கலிங்கனின் காவியம் 23.1

அத்தியாயம் 23

வரதன் குள்ளநரித்தனத்திலும் குறுக்குப் புத்தியிலும் ஊறிப்போனவன். யாரை எங்கே அடித்தால் எப்படி வலிக்கும் என்பதையும், எதைத் தொட்டால் எப்படியான மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதையும் நன்கு அறிந்தவன்.

ஆனால், திருமண மண்டபத்தில் கலிங்கராயன் வந்து திருமணத்தை இப்படிக் குழப்புவான் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதைவிட அவனுடைய நல்லவன் என்கிற பெயருக்கு உண்டான பெரும் கலிங்கத்திலும், காட்டுத் தீயைப் போன்று அது மக்களிடையே பரவியத்திலும் நிலைகுலைந்துபோனான்.

ஆனாலும், எப்படிப்பட்ட சிக்கலையும் தன்னுடைய குறுக்குப் புத்தியால் கையாளப் பழகியிருந்தவன் விரைவிலேயே சுதாரித்துக்கொண்டான். தன்னுடைய இயல்பான குணத்துக்கு ஏற்ப விரைவிலேயே அதிலிருந்து மீண்டுகொண்டான். மீண்டதோடு நின்றுவிடாமல், இந்தப் பிரச்சனையை எப்படிச் சரிசெய்வது என்று யோசிக்கத் தொடங்கினான்.

அதன் விளைவாகத் தன்னுடைய பணத்துக்கும் அதிகாரத்துக்கும் அடங்கிய சில பத்திரிகையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் அழைத்தான்.

அவர்களிடம், “என்னுடைய அப்பா காலத்திலிருந்தே எங்களால் முடிந்த உதவிகளைப் பலருக்கும் செய்து வந்திருக்கிறோம். எங்களை நம்பி வந்தவர்களை ஒரு நாளும் நாங்கள் கைவிட்டதில்லை. எத்தனை கோயில் குளங்களுக்கு பள்ளிக்கூடங்களுக்கு வைத்தியசாலைகளுக்கு அநாதை ஆச்சிரமங்களுக்கு செய்தோம் என்கிற எண்ணிக்கையே இல்லாத அளவிற்கு செய்திருக்கிறோம். அப்படிப்பட்ட எங்கள் குடும்பத்தின் மீது இன்று இப்படியெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால், காய்க்கிற மரம்தானே கல்லடி படும்.

“கலிங்கராயனைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் நிறையச் சொல்லலாம். வளர்ந்த ஆசிரமத்திலிருந்து தப்பி ஓடி வந்தவன். சின்ன வயதிலிருந்தே துறைமுகத்தில் என்னிடம் வேலை பார்த்தவன். அந்தக் காலத்திலேயே பல தவறுகளையும் களவுகளையும் செய்து தண்டிக்கப்பட்டவன். களவு அவனுக்குக் கைவந்த காலை. நான் சொல்வது உண்மையா இல்லையா என்று அறிய, இப்போதும் நீங்கள் காவல்துறையிலோ துறைமுக ஆவணங்களிலோ பார்க்கலாம்.

ஆனால், அவனை நல்ல வழியில் திருத்துவதற்கு, நாளைக்கு இந்தச் சமூகம் அவனைக் கள்ளன் என்று முத்திரை குத்திவிடக் கூடாது என்பதற்காகவும் பலமுறை அவனைக் கூப்பிட்டுக் கண்டித்திருக்கிறேன். திருத்த முயன்றிருக்கிறேன். முடியாத பொழுதுகளில் தண்டனையும் கொடுத்திருக்கிறேன். இதையெல்லாம் மறைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

“அவனை நல்வழிப்படுத்துவதற்காக நான் செய்தவை அவன் மனத்தில் வன்மத்தை வளர்த்திருக்கலாம். என்னை பழிவாங்கும் வெறியைக் கொடுத்திருக்கலாம். இதையெல்லாம் அறியாமல்தான் அந்தப் பெண் வருணாவுக்கும் என் பெறா மகனுக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தோம்.

“ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வதுபோல் அவன் காதலைக் காப்பாற்றியதும் ஆயிற்று. என்னை பழி வாங்கியதும் ஆயிற்று என்று அவன் செய்த காரியம் இன்று என் பக்கம் திரும்பியிருக்கிறது.

அவன் காரை அவனே எரிப்பதோ, இன்றைய காலத்தில் எல்லாவற்றையும் காணொளியாக எல்லோரும் எடுப்பார்கள் என்று தெரிந்தே வேண்டுமென்றே வீர வசனம் பேசுவதோ ஒரு விடயமே இல்லை என்பதையும் நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.

“உண்மையில் எனக்கு இந்த விளக்கத்தை எல்லாம் சொல்ல விருப்பம் இல்லை. என்னை அறிந்த, தெரிந்த மனிதர்களுக்கு நான் யார் என்று தெரியும். அவர்கள் ஒரு போதும் என்னைத் தவறாக நினைக்க மாட்டார்கள். ஆனாலும் கூட, என் பக்கமிருந்து நான் விளக்கம் சொல்லாமல் இருப்பதே, அவன் என் மீது வைக்கிற குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக்கொள்வது போலாகிவிடுமோ என்றுதான் இந்த விளக்கமும்.” என்று மிக மிகக் கெட்டித்தனமாகச் சொன்ன வரதன் அதோடு நிறுத்திவிடவில்லை.

“இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இதுபோன்ற அர்த்தமற்ற விடயங்களை பேசுவதற்காக ஒழுங்குசெய்யப்பட்டதல்ல. முக்கிய விடயம் வேறு. இந்த வருடம் உயர்தரத்தில் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்த மாணவ மாணவியர் அனைவருக்கும் இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்கள் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.” என்று சொல்லி, அது எங்கே, எப்போது இடம்பெறுகிறது என்றும் தெரிவித்து, அந்தப் பத்திரிகையாளர் ஒன்றுகூடலை முடித்தான் வரதன்.

அதோடு அவன் விடவில்லை. அந்தக் காலத்திலிருந்தே துறைமுகத்தில் வேலை செய்யும் சிலரை அணுகி, இதை பற்றிக் கேட்டு பதிவேற்றவும் ஏற்பாடு செய்தான்.

எதேச்சையாக நடப்பதுபோலவும், துறைமுகத்தில் வேலை செய்பவர்கள் தங்களுடைய அனுபவங்களை இயல்பாகப் பகிர்ந்துகொள்வதுபோலவும் அந்தக் காணொளிகள் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.

அவனுக்கு அடங்கிய குறிப்பிட்ட சில தொலைக்காட்சி நிறுவனங்கள், யூடியூப் சேனல்களை நடத்துபவர்கள், முகநூலில் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டவர்கள் அனைவரையும் தன் பணத்தால் வாங்கி, இந்த விடயத்தைத் திரும்ப திரும்ப பேச வைத்து, அவன் மீது விழுந்த பழியை ஒன்றுமில்லாமல் ஆக்கி, அதை அப்படியே காலிங்கராயன் மீது திருப்பியிருந்தான்.

அவற்றுக்கு மிக நல்ல பலன் இருந்தது. காலிங்கராயன் ஆசிரமத்தில் வளர்ந்தது, அவன் செய்த திருட்டுகள், களவுகள் அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு, அவன் விவாதப் பொருளானான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கலிங்கனின் மனம் கொந்தளித்தது. ஆத்திரத்தில் பற்களைக் கடித்தான். அவனுக்குள் பொங்கிய கோபம் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

அவனொன்றும் இதற்காகவெல்லாம் வெட்கப்படுகிறவன் இல்லை. அதுதான் அவன். அப்படித்தான் அவனுடைய வாழ்க்கை அமைந்திருந்தது.

எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும் தவறான பாதையில் சென்றவன் அல்ல அவன். எதுவுமே கிடைக்காத நிலையில், கிடைத்ததைப் பற்றிக்கொண்டு மேலெழுந்து வந்தவன். விதிவசத்தால் அவனுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை. வயிற்றுப் பசிக்காக பற்றிக்கொண்ட வழி.

எது சரி, எது தவறு என்று பிரித்தறியும் பக்குவம் வருவதற்கு முன்பே, அந்தப் பாதையில் திரும்பி வர முடியாத அளவுக்குப்
பயணித்துவிட்டிருந்தான்.

அதில் அவனுக்குப் பெரிய குற்றவுணர்வோ, வருத்தமோ இருந்ததில்லை. இப்போதும் கூட!

ஆனால், அவனுடைய கடந்த காலத்தையே ஆயுதமாக்கி, தன்னுடைய தவறுகளையும் தப்புகளையும் மூடி மறைத்துவிட்டு, மீண்டும் நல்லவன் வேடம் போடும் வரதனை சும்மா விட அவனுக்கு மனமில்லை. கடகடவென்று அதற்கான வேலைகளை பார்த்துவிட்டுத்தான் ஓய்ந்தான்.

*****

தான் கட்டமைத்த செய்திகள் பரவும் வேகத்தையும், அதனால் மக்களிடையே ஏற்பட்டுக்கொண்டிருந்த மாற்றத்தையும் கண்ட வரதன், கெக்கலி கொட்டிச் சிரித்தான். அவனுக்கு அத்தனை பேரானந்தமாக இருந்தது.

நேற்று வந்தவன், ஊர் பெயர் தெரியாதவன், குலம் கோத்திரம் இல்லாதவன் நாலு பணம் பார்த்ததும், பரம்பரை பரம்பரையாக இந்த மண்ணில் காலூன்றி நிற்கும் தன்னை அசைத்துவிடுவானா என்று இறுமாப்புடன் நெஞ்சை நிமிர்த்தினான்.

அந்த நேரத்தில்தான் அவனுக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்தது. பெரும் தொகையான போதைப்பொருளை வெற்றிகரமாகக் கைமாற்றிக் கொடுத்தால் கோடிகளில் பணம் புரளும். அந்தச் செய்தியைக் கேட்டதும் அவனுடைய மகிழ்ச்சிக்கும் உற்சாகத்துக்கும் அளவே இல்லாமல் போயிற்று.

ஒருபுறம், கலிங்கராயன் தனக்கு எதிராக உருவாக்கியிருந்த பெரும் சதிவலையைத் தானே கிழித்து, அதே வலையில் அவனைச் சிக்கவைத்துவிட்ட மகிழ்ச்சி. மறுபுறம், கோடிகளில் பணம் புரளப்போகும் இந்தப் புதிய ஆர்டர். இரண்டும் சேர்ந்து அவனைப் பேருற்சாகத்தில் ஆழ்த்தின.
அந்த உற்சாகத்துடனேயே புதிய ஆர்டருக்கான வேலைகளைத் தொடங்கினான் வரதன்.

இந்தச் செய்திகளை எல்லாம் பார்த்த வருணாவின் பெற்றோர் மேலும் நிலைகுலைந்து போனார்கள். போராடி வெல்லவே முடியாத ஓர் இடத்தில் மகள் மொத்தமாகச் சிக்கிக்கொண்டுவிட்டாள் என்கிற வேதனையுடன்தான் கடந்த முறை கலிங்கராயனின் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்திருந்தார்கள்.

ஆனால், இன்றைக்கு சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் அவனைப் பற்றிப் பேசப்படும் செய்திகளைக் கேட்க கேட்க, முற்றிலுமாக உடைந்துபோனார்கள்.

குரங்கின் கையில் பூமாலை கிடைத்ததுபோல, தங்களுடைய மகளின் வாழ்க்கை இப்படியொரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்கிற முடிவுக்கு வந்த மதியழகன், தங்களுக்குக் காவலாக இருந்தவர்களையும் மீறிக்கொண்டு கலிங்கராயனின் மாளிகைக்குப் புறப்பட்டு வந்தார்.

error: Alert: Content selection is disabled!!