அத்தியாயம் 19
கலிங்கராயன் வராமல் இருந்த இந்த நாட்களில், அவன் ஏன் இப்படித் தன் கழுத்தில் தாலியைக் கட்டினான் என்கிற கேள்வி வருணாவைக் குடைந்துகொண்டேயிருந்தது. வரதனுக்கும் அவனுக்கும் ஏதோ பிரச்சனை என்று தந்தை சொன்னதை அவள் நம்புவதற்குத் தயாராக இல்லை.
நியாயமே இல்லாமல் அவள் கழுத்தில் தாலியைக் கட்டி இழுத்து வந்துவிட்டு, அவள் வாயாலேயே அவனும் அவளும் காதலித்தார்கள் என்று சொல்ல வைத்தவன் கலிங்கராயன்.
அதேபோல, வரதராஜனுக்கும் ஏதோ ஒரு வகையில் அநியாயம் செய்துவிட்டு, இப்போது அவர் மீதே பழியைப் போடுகிறான் என்றுதான் உறுதியாக நம்பினாள்.
அந்த மனிதர் ஏதாவது நல்லதைச் செய்திருப்பார். அது இவனுக்குப் பிடிக்காமல் போயிருக்கும். அதற்காக, நாலு பேர் முன்னிலையில் அவருடைய மானத்தையும் மரியாதையையும் வாங்க வேண்டும் என்று நினைத்து, அவருடன் சேர்த்து அவளுடைய வாழ்க்கையையும் அழித்துவிட்டான் என்று நினைத்தாள் வருணா
ராசம்மா அவளை எந்தக் குறையும் இல்லாமல் கவனித்துக்கொண்டார். வருணாவுக்குத்தான் அவருடன் பேச மனமில்லை.
அவள் பெற்றோர் அன்று அவளைப் பார்க்க வரப்போகிறோம் என்கிற பரபரப்பிலும், நடந்தவற்றால் இருந்த பதற்றத்திலும் அவள் கைப்பேசியைக் கொண்டுவர மறந்திருந்தார்கள்.
அப்படியிருக்க அடுத்த நாள் அவளுக்கான உடைகள் அவள் வீட்டிலிருந்து வந்து இறங்கியபோது வருணா அழுதுவிட்டாள். என்னவோ பெற்றோரை அந்த நிமிடமே பார்க்க வேண்டும்போல் ஒரு துடிப்பு. எப்படி இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று அறிந்துகொள்ளப் பரபரத்துப்போனாள்.
அதில் அவரின் கைப்பேசியை ஒருமுறை தர முடியுமா என்று கேட்டிருந்தாள். அவர் சங்கடத்துடன் தராமல் நிற்க அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. அதன் பிறகு அவருக்கு அவள் முகம் கொடுப்பதேயில்லை. அவர் ஏதாவது கேட்டாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டு அமைதியாகிவிடுவாள்.
இரவில் தூக்கம் வராமல் புரண்டாள். கண்களை மூடினாலே நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. திருமண மண்டபத்தில் ஏற்பட்ட குழப்பம், கழுத்தில் விழுந்த தாலி, பெற்றோரைப் பிரிந்த தவிப்பு, நீதான் இனி என் மனைவி என்று அவன் சொன்னது என்று ஒவ்வொன்றாக மனத்தை வதைத்தன.
எத்தனை முறை அழுதிருப்பாள் என்று அவளுக்கே தெரியவில்லை. கண்ணீர் வற்றிவிட்டது போன்று தோன்றும். சிறிது நேரத்தில் ஏதோ ஒரு நினைவு வந்து மீண்டும் கண்களை நனைக்கும்.
அவளை இப்படி ஒரு நிலையில் பார்ப்பதற்கா அவளுடைய பெற்றோர் பார்த்துப் பார்த்து வளர்த்தார்கள்? அவர்களை நினைக்கிற ஒவ்வொரு பொழுதிலும் கண்ணைக் கரித்தது.
மாறனின் நிலை என்னவென்றும் தெரியவில்லை. அவனும் அவர்களின் திருமண நாளை மிகுந்த கனவுகளோடு எதிர்பார்த்துக் காத்திருந்தவனாயிற்றே. பாவம் அவன். இனி என்ன செய்வான்? தேறிக்கொண்டிருப்பானா? அவளைத் தேடுவானா என்று எதுவுமே தெரியவில்லை.
கலிங்கராயன் இப்படி வராமல் இருப்பதே நல்லது என்று நினைப்பாள். போனவன் அப்படியே பரதேசம் போவதுபோல் போய்விட்டால் நன்றாக இருக்கும் என்றும் நினைப்பாள். வந்தானானால் ஒரு முறை பேசிப் பார்க்கலாமா என்றும் நினைப்பாள்.
ஆனால், அவளை இங்கிருந்து விடுவிப்பான் என்கிற நம்பிக்கை அவளுக்கே இருக்காது. அடுத்த கணம் அவன் யார் என் வாழ்க்கையைத் தீர்மானிக்க என்று கொதிப்பாள். ஆனாலும் கூட நியாயமே இல்லாமல் அவனுக்கு அடங்கி நிற்கும் நிலையில் இருக்கிறோமே என்று கண்ணீர் விடுவாள்.
இப்படி அவளுடைய மனத்துக்குள் கோபமும் ஆதங்கமும் மாறி மாறி எழுந்தன.
நாளாக நாளாக அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. வைத்தியசாலை, வீடு என்று ஓடிக்கொண்டிருந்தவள் அவள். புதிது புதிதாக வரும் நோயாளிகள், அவர்களுக்கான மருத்துவம், அவர்களைக் கனிவோடும் அக்கறையோடும் கவனித்துக்கொள்வது என்று எப்போதுமே தன்னைப் பரபரப்பாக வைத்துக்கொண்டிருந்தவள்.
ஆனால் இப்போது அவளுடைய சிறகுகளை ஒடித்து, சிறையில் அடைத்துவிட்டதைப் போலிருந்தது. அவசியம் தவிர்த்து அவள் இருக்கும் அரையைத் தாண்டி அவள் வருவதேயில்லை.
மூச்சு முட்டுவதைப் போலிருக்க மனத்தைச் சற்றே அமைதிப்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு ஜன்னலருகே வந்து நின்றான். இயற்கையைப் பார்த்தாலாவது அமைதி கிடைக்காதா என்கிற நப்பாசை.
அப்போதுதான் அந்த மாளிகையின் நுழைவாயிலருகே பேச்சுக்குரல்கள் கேட்டன. எட்டிப் பார்த்தாள். மாறன் நின்றுகொண்டிருந்தான். அவளுக்கு அதிர்ச்சி.
இவன் ஏன் இங்கே வந்தான்?
ஏற்கெனவே மனத்தில் இருந்த வேதனைகளும் துன்பங்களும் போதாதென்று, நெஞ்சில் துக்கம் மேலும் பெருகும்படியாக இவன் வேறு வந்திருக்க வேண்டாமே என்று நினைத்தாள்.
ஆனால், கேட்டுக்கு வெளியேயே ஆதி அவனைத் தடுத்து நிறுத்துவதும், அவன் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு பிடிவாதமாக நிற்பதும் புரிந்தது.
அவளை பார்ப்பதற்காகத்தான் வந்திருக்கிறான் என்று ஊகிக்க முடிந்தது. ஆனால் அவளுக்கு அந்தச் சந்திப்பு நிகழ வேண்டாம் என்றிருந்தது.
அவர்கள் காதலர்கள் இல்லைதான். ஆனாலும் கணவனாகப் போகிறவன் என்கிற உறவின் கீழ் அவள் உள்ளத்தைத் தொட்டவன். அவனோட ஒரு பந்தத்தை மனத்தில் விதைத்தவன். அவள் தவறு என்று எதுவும் இல்லாதபோதிலும் இன்னொருவனின் தாலியைச் சுமந்தபடி அவனை எப்படிப் பார்ப்பாள்?
தொண்டை அடைத்து நெஞ்சில் துக்கம் பெருகிற்று.
ஆதியிடம் கேட்டுப் பார்த்துவிட்டுப் போய்விட மாட்டானா என்று சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தாள்.
அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது அவளுக்குக் கேட்கவில்லை. ஆனால், அவளை பாராமல் போக மாட்டான் என்று மாறனின் உடல்மொழியே சொல்லிற்று.
அதேநேரம், இந்தளவுக்கு மாறனை உள்ளே விடாமல் தடுத்துக்கொண்டிருந்த ஆதியின் மீதும் கோபம் வந்தது.
பொறுமை முழுவதுமாகத் தொலைந்துபோக, அறையை விட்டு வெளியே வந்து, கீழிறங்கி வந்து வீட்டுக்கு வெளியே வந்தாள்.
“என்ன பிரச்சினை?” என்றாள் ஆதியை நோக்கி அதட்டலாக குரலில்.
உடனடியாகத் திரும்பிப் பார்த்த ஆதியின் முகத்தில் வருணாவைக் கண்டதும் ஒரு தயக்கம் உண்டாயிற்று.
“அவர் இப்ப வந்தா என்ன?”
அது… அண்… அது அண்ணா…”
ஆதி அண்ணா என்று சொல்லி, அந்த நாசக்காரனை நினைவூட்டியதே அவளைக் கொதிப்படையச் செய்யப் போதுமானதாக இருந்தது.
“என்ன, அவரோட நானும் போயிடுவன் எண்டு பயமா உனக்கு?” என்று சீறினாள்.
ஆதி பதறிப்போனான். “ஐயோ அண்… அது அப்பிடியெல்லாம் இல்ல!” என்றான் அவசரமாக.
“பிறகு என்ன? அவரை விடு!” என்று உத்தரவிட்டாள்.
அவள் சொல்லை மீற அவனுக்குத் தைரியமில்லை. அதேநேரம், தேவையற்ற பிரச்சனைகள் எதுவும் வேண்டாம் என்றுதான் மாறனை உள்ளே விடாமல் தடுத்திருந்தான்.
இப்போது இன்னொரு முறை வருணாவின் கோபத்துக்கு ஆளாக விரும்பாமல், மாறனை உள்ளே வர அனுமதித்தான்.
வருணா அவனை அந்த மாளிகைக்குள் அழைத்துச் செல்லவில்லை. அவளுக்கு அதில் விருப்பமுமில்லை. தன் பெற்றோரையே அவமானப்படுத்தி அனுப்பியவனின் வீட்டுக்குள் மாறனை அழைத்துச் சென்று அவனையும் அவமானப்படுத்த அவள் விரும்பவில்லை.
அதனால், தன் மனதுக்குள் கொட்டிக்கிடந்த துயரத்தையெல்லாம் மறைத்துக்கொண்டு, “எப்பிடி இருக்கிறீங்க, மாறன்?” என்று கேட்டாள்.
வருணாவைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் வந்துவிட்ட மாறனுக்குப் பேச்சே வரவில்லை. அவள் கழுத்தில் கிடந்த தாலிக்கொடி அவனை உறுத்தியது. நடந்த அனைத்தையும் மீண்டும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி அவனைக் குமுற வைத்ததில், “எப்பிடி நல்லாருப்பன் வருணா? நான் நல்லாவே இல்லை. இனியும் உயிரோட இருக்கத்தான் வேணுமா எண்டு நினைக்கிற நிலமையில இருக்கிறன்!” என்றதும் வருணா விக்கித்துப்போனாள்.

