அத்தியாயம் 21
அந்தக் கைப்பேசி அவள் கட்டிலில் வெகுநேரமாகக் கிடந்தது. அவள்தான் அதைத் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை என்கிற பிடிவாதத்துடன் அறைக்குள் வந்ததும் தூக்கிப் போட்டிருந்தாள்.
அன்று அவனுடைய அலுவலகத்தில் அந்தக் கூட்டம் முடிந்ததும் அவள் முன்னே வந்து அமர்ந்து, கலிங்கனே அந்தக் கைப்பேசிப் பெட்டியைப் பிரித்து, புது சிம் பொருத்தியிருந்தான். கூடவே, அவனுடைய இலக்கத்தை அதிலும், அவளுடையதைத் தன்னதிலும் பதிந்து, தேவையான ‘ஆப்’களையும் தரவிறக்கம் செய்து தந்திருந்தான்.
தான் மறுத்தும் பிடிவாதமாகத் தந்திருக்கிறான் என்கிற கோபத்தில் கொண்டுவந்து அப்படியே போட்டிருந்தாள். ஆனால், அந்தக் கைப்பேசி அவளை நிம்மதியாக இருக்கவிடவில்லை.
எடுத்துப் பார், ஒரேயொருமுறை திறந்து பார் என்று தூண்டிக்கொண்டேயிருந்தது. இத்தனை நாள்களும் வெளியுலகத் தொடர்பு அற்றிருந்ததும், மாறன் சொல்லிவிட்டுப் போன்றவையும் சேர, அதற்குமேல் பேசாமல் இருக்க முடியாமல் அதை எடுத்தாள்.
சமூகவலைத்தளத்தில் தன் கணக்கினைத் திறந்து, உள் நுழைந்தாள். என்ன பார்க்க நினைக்கிறாள், எதைப் பார்க்க விரும்புகிறாள் என்றில்லாமல் தட்டிக்கொண்டு போனாள். முதலில் அவளின் திருமணக் கிளிப் ஒன்று கண்ணில் பட்டது. பார்த்தவள் உள்ளத்தில் ஒரு துடிப்பு. என்னவோ அது மறுபடியும் நிகழ்வது போன்று தொண்டையில் அடைத்தது.
அடுத்த துண்டுகள் அவள் தேடும் அவசியமே இல்லாமல் அடுத்தடுத்து வந்தன. அவள் கழுத்தில் அவன் தாலியைக் கட்டுவது, பெற்றோர் துப்பாக்கி முனையில் நிற்பது, அவன் அவளை இழுத்துக்கொண்டு போவது, மாறன் என்று எல்லாமே இருந்தன.
அடுத்த சில நிமிடங்களில் நேரலை விவாதம் ஒன்று அவள் கண்ணில் பட்டது. அதைத் தள்ளியிருப்பாள். அவள் பெயரை அங்கிருந்த ஒருவர் சொல்லவும் அவளுக்குப் பெரும் திகைப்பு. அவளைப் பற்றி பேச என்ன இருக்கிறது என்றுதான் அதைப் பார்க்க ஆரம்பித்தாள்.
ஐந்து பேர் கலந்துகொண்டிருந்த அந்த விவாதத்தில், மாறனின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தார்.
“மாறன் பல்கலையில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே இந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறார். பிடித்திருக்கிறது. அதன் பிறகு முறையாகத் தன் வீட்டிலிருந்து பெண் கேட்டிருக்கிறார். பெண் வீட்டிலும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இரு குடும்பங்களும் கலந்து பேசி, திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். நடுவில் ஆறு மாதங்கள் இருந்திருக்கிறது. அந்தக் காலப்பகுதியில் வருணா நல்லமாதிரி, இன்னும் சொல்லப்போனால் எதிர்காலக் கணவர் என்கிற நெருக்கத்தோடுதான் மாறனோடு பழகியிருக்கிறார்.” என்று அவர் சொன்னதைக் கேட்ட வருணா திகைத்துப்போனாள்.
‘நெருக்கம்’ என்கிற அந்த வார்த்தை அவள் இதயத்தை நொறுக்கியது.
“மாறன் தரப்பிலிருந்து எந்தத் தவறும் நடந்ததாக நான் அறியவில்லை. அதே நேரத்தில், இந்த வைத்தியப் பெண் நடந்துகொண்ட விதம் மிகவும் தவறானது. மாறனுக்கு அவர் செய்தது மிகப்பெரிய துரோகம்! அவர் கலிங்கராயனைக் காதலித்ததையோ, அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்ததையோ யாரும் தவறு சொல்ல முடியாது. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.
“ஆனால், அந்த விருப்பத்தைத் தன்னுடைய வீட்டில் சொல்லியிருக்க வேண்டும். அதற்காகப் போராடியிருக்க வேண்டும். திருமணத்தில் விருப்பமில்லை என்று உறுதியாக நின்று மறுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒருவனோடு நெருக்கமாகப் பழகி, அவன் மனத்தில் ஆசைகளையும் கனவுகளையும் விதைத்து, திருமண மேடையில் ஏற்றி, அவனை அசிங்கப்படுத்தியிருக்கக் கூடாது!
இருபத்தொன்பது வயது நிறைந்த, படித்து முடித்து, அதுவும் வைத்தியத் துறையில் சத்திர சிகிச்சைப் பிரிவில் திறமையான வைத்தியராகப் பணிபுரிகிற வருணா நடந்துகொண்ட விதம் மிகவும் கேவலமானது.
“தன்னுடைய காதலனைக் கரம்பிடிக்க வேண்டும் என்பதற்காக, ஒரு குடும்பத்தையே காலத்துக்கும் தலைநிமிர முடியாத நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். இனி மாறனின் நிலைமை இந்தச் சமூகத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
என்னைப் பொறுத்தவரையில் வருணா நடந்துகொண்ட விதம் மிகவும் மோசமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. இன்னும் சொல்லப்போனால் வருணா தண்டிக்கப்பட வேண்டியவர். காதல் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. காதலிப்பதற்கு உரிமை இருப்பதைப் போலவே, அந்தக் காதலின் பெயரில் இன்னொருவருக்கு அநீதி இழைக்காமல் இருப்பதற்கும் பொறுப்பு இருக்கிறது!”
தன் வாதத் திறமையைக் காட்டும் நோக்குடன் அவர் அடித்துப் பேசிக்கொண்டிருந்தார். இங்கே வருணாவின் இதயத்தில் அவரின் ஒவ்வொரு வார்த்தையும் ஆணிகளாய் ஏறின.
நெருக்கமாகப் பழகி ஏமாற்றினாளாம். துரோகம் செய்துவிட்டாளாம்! ஒரு குடும்பத்தின் மானத்தை வாங்கிவிட்டாளாம்! கேவலமானவள், அசிங்கமானவள், தரமற்றவள் ஒழுக்கமற்றவள் என்று எத்தனை பேச்சுகள்?
கோபத்தில் அவளுடைய உடல் நடுங்கியது. அழுகையை அடக்க முடியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. உள்ளம் எரிமலையாகக் கொந்தளித்தது.
‘என்ன நடந்தது என்று தெரியாமல் என்னைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று கத்த வேண்டும் போலிருந்தது.
அங்கே ஆளுக்கொரு கருத்தை முன்வைத்து, ஒருவர் சொன்னதை இன்னொருவர் மறுத்து, ஆதாரங்களையும் காணொளிகளையும் சுட்டிக்காட்டி, வாதம் பிரதிவாதம் என அந்த விவாதம் காரசாரமாக நடந்துகொண்டிருந்தது.
அதையெல்லாம் கேட்க கேட்க அவளுக்கு நெஞ்சு வலித்தது. மூச்சு சீரற்றது. தொண்டை அடைத்தது.
இத்தனைக்கும் காரணம் அங்கே விவாதித்துக்கொண்டிருப்பவர்கள் அல்ல. வேறு ஒருவன். எத்தனையோ கனவுகளுடன் மணமேடையில் ஏறியவளின் வாழ்க்கையை நரகத்தில் தள்ளிவிட்டதோடு மட்டுமல்லாமல், இப்போது தீராத பழியையும் தேடித் தந்துவிட்டானே!
அவன் நினைவு வந்ததும் ஆத்திரம், அகங்காரம், ஆவேசம் அத்தனையும் பொங்கிக்கொண்டு வந்தன. கைப்பேசியை எடுத்துக்கொண்டு விடுவிடுவென்று கலிங்கராயனின் அறைக்குச் சென்றாள்.
புயலென அவன் முன்னால் சென்று நின்று, “போதுமா? இப்ப சந்தோசமா? மனம் குளிந்துபோச்சா? நான் கேவலமானவளாம், மோசமானவளாம், மாறனோட நெருங்கிப் பழகினவளாம். அப்பிடியா? நான் அப்பிடியா?” என்று கைப்பேசியைக் காட்டி ஆவேசமாய் அவனிடம் நியாயம் கேட்டாள்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளிடமிருந்து கைப்பேசியை வாங்கி என்னவென்று பார்க்க முயன்றான்.
வருணாவுக்குத் தன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனுடைய சட்டையைப் பிடித்து உலுக்கத் தொடங்கினாள்.
“நான் உனக்கு என்ன பாவம் செய்தனான்? ஏன் என்னை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தனி? ஊரே என்னைப் பாத்துக் கேவலமா கதைக்க வச்சிட்டியே. என்னை பற்றி அசிங்க அசிங்கமா கதைக்கினம். இதுக்கு நீ என்னைக் கொண்டிருக்கலாமேடா. சந்தோசமா செத்துப்போயிருப்பனே!” என்று அவன் மார்பில் குத்தினாள்.
இதற்குள் அந்த விவாதமேடையைப் பார்த்து ஓரளவுக்கு விடயத்தைப் புரிந்துகொண்டிருந்தான் கலிங்கன்.
“நான் கேவலமானவளா? ஒழுக்கம் கெட்டவளா? ஏமாத்துக்காரியா? ஒருத்தனோட பழகிப்போட்டு இன்னொருத்தனைக் கட்டுறவளா? சொல்லு! நான் அப்பிடியா? உன்னால எனக்கு என்ன பெயரெல்லாம் கிடைச்சிருக்கு எண்டு பாத்தியா?”
அவளுடைய வார்த்தைகளில் இருந்த கோபத்தைவிட, அவளுடைய குரலில் இருந்த வேதனை கலிங்கராயனை அதிகமாகத் தாக்கியது.
“இப்பிடி என்ர மானம் மரியாதையக் கெடுத்த நீ நல்லாவே இருக்கக் கூடாது! நீ நல்லாவே இருக்கக் கூடாது!”
நடுநடுவே அவன் அவளை நிலைப்படுத்த முயன்றான். அவளிடம் பேச முயன்றான். ஆனால், அவளால் அவன் சொல்வதைக் கேட்க முடியவில்லை. அவளுடைய காதுகளில் அந்தப் பெண் பேசிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தன.
அவனைப்போடு உலுக்கியபடி அழுதவளின் மூச்சு மெல்லத் தடுமாறத் தொடங்கியது. முதலில் அதைக் கவனிக்காத கலிங்கராயன், அவள் மூச்சு விடுவதற்குச் சிரமப்படுவதைக் கண்டதும் பதறிப்போனான்.
“வருணா! வருணா!” அவளுடைய தோள்களைப் பற்றித் தட்டினான். “வருணா என்னைப் பார். மூச்சை நிதானமாக இழுத்து விடு!” என்று சொன்னான்.
அவளால் முடியவில்லை. அழுகையினாலும் அதிர்ச்சியினாலும் அவளுக்கு மூச்சு தடைப்பட்டுத் தடுமாறியது. உடல் நடுங்கியது. கால்கள் தளர்ந்தன. ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து சரியத் தொடங்கினாள்.
“வருணா!” சட்டென்று அவளைத் தாங்கிப் பிடித்துத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான். அவனுக்குப் பதற்றமாயிற்று. “வருணா என்னைப் பார்!” என்று அவள் கன்னம் தட்டினாள்.
அவள் தொய்ந்து அவன் மார்பில் விழுந்தே விம்மினாள். உள்ளம் கரைய அவளை அப்படியே தாங்கிக்கொண்டான் கலிங்கன்.
‘நான் அப்படியா? ஒழுக்கமற்றவளா? மோசமானவளா?’ என்று அவள் கேட்டவை அவன் உள்ளத்திலும் ஆழமாக இறங்கியிருந்தன.
உண்மையில் அவள் ஒரு தேவதைப் பெண். அதுவும் அவனுக்கு அவள் கடவுளின் அருள். வைத்தியசாலையில் சுயநினைவின்றிக் கிடந்த நாள்களில் கூட அவனுடைய ஆழ்மனதுக்கு அவளுடைய குரலைத் தெரியும். அவள் வருகையை உணர்ந்திருக்கிறான்.
அவன் விழித்திருக்கிறானோ இல்லையோ, அவள் அவனுடைய அறையில் இருக்கும்போதெல்லாம் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள். அவளுடைய வார்த்தைகள் அவன் செவிகளை வந்தடைந்துகொண்டே இருக்கும். செவிவழியாக அவனுக்குள் நுழைந்து, அவனுடைய இதயத்தைத் தொட்டு, மனத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்த அமைதியின்மையை மெல்ல அடக்கியிருக்கும்.
மருத்துவம் அவன் உடலைக் குணப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவள் அவனைப் பார்த்துக்கொண்ட விதம், காட்டிய அக்கறை, கனிவுதான் அவன் மனத்தை ஆற்றுப்படுத்தியவை.
அப்படியானாவளின் பெயர் இன்றைக்குக் கெட்டுப்போயிற்று. அவளுடைய ஒழுக்கம், நேர்மை, அவள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை அனைத்தும் பொதுவெளியில் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் நொறுங்கிப்போனாள்.
“வருணா! என்னைப் பார். அதெல்லாம் ஒண்டுமில்ல. நிதானமாகு.” என்று அவளுடைய தலையை, முதுகை வருடிக்கொடுத்தான்.
ஆனால், அவள் சில்லுச் சில்லாகச் சிதறிப்போயிருந்தாள். அவனுடைய அணைப்போ, அவன் காட்டிய பரிவோ, அவன் சொன்ன ஆறுதல் வார்த்தைகளோ அவள் மனத்தைத் தொடவில்லை.
கடைசியில் அவள் மனத்தினுள் இருக்கும் அத்தனை கொந்தளிப்புகளும் கண்ணீராக வெளியேறட்டும் என்று விட்டுவிட்டான்.
கொஞ்ச நேரத்தில் கீழே கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அவள் பெற்றோர் வந்துவிட்டார்கள் என்று கலிங்கராயனுக்குப் புரிந்தது.
மெல்ல அவளைத் தன் மார்பிலிருந்து நிமிர்த்தி, அவள் முகத்தைப் பார்த்தான். அழுதழுது முகம் முழுவதும் சிவந்துபோயிருந்தது. தன் கைகளாலேயே அவள் கண்ணீரையும் முகத்தையும் கண்களையும் துடைத்துவிட்டான்.
அவள் அவனைப் புரியாமல் விழித்துப் பார்க்க, “உன்ர அம்மா அப்பா வந்திருக்கினம்.” என்று சொன்னான்.
அதைக் கேட்டதும் அவளுக்கு மறுபடியும் கண்கள் கலங்கிக்கொண்டு வந்தன. துக்கம் பெருகித் தெரிய உதடுகள் மீண்டும் அழுகையில் துடித்தன.
அந்த முகத்தை அப்படிப் பார்க்க முடியாமல், மறுபடியும் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, “அழுறேல்ல வருணா. நீ தைரியமானவள் எல்லா. போய் முகத்தைக் கழுவிக்கொண்டு கீழே போ.” என்று அவள் கன்னத்தைத் தட்டிக்கொடுத்தான்.
வருணாவும் அவனிடமிருந்து விலகி, கண்களைத் துடைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள்.
வாசலில் வந்து நின்ற கலிங்கராயன், அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
சற்று நேரத்திலேயே அவன் சொன்னது போன்று முகத்தைக் கழுவித் துடைத்துக்கொண்டு, தலையையும் வாரிக்கொண்டு வருணா வேகமாகக் கீழே இறங்கிச் சென்றாள்.

