கலிங்கனின் காவியம் 24.1

அத்தியாயம் 24

மதியழகன் அங்கிருந்து புறப்பட்டதும், விடுவிடுவென்று மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினாள் வருணா. அப்போது, அவளுக்குப் பின்னிருந்து க்ளிக் என்று சத்தம் கேட்டது. கூடவே, “வருணா!” என்று அவன் குரலும்.

நின்று திரும்பிப் பார்த்தாள். ஹோலின் நடுவே கையில் சிகரெட்டுடன் நின்றிருந்தான் அவன். அதை ஒருமுறை வாயில் வைத்து இழுத்துப் புகையை வெளியே விட்டுவிட்டு, “அந்த வீடியோவில நீ பாத்ததெல்லாம் உண்மதான்.” என்று சொன்னான்.

அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் கையில் இருந்த சிகரெட்டைப் பார்த்துவிட்டு அவனைப் பார்வையாலேயே எரித்தாள்.

அப்போதுதான் அதையே உணர்ந்தவன் போன்று தானும் தன் கையில் இருந்த சிகரெட்டைப் பார்த்த கலிங்கராயன், மறுகணமே அதைச் சுண்டி எறிந்தான். அது வெளி முற்றத்தில் விழுந்து உருண்டது.

“இண்டைக்கு இருக்கிற இந்த நான் அந்த அடித்தளத்திலிருந்து வந்தவன்தான்.” என்றான் மீண்டும்.

“இதையெல்லாம் ஏன் என்னட்ட சொல்லுறீங்க?” பாதிப் பதியிலேயே கைகளைக் கட்டிக்கொண்டு நின்று நிதானமாகக் கேட்டாள் அவள்.

அவன் பேசாமல் அவளையே பார்த்து நின்றான்.

“எனக்கு இப்பிடியான ஒரு ரவுடியோட வாழ விருப்பமில்ல எண்டு சொன்னா விட்டுடுவீங்களா?”

அவன் முகத்தின் இறுக்கம் கூடிப்போயிற்று.

“சொல்லுங்க, விட்டுடுவீங்களா?”

“இல்ல.” என்றான் அவளையே பார்த்தபடி.

“அப்ப பிறகென்ன? என்னவோ பெரிய உண்மை விளம்பி மாதிரி எதையாவது சொல்லிக்கொண்டு வராதீங்க!” என்றுவிட்டு வந்து அறைக்குள் புகுந்துகொண்டாள்.

அவளுக்குத் தந்தையோடு போயிருக்கலாமோ, இவனுக்காகக் கதைக்கப் போய் மறுபடியும் அவனிடம் மாட்டிக்கொண்டோமோ என்கிற எண்ணமெல்லாம் இல்லை.

அதிகாரிகள், செல்வாக்கானவர்கள், காவல்துறையில் பணிபுரிந்தவர்கள் என்று அத்தனை பேரும் கூடியிருந்த மண்டபத்திலிருந்தே அவளைத் தூக்கி வந்தவன் அவன். அப்படியிருக்க அவனுக்கு அவள் வீடு எல்லாம் தூசு.

அவனாக விட்டால் ஒழிய அவளுக்கு இந்த வீட்டிலிருந்து விமோட்சனம் இல்லை என்பது இத்தனை நாள்களில் அவள் யோசித்துத் தெளிந்தது. பெரும் வலியாய் அவளை அது தாக்கினாலும் தனக்கு இனி இங்கேதான் வாழ்க்கையோ என்கிற கேள்வி அவளுக்குள் எழ ஆரம்பித்திருந்தது. கூடவே அவன் கடந்துவந்த பாதையும்.

பழையபடி அவன் முகம் பார்ப்பதோ அவனோடு பேசுவதோ இல்லை. ஆனால், அவன் சிறு வயது எப்படி இருந்திருக்கும் என்கிற யோசனை அவளை அலைக்கழிக்க ஆரம்பித்திருந்தது.

அவள் ஒற்றை பெண். பெரிய வசதியானவர்கள் இல்லை என்றாலும் அதிபரின் மகள் என்கிற மரியாதையோடும் சகல வசதிகளோடும் வளர்ந்தவள்தான் அவள். அப்படியிருக்க அவன்?

அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவள் பார்த்த அந்தக் காணொளி நினைவில் வந்தால் உள்ளத்தைப் பிசையும்.

அவளை பற்றிய பேச்சுகள் என்ன நிலையில் இருக்கின்றன என்றும் தெரியவில்லை. அது மண்டைக்குள் இருந்து ஓயாமல் குடைச்சல் குடுத்துக்கொண்டிருந்தாலும் அவளுக்கு அதை அறிந்துகொள்ளவும் விருப்பமில்லை. இருக்கிற மனவுளைச்சல்களும் வேதனைகளும் போதும் என்று நினைத்தாள்.

*****

வரதனின் ஹோட்டல்கள் வெறும் தங்கும் விடுதிகளாக மட்டும் இயங்கவில்லை. அரசியல்வாதிகள், முக்கியப் பிரமுகர்கள், பெரும் தொழிலதிபர்கள் எனப் பலரும் அங்கே அடிக்கடி வந்து போகும் விருந்தினர்களாக இருந்தார்கள். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் கூட உண்டு.

பகலில் வெளியுலகத்துக்கு முன்னால் கௌரவமான மனிதர்களாக வலம் வருபவர்கள், இரவு வந்ததும் அந்த ஹோட்டல்களின் இன்னொரு உலகத்துக்குள் நுழைந்துவிடுவார்கள்.

வெளியுலகத்துக்குத் தெரியாத அந்த இரண்டாவது உலகத்தில் பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானித்தது. சூதாட்டம் நடக்கும். போதைப்பொருள் பாவனை சர்வசாதாரணமாக இருக்கும். டீஜே இசையுடன் இரவு முழுவதும் டிஸ்கோ நிகழ்ச்சிகள் களைகட்டும்.

அரைகுறை ஆடைகளில் பெண்கள் இசைக்கேற்ப நடனமாட, மதுவிலும் போதையிலும் திளைக்கும் முக்கிய புள்ளிகள் தங்கள் அதிகாரத்தையும் பணத்தையும் மறந்தவர்களாக அவர்களுடன் நெருங்கிப் பழகுவார்கள். சிலர் தனியறைகளுக்குள் ஒதுங்கிக்கொள்வார்கள்.

வெளியில் கௌரவத்துக்குரியவர்களாகத் தெரிந்த அந்த மனிதர்களின் இன்னொரு முகம், அங்கே எந்தக் கூச்சமுமின்றி வெளிப்படும்.

அந்த இரகசிய உலகத்தைப் பற்றிய தகவல்கள் யாருக்குமே தெரியாது. இதுவரையில் தெரியவர வரதன் விட்டதில்லை. அத்தனை பாதுகாப்புடனும் ரகசியமாகவும் அது நடக்கும்.

ஆனால், கலிங்கன் அறிந்துகொண்டிருந்தான். முன்னரும் அவனுக்கு அந்தச் சந்தேகம் இருந்தது. எந்த அவசியமும் இல்லாததால் ஆராயப்போனதில்லை. ஆனால் இப்போது வரதனை எங்கே எப்படி அடிக்கலாம் என்று காத்திருக்கிறவனாயிற்றே.

ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒத்துக்கொள்ளாமல் போனதால், அவள் மயக்கமடைந்திருந்தாள். அந்தச் சம்பவம் வைத்தியசாலை மூலமாக வெளியுலகத்துக்குத் தெரியவரும் நிலை உண்டாயிற்று.

அப்படி அது வெளியில் கசிந்தால் தன்னுடைய பெயருக்கும் ஹோட்டல்களின் பெயருக்கும் களங்கம் ஏற்படும் என்று அஞ்சிய வரதன், தன்னிடம் வேலை செய்யும் ஒருவன், பணத்துக்கு ஆசைப்பட்டு அந்தப் பெண்ணுக்குப் போதைப்பொருள் கொடுத்ததாகக் கதையைத் திசைதிருப்பினான்.

அந்தப் பழியை அவன் மீது சுமத்தி, சட்டத்தின் முன்னால் அவனைக் குற்றவாளியாக நிறுத்தி, சிறைக்கும் அனுப்பிவைத்தான்.

அதேநேரத்தில், அவனை அப்படியே சிறையில் விட்டுவிட்டால், நாளை அது தனக்கே ஆபத்தாகத் திரும்பக்கூடும் என்று யோசித்து, பெரும் தொகைப் பணத்தைச் செலவழித்து அவனைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தான்.

அதோடு நிற்காமல், கணிசமான தொகையொன்றைக் கொடுத்து, தனக்கு எதிராக அவன் வாய் திறக்காதபடியும் பார்த்துக்கொண்டான். இன்னும் அவன் வாயை அடைப்பதாக எண்ணிக்கொண்டு சம்பளத்தைக் கூட்டிக்கொடுத்து, தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.

ஆனால், அந்த மனிதன் மீது சுமத்தப்பட்ட அந்தப் பழி காலத்துக்கும் அவரைத் தொடரும் என்பதை அவன் அறியாமல் போனான். பணத்தால் வாயை அடைக்க முடியும். மனத்தில் எழும் கொந்தளிப்பையும் குரோதத்தையும் அடக்க முடியுமா என்ன?

சொந்தபந்தங்கள், அயலவர்கள் என்று தெரிந்தவர்கள் மத்தியில் இழந்த மானத்தையும் மரியாதையையும் அவனால் மீட்டெடுக்கவே முடியவில்லை. செய்யாத தவறுக்கான அவமானத்தைச் சுமந்துகொண்டு வாழ வேண்டியிருந்தது. வரதனின் ஆட்கள் இங்கே இருப்பதுபோல் இவன் ஆட்களும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இவற்றை எல்லாம் அறிந்துதான் வைத்திருந்தான்.

அப்படி இருக்கையில்தான் ஆதி வந்து அவனைச் சந்தித்திருந்தான். இலகுவில் அவன் வாயைத் திறக்கவில்லை. என்னதான் வரதன் மேல் பழிவெறி இருந்தாலும் பயந்தான்.

ஆனாலும் ஆதி விடவில்லை. ஓராயிரம் நம்பிக்கைகளைக் கொடுத்து, அவன்தான் எடுத்தான் என்று தெரியாத வகையில் எப்படி வீடியோ எடுக்கலாம் என்று பயிற்றுவித்து, அனைத்துக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தான்.

அப்படி அவர்களிடம் சிக்கியதை பல வீடியோக்கள்.

அரசியல் அதிகாரமும் பணபலமும் தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றன என்கிற நம்பிக்கையில் அந்த வீடியோவிலிருந்தவர்களின் கூத்துக் கும்மாளங்களுக்கு அளவேயில்லை.

பெண்களுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளும், தனியறைகளில் நடந்த காரியங்களும், சூதாட்டமும் போதைப்பொருள் பாவனையும் என்று அனைத்தும் தெளிவாகப் பதிவாகியிருந்தன.

அந்த இரவு அவர்களுக்கு இன்னொரு சாதாரண இரவாகவே முடிந்தது.

மறுநாள் காலையில் அதிலிருந்த பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டு, அந்தக் காணொளி வெளியானதும் திருகோணமலையே ஒரு கணம் ஸ்தம்பித்துப்போனது.

நேற்றுவரை கௌரவத்துக்குரிய மனிதர்களாகப் பேசப்பட்டவர்களின் பெயர்கள், இன்று அவமானத்தோடு உச்சரிக்கப்பட்டன.

அரசியல்வாதிகள் சிலர் பதற்றத்தில் தங்களுடைய தொலைபேசிகளை அணைத்துவைத்தார்கள். சிலர் காணொளி போலியானது என்று மறுப்புத் தெரிவிக்கத் தயாரானார்கள். இன்னும் சிலர் அதை யார் வெளியிட்டார்கள் என்று கண்டுபிடிக்கத் தங்கள் ஆட்களை ஏவினார்கள்.

செய்தி ஊடகங்களிலும் அந்த விவகாரம் பேசுபொருளாக மாறியது. இத்தனை காலமும் பணத்தாலும் செல்வாக்காலும் மூடி மறைக்கப்பட்டிருந்த இரகசியங்கள், ஒரே இரவில் பொதுவெளிக்கு வந்திருந்தன.

அந்தக் காணொளி வெளியான மறுகணமே, இதற்குப் பின்னால் இருப்பது கலிங்கராயன்தான் என்று வரதனுக்குப் புரிந்துவிட்டது.

ஆனால், எப்படி?

தன்னுடைய கோட்டைக்குள்ளேயே புகுந்து, யாருக்கும் தெரியாமல் இத்தனை ஆதாரங்களை எப்படி எடுத்தான்? அந்த வீடியோவைப் பார்க்க பார்க்க வரதனின் முகம் பயங்கரமாக மாறியது. கண்கள் சிவந்து கொதித்தது. ஆவேசத்தில் கத்தினான். ஆத்திரத்தில் உருமினான். பொருட்களை போட்டு உடைத்தான். கலிங்கராயனைத் துண்டு துண்டாக வெட்டிப்போடும் அளவுக்கு அவனுக்குள் வெறி கொழுந்துவிட்டு எரிந்தது.

error: Alert: Content selection is disabled!!