கலிங்கனின் காவியம் 24.2

அத்தனையையும் சமாளித்துவிட்டோம் என்று நிமிர்ந்து நிற்பதற்குள், இப்படி ஒரு இடியை இறக்குவான் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதைவிட, இந்தப் பிரச்சனையை இனி எதைக் கொண்டும் சமாளிக்க முடியாதே என்பதுதான் அவனை இன்னும் அதிகமாகக் கொதிக்க வைத்தது.

உடனடியாகத் தன்னுடைய ஹோட்டலில் வேலை செய்கிற அனைவரையும் அழைத்து விசாரித்தான். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகக் கேள்விகளைக் கேட்டான். யாராவது சந்தேகத்துக்குரிய விதத்தில் நடந்துகொண்டார்களா, புதிதாக யாராவது வேலைக்குச் சேர்ந்தார்களா, யாருடைய நடவடிக்கையிலாவது மாற்றம் தெரிந்ததா என்று துருவித் துருவி விசாரித்தான்.

அவனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது அவனுடைய கௌரவத்துக்கு விழுந்த அடி! மறுபடியும் அவன் மீட்டெடுத்த நல்லவன் பெயருக்கு விழுந்த அடி! அதுவும் கலிங்கராயன் தந்த அடி! அந்த எண்ணமே அவனை ஆத்திரத்தின் உச்சிக்குக் கொண்டுசென்றது.

“என்னடா நடக்குது இஞ்ச? இவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்பிடி வெளில போனது?” என்று கர்ஜித்தான்.

அவனுடைய ஆத்திரத்தைக் கண்ட ஊழியர்கள் நடுங்கிப்போனார்கள். அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. இது எல்லாவற்றுக்கும் காரணமானவனுக்கு நடுங்காமல் இல்லை. அதே நேரத்தில் வரதன் படுகிற பாட்டைக் கண்டு உள்ளூர மகிழ்ந்தன.

“என்னைக் கேனையன் எண்டு நினைச்சிட்டீங்களா? ஒருத்தனையும் விடமாட்டன். உங்கள்ள எவனோ ஒருத்தன் தான் இந்த வேலைய பாத்திருக்கோணும். அவனே மரியாதையா வந்து உண்மையா சொன்னா ஓகே. நானா கண்டுபிடிச்சனோ மீனுக்குச் சாப்பாடா போவீங்க!” அவன் குரல் அந்த அறையையே அதிர வைத்தது.

ஊடகங்கள், யூடியூப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் என எல்லாப் பக்கங்களிலும் வரதனைப் பற்றிய கேள்விகள் மறுபடியும் எழ ஆரம்பித்தன. ஒவ்வொரு ஊடகமும் அந்தக் காணொளியைப் பற்றிய செய்திகளை வெளியிட்டன. சமூக வலைத்தளங்களில் அந்தக் காணொளி காட்டுத்தீயைப் போலப் பரவ, பலரும் வரதனைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த வரதன், உடனடியாக மறுப்பறிக்கை ஒன்றை வெளியிட்டான். அந்தக் காணொளி போலியானது என்றும், தன்னுடைய ஹோட்டல்களில் அப்படியான எந்தவொரு சட்டவிரோதச் செயல்களும் நடைபெறுவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தான்.

காலம் காலமாகத் தான் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயரைக் கெடுப்பதற்காக யாரோ திட்டமிட்டுச் செய்யும் சதி என்றும் சொன்னான்.

ஆனால், என்ன பிரயோசனம்?

இத்தனை காலமும் அவன் சொன்னதையெல்லாம் நம்பியவர்கள் இன்று அவனைப் பலமாகச் சந்தேகித்தார்கள். மறுபடியும் கலிங்கன் திருமண மண்டபத்தில் பேசியதையும் இதையும் இணைத்து பேச ஆரம்பித்தார்கள்.

தான் இத்தனை காலமும் கட்டிக்காத்து வந்த நற்பெயர், தன் கண்முன்னாலேயே சிதைந்து கொண்டிருப்பதைப் பார்த்த வரதனுக்குக் கோபமும் அவமானமும் தலைக்கேறின. அவனுடைய பணத்தாலும் அதிகாரத்தாலும் அடக்கி வைத்திருந்த உண்மைகள், இன்று அவனையே தலைகுனிய வைத்திருந்தன.

*****

இன்னும் ஒரு சில நாள்களில் அவள் மீண்டும் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். திருமணத்துக்காக எடுத்திருந்த விடுமுறை முடிவுக்கு வரப்போகிறது. மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, அங்கிருப்பவர்களை எப்படி எதிர்கொள்வது என்கிற சங்கடம் அவளைப் போட்டு வதைத்தது.

அவளைப் பற்றியும், கலிங்கராயனைப் பற்றியும் எத்தனை கதைகள் அவர்களுடைய காதுகளை எட்டியிருக்குமோ! அவளைப் பார்க்கும்போது என்ன நினைப்பார்கள்? என்ன பேசுவார்கள்? பழைய மரியாதை கிடைக்குமா? அவளால் அவர்களின் பார்வைகளைத் தாங்கிக்கொள்ள முடியுமா?
அதையெல்லாம்விட, முதலில் கலிங்கராயன் அவளைப் போக விடுவானா?

கேள்விகள் அவளைச் சுற்றி வளைத்தன. என்ன, ஒன்றுக்குக் கூட உருப்படியான பதில் அவளிடம் இல்லை.

இதுவரை காலமும் அவன் வந்துவிட்டால் அறைக்குள் சென்று அடைந்துகொள்கிறவள் அன்று அவன் படிகளை ஏறி முடித்து மாடிக்கு வந்தபோது, தன் அறையின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.

என்னவோ பேசப்போகிறாள் என்று புரிந்து, நின்று அவளைப் பார்த்தான் கலிங்கராயன்.

“நான் வேலைக்குப் போகணும்.” முகத்தைத் திருப்பிக்கொண்டு அறிவித்தாள் வருணா.

நேரம் போனதே தவிர அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. என்ன இவன் என்று முகம் கடுக்க அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அதன் பிறகுதான், “போகலாம். ஆனா, இப்ப இல்ல.” என்றான் அவன்.

அதை முடிவு செய்ய இவன் யார் என்று அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. “நீங்க நினைச்ச நேரம் போக அதென்ன உங்கட அப்பான்ர ஹொஸ்பிடலா? நான் எடுத்த லீவு முடியுது. போகாட்டி வேலை போயிடும்.” என்று படபடத்தாள்.

“அப்பிடி உன்னை வேலையில இருந்து தூக்குற அதிகாரம் அங்க எவனுக்கும் இல்ல.”

அவனை அதிர்ந்து பார்த்தாள் வருணா. அப்போதுதான் அவன் அங்கே இருந்த நாள்களில் நிறுவனர் அவனுக்கு அடங்கி நடந்தது நினைவில் வந்தது. அடுத்த நொடியே அவள் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

அவன் முன்னே வந்து நின்று, “நீங்க என்ன அவ்வளவு பெரிய அரக்கனா? ஊர்ல இருக்கிற எல்லாரையும் உங்கட விருப்பத்துக்கு ஆட்டி வைக்கிறீங்க. அவரை என்ன சொல்லி அடக்கி வச்சிருக்கிறீங்க? அங்கேயும் என்னை மாதிரி ஆராவது பொம்பிளை பிள்ளை உங்களிட்ட மாட்டி இருக்கிறாவா? அவாவின்ர கழுத்திலயும்…” என்றவளை மேலே பேச விடாமல், அவனுடைய ஒற்றை விரல் அவள் இதழ்கள் மீது படிந்து, அவள் பேச்சை நிறுத்தியது.

ஒரு நொடி அதிர்ந்து நின்றாலும் வேகமாக அவன் கையைத் தட்டிவிட்டுவிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றாள் வருணா.

“என்னவா இருந்தாலும் வாயால கதைக்கோணும். அத விட்டுப்போட்டு இப்பிடிப் பிழையாத் தொட்டீங்க, கொன்றுவன். எல்லாத்துக்கும் அடங்கிப் போறதால இதுக்கும் மசிஞ்சு வருவாள் எண்டு நினைக்கிறீங்களோ? அப்பிடி ஒண்டு நடந்தா உங்களக் கொல்லுவன், இல்ல என்னையே கொன்றுவன்!” என்றாள் கண்களில் அனல் பறக்க.

அதைக் கேட்டு அவன் கண்களில் மெல்லிய சிரிப்புப் படர்ந்ததோ என்று ஒரு ஐயம் அவளுக்கு. அவனைக் கூர்ந்து கவனிப்பதற்குள் அவன் முகம் பழையபடி மாறியிருந்தது.

கூடவே, “இல்ல. பிழையா தொடேல்ல. தொடவும் மாட்டன். அப்பிடி எதுவும் இல்லை எண்டு சொல்ல நினைச்சன்.” என்று அவன் முடிப்பதற்குள், “அதை வாயாலேயே சொல்லலாம்!” என்றாள் அவள்.

அவன் இலேசாய்த் தோள்களைக் குலுக்கிவிட்டுப் பேசாமல் நின்றான்.

“ஏன் நான் இப்ப வேலைக்குப் போகக் கூடாது? என்னால இப்பிடி ரூமுக்கயே அடைஞ்சு இருக்கேலாது. பைத்தியம் பிடிச்சிடும். அதவிட அங்க ஹோஸ்ப்பிட்டலுக்கு நான் தேவ. உங்களை மாதிரி எவனாவது வந்தா, அவனை காப்பாத்த வேணாமா? அப்பதானே அவனும் வந்து என்ர கழுத்தில கத்திய வைப்பான்.” என்று அவன் மீதிருந்த ஆத்திரத்தைக் கொட்டினாள்.

“கொஞ்ச நாள் போகட்டும்.” அங்கிருந்த மாடிக் கம்பி வளைவில் கைகளைக் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றிருந்தவன் சுருக்கமாகச் சொன்னான்.

வருணாவுக்கு அவன் குரல்வளையைப் பிடித்து நசுக்கலாமா என்று வந்தது. பின்னே, அவள் உயிரைக் கொடுத்துப் பேசிக்கொண்டிருக்கிறாள். அவனானால் புரிந்துகொள்ளாமல் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறான்.

“கொஞ்ச நாள் எண்டா எத்தின நாள்? முதல் அவரை என்ன செய்தனீங்க? அவர் ஏன் உங்களுக்கு அடங்கிப்போறார்?”

அவன் அதற்குப் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

அவளுக்கோ ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

“ஏன் இப்பிடி எல்லாம் நடக்கிறீங்க? வரதன் ஆங்கில கேவலப்படுத்தினீங்க. என்னைக் கேவலப்படுத்திட்டீங்க. இப்ப அவரா?”

“இதில நியாயமே இல்லாமப் பாதிக்கப்பட்டது நீ மட்டும்தான். வரதன் ஒண்டும் நல்லவன் இல்ல!”

“வரதனா? அவர் என்ன உங்களுக்கு தம்பியா? பேர் சொல்லிக் கதைக்கிறீங்க? அவர் எவ்வளவு நல்லவர் எண்டு எனக்குத் தெரியும். அவர் எந்தப் பிழையும் செய்திருக்க மாட்டார் எண்டும் தெரியும்!”

அவளை ஒரு பார்வை பார்த்த கலிங்கராயன், எதுவும் பேசாமல் தன் கைப்பேசியை எடுத்து அந்தக் காணொளியைக் காட்டினான். அதில் வரதனின் ஹோட்டலில் நடந்த அத்தனையும் பதிவாகியிருந்தன.

ஒரு நொடிதான் அதைப் பார்த்திருப்பாள். அதற்குமேல் பொறுக்க முடியாமல் அவன் கையைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.

“உங்கட பணத்தையும் பலத்தையும் பயன்படுத்தி, இப்பிடி ஒரு வீடியோ எடுத்து, ஊரெல்லாம் பரவ விட்டிருப்பீங்க. அதையெல்லாம் அவரைப் பற்றி தெரியாத சனம் நம்பலாம். நான் நம்ப மாட்டன். இதை எனக்குக் காட்டுறது நீங்க எண்டுற ஒரே காரணமே போதும், நான் இதை நம்பாமல் இருக்கிறதுக்கு. நீங்க ஒரு கதையை எப்பிடி மாத்துவீங்க, ஒருத்தரின்ர பெயரை எப்பிடி எல்லாம் கெடுப்பீங்க எண்டுறதுக்கு நானே சாட்சியா இருக்கிறன். அதால நீங்க எதைக் கொண்டுவந்து காட்டினாலும் நம்பவே மாட்டன்!” என்று அடித்துச் சொன்னாள் அவள்.

உன் விருப்பம் என்பதுபோல் தோள்களைக் குலுக்கிவிட்டு நடந்தான் அவன்.

அவளுக்கு அதற்கும் ஆத்திரம்தான் வந்தது. “நான் வேலைக்குப் போவேன்!” போய்க்கொண்டிருந்தவனைப் பார்த்துச் சத்தமாகச் சொன்னாள்.

“இப்போதைக்கு இல்ல.” எண்றுவிட்டுத் தன் அறைக்குள் சென்றிருந்தான் அவன். அவளுக்குள் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. அவனுடைய அறைக்குள் புகுந்து, அவன் சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும் போலிருந்தது. அவ்வளவு கோபம்!

அது முடியாததால் தன் கோபத்தையெல்லாம் கதவின் மீது காட்டி, தன் அறைக்குள் நுழைந்து படாரென்று கதவை அறைந்து சாத்தினாள்.

error: Alert: Content selection is disabled!!