கலிங்கனின் காவியம் 20.1

அத்தியாயம் 20

கலிங்கராயனிடம் கோபப்பட்டுவிட்டு மாளிகைக்குள் வந்த வருணா, குடுகுடுவென்று மாடியிலிருந்த தன் அறைக்குள் வந்து ஒளிந்துகொண்டாள்.

அவனுடைய அர்த்தமற்ற கேள்வியில் உண்டான சினம், மாறன் மீதிருந்த கோபம், அத்தனைக்கும் காரணம் இவன்தானே என்கிற ஆத்திரம் என்று எல்லாம் சேர்ந்து அவனிடம் வெடிக்க வைத்திருந்தன.

அதுவே இப்போது, அவன் தன்னை ஏதாவது செய்துவிடுவானோ என்கிற பயம் பிடித்துக்கொண்டது.

நேரம் செல்ல செல்ல அந்தப் பயம் அகன்று, மாறன் சொன்னவற்றில் அவள் சிந்தனை சென்று நின்றது. அவன் தன்னைப் பற்றி அபாண்டமாகப் பேசியதும், தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளும் அவளை மிகவும் வேதனைப்படுத்தின. அதைவிட, திருமணத்தில் நடந்த அனைத்தும் சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் பரவியிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த வேதனையை அளித்தது.

முகப்புத்தகத்தில் தன் புகைப்படத்தைப் போடுவதற்கே யோசிக்கும் அவளின் வாழ்க்கை இன்று, பொதுவெளியில் சந்தி சிரிக்குமளவிற்கு வந்து நிற்கிறது.

அதற்கும் மேலாக, தான் என்ன வேதனையில் இருக்கிறோம், தன்னுடைய நிலை என்ன, கலிங்கராயனைப் போன்ற ஒருவனைத் தான் காதலிப்பேனா என்றெல்லாம் மாறன் கொஞ்சம்கூட யோசிக்கவில்லையே என்றெண்ணி மிகவுமே வருந்தினாள்.

*****

ஆதி அழைத்து, மாறன் வந்திருப்பதாகச் சொன்னபோது, வரதன் அனுப்பியிருப்பானோ என்றுதான் விரைந்து வந்தான் கலிங்கராயன். வருணாவின் முகம் கசங்கிக் கலங்கியிருப்பதைப் பார்த்ததும் கோபம் மூண்டுவிட்டது.

அதில்தான் அவளிடம் அப்படி ஒரு கேள்வி கேட்டான்.
அதற்கு அவளிடம் இருந்து வந்த கோபம் இருக்கிறதே! ஒரு வாரமாய் இரவு பகல் பாராமல் பார்த்த வேலைகளால் உண்டான சோர்வு எங்கே போனது என்றே தெரியவில்லை.

மாளிகைக்குள் வந்தவனின் கண்கள் முதலில் அவளைத்தான் தேடின. அவள் அங்கே இருப்பதற்கான சுவடே இல்லை. மேலே அவளுடைய அறையைப் பார்த்தான். கதவு சாத்தப்பட்டிருந்தது.

நேராக ராசம்மாவிடம் சென்று, அந்த ஒரு வாரமும் அங்கே என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்துகொண்டான். அப்போதுதான் வருணா அவருடைய கைப்பேசியைக் கேட்டதும், அவர் அதைக் கொடுக்க மறுத்ததும் அவனுக்குத் தெரியவந்தன.

அதன்பிறகு மேலே சென்று குளித்து, உடை மாற்றிக்கொண்டு வந்து, சாப்பிட அமர்ந்தான். வருணாவும் சாப்பிடவில்லை என்று அறிந்து, அவளை அழைத்து வரச் சொன்னான்.

வந்தவளுக்கு அவனே உணவைப் பரிமாறினான். தான் கோபப்பட்டதற்காக ஏதாவது பேசப்போகிறானோ என்று யோசித்துக்கொண்டு வந்தவள் இதை எதிர்பார்க்கவில்லை.
எதுவும் பேசாமல் அமர்ந்து சாப்பிட்டாள். அவன் கவனம் உணவோடு சேர்த்து அவளிலும் இருப்பது தெரிந்தாலும் அவள் நிமிரவில்லை.

அவள் சாப்பிட்டு முடிக்கவும், “வெளிக்கிட்டுக்கொண்டு வா. வெளியில போகோணும்!” என்றான் அவன்.

எங்கே அழைக்கிறான் என்கிற கேள்வி எழுந்தாலும், “எனக்கு அம்மா அப்பாட்டப் போகோணும்!” என்று சொன்னாள்.

அவளை ஒரு முறை பார்த்துவிட்டு, “அவேய வரச் சொல்றன்!” என்றான் அவன்.

“தேவையில்ல!” அவன் சொல்லி முடிப்பதற்குள் சீறினாள் அவள்.

“ஏன்?”

“என்ன ஏன்? ஏற்கெனவே கூப்பிட்டு வைச்சு, அவமானப்படுத்தி, வெளில தள்ளினது காணாதா உங்களுக்கு?”

அவன் ஒருமுறை நெற்றியைத் தேய்த்து விட்டுவிட்டு, “ஒரே விசயத்தத் திரும்ப திரும்பக் கதைக்கிறதும், நடக்காத ஒண்டப் பற்றிக் கதைக்கிறதும் எனக்குப் பிடிக்காது வருணா!” என்றான், தன் செயலுக்கான விளக்கமாக.

“பிடிக்காட்டி நீங்க வெளில போங்க. அத விட்டுப்போட்டு என்ர அம்மா அப்பாவ வெளில அனுப்புவீங்களா? அந்தளவுக்குத் திமிர்! இது உங்கட வீடு எண்டுற அகம்பாவம்! எங்களால உங்களை ஒண்டும் செய்யேலாது எண்டுற ஆணவம் என்ன?” என்று குமுறினாள் அவள்.

உண்மையில் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்றோ, அவமரியாதை செய்ய வேண்டும் என்றோ அவன் நினைக்கவில்லை. அவர்களும் தங்களுடைய நிலையிலிருந்து மாறப்போவதில்லை. அவனும் தன்னுடைய முடிவை மாற்றப்போவதில்லை. அப்படியிருக்க அந்த விடயத்தை அதோடு முடிப்பதுதான் சரி என்று எண்ணி அப்படிச் செய்திருந்தான்.

அவன் தொழில்துறையில் இப்படியானவற்றை இப்படித்தான் கையாளுவான். அதற்கென்று இத்தனை குற்றச்சாட்டுகளை அவன் மீது வீசுவாளா என்றிருந்தது அவனுக்கு. அதில், “இனி அப்பிடி நடக்காது.” என்று அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.

“இனி நடக்காதுதான். ஏன் எண்டால் இனி இந்த வீட்டு வாசப்படிய அவே மிதிக்காயினம். மிதிக்க நான் விடமாட்டன்!” என்று அறிவித்தாள் அவள்.

“அதான் இனி நடக்காது எண்டு சொல்லிட்டன் எல்லா?” அவன் பொறுமையாகவே பதிலளித்தான்.

அதற்கும், “ஒருக்கா நடந்ததே போதும்!” என்றாள் அவள்.

அவளின் பிடிவாத முகத்தையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, எழுந்து வந்து அவள் முன்னே நின்றான் அவன். அப்படி அவன் திடீரென்று அருகில் வந்து நிற்கவும் வருணாவுக்குப் பயமும் பதற்றமும் ஒருசேரத் தோன்றின.

அவள் விழிகளையே பார்த்து, “உனக்குப் பிடிக்காதது இந்த வீட்டில நடந்தா சொல்லு. அதை மாத்தலாம். அதுக்காக எண்ணெயில போட்ட கடுகு மாதிரி வெடிக்கிறேல்ல. பின்னேரம் அவேய வரச் சொல்லிவிடுறன். இப்ப வெளிக்கிடு!” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான் அவன்.

உண்மையில், அவளுக்கு அவனோடு வெளியே செல்லப் பிடிக்கவில்லை. அதே நேரத்தில், சுதந்திரக் காற்றை அனுபவிக்க வேண்டும் போலவும் இருந்தது. அதனால் புறப்பட்டு வந்தாள்.

அவனுடைய காரை நெருங்கியதும் அவளுக்காகக் கதவைத் திறந்துவிட்டான். அவள் உள்ளே ஏறி அமர்ந்ததும், கதவைச் சாத்திவிட்டு வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்தான்.

அன்றைக்குப் போன்று ஆத்திரம், கோபம், ஆக்ரோசம் என்று எந்த மோசமான மனநிலையிலும் இல்லாததால் அவன் கையில் கார் சீரான வேகத்தில் பயணித்தது.

என்னவோ ஒரு புதுவுலகத்துக்கு வந்தது போன்று வெளி உலகத்தை விழிகளை சுழற்றிப் பார்த்துக்கொண்டு வந்தாள் வருணா. மனத்துக்கு மிகவுமே இதமாக இருந்தது. ஒரு அறைக்குள் அடைபட்டுக் கிடப்பது எத்தனை பெரிய கொடுமை என்பதை வெளியுலகத்தைப் பார்த்தபோதுதான் உணர்ந்தாள்.

கைப்பேசிக் கடை ஒன்ருக்குச் சென்று, புதிதாக ஒரு கைப்பேசியை வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்.

அவள் வாங்கவில்லை. மாறாகக் கேள்வியோடு ஏறிட்டாள். “உனக்குத்தான்.” என்றான்.

“என்னட்ட ஃபோன் இருக்கு!”

“இருக்கட்டும். இது நான் உனக்கு வாங்கித் தாறது. இனி இதையே வச்சுக்கொள்!”

“இல்லை, வேண்டாம். எனக்கு என்ர போதும்!”

சில கணங்கள் அவளைப் பார்த்தவன், அவள் மடியில் இருந்த கையை எடுத்து, அதில் அந்தக் கைப்பேசிப் பெட்டியை வைத்தான்.

அதிர்ந்துபோன வருணா தன் கையை உருவிக்கொள்ள முயன்றாள். அவன் விடவில்லை. “இனி நீ இதத்தான் பாவிக்கோணும். உன்ர ஃபோன்ல தேவையில்லாத எந்த நம்பரும் இருக்கக் கூடாது!” என்றான் எச்சரிக்கும் விதமாய்.

வெகுண்டுவிட்டாள் வருணா. “எது எனக்குத் தேவையில்லாத நம்பர்? அத நீங்க எப்பிடி முடிவு செய்வீங்க?” என்று கேட்டாள்.
“முதல் உங்கட பாவப்பட்ட காசுல வாங்கின ஒரு பொருளை நான் தொடுவன் எண்டு எப்பிடி நினச்சீங்க?” என்றாள்.

சட்டென்று அவன் முகம் மாறியது. ஸ்டியரிங்கை இறுகப் பற்றிக்கொண்டு சில கணங்கள் அப்படியே இருந்தான். பின் அவளிடம் திரும்பி, “நானே அந்தப் பாவப்பட்ட காசில உருவானவன்தான். என்னை என்ன செய்யப்போறாய்?” என்று சீறினான்.

error: Alert: Content selection is disabled!!