அப்படி அவர் புறப்பட்ட நொடியிலேயே அந்தச் செய்தி கலிங்கராயனுக்குக் கிடைத்துவிட்டது. நேராக தன் மாளிகைக்கு வந்து, அவரை வரவேற்பவன் போன்று சோபாவில் அமர்ந்துகொண்டான்.
வந்ததும் வராததுமாக, “இதுக்கு மேலேயும் எங்களால பொறுத்துக்கொண்டு இருக்கேலாது. ஒண்டு எங்கட மகளை என்னோட அனுப்பிவிடு. இல்லையா எங்க மூண்டு பேரையும் கொன்றுவிடு. உன்ன மாதிரி ஒருத்தனிட்ட எங்கட மகளை விட்டுவைக்கேலாது. உன்னைப் பற்றி ஊரே பேசுது. கேக்க கேக்க நெஞ்செல்லாம் நடுங்குது. போதும்! நாங்க அனுபவிச்சது எல்லாமே போதும். கூப்பிடு, எங்கட மகளக் கூப்பிடு!” வெறிகொண்டவர் போலக் கத்தினார் மதியழகன்.
எப்போதுமே வருணாவின் அறையிலிருந்து பார்த்தால் கலிங்கராயனின் கார் வருவது தெரியும். அன்றைக்குப் பிறகு ஏதாவது தேவைக்காக வெளியே வருபவள், அவன் வருகிறான் என்று தெரிந்தாலே மீண்டும் தன்னுடைய அறைக்குள் சென்று அடைந்துகொள்வாள். அவனைப் பார்ப்பதோ, அவனுடன் பேசுவதோ கிடையாது.
அப்படியிருக்க, திடீரென்று கீழிருந்து தந்தையின் குரல் இவ்வளவு பெரிதாகக் கேட்கவும் அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது.
சட்டென்று கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தாள். கீழே தாயும் தந்தையும் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு எதிரே சோபாவில் கலிங்கராயன் அமர்ந்திருந்தான். தந்தை ஆவேசமாகக் கத்திக்கொண்டிருந்தார்.
ஒன்றுமே புரியாமல் படபடவெனப் படிகளில் இறங்கி ஓடிவந்தாள் வருணா. அவள் வருவதை பார்த்துவிட்டு விரைந்து வந்து அவள் கையைப் பற்றிக்கொண்டார் மதியழகன்.
“வாம்மா, போவம். இனி ஒரு நிமிஷம்கூட நீ இஞ்ச இருக்கக் கூடாது. என்ன நடந்தாலும் பரவாயில்ல. நாங்க போவம்!” என்று அவளை இழுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தார்.
வருணாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவரோடு இழுப்பட்டாலும் கலிங்கராயனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் நினைத்திருந்தால் அவரை இங்கே வர விடாமல் அவர்கள் வீட்டில் வைத்தே தடுத்திருக்கலாம். அன்று மாறனுக்கு நடந்தது போன்று வாசலிலேயே நிறுத்தியிருக்கலாம், இல்லை திருப்பி அனுப்பியிருக்கலாம்.
அதையெல்லாம் செய்யாமல், அவரை உள்ளே வர விட்டு, அவளை அவர் இழுத்துக்கொண்டு போவதையும் பார்த்துக்கொண்டு இருப்பது பெரும் முரணாகப் பட்டது.
வார்த்தைக்கு வார்த்தை இந்தக் கலியாணம் உடையாது, கடைசிவரை நீதான் என் மனைவி இறைவனுக்கு இன்று என்னாயிற்று?
“என்னப்பா நடந்தது?” என்று தந்தையிடம் திரும்பிக் கேட்டாள்.
“இன்னும் என்னம்மா நடக்கோணும்?” என்று ஆத்திரத்துடன் கேட்ட மதியழகன், தன்னுடைய கைப்பேசியை எடுத்து அவளிடம் காட்டினார்.
“இதப் பார்!”
தான் பார்த்த அந்தக் காணொளியைப் பார்த்துவிட்டார்களோ என்றுதான் வருணா முதலில் நினைத்தாள். ஆனால், அதில் கலிங்கராயனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அதைக் கெட்டவளுக்கு எப்படி உணர்வது என்றே தெரியவில்லை. அவர்கள் எல்லோரும் அவனைத் திருடன் என்றும், கள்ளன் என்றும், ஆசிரமத்தில் வளர்ந்தவன் என்றும் சொல்லிருக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அவனிடம் இருப்பதெல்லாம் அப்படித்தான் வந்திருக்குமாம் என்று சொல்லிக்கொண்டிருக்க, அவளுடைய மனமோ அவன் தாய் தந்தையற்றவனா? ஆதரவின்றி வளர்ந்தவனா? அனாதையா என்பதில் சிக்குண்டு நின்றது.
இந்தச் சில நாள்களாகத் தாய் தந்தையர் இல்லாமல் வாழ்வதற்கு அவள் எவ்வளவு சிரமப்படுகிறாள் என்று அவளுக்குத்தான் தெரியும். அப்படியிருக்க, சிறுவயதிலிருந்தே அவனுக்கு யாருமே இல்லையென்றால் அவன் எப்படி வாழ்ந்திருப்பான்?
அதற்கான பதில்களை கண்டுபிடிக்க அவளுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. கண்கள் கலங்கிய நிலையில் கைப்பேசியிலிருந்து பார்வையை உயர்த்திக் கலிங்கராயனைப் பார்த்தாள்.
அவனும் ஆடாமல் அசையாமல் ஒரு கற்சிலையைப் போல் அமர்ந்திருந்து, அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“இதுக்கு என்னப்பா?” என்று தந்தையைத் திரும்பிக் கேட்டாள்.
கலிங்கராயனின் தாடையோரத்துத் தசை துடித்தது. அமர்ந்திருந்த சோபாவின் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டு அப்படியே இருந்தான்.
“என்னம்மா கதைக்கிறாய்? இவன் எப்படியானவன் எண்டு இன்னுமா உனக்குத் விளங்கேல்ல? நாளைக்கு உனக்கும் ஏதாவது செய்ய யோசிக்கவே மாட்டான். நீ வா! என்ன நடந்தாலும் மூண்டு பேருக்கும் சேத்து நடக்கட்டும். ஆனால், ஒரு நிமிஷம் கூட நீ இஞ்ச இருக்கவே கூடாது!” என்று நின்றார் மதியழகன்.
“கட்டாயமா வாறன் அப்பா. எனக்கும் இஞ்ச மூச்சு முட்டுது. ஆனா, இது பிழையப்பா.” என்றாள் கைப்பேசியைக் காட்டி.
மதியழகன் திகைத்துப்போய் அவளைப் பார்த்தார்.
“வரதன் அங்கிள் நல்லவர் எண்டு அண்டைக்கே சொன்னேனே அப்பா. அது வேற. அதுக்காக இன்னொருத்தரின்ர கடந்த காலத்த வச்சு இப்படியெல்லாம் கதைக்கக் கூடாதே அப்பா. ஒரு சின்ன பிள்ளை சாப்பாட்டுக்கு என்னப்பா செய்வான்? பட்டினியா எத்தினை நாள் கிடப்பான்? இண்டைக்கு அவர் அப்பிடியாகி நிக்கிறார் எண்டா அதுக்கு அவர் மட்டுமே காரணம் எண்டு நினைக்கிறீங்களப்பா?”
கலிங்கராயன் இமைக்கவும் மறந்து வருனாவையே பார்த்திருந்தான்.
அவன் உடைந்து போன தருணங்கள் மிக மிகக் குறைவு. சிறுவயதில் பசிக்காக அழுதிருக்கிறான். பயத்தில் அழுதிருக்கிறான். அடிகளை வாங்கியபோது வலியைத் தாங்க முடியாமல் அழுதிருக்கிறான். ஆனால், அதற்குப் பிறகு அவன் அழுததே இல்லை.
அவனுக்குள் ஆத்திரங்களும் ஆவேசங்களும் மட்டுமே நிறைந்திருந்தன. கண்ணீரைத் தொலைத்துவிட்டு, கோபத்தையே துணையாகக் கொண்டு வளர்ந்தவன் அவன்.
அதற்குப் பிறகு, அவன் அழுதது தனக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகத்தின்போது மட்டும்தான்.
ஆனால், இன்றோ அவன் உடைந்துகொண்டிருந்தான். அவனுக்குள் இத்தனை காலமும் இறுகிக் கிடந்த மனம் சில்லுசில்லாக வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தது. தன் வாழ்க்கையில் யாரிடமிருந்தும் எதிர்பார்த்திராத ஒன்றை, தான் இத்தனை தூரம் நோகடித்த பெண்ணிடமிருந்து பெற்றுக்கொண்டிருந்தான்.
அவனைப் பற்றிய சமூகத்தின் தீர்ப்புகளுக்கு நடுவில், அவன் ஏன் அப்படியானான் என்று ஒருத்தி யோசிக்கிறாள். அவளை எப்படி அவன் விடுவான்?
துள்ளி எழுந்து வந்தவன் ஒற்றை சிலுவையில் அவளைத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்திருந்தான். வருணா அதிர்ந்து அவன் முகம் பார்க்க, “அண்டைக்குச் சொன்னதுதான். இவள் எனக்குச் சொந்தம். இன்னொருக்கா அவளைக் கூட்டிக்கொண்டு போற நினைப்பே உங்களுக்கு வரக் கூடாது!” என்றான் உறுதியான குரலில்.

