அதில் எழுந்து அமர்ந்துகொண்டு, “நீங்க எப்பிடி இருக்கிறீங்கம்மா? வெளில என்ன கதைக்கினம்? உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா? எனக்கு ஒன்றுமே தெரியாம்மா.” என்று கேட்டாள்.
“எங்களுக்கு என்ன பிள்ளை? ஒரு குறையும் இல்ல. வெளில போக எண்டு வெளிக்கிட்டா மட்டும் எங்க இருந்து வாறாங்கள் எண்டு தெரியாம ரெண்டு பேர் வந்து நிப்பாங்கள். மற்றும்படி எங்களை எந்தத் தொந்தரவும் செய்றேல்ல. எண்டாலும் எங்களுக்குத்தான் ஒரு மாதிரி இருக்கும். அப்பா அவசியம் தவிர்த்து வெளில போறதையே விட்டுட்டார்.” என்றவர் அவள் கையைப் பற்றிக்கொண்டு, “எங்கட கவலையெல்லாம் நீ எப்பிடி இருக்கிறாய், உனக்கு என்ன நடக்குதோ எண்டுதான்.” என்று சொன்னார்.
“இல்லையம்மா. உண்மையாவே எனக்கு இஞ்ச எந்த கஷ்டமும் இல்ல. இந்த வாழ்க்கைய என்னால ஏற்கவே ஏலாம இருக்கு. இதில இருந்து வெளில வந்திடேலாதா எண்டு இருக்கு.
அதோட, நீங்களும் அப்பாவும் எப்பிடி இருக்கிறீங்களோ, என்ன செய்றீங்களோ எண்டு அது ஒரு கவலை. அவ்வளவுதான். மற்றும்படி நீங்க பயப்பிடுற மாதிரி எதுவும் நடக்கேல்ல. என்னை ஆரும் எந்த விதத்திலயும் கஷ்டப்படுத்துறதும் இல்ல.” என்று அவர் கலக்கத்தை இன்னும் தெளியவைத்தாள்.
தன்னைத் தேடி வந்த மாறன் அபாண்டமாகப் பழி சுமத்திவிட்டுப் போனதைச் சொல்லிவிட்டு, “உங்களையும் வந்து பாத்தவராம்மா? வரதன் அங்கிள்? மாமா… அது அவர் விஜயராஜன் அங்கிள் ஆறும் வந்தவையா?” என்று விசாரித்தாள்.
அதற்கு சிவசுந்தரி அம்மாவுக்கு அதற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
இன்று இவர்கள் அனுபவிக்கிற அத்தனை துன்பத்திற்கும் அவர்கள்தான் காரணம். ஆனாலும் அவர்கள் இவர்களை பற்றிச் கொஞ்சம் கூடக் கவலை கொள்ளவில்லை. எப்படி அவளை மீட்கலாம் என்றுகூடப் பார்க்கவில்லை.
தாமும் அப்படியே இருக்க முடியாமல் மதியழகன் ஒருமுறை நேராகச் சென்று விஜயராஜனையும் வரதனையும் சந்தித்துப் பேசியிருந்தார். தன்னுடைய மகளை இந்தச் சூழ்நிலையிலிருந்து விடுவிக்க அவர்களால் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டுப் பார்த்திருந்தார்.
அதற்கு, “அதான் உங்கட மகள் அவனைக் காதலிச்சுக் கல்யாணம் செய்திருக்கிறாவாமே? பிறகு என்னத்துக்கு இஞ்ச வந்து கேக்கிறீங்க?” என்று சீறியிருந்தார் விஜயராஜன்.
வரதனோ, “என்னால முடிஞ்சதைப் பார்க்கிறன். ஆனா எதையும் மாத்தலாம் எண்டுற நம்பிக்கை எனக்கு இல்ல. அந்தளவுக்கு அவன் கெட்டவன். ரவுடி. தாய் தகப்பன் ஆர் எண்டு தெரியாதவன். ரோட்டுல வீசின மிச்சம் திண்டு வளந்தவன். உங்கட மகளைச் சீரழிக்காம விடமாட்டான்.” என்று சொல்லி அனுப்பியிருந்தான்.
அதை அறிந்ததிலிருந்து மதியழகனின் மிச்சம் சொச்சமாக இருந்த நிம்மதியும் போயிருந்தது.
இவற்றை எல்லாம் அவளிடம் சொல்ல முடியாமல், “அவே அவேக்கு அவேட பிரச்சினைகள் தானேம்மா பெருசு. எங்களப் பற்றி ஏன் யோசிக்கப்போயினம்?” என்றார் விரக்தியோடு.
அவருடைய அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் நிறைய விடயங்கள் மறைந்திருப்பதை வருணாவால் புரிந்துகொள்ள முடிந்தது. சில கணங்கள் தன் மடியில் இருந்த விரல்களையே பார்த்துக்கொண்டிருந்தவள், மெல்ல நிமிர்ந்து, “அது என்னவோ உண்மைதானம்மா…” என்றாள்.
அந்தத் தாய், மகள் இருவருடைய மனங்களிலும் ஆயிரம் துயரங்கள் தேங்கிக் கிடந்தன. இருவருமே தங்களுடைய வேதனைகளை மற்றவரிடம் வெளிக்காட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். அதனால், ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்துத் தேர்ந்தெடுத்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது, “வருணா!” என்று கீழிருந்து கலிங்கராயனின் குரல் கேட்டது.
தாயையும் அழைத்துக்கொண்டு கீழே வந்தாள் வருணா.
மதியழகன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். இவன் எங்கே என்று பார்க்க, அவன் அங்கே சமையலறையில் நின்றிருந்தான்.
அங்கே போனவளிடம் சமைக்கும் மேடையின் ஒரு பக்கம் கண்ணால் காட்டினான். அவன் காட்டிய திசையில் அவள் திரும்பிப் பார்த்தாள். ஒரு தட்டில் அவர்கள் மூவருக்குமான தேநீரும், இன்னொரு தட்டில் மிக்சரும் வைக்கப்பட்டிருந்தன.
அன்றைக்கு அவமானப்படுத்தி வீட்டை விட்டுத் துரத்திவிட்டு இன்றைக்கு உபசரிப்பானா? “அவேக்கு வேண்டாம். வீட்டிலேயே சாப்பிட்டுட்டுத்தான் வந்திருப்பினம்.” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தாள் அவள்.
எட்டி அவள் கரம் பற்றி நிறுத்தி, “இனி அப்பிடி நடக்காது எண்டு அண்டைக்கே சொல்லிட்டன் எல்லா.” என்றான் அவன்.
அவன் சொன்னால் ஆயிற்றா. அன்று நடந்தது நடந்ததுதானே என்று குமுற, “அவே ஒண்டும் உங்களிட்ட விருந்து சாப்பிட வரேல்ல.” என்றாள் அவள்.
“பரவாயில்ல. ஆனா, அவே கேட்டு வந்தவள் இனி எனக்குச் சொந்தம். அவளைக் கேட்டு எத்தின தரம் வந்தாலும் குடுக்க மாட்டன்!” என்றான் அவன் அவளையே பார்த்து.
இதற்கு சட்டென்று பதில் சொல்ல வராமல் அவனையே பார்த்து நின்றாள் வருணா.
“இது உன்ர வீடு. உன்ர வீட்டுக்கு உன்னைப் பாக்க வந்திருக்கிற உன்ர அம்மா அப்பாவ நீதான் கவனிக்கோணும். இதக் கொண்டுபோய்க் கொடு.” என்று அந்தப் பெரிய தட்டை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
கிடைக்கிற சந்தர்ப்பத்திலெல்லாம் இனி அவள் வாழ்க்கை அவனோடுதான் என்பதைச் சொல்லி, அவளில் பதிய வைக்க அவன் முயல்வது மிக நன்றாகவே தெரிந்தது வருணாவுக்கு. நெஞ்சம் அடைத்துக்கொள்ள, அவன் தந்ததை வாங்கிக்கொண்டு சென்றாள்.
பெரியவர்களுக்கு அவற்றைத் தொடுவதற்குக் கூட மனமில்லை. தங்களுடைய மகளை இந்த நிலைக்குக் கொண்டுவந்தவனுடைய வீட்டில் அமர்ந்து, விருந்தாடுவது என்பது பெரும் கசப்பாகத்தான் இருந்தது.
ஆனால், கொண்டுவந்து தருவது அவர்களின் மகளாயிற்றே. அவளிடம் எப்படி மறுப்பது? அதை யோசித்துத்தான் அவனும் அவளிடம் கொடுத்துவிட்டிருக்கிறான் என்று புரிந்ததும் அவளிடம் வணங்கி மேசையில் வைத்தார் மதியழகன்.
அப்போதுதான் தன் தந்தையின் முகத்தைப் பார்த்தாள் வருணா. அவருடைய முகம் வெளிறிப்போயிருந்தது. காரணம் என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும், அவருடைய முகத்தில் தெரிந்த வேதனையைப் பார்த்ததும் அவளுடைய விழிகள் கலங்கின.
“என்னப்பா? என்ன நடந்தது?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.
மதியழகன் எதுவும் பேசாமல் தன் மகளின் தலையை வருடிக் கொடுத்தார். “அப்பா, என்னம்மா செய்ய? அப்பான்ர சக்திக்கு உட்பட்டு முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்து பாத்திட்டன். என்னால இஞ்ச இருந்து உங்கள கூட்டிக்கொண்டு போகேலாம இருக்கு. இனி என்னம்மா செய்ய?” என்று மனம் உடைந்து அவளிடமே கேட்டார்.
என்ன நடந்தது என்று முழுமையாகப் புரியாதபோதும், தன் தந்தைக்கும் கலிங்கராயனுக்கும் இடையில் ஏதோ பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது என்பது மட்டும் வருணாவுக்குப் புரிந்தது.
கண்கள் கலங்கியபடி தந்தையைப் பார்த்தவளின் மனத்தில் அப்படியொரு வேதனை.
“இல்லையப்பா, இனி நீங்க ஒண்டும் கதைக்க வேண்டாம். என்ர தலைல என்ன எழுதி இருக்கோ அதுப்படி நடக்கட்டும். அதே மாதிரி செய்ற பாவத்துக்கு எல்லாரும் அனுபவிப்பினம். கட்டாயமா அது நடக்கும் அப்பா!” கிட்டத்தட்ட சாபமிடுவதுபோல் அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டுதான் நின்றான் கலிங்கராயன்.
“நாங்களும் ஏதோ பாவம் செய்திருக்கிறம் போல அப்பா. அதான் இந்தப் பாவத்துக்கு வந்து விழுந்திருக்கிறம் போல. அதுவும் நான் என்னவோ பெருசா செய்திட்டன் போல. நீங்க கவலைப்படாதீங்கப்பா. நான் இருப்பன். எனக்கு ஒரு கவலையும் இல்லை, கஷ்டமும் இல்லை” கண்ணீர் வழிய வழிய அவள் சொல்ல, அவர்களும் கண்ணீருடன் கேட்டுக்கொண்டு புறப்பட்டார்கள்.
அன்றைக்குப் பிறகு கலிங்கராயனுக்கு வருணா முகம் கொடுப்பதே இல்லை. முன்னர் கோபமாகவோ குத்தலாகவோ பேசிக்கொண்டிருந்தவள் இப்போது அதைக்கூடச் செய்வதில்லை.
உணவு உண்ணாமல் இருக்க விடமாட்டான் என்று தெரிந்து அவன் வர முதலே எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு போய்விடுவாள்.
அவள் பெற்றோர் வந்துவிட்டுப் போன அன்று, அவள் கைப்பேசி கீழேயே கேட்பார் இன்றிக் கிடைப்பதைக் கண்டுவிட்டு, அதை எடுத்துக்கொண்டு போய்க்
கொடுத்தபோது, “மரியாதையா கொண்டுபோயிடுங்க! இல்லையோ நீங்க என்னை என்ன செய்தாலும் பரவாயில்ல எண்டு கட்டாயம் அத எறிஞ்சே உடைப்பன்.” என்றிருந்தாள் அவள் ஆத்திரத்தில் முகம் சிவக்க.

