளை எதிர்கொள்ளும் மனவலிமை கொண்டவள் என்பது கூட மறந்துபோயிருந்தது.
தொலைத்துவிட்ட பெற்றவர்களை மீண்டும் கண்டுவிட்ட ஒரு குழந்தையின் மனநிலையில் அவர்களைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
அவளுடைய பெற்றவர்களும் அதே நிலையில்தான் இருந்தார்கள். அவளுக்கு என்னாயிற்றோ ஏதாயிற்றோ என்று பதறிக்கொண்டிருந்தவர்களாயிற்றே. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கண்டவர்களைப்போல அவளை அள்ளியணைத்து உச்சி முகர்ந்தார். அவளுடைய முகத்தைத் தடவியும் தலையை வருடியும் ஆறுதல்படுத்த முயன்றார்கள். ஆனால், அதற்கு மாறாக அவர்களுடைய கண்களிலும் கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது.
“அம்மா, அப்பா உங்களுக்கு ஒண்டும் இல்லையே? உங்கள ஒண்டும் செய்யேல்லைத்தானே?” என்று அவர்களிடமிருந்து விலகாமலேயே கேட்டாள் வருணா.
“எங்களுக்கு ஒண்டும் இல்லையம்மா. நீ எப்பிடியம்மா இருக்கிறாய்? உனக்கு.. உன்னை…” பதற்றத்தில் பயத்திலும் சிவசுந்தரியால் எதையும் உடைத்துக் கேட்கவே முடியவில்லை.
“இல்லையம்மா. எனக்கு ஒண்டும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கிறன்.” என்று கண்ணீரும் சிரிப்புமாக அவரைக் கட்டிக்கொண்டாள் அவள்.
அதுவரையில் அங்கே நடப்பதை எல்லாம் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்த கலிங்கராயன், “உள்ளுக்கு வாங்க!” என்று அழைத்தான்.
அப்போதுதான் சுற்றுப்புறத்தை உணர்ந்தவர்களாக மூவரும் திரும்பிப் பார்த்தார்கள். தாங்கள் எங்கே இருக்கிறோம், யாருடைய வீட்டில் நிற்கிறோம் என்று அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
அவர்களுக்கு அவன் மாளிகைக்குள் நுழையவே விருப்பமில்லை. அப்படியே மூவருமாகப் போய்விடத்தான் விரும்பினார்கள். ஆனால், அவர்கள் அகப்பட்டுக்கொண்டிருப்பது புலியின் குகையிலாயிற்றே. தப்பிப்பது அத்தனை சுலபம் இல்லையே.
“வாங்க!” மீண்டும் அழைத்தான் கலிங்கராயன். அவன் பார்வை வருணாவைத் தொட்டு வந்தது.
அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே வா என்கிறான். என்ன உரிமையில் அவளிடம் இதைச் சொல்கிறானாம் என்று அவள் மனம் குமுறிற்று.
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டவர்கள் வேறு வழியின்றி மெல்ல உள்ளே வந்தார்கள். அவன் அங்கிருந்த சோஃபாவைக் காட்டினான். வேறு வழியற்று மதியழகன் அமர, அவர் அருகில் சிவசுந்தரி.
வருணாவும் அவர்களை ஒட்டிக்கொண்டு
அமர்ந்துகொண்டாள். அவர்களிடமிருந்து மீண்டும் பிரிந்துவிட வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தில், அவளுடைய கைகள் தாயின் கையை இறுகப் பற்றியிருந்தன.
தான் அங்கிருக்கும் வரையில் அவர்கள் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்று அறிந்து உள்ளே சென்றான் கலிங்கன். அதற்காகவே காத்திருந்தாற்போன்று, “ஏனப்பா இப்பிடி எல்லாம் நடந்தது? இனி என்னப்பா செய்றது?” என்று பெரும் கலக்கத்தோடு கேட்டாள் வருணா.
மதியழகனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மகளுக்கு நல்லபடியாகத் திருமணம் செய்து, கண் நிறையக் காண வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் இப்போது, அவள் கழுத்தில் கிடைக்கும் தாலியே அவரை உறுத்தியது.
தகுதியற்ற ஒருவன் தன் மகளின் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டானே என்று தனக்குள்ளேயே அழுதார். அதைக் காட்டிக்கொள்ளாமல், “என்னெண்டு எனக்கும் தெரியாதம்மா. ஒருத்தரும் ஒண்டுமே சொல்லினம் இல்ல. ஆனா, வரதனுக்கும் இவருக்கும் ஏதோ பகை இருக்குப் போல. அந்தக் கோபத்திலதான் இப்பிடிச் செய்திருக்கிறார் எண்டு கதைக்கினம்.” என்றார்.
“பொய்யா இருக்குமப்பா! வரதன் அங்கிளைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா? அவர் எவ்வளவு நல்ல மனுசன். ஆனா இவன்…” என்றவளை, “ஷ் பிள்ளை!” என்று அவள் கரத்தை அழுத்திக்கொடுத்து அவளை அடக்கினார் சிவசுந்தரி.
அவன் வீட்டிலேயே இருந்துகொண்டு, அவனைப் பற்றி இப்படி மரியாதைக் குறைவாகப் பேச, அதைக் கேட்டு அவன் ஏதாவது துன்பத்தைத் தங்களுக்குத் தந்துவிடுவானோ என்று பயந்தார் அவர்.
வருணாவுக்கும் அது புரிந்தது. அதில் குறளைத் தனித்து, “இவர் ஒரு ரவுடியப்பா!” என்று ஆரம்பித்து, கத்திக் குத்துக்களை வாங்கிக்கொண்டு அவன் வந்தது முதற்கொண்டு வைத்தியசாலையில் நடந்தவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னாள் வருணா.
“இப்பிடியானவன் வரதன் அங்கிளை பிழை சொல்லுவானா? இல்ல, இவன் செய்ய நினைச்ச ஏதாவது கேடான வேலைய அவர் தடுத்திருப்பாரா இருக்கும். அதுதான் அவன் என்ற வாழ்க்கையை நாசமாக்கிட்டான்.” எனும்போதே அவளுக்கு குரல் கரகரத்தது.
மதியழகனுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், ஏதோ இருக்கிறது என்று மட்டும் தோன்றியது. அந்தத் திருமண மண்டபத்தில் கலிங்கராயன் அவருடைய மகளை அழைத்துக்கொண்டு சென்ற பிறகு வரதன் காட்டிய முகம், அவருடைய தமையன் விஜயராஜன் கேட்ட கேள்விகள், அதற்கு வரதன் அடக்கி வாசித்த விதம் எல்லாமே ஏதோ தவறு இருப்பதாகச் சொல்லின.
அது என்னவென்று தெளிவாகத் தெரியாததால் மகளிடம் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை அவர்.
“இனி என்னப்பா செய்றது?” என்று கேட்டாள் வருணா.
“அவர் வரட்டும். பொறு, நாங்க கதைப்போம்” என்று அவளுடைய கையைத் தட்டிக்கொடுத்து ஆறுதல்படுத்தினார் மதியழகன்.
அவனும் அதற்குத் தயாரானவன் போன்று அவர்கள் முன்னே வந்து அமர்ந்தான்.

