அத்தியாயம் 2
நிலாவினி சூர்யாவின் தங்கை. கலிங்கன், சூர்யா இருவரோடும் சேர்ந்து சிறுவயதிலிருந்து மிகுந்த கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வளர்ந்தவள்.
ஒரு நேர உணவு கூட இல்லாமல் தவித்த நாட்களும், பல சித்திரவதைகளை அனுபவித்து அடி வாங்கிய வலிகளும் அவளுக்கும் உண்டு.
ஆனால் இன்று, அந்த நரக வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து, இந்த மாளிகையின் ராணியாக அமர்ந்திருக்கிறாள். கலிங்கராயன் அமர வைத்திருக்கிறான். அவளின் சொற்படிதான் அங்குள்ள அத்தனை பேரும் நடப்பார்கள்.
கலிங்கராயன் எப்பேற்பட்டவனாக இருந்தாலும், நிலா சம்பந்தப்பட்ட விடயங்களில் எப்போதும் தன் அதிகாரத்தைக் காட்ட மாட்டான். அந்த வீட்டுக்குள் அவள்தான்.
அவனுக்கும் அவளுக்குமான உறவுக்கு அடித்தளமிட்டவன் சூர்யா. தனக்கும் கலிங்கனுக்கும் நடுவில் தங்கையின் கணவன் என்கிற பெயரில் ஒருவன் வந்து நின்று, கலகமூட்டிவிடுவானோ என்று பயம்.
அதைவிட அவளை வெளியில் கட்டிக் கொடுத்துவிட்டு, அவர்கள் வாழ்கிற வாழ்க்கை முறைக்கு அவளையும் அவள் குடும்பத்தையும் பாதுகாக்க முடியுமா, அவளுக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை அமையுமா என்று பல கேள்விகள்.
ஒரு நாள் அவளையும் வைத்துக்கொண்டே, “நிலாவ நீயே கட்டுறியா மச்சான்?” என்று கேட்டுவிட்டான்.
கலிங்கன் அதிர்ந்து பார்த்தான் என்றால் நிலாவினி முகம் மலர்ந்துபோயிற்று. அதுவே அவள் உள்ளத்தைச் சொல்லிவிட கலிங்கன் அதற்கு மறுக்கப்போகவில்லை. அவனுடைய இறுகிய நெஞ்சம் இளகுகிற ஒரே இடம் அவள்.
அதன் பிறகான அவர்களின் உறவை உறுதியாக்கிக்கொண்டு போனவள் நிலாவினிதான். கொஞ்ச நாள்களாக அவளுக்குத் திருமண ஆசை வந்திருந்தது. அதில் சூர்யாவுக்கும் உடன்பாடே. ஆனால், கலிங்கன் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தான். காரணம் நிலாவினி.
இன்றைக்கு ராயனிடம் எக்கச்சக்கமான அடியாட்களும் பலமும் உண்டு. அப்படி இருக்க, நடக்கிற இருதரப்பு மோதல்களில் இன்னுமே அவன் முன்னுக்கு நிற்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.
அவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். அப்போதுதானே அவர்களின் எதிர்காலம் நல்லதாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.
அவளின் இந்த எதிர்பார்ப்பை யோசித்துத்தான் கலிங்கன் தயங்கினான். இப்போதே இப்படிச் கொள்கிறவள் நாளைக்கு குழந்தைகள் என்று வந்த பிறகு இன்னுமே பயப்படுவாளே.
அதே நேரத்தில் இதற்கு என்ன வழி என்றும் அவனுக்குத் தெரியவில்லை. அவனை நம்பி அவன் வாழும் அந்தக் கிராமமே இருக்கிறது. அவர்களுக்கு வழிகாட்டி, துணை எல்லாமே அவன்தான். அவனுக்கும் அந்த ஊரையும், இந்தத் தொழிலையும் விட்டால் வேறு தெரியாது.
ராயன் வித்தியாசமானவன். ஒருபுறம் தன் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தாலும், மறுபுறம் துறைமுகப் பகுதி ஏழை மக்களுக்குக் கல்வி, மருத்துவ வசதிகள் செய்து கொடுத்து, அவர்களின் பாதுகாவலனாக உருவெடுத்திருந்தான்.
இதனால் காவல்துறைக்குப் பெரும் சவாலாகிப்போனான். அங்கிருந்த யாருமே அவனைப் பற்றி, அவன் செய்யும் தொழில் பற்றி ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்கள்.
மிரட்டி, அடித்து, துன்புறுத்தி, கொடுமைகள் செய்து தனக்கு இணங்க வைப்பது வேறு. அவர்களுக்கு நல்லவனாக இருந்து, அவர்களைத் தனக்கான பாதுகாவலர்களாக மாற்றுவது வேறு.
ராயன் தேர்ந்தெடுத்தது இரண்டாவது வழியை. அந்த ஊர் மக்கள் அவன் குடும்பம். யாருக்கு ஒன்று என்றாலும் முதல் ஆளாக நிற்பான். அதனாலேயே யாரை எவ்வளவு துன்புறுத்திக் கேட்டாலும் அவர்களிடமிருந்து ஒரு வார்த்தை பிடுங்க முடியாது.
அப்படியானவர்களை விட்டுவிட்டு எங்கே போவான்?
அதைவிட, அவன் பார்ப்பது நினைத்ததும் விட்டுவிட்டு வெளியேறி, வேறு வேலை எடுத்துக்கொண்டு போகிற அலுவலக உத்தியோகம் இல்லையே. காவல்துறை முதற்கொண்டு அவன் எதிரிகள் பலர் அவனை வேரோடு சாய்க்கக் காத்திருக்கிறார்கள். அப்படியிருக்க எப்போதோ தூக்கிவிட்ட கத்தியை எப்படிக் கீழே வைப்பான்?
இப்படி இருக்கையில்தான் மறுபடியும் சண்டையிட்டு, காயங்களோடு வந்து நிற்கிறான். கேட்டுக்கொண்டு போனால் பிடிக்காது. அதில் உணவுக்காக வந்து அமர்ந்த நண்பர்கள் இருவருக்கும் சுருங்கிய முகத்துடன் உணவைப் பரிமாறினாள் நிலா.
“நிலா!” சூர்யாதான் தங்கையைச் சமாதானம் செய்யும் முகமாக அழைத்தான்.
அவள் நிமிர்ந்தே பார்க்கவில்லை. உணவு வைப்பதே தன் வேலை என்பதுபோல் காட்டினாள். கலிங்கனுக்குச் சட்டென்று கோபம் வந்தது. உணவு என்பது அவனுக்கு மிக மிக முக்கியமானது. இந்த ஓட்டம் ஆரம்பித்ததே அந்த உணவுக்காகத்தான். அப்படியிருக்க அந்த உணவையே வேண்டாதவர்களுக்கு வைப்பதுபோல் வைத்தால்?
“இப்ப நான் சாப்பிடவா, எழும்பிப் போகவா?” என்று குரலை உயர்த்தினான்.
சட்டென்று கண்களும் முகமும் கலங்க, “இல்ல இல்ல. சாப்பிடுங்க.” என்றாள் நிலாவினி அவசரமாக.
“ப்ச் நிலா!” என்றான் இப்போது கலிங்கன்
“ஒண்டும் இல்ல. சாப்பிடுங்க ப்ளீஸ்!”
அதன் பிறகுதான் உணவில் கையை வைத்தான் கலிங்கன்.
*****
திருகோணமலை நகரின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முதியோர் இல்லம், முழுமையாகத் திருத்தப்பட்டுத் திறப்பு விழா நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது.
அங்கே, பட்டு வேட்டியும் சட்டையும் அணிந்து, கழுத்தில் மாலையுடன் வரதரராஜன் நடந்துவர, அவனின் இருபுறமும் முக்கிய பிரமுகர்கள் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவன் முகத்தில் சாதுவான புன்னகையையும், அமைதியும் கனிவும் கொட்டிக் கிடந்தன.
வரதராஜன் முருகதாசன் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த பரம்பரைப் பணக்காரன். திருகோணமலையில் அவனை அறியாத ஆட்கள் இருப்பது அரிது. உப்புவெளி கடற்கரையோரத்தில் இருக்கும் பெரும்பான்மையான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அனைத்தினதும் வாரிசு. வயது நாற்பத்தி ஐந்து. இன்னும் திருமணம் செய்யவில்லை.
அந்த முதியோர் இல்லத்திற்கு பல லட்சங்களை வாரிக் கொடுத்திருந்தான். அங்கே வாழும் முதியவர்கள் ஒவ்வொருவரின் கைகளையும் பற்றி, நலம் விசாரித்து, அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தான்.
ஊடகங்களின் கேமரா ப்ளாஷ்கள் அவன் முகத்தை நோக்கிப் பாய்ந்தன. பத்திரிகையாளர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளைத் தொடுத்தனர்.
“ஐயா, இந்த ஊருக்காக்க நீங்க செய்ற கல்வி, மருத்துவ உதவிகளுக்கு அளவே இல்ல. எப்பிடி உங்களால மக்களுக்காக இவ்வளவு சேவை செய்ய முடியுது?”
அதற்குக் கனிவாகச் சிரித்துவிட்டுப் பதில் சொன்னான் வரதன்.
“மக்கள் சேவதான் மகேசன் சேவ தம்பி. இந்த ஊர்தான் எனக்கு எல்லாமே. நாங்க வாழுற வசதியான வாழ்க்கையைத் தந்ததும் இந்த ஊர்தான். பிறகு எப்பிடி இந்த ஊருக்குச் செய்யாம இருக்கிறது?”
அதைக் கேட்ட அங்கிருந்த மக்களும், முதியவர்களும் நெகிழ்ந்துபோனார்கள். ஊருக்குள் அவனைத் தெரியாதவர்களே கிடையாது. உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு அவன் அதைச் செய்யாமல் விட்டதும் கிடையாது. எல்லோருமே அவனைத் தெய்விகக் குணம் கொண்ட வள்ளலாகவும், சமூக சேவகனாகவும் பார்த்தார்கள்.
அவனுக்குக் கிடைத்த புகழுரைகளையும் கைதட்டல்களையும் கனிவான ஒற்றைப் புன்னகையோடு பெற்றுக்கொண்டு, அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தன் காரில் ஏறி அமர்ந்தான்.

