கலிங்கனின் காவியம் 18.1

அத்தியாயம் 18

அவள் போன பிறகும் நிறைய நேரம் அப்படியேதான் இருந்தான் ராயன். அவன் நிதானத்திற்குத் திரும்ப நிறைய நேரம் பிடித்தது.

மெதுவாக ஜன்னலுக்கு அருகில் சென்று நின்றான். இரவின் இருளை வெறித்துப் பார்த்தபடி, நடந்த ஒவ்வொரு விடயத்தையும் மனத்தினுள் அலசினான்.

வருணாவின் வாழ்க்கையை மொத்தமாகப் பிரட்டிப் போட்டுவிட்டோம் என்று அவனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அவள் கழுத்தில் தாலி கட்டும் வரையில் அவளோ அவள் குடும்பத்தினரோ அவன் கருத்தில் இல்லை.

கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல், தனக்குத் துரோகம் செய்து, முதுகில் குத்திய எல்லோரையும் பழிவாங்க வேண்டும் என்கிற வெறி மட்டும்தான் இருந்தது. அந்த வெறியோடுதான் அத்தனையையும் செய்து முடித்தான்.

ஆனால், வருணா என்கிற பெண்ணும் அவளுடைய குடும்பமும் தன் முன்னால் பட்ட பாட்டையும், துடிப்பையும் பார்த்தபோதுதான், தான் அவர்களுக்கு என்ன செய்திருக்கிறோம் என்று புரிந்தது.

அதே நேரத்தில், இந்தத் திருமணத்தை ஒன்றுமில்லாததாக மாற்றிவிட அவன் தயாராக இல்லை. எதற்காக அவள் கழுத்தில் தாலியைக் கட்டியிருந்தாலும், அந்தத் தாலி அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் பொருத்தமில்லாததாக இருந்தாலும், அந்தத் தாலியைக் கேலிக்கூத்தாக்கவோ, இந்த வாழ்க்கையை ஒரு விளையாட்டாக எடுத்துக்கொள்ளவோ அவனால் முடியாது.

முக்கியமாக, தன்னுடைய எதிரிகளுக்கு முன்னால் இந்த வாழ்க்கையைத் தோற்றுப்போக விட மாட்டான்.

இன்னுமே அவன் உள்ளத்தில் எரிந்துகொண்டிருக்கும் அந்தத் துரோகத்தின் நெருப்பு அணையவில்லை. அவர்களைக் குத்திக் குதறும் ஆத்திரமும் ஆவேசமும் அப்படியேதான் இருந்தன. ஆனால் அவன் அவசரப்படவில்லை. நிதானமாகக் கருவறுக்க வேண்டும்.

இத்தனை காலமும் வரதன் மட்டும்தான் அவனுக்கு எதிரியாக இருந்தான். அதே நேரத்தில், சூர்யா அவனுடைய உற்ற நண்பனாகத் தோள்கொடுத்து நின்றான். ஆனால், இன்றைக்கு நண்பனே துரோகியாகி, எதிரியாக வந்து நிற்கிறான்.

அதைவிட முக்கியமானது, இத்தனை காலமும் சூர்யாவுக்குத் தெரியாமல் கலிங்கராயனின் நிழல் உலகத்தில் ஒரு துரும்புகூட அசைந்ததில்லை. ராயனுக்கு எந்த அளவுக்கு அந்தத் தொழிலின் ரகசியங்களும் நுணுக்கங்களும் தெரியுமோ, அத்தனையும் சூர்யாவுக்கும் தெரியும்.

எந்த வழியில் சரக்குக் கடத்தப்படும், எங்கே ரகசியமாகப் பதுக்கி வைக்கப்படும், எப்படிப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்படும் என்ற அனைத்துத் தகவல்களும் சூர்யாவின் கைவசம் இருந்தன.

அதனால்தான் அவன் வைத்தியசாலையில் இருந்த நாட்களில் அவனுடைய சரக்குகளை அழித்து, குடோன்களை எரித்து, பொருட்களைக் களவாடி, ஆட்களைக் கலைக்க அவனால் முடிந்திருந்தது.

இப்போது கலிங்கராயன் திரும்பி வந்துவிட்டான் என்று தெரிந்ததும், அவனிடம் சரக்குகளைப் பெற்றுக்கொண்டவர்களும், குறித்த நேரத்தில் சரக்குகள் வந்து இறங்காதவர்களும், தங்களுடைய சரக்குகளை இழந்தவர்களும் கலிங்கராயனுக்கு அழைப்புக்கு மேல் அழைப்பெடுத்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள்.

அத்தனையையும் சீராக்க வேண்டும். தொழிலை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். அதே நேரத்தில் அவர்களை நிமிரவே முடியாத அளவுக்கு அடிக்கவும் வேண்டும்.

இன்னொரு முறை சூர்யா நினைத்தால் கூடத் தன்னுடைய தொழிலில் கை வைக்க முடியாதபடி எல்லாவற்றையும் மாற்றியமைக்க வேண்டும்.

விடுவிடுவென்று கீழே இறங்கி, வாசலை நோக்கி நடந்தவன், ஒரு கணம் நின்று மேலே பார்த்தான். வருணாவின் அறைக் கதவு சாற்றப்பட்டிருந்தது. திரும்பிச் சமையலறைக்குச் சென்றான்.

அங்கே இருந்த ராசம்மா, இவனைக் கண்டதும் கண்ணீரும் பரவசமுமாக அவனைப் பார்த்தார்.

“என்ன ராசம்மா, இவன் மொத்தமா போயிட்டான் எண்டு நினைச்சீங்களோ?”
“ஐயோ தம்பி! இப்பிடியெல்லாம் கதைக்காதீங்கோ. உங்கள இனி பாக்கவே மாட்டோமோ எண்டு பயந்திட்டோம்” என்று அழுதார் அவர்.

அவருக்கு ஒரு சிறு முறுவலைக் கொடுத்துவிட்டு, “மேல வருணா வந்ததில இருந்து ஒண்டுமே சாப்பிடேல்ல. ஒருக்கா கவனிச்சுக் குடுங்க ராசம்மா.” என்றுவிட்டுக் கிளம்பியவன், திரும்பவும் நின்றான்.

“வேண்டாம், பசிக்கேல்ல எண்டு எல்லாம் சொல்லுவாள். விடாதீங்க” என்று சொல்லிவிட்டு நடந்தான்.

ராசம்மாவுக்கு வருணா உண்மையாகவே அவனுடைய மனைவியாகிவிட்டாளா என்று கேட்கத் தோன்றியது. தொலைக்காட்சியிலும் கைப்பேசியிலும் பார்த்த வீடியோக்கள் உண்மைதானா என்று அறிய நினைத்தார். ஆனாலும், கேட்கத் தயங்கினார்.

அவன் சொன்னதே போதும் என்று நினைத்தவர் குடுகுடுவென்று மாடிப்படிகளில் ஏறி, வருணாவின் அறைக் கதவைத் தட்டினார்.

உள்ளே இருந்த வருணாவுக்குத் திக்கென்றிருந்தது. அவன்தான் வந்து கதவைத் தட்டுகிறானோ என்று பயந்தாள். சத்தமே போடாமல் பேசாமல் இருந்தாள்.

“அம்மா வருணா, கதவத் திறங்கோ. நான் ராசம்மா” என்று குரல் கொடுத்தார் ராசம்மா.

முதல் முறையாக அந்த வீட்டில் ஒரு பெண்ணின் குரலைக் கேட்கிறாள். மெதுவாக வந்து கதவைத் திறந்தாள். அவளுக்கு அவர் யாரென்று புரியவில்லை.

அவருக்கு அவள் கழுத்திலிருந்த தாலிக்கொடிதான் முதலில் கண்ணில் பட்டது. அப்படியானால் அவர் பார்த்தது அறிந்தது எல்லாம் உண்மைதான். அதைவிட அவள் பெரிய வைத்தியராம். அப்படியானார் அவரின் தம்பிக்கு வைத்தியராக இருக்கும் பெண் மனைவி. அதை நினைக்க நினைக்க அவர் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

அது குரலிலும் தெறிக்க, “நான் இந்த வீட்டில சமைக்கிற வேலை பாக்கிறேன் அம்மா. சாப்பிட வாங்கோ.” என்று கனிவும் அக்கறையுமாக அழைத்தார்.

அவர் அவ்வளவு கனிவைக் காட்டினாலும், மங்களகரமான முகத்துடன் அன்பாகப் பேசினாலும் வருணாவுக்கு அவரைப் பிடிக்கவில்லை. அப்படி அவரைப் பிடிக்காமல் போவதற்கு அவர் இந்த வீட்டில் இருக்கிறார் என்கிற ஒரு காரணமே போதுமாக இருந்தது.

“இல்ல, எனக்கு வேண்டாம்.” என்றாள் அவள் சுருக்கமாக.

கலிங்கராயன் சொன்னது போலவே அவள் மறுக்கவும் ராசம்மாவின் முகத்தில் மெல்லிய புன்னகை. “இப்ப கொஞ்சத்துக்கு முதல்தான் சமைச்சு முடிச்சனான். சுடச்சுட இருக்கு. வாங்கோ, சாப்பிடலாம்.” என்று மீண்டும் அழைத்தார்.

“இல்லை, வேண்டாம். எனக்குப் பசி இல்லை.”

“அப்பிடி எப்பிடிப் பசியில்லாம இருக்கும்? நீங்க வந்ததில இருந்து ஒண்டும் சாப்பிடவே இல்லை. நீங்க வருவீங்க எண்டு எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா முதலே சமைச்சு வச்சிருப்பன். இவ்வளவு காலமும் தம்பி எங்க என்ன எண்டு ஒண்டும் தெரியாததால இரவில மட்டும் வந்து கிளீன் பண்ணிப்போட்டுப் போவன். இப்ப கொஞ்சத்துக்கு முதல்தான் தோட்டக்கார ஐயா சொல்லி ஓடி வந்து சமைச்சனான். வாங்கம்மா, வந்து சாப்பிடுங்கோ. நான் நல்ல டேஸ்டா சமைப்பன்.”

அப்படி விடாமல் வற்புறுத்துவது பிடிக்காமல், “வேண்டாம் எண்டு சொன்னா உங்களுக்கு விளங்காதா? எனக்குப் பசியே இல்லை. பசிச்சா நானே வருவேன்.” என்றாள் அவள் கோபத்துடன்.

அவர் முகம் கூம்பிப் போயிற்று. “நீங்க வேண்டாம் எண்டு சொன்னாலும், தம்பி உங்களைச் சாப்பிடச் சொல்லிக் கவனிக்கச் சொன்னவர்” என்றார் இறங்கிவிட்ட குரலில்.

அவன் வீட்டில் அவள் சாப்பிடுவதா? நஞ்சைப் போட்டுத் தந்தாலும் தருவான். அந்த நினைப்புத் தந்த கடுப்பில், “உங்கட தம்பிட்ட போய்ச் சொல்லுங்க, எனக்குப் பசியில்லையெண்டு!” என்றுவிட்டு உள்ளே போக முயன்றாள் வருணா.

“தம்பி வெளியில் போயிட்டார். போகேக்கதான் சொல்லிப்போட்டுப் போனவர்.”

அதைக் கேட்டதும் வருணா திரும்பிப் பார்த்தாள். சற்று முன் ஆக்ரோஷமாக அந்தக் கத்துக் கத்தியவன், இப்போது எங்கே போயிருப்பான் என்று அவளுக்குத் தோன்றியது.

“வாங்கம்மா, சாப்பிடுங்க. வேணுமெண்டா உங்களோட சேந்து நானும் சாப்பிடுறன்.” என்று அவள் எண்ணவோட்டத்தை அறிந்து சொன்னவர், அவளுடைய கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு படைகளால் இறங்கினார்.

வருணா கலிங்கராயனின் மனைவி என்கிற எண்ணமும், அவள் கழுத்தில் கிடந்த தாலிக்கொடியும் அவருக்குள் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத பரவசத்தையும் சந்தோசத்தையும் உண்டாக்கின. படித்த பெண் மனைவியாகியிருக்கிறாள். இனி அவன் வாழ்க்கையை நேர் சீராக்கிவிடுவாள், அவனும் எல்லோரையும் போன்று நன்றாக வாழ்வான் என்று அவருக்குள் ஆயிரம் கற்பனைகள்.

அந்த நம்பிக்கைகளின் காரணமாகவோ என்னவோ, வருணா மீது அவருக்குக் காரணமே இல்லாமல் ஒரு பாசம் உண்டாகியிருந்தது.

error: Alert: Content selection is disabled!!