கலிங்கனின் காவியம் 16.1

அத்தியாயம் 16

அவனைப் பார்த்ததும் அவர்கள் மூவரையும் பதற்றம் தொற்றிக்கொண்டது. அதுவும் என்னவோ அவர்கள்தான் பெரும் குற்றம் புரிந்தவர்கள் போன்று தோரணையாக அவன் அமர்ந்திருந்த விதம் அவர்களைப் பாதித்தது.

அதிலும் மதியழகனுக்கு மனம் அடங்கவே இல்லை.
அவர் ஒரு பள்ளிக்கூட அதிபர். நேர்மை, நீதி, நியாயத்தோடு வாழவேண்டும் என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பவர். இன்றைக்கு அவரே ஒரு அநியாயத்தின் முன்னே அடங்கி நிற்கிறார்.

என்ன செய்ய? முள்ளின் மீது விழுந்த சேலையைப் போன்று, இங்கே மாட்டிக்கொண்டிருப்பது மகள் வாழ்க்கையாயிற்றே. வீராவேசத்தைக் காட்டுவதைக் காட்டிலும் விவேகமாய் நடந்து அவளை அவனிடமிருந்து விடுவித்துக்கொள்வதே புத்திசாலித்தனம் என்று எண்ணினார்.

ஒரு நெடிய பெருமூச்சை வெளியேற்றிவிட்டு அவனிடம் பேசுவதற்குத் தயாரானார்.

“தம்பி, எங்களுக்கு இருக்கிறது ஒரே ஒரு பொம்பிளப் பிள்ளை. அவாவை ஆசையா வளர்த்து, வடிவா படிப்பிச்சு, நல்ல இடத்தில கலியாணம் செய்து குடுத்து, அவா சந்தோசமா வாழுறதப் பாக்கோணும் எண்டு ஆசைப்பட்டனாங்க. கடைசில…” என்றவருக்குப் பேச்சே வரவில்லை.

ஆனாலும் சமாளித்து, “உங்கள எங்களுக்கு ஆர் எண்டே தெரியாது. முன்னபின்ன பாத்தது கூட இல்ல. உங்களுக்கும் வரதராஜனுக்கும் இடையில என்ன பிரச்சினை எண்டும் தெரியாது. ஆனா கடைசில நியாயமே இல்லாம எங்கட மகளின்ர வாழ்க்கைதான் பாதிக்கப்பட்டு நிக்குது. ஏன் இப்பிடி நடந்தது, இனி என்ன செய்றது எண்டு ஒண்டுமே தெரியுது இல்ல தம்பி. இன்னுமே கண்ணக் கட்டிக் காட்டில விட்ட மாதிரித்தான் இருக்கு.” என்றவரின் குரல் மிகவுமே கனத்து ஒலித்தது.

அவன் ஒரு சிகரெட்டினை எடுத்துப் பற்ற வைத்தான். பார்த்த வருணாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவள் தந்தையின் முன் இப்படி நடக்க இவனுக்கு எவ்வளவு தைரியம்! பார்வையாலேயே அவனை எரித்தாள். அவளையும் கையில் இருந்த சிகரெட்டையும் மாறி மாறிப் பார்த்தவன், அதை முன் டீப்போவில் இருந்த ஆஸ்ட்ரேயில் அழுத்தி அணைத்துவிட்டு, மதியழகனில் கவனத்தைக் குவித்தான்.

யாவருமே அவன் செய்கையைப் பார்த்து முகம் சுளித்துவிடப் பார்த்தார். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “நாங்க வலு சாதாரண மனுசர். எங்களுக்கு இதையெல்லாம் ஹாண்டில் பண்ணத் தெரியாது. உங்களுக்கும் வரதனுக்குமான பிரச்சினையை நீங்க பாருங்கோ. நாங்க எங்கட மகளக் கூட்டிக்கொண்டு போறம்.” என்று, தான் சொல்ல நினைத்த அனைத்தையும் நிதானமாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டு, பதிலுக்காக அவனைப் பார்த்தார் மதியழகன்.

அந்த அறையில் மீண்டும் அமைதி சூழ்ந்தது. சிவசுந்தரி பதற்றத்தில் தானும் மகளின் கையைப் பற்றிக்கொண்டார். அந்த நொடியில் அவர்களின் மிச்சம் மீதி நிம்மதி அவன் சொல்லப்போகும் பதிலில் இருந்தது.

“கவலப்படாதீங்க. உங்கட மகள் இஞ்ச நல்லாருப்பா.” அவ்வளவு நேரமாக அவர் பகிர்ந்துகொண்ட அவரின் பயம், பதற்றம், கலக்கம் அத்தனைக்கும் ஒற்றை வரியில் பதில் சொன்னான் அவன்.

அந்தப் பதில் இருந்த பதற்றத்தைக் குறைப்பதற்குப் பதிலாக இன்னும் ஏற்றிவிட்டது.

அதுவும் வருணாவுக்கு இதயத்தின் துடிப்பே நின்றுபோயிற்று. அவள் இங்கே நன்றாக இருப்பாள் என்றால் என்ன பொருள்? இனி அவள் வாழ்க்கை இங்கேதான் என்பதுதானே? தாயையும் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தாள்.

மதியழகனும் மறுப்பாகத் தலையசைத்தார். “இல்லை தம்பி. இந்த வாழ்க்கை அவாக்கு வேண்டாம். எங்களால இதுக்கு ஓம் எண்டு சொல்லவே ஏலாது. உங்களுக்கும் எங்களுக்கும் சரியே வராது. நாங்க அவாவ கூட்டிக்கொண்டு போறம்.” என்று உறுதியாகச் சொன்னார்.

“இப்ப அவா என்ர மனுசி.” என்றான் அவன் இன்னும் நிதானமாக.

“இப்பிடிச் சொல்ல கொஞ்சம் கூட நாக்குக் கூடவே இல்லையா உங்களுக்கு?” என்று சீறினாள் வருணா. அவள் பொறுமை பரந்திருந்தது. தாய் தந்தையரும் இருப்பது வேறு தைரியத்தைக் கொடுக்க, “ஆர் ஆருக்கு மனுசி? உங்கள மாதிரி ஒரு ரவுடியோட எப்பிடி என்னால வாழேலும்? கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாம கதைக்கிறீங்க. ஒவ்வொரு உயிரையும் காப்பாத்தேக்க மனதில அவ்வளவு நிறைவா இருக்கும். ஆனா, போயும் போயும் ஏன்டா இவனாக காப்பாத்தினான் எண்டு காலம் முழுக்க நினைக்க வச்சிடாதீங்க!” என்றவளுக்கு மனம் அடங்கவேயில்லை.

“உயிரைக் குடுத்தாவது ஒவ்வொரு உயிரையும் காப்பாத்தோணும் எண்டு நினைக்கிற எனக்கு, துடிக்க துடிக்க உயிர எடுக்கிற உங்களோட ஒரு வாழ்க்கையா? இது நீங்க மட்டும் எடுக்கிற முடிவு இல்ல. நானும் எடுக்கோணும். எனக்கு இதில விருப்பம் இல்ல. என்னால உங்களோட வாழ ஏலாது.”

அவளால் அவன் சொன்னதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கழுத்தைச் சுற்றிய பாம்பாகத்தான் கழுத்தில் கிடக்கும் தாலியையே பார்க்கிறாள். இதில் அவனோடு காலத்துக்கும் வாழ்வதென்றால்?

“நாங்களும் இதுக்குச் சம்மதிக்க மாட்டோம் தம்பி. ஆருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத எங்களுக்கு நடந்ததே பெரும் அநியாயம் தம்பி. அது காணாது எண்டு இன்னுமின்னும் எங்களை வதைக்க நினைக்காதீங்க. தயவுசெய்து அவாவ விட்டுவிடுங்க. நாங்கள் எங்கட பிள்ளையைக் கூட்டிக்கொண்டு போறோம்.”

மதியழகன் மனத்திலும் வருணாவுக்கு ஒப்பான கொதிப்புத்தான். ஆனால், இது கோபத்தைக் காட்டும் நேரமில்லை என்று திரும்ப திரும்ப எண்ணித் தன்னை அடக்கினார். எப்படியாவது அவளை இங்கிருந்து கூட்டிக்கொண்டு போய்விட வேண்டும் என்பதில் இன்னுமே நிதானத்தைக் கடைப்பிடித்தார்.

“இல்லையெண்டா, கட்டாயம் நான் போலீஸுக்குப் போவன்!” என்று எச்சரித்தார். அதைச் சொல்லும்போதே அதற்கெல்லாம் அவன் அசரமாட்டான் என்று எண்ணி அவர் உள்ளம் சோர்ந்து.

அதற்கேற்றாற்போல் அவனும், “தாராளமாப் போங்க!” என்றான் தைரியமாக.

வருணா இன்னுமே வெகுண்டாள். சற்று முன் அவள் வாயாலேயே இதைக் காதல் திருமணம் என்று காவல்துறையிடம் சொல்ல வைத்தவன் எதற்குப் பயப்படப்போகிறான்? அத்தனையையும் ஆட்டுவிக்கிறவன் அவனாக இருக்கையில் அவனுடைய ஆணவத்திற்கும் அகங்காரத்திக்கும் என்ன குறை வந்துவிடப்போகிறது?

“தம்பி ப்ளீஸ்! உங்கட வாழ்க்கை முறை, இந்த அடிதடி, வெட்டுக்குத்து எல்லாம் எங்களுக்குப் பழக்கமில்லாதது. எங்களால உங்களைப்போல ர… ஒரு ஆளுக்கு எல்லாம் மகளைத் தரேலாது. எங்கள விட்டுடுங்க. உங்களக் கெஞ்சிக் கேக்கிறம்.” என்று கைகளைக் கூப்பி அழுதார் சிவசுந்தரி.

வருணாவினால் அதற்குமேல் பொறுக்க முடியவில்லை. “நீங்க என்னத்துக்கம்மா இவனிட்ட எல்லாம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறீங்க? இவன் ஆர் என்னைத் தடுக்க? வாங்க நாங்க போவம்!” என்று அவர்களை எழுப்பிக்கொண்டு அங்கிருந்து போக முயன்றாள்.

“போய் என்ன செய்யப்போறாய்? அந்த மாறனக் கட்டப்போறியோ?” என்று கேட்டான் அவன்.

அவ்வளவுதான். மொத்தமாக வெகுண்டுவிட்டாள் வருணா. “ச்சீ! வெக்கமாயில்ல உனக்கு இப்பிடிக் கதைக்க? என்ன மனுசன் நீ? என்னை என்ன உன்னை மாதிரிக் கேவலமானவள் எண்டு நினைச்சியா? இன்னொருத்தனுக்கு மனுசியாக இருந்தவளின்ர கழுத்தில தாலி கட்டி இழுத்துக்கொண்டு வாறதுக்கு. நான் போய் என்ன செய்றன் எண்டுறது என்ர பிரச்சினை. அதில நீ மூக்கை நுழைக்காத!” என்று சீறினாள்.

error: Alert: Content selection is disabled!!