தந்தையின் கோபத்தை இதற்கு முதல் எதிர்கொண்ட நினைவே அவளுக்கில்லை. பயத்தில் அப்படியே நின்றுவிட்டவளுக்குக் கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது.
மகளை அப்படிப் பார்க்க முடியாமல் மதியழகன் உடைந்துபோனார். “அவாட்ட இப்பிடிக் கோபப்படாதீங்க!” என்று வந்தான் கலிங்கராயன்.
மதியழகனுக்குச் சுள்ளென்று ஏறிற்று. இதற்குக் காரணமே அவன்தான். இதில் அவர் என்ன செய்ய வேண்டும் என்று வேறு சொல்வானா? “அவா என்ர மகள். எனக்கும் அவாக்கும் நடுவுல நீங்க வராதீங்க!” என்றார் பட்டென்று.
“ஓகே வரேல்ல. ஆனா உங்கட கோபத்தை அவாட்ட காட்டாதீங்க!”
அவருக்கு இன்னும் அவனில் எரிச்சல்தான். அவனை விட மகளைக் கவனிப்பது முக்கியமாகிவிட, “அம்மாச்சி!” என்று அவளிடம் விரைந்தார்.
“அப்பா அது கோபத்தில…”
“எனக்கு விளங்குதம்மா. ஆனா என்ர மகள நான் கோழையா வளக்கேல்லயே. இப்பிடி ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டுக் கதைக்கச் சொல்லித் தரவும் இல்லையே. என்னம்மா கத பேச்சு இது? அதுக்கா அம்மாவும் அப்பாவும் இருக்கிறோம்?” அவளைக் குழந்தையாகப் பாவித்து எடுத்துச் சொன்னார் அவர்.
அவளும் அப்படியானவள்தான். என்ன, நடந்தவை அவள் இயல்பாய் பறித்திருந்தன. “எனக்கு இஞ்ச இருக்க விருப்பம் இல்லை அப்பா. எப்பிடியாவது என்னைக் கூட்டிக்கொண்டு போங்கப்பா.ப்ளீஸ்.” என்று அழுதாள் அவள்.
என்ன செய்வார் மதியழகன்? அவர் சக்தியை மீறியவனாக இருக்கிறானே அங்கே நிற்கிறவன். வெறுப்பும் குரோதமுமாக அவனைப் பார்த்தார் மதியழகன்.
அங்கே நடக்கிற அத்தனையையும் கல்லைப்போல் நின்று பார்த்திருந்தான் அவன். அதுவும் அவன் கவனம் முழுவதும் அவளில் மட்டுமே.
சிவசுந்தரிக்கோ அவளோடு தனியாகப் பேசியே ஆகவேண்டும் என்கிற நிலை. அந்தளவில் மகள் படுகிற பாடு, இந்த வீட்டில் அவளுக்கு வேறு எதுவும் நடந்திருக்குமோ என்கிற பயத்தை விதைத்தது.
“நீ எங்கயம்மா இருக்கிறாய்?” அந்த மாளிகையைச் சுற்றிப் பார்வையைச் சுழற்றியபடி வினவினார்.
“மேலே, மாடியில ஒரு அறையிலம்மா.” என்றவள், “வாங்க, நான் கூட்டிக்கொண்டு போறன்.” என்று அவரை அழைத்தாள்.
அவருக்கு அந்த அறையைப் பார்க்க வேண்டும். அவளிடம் சிலவற்றைத் தனியாகப் பேச வேண்டும். அவள் முன்னால் செல்ல, பின்னால் சென்ற சிவசுந்தரியின் கால்கள் தயங்கி நின்றன. திரும்பிக் கலிங்கராயனைப் பார்த்தார்.
ஏற்கெனவே அந்த வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள் அவர்கள். அப்படியிருக்க, அந்த மாடிக்குச் செல்வதற்கு அவருக்கு அனுமதி இருக்கிறதா என்று அவருக்குத் தெரியவில்லை.
“இது உங்கட மகளின்ர வீடு.” என்றான் அவன் சுருக்கமாக.
“ஓமோம்! அதான் போனமுறை அப்பிடி உங்களை அனுப்பினவர்!” என்று அவனைப் பார்வையால் எரித்துவிட்டு, “நீங்க வாங்கம்மா!” என்று அவரை அழைத்துக்கொண்டு மேலே போனாள் வருணா.
மதியழகனுக்கோ அவன் சொன்ன அந்த ஒற்றை வரி, நிறைய விடயங்களை சொல்லிற்று.
அவன் முன்னால் மூன்று உயிர்கள் இப்படிப் பரிதவிக்கிறார்கள். ஆனாலும் கொஞ்சம் கூட இறங்காமல் தன் பிடியிலேயே நிற்பவனைக் கண்டு அவருக்குள் ஆத்திரமும் வெறுப்பும் உண்டாயின.
“ஏன் இப்பிடி எங்கள வதைக்கிறீங்க? எப்ப பாத்தாலும் கத்தி, ரத்தம், அடிதடி எண்டு நீங்க வாழுற வாழ்க்கை வேற. வரதன் உங்கள பற்றிச் சொல்லுரதக் கேக்கவே பயமா இருக்கு. உங்களுக்கு எங்கட மகள் பொருத்தமானவா இல்லை. உங்களுக்கு என்ன வேணுமெண்டு சொல்லுங்க. என்னட்ட பெருசா சொத்துப்பத்து இல்ல. ஆனாலும் இருக்கிற எல்லாத்தையும் தாறன். அவாவை மட்டும் விட்டிடுங்க. என்னால என்ர பிள்ளையை இப்பிடிப் பாக்கேலாம இருக்கு.” மதியழகனின் குரல் கடைசியில் கெஞ்சலாக மாறியிருந்தது.
“உங்கட மகள் மட்டும்தான் வேணும்.” என்றான் அவன் அத்தனைக்குமான பதிலாக.
அவரிடமே இப்படிச் சொல்ல அவனுக்கு எவ்வளவு தைரியம் என்று மதியழகனின் உள்ளம் கொதித்தது.
“நடந்த கல்யாணம் இனி மாறப்போறேல்ல. மற்றபடி, என்னைச் சுற்றி என்ன பிரச்சினை நடந்தாலும், எந்த ஆபத்தும் உங்கட மகளை நெருங்காது. அதுக்கு நான் பொறுப்பு. அவா இஞ்ச நிம்மதியா, சந்தோசமா இருப்பா.”
“அப்பிடி எப்பிடி நிம்மதியா இருப்பா? பிடிக்காத ஒருத்தனோட பிடிக்காத வாழ்க்கைல எப்பிடிச் சந்தோசமா இருப்பா? வெளி உலகம் அவாவைப் பற்றி என்ன கதைக்குது எண்டு இன்னும் அவாக்குத் தெரியாது. தெரிஞ்சுது தாங்க மாட்டா. அதுக்குப் பிறகும் நிம்மதியா இருப்பா எண்டு சொல்லுறீங்களா?”
அதெல்லாம் தெரிந்து அவனை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டுத்தான் அவள் இருக்கிறாள் என்று அவருக்கு எங்கே தெரியப்போகிறது?
“எதையும் நிறைய நாளைக்கு மறைக்கேலாது. அதே மாதிரி இந்த விருப்பு வெறுப்பு எல்லாம் நிரந்தரமும் இல்ல. எல்லாம் மாறும்.” என்றுவிட்டு எழுந்துபோனான் அவன். அப்படியே அமர்ந்துவிட்டார் மதியழகன்.
*****
ஏதோ ஒரு பெரும் ஆபத்துக்குள் நுழைவதைப் போன்ற மனநிலையுடன்தான் மாடிப்படிகளில் ஏறினார் சிவசுந்தரி. மேலே வந்த பின்னரும், அவர் பார்வை அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி அலைந்தது.
வருணா அவரைத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள்.
சகல வசதிகளுடனும் கூடிய பெரிய அறை. ஆனால், அதன் செழிப்பையோ அழகையோ வசதிகளையோ ரசிக்கும் நிலையில் சிதசுந்தரி இல்லை. அவருடைய மனத்தில் சில கேள்விகள் இருந்தன. அவற்றை மகளிடம் எப்படிக் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.
அங்கிருந்த கப்போர்டுகளைத் திறந்து பார்த்தார். பாத்ரூமைப் பார்த்தார். கட்டிலைக் கவனித்தார். எங்கும் ஒரு ஆணின் அடையாளங்கள் இல்லை. உள்ளூர ஒரு சின்ன ஆறுதல். ஆனாலும், “அந்தத் தம்பி… அவரின்ர அறை…” அவருக்கு அதை மக்களிடம் கேட்கவே முடியவில்லை.
“பக்கத்து அறைதானம்மா…” தாய் என்ன நோக்கில் விசாரிக்கிறார் என்பதை உணராமல் சொன்னாள் வருணா.
“வேற… வேற எந்த வகையிலயும் உன்னைக் கஷ்டப்படுத்துறாராம்மா?” என்று மெல்லக் கேட்டார்.
அப்போதுதான் தாயைத் திரும்பிப் பார்த்த வருணாவுக்குச் சட்டென்று விடயம் பிடிபட்டுப் போயிற்று. அடுத்த கணமே ஓடிச்சென்று அவரை கட்டிக்கொண்டு, “நீங்க பயப்பிடுற மாதிரி ஒண்டும் நடக்கேல்ல அம்மா. இன்னும் சொல்லப்போனா இப்ப வரைக்கும் இந்த அறைக்க அவர் வந்ததே இல்ல.” என்று சொன்னவளுக்கும் அப்போதுதான் இன்னொன்றும் புரிந்தது.
இந்தத் திருமணம் என்றைக்கும் மாறாது, கடைசிவரைக்கும் அவள்தான் தன் மனைவி என்று அத்தனை ஆணித்தரமாகச் சொல்கிறவன், தன் உரிமையை நிலைநாட்டுகிறேன் என்று அவளை நெருங்கவில்லை. ஏன், பார்வையால் கூட அவளை அசூசையாக உணரவைக்கவில்லை.
அப்படி ஒன்று நடந்திருந்தால் மனத்தளவில் மரணித்திருப்பாள். நிச்சயம் அவளால் அதைத் தாங்கிக்கொண்டிருக்கவே முடியாது.
மகள் தந்த அந்தப் பெரும் ஆசுவாசத்திலும் நிம்மதியிலும் தன்னை மீறிச் சென்று கட்டிலில் அமர்ந்தவருக்கு அப்போதுதான் கொஞ்சமேனும் சுவாசிக்கக் கூடியதாக இருந்தது.
ஓடி வந்து அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டவளுக்கு தன்னை விடவும் அவர்கள் பலவற்றையும் எண்ணி மிகவுமே கலங்கிப்போயிருக்கிறார்கள் என்று நன்றாகவே புரிந்தது.

