அத்தியாயம் 22
மதியாதார் வாசல் மிதியாதே என்கிற கொள்கையுடன் வாழ்பவர்தான் மதியழகன். கலிங்கராயனின் வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்குக் கூட அவருக்கு விருப்பமில்லை.
ஆனால், அந்த வீட்டில் சிக்கிக்கொண்டிருப்பது அவருடைய மகள். அப்படியிருக்கத் தன் கோபதாபங்களையும், மான அவமானங்களையும் பிடித்துக்கொண்டு நிற்க அவரால் முடியவில்லை.
அந்த வீட்டின் வாசலில் காலடி எடுத்து வைத்தபோது மனம் கூசியது. அன்று தாம் மிகவும் அநாகரிகமான முறையில் வெளியேற்றப்பட்ட நிகழ்வு கண்முன்னே வந்து முகத்தை மாற்றியது. அத்தனையையும் தனக்குள்ளேயே போட்டுப் புதைத்துக்கொண்டு உள்ளே வந்தார்.
அவர்கள் வருவதற்காகவே காத்திருந்ததைப் போன்று, ஓடிவந்து அவர்களைக் கட்டிக்கொண்ட வருணா, அவர் மார்பில் முகம் புதைத்து விம்மினாள். அவள் உள்ளம் தகப்பனின் கைகளுக்குள் வெடித்துச் சிதறியது.
மதியழகன் கலங்கிப்போனார். “என்னம்மா? என்ன பிரச்சினை? ஏதாவது நடந்ததா?” இந்த ஒரு வாரத்தில் வெளியில் சொல்ல முடியாத துன்ப துயரங்களை அனுபவித்துவிட்டாளோ என்கிற பதற்றத்துடன் கேட்டார்.
என்ன சொல்வாள்? சிறு தவறும் செய்யாமல் ஊர் வாயில் விழுந்து எழும்புகிறேன் என்றா? இத்தனை காலமும் கட்டிக்காத்த மானம், மரியாதை, ஒழுக்கம் எல்லாம் காற்றில் பறக்கிறது என்றா? இனி என்ன செய்தும் என்னால் அவற்றை எல்லாம் திருப்பிப் பெற முடியாது என்றா? துடித்துப்போய்விட மாட்டார்களா?
“இல்லயப்பா ஒண்டுமில்ல.” என்று தன் அழுகையை அடக்கிக்கொண்டு சமாளிக்க முயன்றாள்.
ஆனால், அவளுடைய குரலில் இருந்த நடுக்கத்தையும், முகத்தில் படர்ந்திருந்த வேதனையையும், அழுது சிவந்திருந்த முகத்தையும் கண்டு பெற்றவர்கள் பரிதவித்துப்போனார்கள்.
“என்னம்மா? என்ன நடந்தது எண்டு சொல்லு பிள்ளை.” பார்வை அவளுக்குப் பின்னால் வந்து நின்ற கலிங்கராயனைத் தொட்டு வர, நடுக்கத்துடன் வினவினார் சிவசுந்தரி.
பெண் பிள்ளையாயிற்றே. கண்ட கண்டா கற்பனைகளும் கண் முன்னே வந்து நின்று அவரின் பெற்ற வயிற்றைக் கலங்க வைத்தது.
“இல்லை அம்மா. ஒண்டுமில்ல. ஒரு கிழமைக்குப் பிறகு உங்களப் பாக்கப்போறன் எண்டுற சந்தோசத்தில அழுத்திட்டன். அதான்.” என்று சொல்லிப் புன்னகைக்க முயன்றாள் வருணா.
தான் அனுபவிக்கும் துன்பத்தை அவர்களிடம் சொல்லி, அவர்களையும் அழவைக்க அவளுக்கு விருப்பமில்லை. தான் பார்த்தது அவர்களுக்குத் தெரியாமலேயே இருக்கட்டும் என்று நினைத்தாள்.
ஆனால், ஒரு இடத்தில் அடைபட்டுக் கிடைக்கும் அவளே பார்த்துவிட்டால் என்கையில் அவர்களை அது எட்டாமல் இருக்குமா என்ன?
அவற்றைப் பார்த்து, கேட்டு, கோபப்பட்டு, அழுது, விரக்தியடைந்து, என்ன செய்வதென்று தெரியாமல் இப்போதுவரை தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களும் இணையத்தளங்களும் மதியழகனையும் விட்டுவைக்கவில்லை. ஒற்றை மகளுக்கு நடந்திருப்பது அநியாயம் என்றால், வெளியே வந்து அவர் அந்த மகளுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டாமா, நீதிக்குப் போராடியிருக்க வேண்டாமா என்று சட்டம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
தன் பெண்ணையே இப்படி வளர்த்தவர் ஒரு பாடசாலையை எப்படி நல்ல முறையில் நடத்துவார் என்று கேட்டனர். அவர் அமைதியாக இருப்பதை வைத்தே அவர் மகளின் காதல் உண்மை என்றும், அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்துதான் மாறன் குடும்பத்தை கேவலப்படுத்தியிருக்கிறார்கள் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அதுமட்டுமல்லாது எத்தனையோ தொலைபேசி அழைப்புகள்! நடந்தவை உண்மையா என்று விசாரிப்பவர்கள் ஒருபுறம், ஆறுதல் சொல்கிறோம் என்கிற பெயரில் நடந்தவற்றைத் துருவி துருவிக் கேட்பவர்கள் மறுபுறம்.
அதையெல்லாம் அவர்களாலேயே தாங்க முடியாதபோது மகளிடம் எப்படிச் சொல்வார்கள்? அவர்களும் அவளைப் போன்று அனைத்தையும் தமக்குள்ளேயே வைத்துக்கொண்டார்கள்.
ஆனால், தான் படும் துயர துன்பங்களைத் தம்மிடம் காட்டிவிடக் கூடாது என்று, கலங்கும் விழிகளைக் கட்டுப்படுத்தியபடி, தம் முன்னே சாதாரணமாகக் காட்டிக்கொள்ள மகள் படுகிற பாட்டை ஒரு அளவுக்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாமல், “ஏன் எங்களப் போட்டு இப்பிடி வதைக்கிறீங்க. ஏன் இப்பிடி எங்களப் பிரிச்சு வச்சுக் கொல்லுறீங்க? நாங்க படுற பாடு, எங்கட மகள் அனுபவிக்கிற துன்பம் எல்லாம் உங்களுக்கு விளங்குதா, இல்லையா? ஈவிரக்கம் இல்லாம நடக்காதீங்க தம்பி. நீங்களும் மனுசன்தானே? எங்களை விட்டுடுங்க ப்ளீஸ். நாங்க வேணுமெண்டா இந்த ஊரை விட்டே போயிடுறம்.” என்று கெஞ்சினார் மதியழகன்.
அவருக்குப் பதில் சொல்லாமல் வருணாவைப் பார்த்தான் அவன். அவளும் தம்மை விட்டுவிட மாட்டானா என்கிற எதிர்பார்ப்புடன் அவனைத்தான் பார்த்திருந்தாள்.
மதியழகனிடம் திரும்பி, “நடந்த கலியாணத்தால நியாயமே இல்லாம உங்கட குடும்பம் அனுபவிக்கிற கஸ்டங்கள் எனக்கு விளங்குது. அதுக்காக இந்தக் கலியாணத்த அர்த்தமில்லாம ஆக்க நான் விடமாட்டன். அண்டைக்குச் சொன்னதுதான். இந்தக் கலியாணம் அப்பிடி ஒண்டும் இல்லாததா போகோணுமா இருந்தா, இந்த உலகத்தில நான் இல்லாம போனா மட்டும்தான் நடக்கும். சோ, இத ஏற்றுக்கொள்ளுறதுக்கு நீங்க ரெடியாகுங்க!” என்று மூவருக்கும் பொதுவாகச் சொன்னான் அவன்.
மதியழகனுக்கு மனம் பொறுக்கவே இல்லை. இந்த வீட்டுக்கு வருகிற ஒவ்வொரு முறையும் எப்படியாவது பேசி, அவன் மனத்தை மாற்றி, மகளை அழைத்துக்கொண்டு போய்விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டுதான் வருகிறார்.
அவனும் ஒவ்வொரு முறையும் ஆணவாகாமவும் அதிகமாகவும் எதையாவது சொல்லி அவரைக் கொந்தளிக்க வைத்துவிடுகிறான்.
அதில், “எப்பிடி இப்பிடி மனச்சாட்சியே இல்லாம கதைக்கிறீங்க? எந்த அடிப்படையில இந்தக் கலியாணத்தை நாங்க ஏற்றுக்கொள்ளுறது? நீங்க எப்பிடி எங்கட பிள்ளைக்கு பொருத்தமா இருக்க முடியும்? உங்கட கௌரவத்தை காப்பாத்துறதுக்கு எங்கட மகளின்ர வாழ்க்கைய நாசமாக்குவீங்களா? நானும் இந்த ஒரு கிழமையா யோசிச்சிப் பாத்திட்டன். எங்களால இதுக்குச் சம்மதிக்கவே ஏலாது. இனி நடக்கிறது நடக்கட்டும். என்ன வந்தாலும் பாக்கலாம் எண்டுற மனநிலைக்கு நாங்க வந்தாச்சு. நான் வெளில வந்து சொல்லத்தான் போறன்!” என்று சொன்னார் மதியழகன்.
உண்மையிலேயே மதியழகன் அந்த மனநிலைக்குத்தான் வந்திருந்தார். அந்தளவில் வெளியுலகத்து அழுத்தங்கள் அவரை அழுத்தின. இதற்குப் பிறகும் வாழத்தான் வேண்டுமா என்று நினைக்கிற அளவுக்கு வந்திருந்தார்.
அடுத்த திங்களில் இருந்து அவர் பாடசாலைக்கு வேறு போக வேண்டும். அங்கே என்னவெல்லாம் அவமானங்கள், சங்கடங்கள் வரும் என்று அவரால் கணிக்கவே முடியவில்லை.
ஆனால் அவனோ, “நீங்க மூண்டு பேரும் இன்னும் என்ர கட்டுப்பாட்டுக்கத்தான் இருக்கிறீங்க.” என்றான் நிதானமாக.
அவ்வளவு நேரமாகப் பொறுமையாக வருணா கொதித்துவிட்டாள். “இருந்தா என்ன செய்வீங்க? எங்களக் கொல்லுவீங்களா? இல்ல உங்களுக்கு எவனோ குத்தினானே, அப்பிடி குத்துவீங்களா?” என்று கேட்டுக்கொண்டு அவன் முன்னே சென்று நின்றாள்.
“எவ்வளவு தைரியம் உனக்கு இப்பிடிச் சொல்ல? நாங்க என்ன பிழை செய்தனாங்க எண்டு உன்ர கட்டுப்பாட்டுக்கு இருக்க? இப்பிடி ஒரு குடும்பத்தையே அழ வச்சு அப்பிடி என்ன சந்தோசத்தை காணப்போறாய்? அந்தளவுக்கு மிருகமா நீ? ஈவு இரக்கமே இல்லாத அரக்கனா நீ?” என்று கட்டுப்பாட்டை இழந்து அவன் சட்டையைப் பிடித்தாள்.
பெற்றவர்கள் பயந்துபோனார்கள். “அம்மாச்சி! என்னம்மா செய்றாய்? வா இஞ்சால! வா எண்டு சொல்லுறன் எல்லா!” என்று ஓடி வந்து மகளை அவனிடமிருந்து பிரித்து நிறுத்தினார் மதியழகன்.
“விடுங்கப்பா. ஆகத்தான் ஆடுறான். என்னை வச்சுத்தானே இத்தனையும் செய்றான். ஒரு நாளைக்கு நானே இல்லாம போறன். அண்டைக்கு…” என்றவள் சொல்லி முடிக்க முதலே, “வருணா!” என்று உடல் நடுங்க மதியழகன் போட்ட பெரும் அதட்டலில் வருணா ஆடிப்போனாள்.

