“கொஞ்சம் கூட என்னைப் பற்றி யோசிக்கவே இல்லையா நீ? இப்பிடியெல்லாம் கதைக்க எப்பிடி மனம் வந்தது உனக்கு?” என்று சீறினான் மாறன்.
அவள் திகைத்தாள். ஏற்கெனவே மனத்தில் நிறைந்திருந்த துக்கமும் வேதனையும் போதாதென்று, அவனுடைய நியாயமற்ற கோபமும் சேர்ந்து அவளை நிலைகுலையச் செய்தன. கண்களில் கண்ணீர் திரண்டது.
“நான் என்ன பிழை செய்தனான் எண்டு என்னில கோபப்படுறீங்க மாறன்? அவர் கத்திக்குத்து வாங்கி வந்த நேரம் வைத்தியம் பார்த்ததைத் தவிர வேறெந்தப் பிழையும் நான் செய்யேல்ல! அந்தப் பாவத்துக்குத்தான் இந்தத் தாலியச் சுமந்துகொண்டு நிக்கிறன். இப்ப நீங்களும் என்னில கோபப்பட்டா…” என்றவளுக்குத் தொண்டை அடைத்தது.
அவள் சொன்னதைக் கேட்ட மாறன் ஒரு கணம் அதிர்ந்துபோனான். அடுத்த நொடியே அவனுடைய கோபம் மேலும் அதிகரித்தது.
“இதை ஏன் நீ முதலே சொல்லேல்ல? சொல்லியிருந்தா இதெல்லாம் நடந்திருக்காதே!” என்றான்.
அவளுக்குப் புரியவில்லை.
அவர்கள் இருவரும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளைப் பற்றித் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்வதில்லை.
அப்படிப் பேசிக்கொண்டாலும் நோயாளி யார், அவருடைய பெயர் என்ன, அவர் எப்படிப்பட்டவர் என்றெல்லாம் அலசுவதில்லை. நோயின் தன்மை, அதற்கான சிகிச்சை, மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகள் என்றுதான் பேசிக்கொள்வார்கள்.
அப்படியிருக்க, மாறன் திடீரென்று இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கவும், அவளால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதே விளங்காமல் திகைத்துப்போய் நின்றாள்.
“அல்லது நீ சொன்னது உண்மையோ?” என்று கேட்டான் அவன்.
“என்ன சொன்னனான்?”
“நீயும் அவனும் காதலிச்சுக் கட்டியிருக்கிறீங்க என்ன? அப்ப நான் ஆரு? என்னைப் பார்க்க உனக்கு எப்பிடி இருக்கு? கேனயன் மாதிரியா? என்னைப் பற்றிக் கொஞ்சம் கூடவா நீ யோசிக்கேல்லை? இனி ஒரு சனம் என்னை மதிக்குமா?”
மாறனின் அடுக்கடுக்கான கேள்விகள் அவளை நிலைகுலையச் செய்தன. அப்படி இல்லை என்று மறுத்துத் தலையசைத்தாள். தன் தாய் தந்தையரின் உயிரைக் காட்டி கலிங்கராயன் மிரட்டிச் சொல்ல வைத்தான் என்று சொன்னாள்.
அவன் அதை நம்பவே மாட்டேன் என்று நின்றான். “நீயும் அவனும் சேந்து போட்ட சீப்பான பிளானால என்ர வாழ்க்கையே நாசமாப் போச்சு! நான் கேவலப்பட்டது எல்லாம் வீடியோவா இந்த உலகம் முழுக்கச் சுத்துறதைப் பார்க்க உனக்குச் சந்தோசமா இருக்குமே!” என்று ஆத்திரத்துடன் கொதித்தான்.
வருணாவுக்குத் தலையைச் சுற்றியது. முதலில் அவன் என்ன சொல்கிறான் என்பதே அவளுக்குப் புரியவில்லை. அவனுக்கு எப்படித் தன்னைப் புரியவைப்பது என்று தெரியாது தடுமாறினாள்.
“என்ன வீடியோ, மாறன்? எனக்கு ஒண்டும் தெரியாதே!” என்றாள் தவிப்புடன்.
“நடிக்காத வருணா! கலியாண மண்டபத்தில நடந்ததுகள், நீ போலீஸ்ட்டச் சொன்னது எல்லாம் வீடியோவா சுத்துறது உனக்குத் தெரியாது? இதை நான் நம்போணும்?” என்று நின்றான் அவன்.
அவளுக்குப் பெரும் திகைப்பாக இருந்தது. அவளுடைய பெற்றோர் இதை பற்றி எதுவும் சொல்லவில்லையே. சொன்னால் இன்னும் வேதனையுறுவாள் என்று மறைத்திருக்கலாம். ஆனால் இவன் மாறன்…
“இனி எப்பிடி நான் வெளியில தலைகாட்டுவன்? எப்பிடி நாலு பேரைப் பார்ப்பன்? மனச்சாட்சியே இல்லாமல் எவ்வளவு சுயநலமா நடந்திருக்கிறாய்!” என்று அவன் தொடர்ந்து குற்றம் சாட்டினான்.
வருணா சோர்ந்துபோனாள். அவளுக்கு மனது விட்டே போயிற்று. காவல்துறையிடம் அப்படிச் சொன்னது தவறுதான். அந்தப் பதற்றமான சூழ்நிலையில் மாறனைப் பற்றியும், அவனுக்கு இதனால் ஏற்படக்கூடிய அவமானத்தைப் பற்றியும் யோசிக்கத் தவறிவிட்டாள்தான்.
அந்த நேரத்தில் அவளுடைய மனநிலை அப்படியிருந்தது. பயம், பதற்றம், குழப்பம் என்று எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியாத நிலையில் இருந்தாள். அதற்காக மாறன் இப்போது சுமத்தும் குற்றச்சாட்டுகள் எல்லை மீறியதாகவே அவளுக்குத் தோன்றின.
“எல்லாம் சரியா இருக்கிற நேரத்தில, எந்தப் பிரச்சினையும் இல்லாத நேரத்தில ஒருத்தர் நல்லவரா இருக்கிறது பெரிசில்ல மாறன். ஒரு இக்கட்டான நிலமைல, ஒரு பிரச்சினையான நேரத்தில தோள் குடுக்கிறதும், எங்களை விளங்கிக்கொள்ளுறதும்தான் உண்மையிலேயே ஒருத்தர் நல்லவராக இருக்கிறதுக்கான அடையாளம்!” விரக்தி மனத்தைச் சூழச் சொன்னாள் அவள்.
அவள் சொன்னதைக் கேட்ட மாறனின் முகம் மேலும் இறுகியது.
“இப்ப என்ன சொல்ல வராய் நீ? நான் கெட்டவன் எண்டா? இனி அப்பிடித்தான் இருக்கும்! ஆக்கள அடிக்கிறதும், கொல்லுறதும், ரௌடி வேலை பாக்கிறதும் ஹீரோயிசம் எண்டு நினைச்சுக் காதலிச்சவளுக்கு நான் கெட்டவனாத்தான் தெரிவன். உன்னைச் சொல்லிப் பிழை இல்லை. நீ சேர்ந்த இடம் அப்பிடி!” என்றான் அவன் நக்கலாக.
வருணாவால் அதை நம்பவே முடியவில்லை. பார்த்துப் பிடித்து, பேசிப் பழகி, தன்னுடைய எதிர்காலத் துணை என்று அவள் தேர்ந்தெடுத்த அந்த மாறன்தானா இவன் என்று அவனைப் பார்த்தாள்.
அவனும் தன்னைப் போலவே குழப்பமான, தெளிவற்ற மனநிலையில் இருக்கிறான் என்று புரிந்தாலும் அவன் பேசும் வார்த்தைகள் எல்லை மீறியதாகவே அவளுக்குத் தோன்றின.
அதற்குள் கையில் சிகரெட்டுடன் அங்கே வந்தான் கலிங்கராயன். வருணாவுக்கு அவன் முகம் பார்க்கவே பிடிக்கவில்லை. எல்லாம் இவனால் என்று ஆத்திரமாத்திரமாக வந்தது. அதில் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றாள்.
மாறனும் அவனை எதிர்பார்க்கவில்லை. கலிங்கராயனைக் கண்டு ஆத்திரமும் ஆவசமும் பொங்கின. ஆனாலும், அவற்றை அவனிடம் காட்டவில்லை அவன். அவனை வெறுப்புடன் நோக்கிவிட்டு, “நான் வாறன்!” என்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
சிகரெட்டிலிருந்து புகையை நன்றாக இழுத்து வெளியே விட்டபடி, “ஓவர் லவ் மாதிரி இருக்கே?” என்றான் கலிங்கராயன் நக்கலாக.
வருணாவின் முகம் ஒருகணம் கன்றியது. அடுத்த கணமே ஆத்திரம் தலைக்கேறியது. என்னவோ, அவள் மாறனைக் காதலித்துவிட்டு இவனை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதைப் போல் அல்லவா இருக்கிறது இவன் பேச்சு!
“ஓம், அப்பிடித்தான். இப்ப என்ன அதுக்கு?” என்று நிமிர்ந்து அவன் முகத்தை நேராகப் பார்த்துக் கேட்டாள்.
“இது தொடரக் கூடாது. இனி அவன் உன்னைப் பாக்க வரக் கூடாது. நீயும் அவனப் பார்க்கக் கூடாது!” என்றான் உத்தரவிடுவதைப் போல.
“பாத்தா? பாத்தா என்ன செய்வீங்க?” என்று எதிர்த்துக் கேட்டாள் வருணா.
அவளுக்கு மனம் அடங்க மறுத்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு மாறன் முன்னே அவளைக் குற்றவாளியாக்கிவிட்டு அவளுக்கு உத்தரவு போடுவானா என்று ஆத்திரத்தில் மனம் கொதித்தது.
அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. போகிற மாறனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, கையிலிருந்த சிகரெட்டைக் காலில் போட்டு மிதித்தான்.
வருணா கொந்தளித்துப் போனாள். இப்போது என்ன சொல்கிறான் இவன்? அவனை அவள் மீண்டும் பார்த்தால் மாறனை மொத்தமாக நசுக்கிவிடுவேன் என்றா? பார்வையால் அவனை எரித்துவிட்டு விடுவிடுவென்று மாளிகைக்குள் போனவள் போன வேகத்திலேயே அவன் முன்னால் வந்து நின்றாள்.
“இந்த சிகரெட்டைப் பத்த வைக்கிறது, அதக் கீழே போட்டுக் காலால மிதிக்கிறது, பயம் காட்டுறது… இந்த வேலைய எல்லாம் என்னட்ட வச்சுக்கொள்ளாதீங்க சரியா? என்ர அப்பா எவ்வளவு பெரிய ஆள் எண்டு தெரியுமா? ஊருக்கு அவருக்கு எவ்வளவு மதிப்பும் மரியாதையும் எண்டு தெரியுமா? அவருக்கு முன்னால நிண்டு சிகரெட் பிடிக்கிறீங்க? அவ்வளவு தைரியம்!
இன்னொரு தரம் அவருக்கு முன்னால நீங்க சிகரெட் பிடிக்கிறதப் பாத்தன், அதப் பறிச்சு உங்கட வாயிலயே சுட்டுட்டுப் போயிடுவன்! கவனமா இருங்க!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் போனாள் அவள்.
அப்படியே நின்றுவிட்டான் கலிங்கராயன். ஒருத்தி அவன் முன்னால் நின்று தைரியமாக விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் போகிறாள். அதுவும் அவன் வாயிலேயே சுடுவாளாம். அவனுக்கு கோபத்திற்குப் பதிலாக உதட்டோரத்தில் மெல்லிய புன்னகை ஒன்று அரும்பியது. போகிற அவளையே பார்த்தபடி இன்னொரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துத் தீ மூட்டப் போனவன் அதைச் சுழற்றி எறிந்துவிட்டு அப்படியே நின்றான்.

