கலிங்கனின் காவியம் 17.2

அவனுடைய அறைக்குள் வந்ததும் சில நொடிகள் அப்படியே நின்றான். அவன் மனத்தினுள் புதைந்து கிடந்த பழைய நினைவுகள் ஒவ்வொன்றாகத் தலை தூக்கத் தொடங்கின.

நிலாவினி. இனித் தன் மொத்த எதிர்காலமும் என்று நினைத்த ஒருத்தி. அன்று அவள் வரதனோடு நெருக்கமாக நின்ற காட்சி நினைவில் வந்து, அவன் நெஞ்சில் நெருப்பாக எரிந்தது.

அந்த ஒரு நிமிடம் அவன் நிலைகுலைந்து நின்றதைப் பயன்படுத்திக்கொண்டு, உயிர் நண்பன் என்று இருந்தவன் செய்தானே ஒரு காரியம்!

மேலே யோசிக்க முடியாமல் அவன் இரத்த அழுத்தம் உச்சிக்கு ஏறிற்று. அதையே யோசிக்கப் பிடிக்காமல் தலையை உலுக்கி அதிலிருந்து வெளியே வர முயன்றான். முடியவேயில்லை.

அவனுடைய கோபம் எல்லை கடந்தது. முகத் தசைகள் துடித்தன. இரத்தம் கொதிக்க, அவர்களை அந்த நிமிடமே ஏதாவது செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு ஆத்திரமும் ஆவேசமும் பெருகிற்று.

“ஆஆ…!” ஆத்திரத்தில் கர்ஜித்தவன், அங்கிருந்த மேசையில் ஓங்கி அடித்தான். அதன் மேலிருந்த பொருட்கள் சிதறி விழுந்தன.

அப்போதும் அவன் ஆத்திரம் அடங்கவில்லை. அவனுடைய தாடை இறுகியது. கன்னத்துத் தசைகள் துடித்தன. கண்கள் இரண்டும் இரத்தக் கட்டிகளாகின. கைகளில் நரம்புகள் புடைத்தன. விரல்கள் இறுக்கமாக மடங்கின. உடலெங்கும் இரத்தம் கொதிப்பதுபோல் இருந்தது. அவர்களை இருவரையும் நினைக்க நினைக்க, அவனுக்குள் கொலைவெறி அதிகரித்தது.

அதைக் கட்டுப்படுத்த முடியாமல், “ஆஆஆ…!” என்று திரும்ப திரும்ப அடி வயிற்றிலிருந்து கத்தியபடி சுவற்றில் கையால் திரும்ப திரும்ப ஓங்கிக் குத்தினான். பொருட்களை விசிறி அடித்தான்.

*****

அவ்வளவு நேரமாகத் தன்னுடைய வாழ்க்கை இனி ஒருபோதும் மீள முடியாத பெரும் காரிருளுக்குள் சிக்கிக்கொண்டுவிட்டதே என்று அழுதுகொண்டிருந்தாள் வருணா.

பெற்றோராலேயே அவளை இங்கிருந்து அழைத்துச் செல்ல முடியவில்லை என்றால், இனி யார் வந்து அவளை மீட்பார்கள்? யாராலுமே முடியாது. காவல்துறையிடம் கூட எல்லாவற்றையும் மாற்றிச் சொல்லி, தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டுவிட்டாளே!

இனி என்ன செய்வது என்று யோசிக்கக் கூட முடியாமல் அவள் அல்லாடிக்கொண்டிருந்தபோதுதான் அந்தச் சத்தம் கேட்டது.

திடீரென்று கேட்ட ஆங்காரக் கத்தலும், இடி வந்து தலையில் விழுந்ததுபோல ஒலித்த சத்தமும் அவளைத் துள்ளியெழ வைத்தன.

தன்னைச் சுற்றிப் பார்த்தவளுக்குத் தான் மூடிய அறைக்குள் இருப்பது புரிந்தது. சத்தம் அறைக்கு வெளியேதான் கேட்டுக்கொண்டிருந்தது.

கால்களை மெல்ல அசைத்து, கதவருகில் வந்து காதை வைத்துக் கேட்டாள். அப்போதும் கலிங்கராயன் கத்திக்கொண்டிருந்தான்.

ஏன் இப்படியொரு ஆக்ரோசம் இவனுக்கு? மெதுவாகக் கதவைத் திறந்து வெளியே பார்த்தாள். மாளிகையின் மற்றப் பகுதிகள் அமைதியாக இருந்தன. இந்த ஆதி கூட இல்லையா? இருந்திருந்தால் இப்படி இவனைக் காத்த விட்டுவிட்டுப் பேசாமல் இருக்க மாட்டானே.

இன்னும் காதைத் தீட்டினாள். பக்கத்து அறையிலிருந்துதான் அந்தச் சத்தம் வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அவன் அடி வயிற்றிலிருந்து கத்தியபோது அவளுக்குத் தூக்கிப்போட்டது. ஆனாலும், என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று பேசாமல் இருக்க முடியவில்லை. யாருக்கு ஆபத்து என்றாலும் ஓடிப்போய் உதவியே பழகியவன். அவளுடைய கால்கள் பயத்தையும் மீறிப் பக்கத்து அறையை நோக்கி மெல்ல நகர்ந்தன.

கதவு திறந்துதான் இருந்தது. இலேசாக எட்டிப் பார்த்தாள்.
அங்கே இருந்த பொருட்களைத் தூக்கி எறிந்து, ஆத்திரத்தில் கத்திக்கொண்டிருந்த கலிங்கராயன், அவளைக் கண்டதும் அப்படியே நின்றான்.

அவன் கண்களில் தெரிந்த சிவப்பும், முகத்தில் தென்பட்ட வெறியும் அவளைக் கிடுகிடுக்க வைத்தன. அவன் கன்னத்துத் தசைகள் ஆடுவது கூட அப்படியே தெரிந்தது. பெரும் பயத்துடன் அவனையே பார்த்தபடி நின்றாள்.

“என்ன?” அவன் உறுமினான்.

ஒன்றுமில்லை என்று வேகா வேகமாகத் தலையை ஆட்டியவளுக்கு உள்ளுக்குள் உதறியது.

அவளையே பார்த்து நின்றான் அவன். அவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவன் அறை கண் கொண்டு பார்க்க முடியாத அளவில் அலங்கோலமாகக் கிர்ந்தது.

“இஞ்ச வா!” என்றான் அவன்.

அவள் பயந்துபோனாள். மாட்டேன் என்று தலையை அசைத்தாள்.

“உன்ன ஒண்டும் செய்ய மாட்டன். வா!” என்றான் மறுபடியும்.

தரையில் சிதறிக் கிடந்த பொருட்கள் மீது காலை வைத்துவிடாமல் பார்த்து நடந்து சென்று அவன் முன்னே நின்றாள்.

“என்ன? என்னைப் பார்க்கப் பயமாயிருக்கா?” என்று கேட்டான் அவன்.

ஆமென்று தலையசைக்கப் போனவள், உடனே இல்லை என்று வேகமாக மறுத்து அசைத்தாள்.

“நான் ஒண்டும் மிருகம் இல்லை!” என்றான் அவன்.

அதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அவனையே பார்த்தபடி நின்றாள் வருணா.

இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றான் கலிங்கராயன். அவன் மார்பு இன்னுமே வேகா வேகமாக ஏறி இயங்கிக்கொண்டிருந்தது. போய்க் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தான். கைகளைக் கோர்த்துக்கொண்டு தரையைப் பார்த்தபடி நிறைய நேரமாக அமர்ந்திருந்தான். அவள் ஒருத்தி அவன் முன்னே நின்றுகொண்டிருக்கிறாள் என்கிற உணர்வே அவனுக்கு இல்லை.

அவனுக்கு என்ன பிரச்சனை என்று அவளுக்குத் தெரியாது. ஆனால், ஒரு வைத்தியராக அவன் மிகுந்த மனவழுத்ததில் இருக்கிறான் என்று உணர முடிந்தது.

கூடவே, ஒருநாள் வைத்தியசாலையில் இருந்தபோது, இதேபோன்று அவன் உணர்ச்சிவசப்பட்டுக் கோபத்தில் கொந்தளித்ததும், தான் அவனை ஆற்றுப்படுத்தியதும் நினைவில் வந்து போயின.

இத்தனை உணர்ச்சிவசப்படுவது அவன் உடல்நிலைக்கு நல்லதல்ல. காயங்கள் உள்ளே ஆறியிருக்குமா என்பதே சந்தேகம். அப்படியிருக்கப் புகைப்பதும், இப்படி அடிவயிற்றிலிருந்து கர்ஜிப்பதும் ஆபத்தாய் முடிந்துவிடும்.

இதைச் சொல்ல அவளுக்குத் தைரியம் வரவில்லை. சொன்னால் கேட்பானா என்கிற சந்தேகமும்.

சிறிது நேரத்தின் பின்னர் கண்களை மூடித் திறந்து தன்னைத் தானே நிதானப்படுத்திக்கொண்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். இப்போது அவன் முகம் ஓரளவிற்கு சாதாரணமாகியிருந்தது. அங்கே இருந்த குவளையைக் காட்டி, “அந்தத் தண்ணியை எடு!” என்றான்.

அவள் எடுத்துக் கொடுத்தாள். அவன் சினம் கொண்டு ஆடிய ஆட்டத்துக்கு மத்தியில் அந்தத் தண்ணீர்க் குவளை தப்பியிருந்தது பெரும் அதிசயம்தான்.

கடக் கடக் என்று அண்ணாந்து அந்தக் குவளையிலிருந்த தண்ணீர் முழுவதையும் பருகி முடித்தான். அவன் வாயிலிருந்து வழிந்த தண்ணீர், தாடியை நனைத்து கழுத்து வழியாக வழிந்து ஓடியது. முழுவதையும் பருகிவிட்டு வெறுமையான குவளையை அவளிடமே நீட்டினான். அதை வாங்கி மேசையில் வைத்துவிட்டு நின்றாள் வருணா.

“துரோகத்த அனுபவிச்சிருக்கிறியா?” என்று கேட்டான் கலிங்கராயன்.

ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறான் என்று யோசித்துவிட்டு இல்லை என்று தலையசைத்தாள்.

“உனக்கு நிகரா நீ நம்பிற ஒருத்தர், உனக்குத் துரோகம் செஞ்சா எப்பிடி இருக்கும்?” என்று கேட்டான் அவன்.

அவளுக்கு உண்மையாகவே இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவளுடைய உலகம் மிக மிகப் பாதுகாப்பானது. மிக அழகானது. நேர்த்தியானது. எளிமையானது. அமைதியானது. அப்படிப்பட்ட உலகத்தில் வாழ்ந்தவள், புயலும் காற்றும் மழையும் வீசும் முற்றிலும் வேறொரு உலகத்துக்குள் திடீரென்று தூக்கி வீசப்பட்டிருக்கிறாள்.

அப்படியிருக்க, அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்ல அவளால் எப்படி முடியும்? அவனையே பார்த்தபடி அமைதியாக நின்றாள்.

“நீ எல்லாம் குடுத்து வச்சவள். உனக்குக் கிடச்சிருக்கிறது அருமையான வாழ்க்கை!” என்றான் அவன்.

அவன் பேசுவது அவளுக்குப் புரியாத மொழியைப் போலிருந்தது. அவன் எதை நினைத்துக்கொண்டு இதையெல்லாம் சொல்கிறான் என்றும் புரியவில்லை.

அவளால் தன்னை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்று அவனுக்கும் புரிய, “நீ போ!” என்றான்.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. சற்றுமுன்னர் அவனுக்கு என்ன நடந்தது? இப்போது என்ன நடக்கிறது? குழப்பத்துடன் அவனைப் பார்த்துவிட்டு, தன்னுடைய அறைக்குள் வந்தாள் வருணா. உடனே கதவைச் சாத்தித் தாளிட்டுக்கொண்டாள்.

error: Alert: Content selection is disabled!!