அத்தியாயம் 17
தனக்கு நேர்ந்த அவமானத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் தவித்தான் மாறன். அதுவும், அத்தனை காட்சிகளும் இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி, அவனுடைய மானம் சந்தி சிரிப்பதைக் கண்டு, இனியும் உயிர் வாழத்தான் வேண்டுமா என்று யோசிக்கிற அளவுக்கு வந்திருந்தான்.
பெற்றவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. அவமானம் அவனைப் பிடுங்கித் தின்றது. அறைக்குள் போய்த் தன்னை அடைத்துக்கொண்டவன், அதன் பிறகு வெளியே வரவே இல்லை.
இனி வருணா தனக்குக் கிடைக்கவே மாட்டாள் என்கிற உண்மையை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அந்த எண்ணம் மனத்தில் எழும் ஒவ்வொரு முறையும் அவனுக்குள் ஆத்திரமும் ஆவேசமும் பொங்கின.
விஜயராஜனுக்கு அவனை எப்படிச் சமாளிப்பது என்றே தெரியவில்லை. அவருக்கும் வலிதான், வேதனைதான். அவமானம் அவரையும் விட்டுவைக்கவில்லை.
அவரின் ஒற்றை மகன் அவன். பார்த்து பார்த்து வளர்த்து, படிப்பித்து, ஒரு வைத்தியனாக அழகு பார்த்தார். அடுத்த கட்டமாய் அவனுக்குத் திருமணம் செய்து வைத்து, அவன் நன்றாக வாழ்வதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில், இப்படி எல்லாம் நடந்ததை அவராலும்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதுவரை சந்தித்திராத பெரும் அவமானம் இது. அதை நினைக்கிறபோதெல்லாம் வரதன் மீது அளவுகடந்த ஆத்திரம், கோபம், வெறுப்பு எல்லாம் உண்டாயின. அவன் தனக்குச் சகோதரனாக வந்து பிறந்ததையே வெறுத்தார்.
அவரின் பெற்றோருக்கு ஆரம்ப காலத்தில் அவர் ஒற்றை மகன்தான். நிறைய வருடங்கள் சென்று பிறந்தவன் அவன் என்பதால், அவர் உட்பட எல்லோருக்குமே அவன் மிகுந்த செல்லம்.
அந்தச் செல்லமும், அளவு கணக்கற்ற பணமும், தந்தையின் தவறான அதிகாரமும் அவனுக்குள் நுழைந்து, அவனையும் வழி தவறி நடக்கச் செய்திருந்தது. எத்தனையோ முறை சொல்லிப்பார்த்தார். அவன் அவர் கையை மீறியவனாக இருந்தான். பெற்றவர்களும் போன பிறகு விட்டுவிட்டார்.
இன்றைக்கு அதுவே அவர் மகன் வாழ்க்கையில் பெரும் அவமானத்தை நிகழ்த்திவிட்டது. ஆனால், நடந்தவற்றை நினைத்துக்கொண்டே இருந்து என்ன செய்ய முடியும்?
நடந்த அவமானத்திலிருந்து முதலில் வெளியே வர வேண்டும். அதன் பிறகு, அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும் என்பதுதான் விஜயராஜனின் எண்ணமாக இருந்தது.
ஆனால், அவருடைய மகனின் நிலைதான் அவருக்குப் பெரும் பயத்தை உண்டாக்கியது.
சாந்தகுமாரி அழுகையோடும் கெஞ்சலோடும் அவனுடைய அறைக் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தார். அவன் ஏதாவது தவறான முடிவை எடுத்துவிடுவானோ என்கிற பயம் அவரைப் போட்டு ஆட்டியது.
அப்படி மனைவி கதவைத் தட்டுவதும், கதவைத் திறக்கச் சொல்லி அவனிடம் கெஞ்சுவதும், அவனோ எதற்கும் பதில் சொல்லாமல் உள்ளேயே இருப்பதும் அவருக்குள்ளும் அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே போயிற்று.
தானும் போய், “தம்பி, கதவைத் திற!” என்று அதட்டிச் சொல்லிப் பார்த்தார். “என்னை என்ர பாட்டுக்கு விடுங்க!” என்று ஏதோ ஒன்றைத் தூக்கி எறிந்தான் அவன்.
பெற்றவர்களுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. அவனுடைய இந்த ஆத்திரமும் ஆதங்கமும் அவன் மனநிலையையே பாதித்துவிடுமோ என்று பயந்தார்கள். வரதன் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். சித்தப்பாவின் சொல்லுக்கு மதிப்பும் அதிகம் என்பதில் வரதனுக்கு அழைத்து வரச் சொன்னார் விஜயராஜன்.
*****
உப்புவெளி கடற்கரையில் அமைந்திருந்த அவனுடைய ஆடம்பரமான ஹோட்டல் ஒன்றின் சொகுசு அறையில் அவசரமான ஆலோசனைக் கூட்டம் ஒன்றிணைக்க கூட்டியிருந்தான் வரத்தான். அதில் அரசியல்வாதிகளும் காவல்துறை அதிகாரியும் இருந்தார்.
அண்ணன் மகனின் திருமணம் குழம்பிப்போனதும், அதனால் அவனுக்கு உண்டான பெரும் அவமானத்தையும் தாண்டிக்கொண்டு, கலிங்கராயன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளும், அதன் பின்னால் எழுந்த சந்தேகங்களும் வரதனுக்குப் பெரும் தலைவலியாக மாறியிருந்தன.
கலிங்கராயன் இப்படிச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான் என்றால், அவனைக் கொலை செய்ய வரதன் முயற்சி செய்தாரா? கொலை முயற்சி செய்கிற அளவுக்கு வரதன் கெட்டவரா? அந்த அளவுக்கு அவர்களுக்குள் என்ன பகை? எரிந்துபோன கலிங்கராயனின் வாகனம் என்ன சொல்ல வருகிறது? அவனையும் போட்டுக் கொளுத்த முயற்சி செய்தார்களா?
இப்படிப் பல கேள்விகள் எழுந்து, அவனைச் சட்டத்தின் முன்னே சிக்க வைக்க முயன்றுகொண்டிருந்தது.
அதை எப்படிச் சமாளிப்பது, இந்தப் பிரச்சனைகளை எப்படி முடக்குவது என்கிற ஆலோசனையில்தான் வரதன் இருந்தான்.
அப்போதுதான் விஜயராஜன் அழைத்து, மாறனைப் பற்றிச் சொன்னான்.
எல்லாவற்றையும்விட வரதனுக்கு மாறன்தான் முக்கியம். அவன் அண்ணன் மகனாக இருந்தாலும், அவன் தூக்கி வளர்த்த பிள்ளை. பெற்ற மகனுக்கு நிகரான பாசம் வைத்திருந்தான்.
மாறனின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று தெரிந்ததும், இந்தப் பிரச்சினைகளையெல்லாம் சமாளிக்கும் பொறுப்பைத் தன்னுடைய ஆட்களிடம் ஒப்படைத்துவிட்டு, உடனடியாக விஜயராஜனின் வீட்டுக்கு விரைந்தான்.
“மாறா! நான்தான்டா. சித்தப்பா வந்திருக்கிறன். கதவைத் திற.” விஜயராகவன் வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக மாறனின் அறையின் முன்னே நின்று தட்டினான் வரதன்.
உள்ளே அமைதியாக இருந்தது. அந்த அமைதியில் அவனுக்கும் பயம் உண்டாயிற்று.
“மாறா, கதவத் திறவடா. உன்னோட கொஞ்சம் கதைக்கோணும்.”
அப்போதும் எந்தச் சத்தமும் இல்லை. சாந்தகுமாரி அம்மா அழவே ஆரம்பித்திருந்தார். வரதனுக்கு நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. “மாறா, ஒரேயோருக்கா, உன்ர சித்தப்பாக்காக வெளில வா. நான் சொல்லுற ஒருக்கா கேட்டுட்டுப் போ. டேய் தம்பி!” கடைசியில் வரத்தான் கெஞ்சும் குரலில் மன்றாடி அழைத்தான்.
படாரென்று கதவைத் திறந்த மாறன், “என்ன கதைக்கப்போறீங்க? அதான் மொத்தமா என்ர வாழ்க்கைய அழிச்சிட்டீங்களே! ஊரைக் கூட்டிக் கேவலப்படுத்திப்போட்டீங்களே? இன்னும் என்ன வேணும்?” என்று கத்தியவனின் குரலில் ஆத்திரமும் ஆதங்கமும் அழுகையும் ஒன்றாகக் கலந்து வெளிப்பட்டன.
“மாறா, முதல் நீ கொஞ்சம் அமைதியாகு.”
“எப்பிடி அமைதியாகுவன்?” வரதனின் பேச்சை இடைமறித்துக் கத்தினான் அவன்.
அங்கிருந்த மூவருமே திகைத்துப்போய் அவனைப் பார்த்தனர்.
“அவள் கம்பஸுக்கு வந்த முதல் நாளில இருந்து ஆசைப்பட்டவன் நான்! அவளத்தான் கட்டப்போறன் எண்டு எவ்வளவு ஆசையோட இருந்தனான் தெரியுமா? கடைசியில என்ர கண்ணுக்கு முன்னாலயே அவளின்ர கழுத்தில இன்னொருத்தன் தாலி கட்டிக் கூட்டிக்கொண்டு போயிட்டான். காரணம் நீங்க. என்ர வாழ்க்கைய சந்தோசத்தை வலிச்சது நீங்க. இனி என்ர முகத்திலயும் முழிக்காதீங்க!” என்று கத்திவிட்டுத் திரும்பவும் அறைக்குள் சென்று அடைந்துகொண்டான்.
*****
அன்று ஒரு நாள் நள்ளிரவில் வரதனைச் சந்திக்க என்று இந்த மாளிகையிலிருந்து புறப்பட்டுப் போன பிறகு, வருணாவின் கழுத்தில் தாலியைக் கட்டி, அவளை அழைத்துக்கொண்டு வந்தபோதுதான் மறுபடியும் அந்த மாளிகைக்குள் வந்தான் கலிங்கராயன். அப்போதும் அவளை விட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.
காவல்துறை அவனைக் கைது செய்ய வருகிறதாம் என்ற பிறகுதான் திரும்பவும் வந்தான். அவர்களோடு பேசி, அதன் பிறகு வந்த வருணாவின் பெற்றோரோடு பேசி என்று எல்லாம் முடிந்த பிறகு, இப்போதுதான் அந்த மாளிகையின் கூடத்தில் நிதானமாக நின்றிருந்தான்.
அவன் மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள் அலைமோதின. அன்றிரவு இந்த வீட்டிலிருந்து வரதனைச் சந்திக்கப் புறப்பட்டபோது, தன்னுடைய வாழ்க்கையில் இத்தனை பெரிய சம்பவங்கள் நிகழும் என்று அவன் கொஞ்சமும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
ஒரு நெடிய மூச்சுடன் மாடியேறினான்.

