சூரியா சொன்ன வழியைப் பரிசீலித்தான். “எந்தப் பிரச்சினையும் வராதா? உன்னை நம்பலாமா?” என்று கேட்டான் வரதன்.
சூரியா தயங்கவே இல்லை. “தாராளமாக நம்பலாம். வேணுமெண்டா நானும் சேந்து போறன்.” என்றான்.
வரதன் உடனடியாக மறுத்துவிட்டான். அவனுக்கு அப்படி சூர்யா தன்னுடன் இருக்கிறான் என்று எந்த வழியிலும் யாருக்கும் தெரியப்படுத்துவதில் விருப்பம் இல்லை.
அதில் அந்தப் பாதையைப் பற்றிய விவரங்களை மட்டும் இன்னும் தெளிவாகக் கேட்டறிந்துகொண்டான். சூர்யாவுக்கு அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்தது. ஆத்திரமும் அவமானமும் அவனைத் தாக்காமல் இல்லை. ஆனால், இன்றைய நிலையில் வரதனின் ஆதரவு தனக்குத் தேவை என்பதிலும், நிலாவின் வாழ்க்கையை எண்ணியும் அடங்கிப்போனான்.
இறுதியில், அந்தப் பாதையிலேயே பொருட்களை அனுப்புவது என்று முடிவு செய்து, அதைக் கொண்டு போகிற தன் ஆட்களுக்கும் விளக்கி, அனைத்தையும் ஏற்றிமுடித்து லொறிகளை அனுப்பிவைத்தான்.
*****
அந்த நள்ளிரவு நேரத்தில் அடர்ந்த இருளில் மூன்று லொறிகளும் காட்டுப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தன. முன்னால் இரண்டு ஜீப்புகள் வழியைக் கண்காணித்தபடி செல்ல, பின்னால் இன்னொரு ஜீப் பின்தொடர்ந்தது.
முன்னால் சென்ற ஜீப்புகள் குறிப்பிட்ட இடத்தைக் கடந்ததும், சாலையின் குறுக்கே ஒரு மரம் திடீரெனச் சரிந்து விழுந்தது. முதல் லொறி சட்டென்று நிற்க, அதைத் தொடர்ந்து வந்த மற்ற இரு லொறிகளும் பின்னால் வந்த ஜீப்பும் அடுத்தடுத்து நின்றன.
லொறிகளுக்குள் இருந்தவர்களிடம் பதற்றம் தொற்றிக்கொண்டது. இரகசியமாகச் சரக்கைக் கொண்டு சென்றாலும், ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற அச்சம் அவர்களுக்குள் ஏற்கெனவே இருந்தது. அப்படியிருக்க இப்படி ஒரு நிகழ்வு.
அப்போது கிளிக் என்று ஒரு சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து வெளியேறிய புகையின் நடுவே சிகரெட்டின் நுனி மட்டும் நெருப்பாக ஒளிர்ந்தது. அதனூடே கலிங்கராயன் முன்னேறி வந்தான்.
அவனைக் கண்டவர்கள் உறைந்துபோனார்கள்.
கலிங்கன் ஒரு முறை சிகரெட்டை ஆழமாக இழுத்துப் புகையை வெளியேற்றிவிட்டு, அவர்களை நோக்கி வந்தான். அவனுக்குப் பின்னால் அவனுடைய ஆட்கள் இருளிலிருந்து வெளிப்பட்டனர்.
இதற்கிடையில், பின்னால் வந்த லொறிகளைக் காணாமல் முன்னால் சென்ற இரண்டு ஜீப்புகளும் திரும்பி வந்தன. அவற்றிலிருந்த ஆட்கள் இறங்கி ஓடிவர, கலிங்கராயனின் ஆட்களில் ஒரு குழு அவர்களை எதிர்கொள்ள விரைந்தது. மற்றொரு குழு, கலிங்கனின் தலைமையில் லொறிகளில் இருந்தவர்களைத் தாக்கத் தயாரானது.
அடுத்த கணம், நள்ளிரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு இரும்புக் கம்பிகள் மோதும் சத்தம் காட்டுக்குள் எதிரொலித்தது.
கலிங்கராயன் பெரும் ஆவேசத்துடன் ஒவ்வொருவரையும் தாக்கினான். அவனை நோக்கி வந்த தாக்குதல்களைத் தடுத்து, எதிரில் நின்றவர்களை ஒவ்வொருவராக வீழ்த்திக்கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் கொழுந்துவிட்டெரிந்த கோபம், அவனுக்கு முன்னால் நின்றவர்களையே ஒரு கணம் தயங்க வைத்தது.
அதே நேரத்தில் ஆதி மறுபக்கத்தில் வரதனின் ஆட்களுடன் மோதிக்கொண்டிருந்தான். அவனுடைய கைகளிலிருந்த கட்டை எதிரிகளின் தாக்குதல்களைத் தடுத்ததோடு, அவர்களைப் பின்வாங்கவும் செய்தது.
கலிங்கராயனின் மற்ற ஆட்களும் இரு பக்கங்களிலிருந்தும் எதிரிகளை எதிர்கொண்டார்கள்.
சம்பளத்துக்கு அடியாளாக இருப்பவனுக்கும் நெஞ்சுரத்துடன் போராடுபவனுக்கும் இடையில் எப்போதும் ஒரு வித்தியாசம் இருக்கும். நெஞ்சுரம் கொண்டவன் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடுவான். கூலிக்கு வேலை செய்பவன் எப்படியாவது தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பான்.
அந்த வித்தியாசம் அந்தக் காட்டுக்குள் நடந்த மோதலிலும் வெளிப்பட்டது. கலிங்கராயனின் ஆட்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் தாக்க, எதிர்த்துப் போரிட்டவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தார்கள்.
கலிங்கராயன் மெல்ல மெல்ல லொறிகளை நோக்கி முன்னேறினான். அவனுடைய ஆட்கள் வரதனின் ஆட்களை விரட்டியடிக்க ஆரம்பித்ததில் லொறிகளைச் சுற்றியிருந்த பாதுகாப்பு சிதறிப்போயிருந்தது.
அந்தப் பொருட்கள் வரதன் எண்ணியதுபோல் கைமாற்றிவிட்டான் என்றால் அடுத்த சில நாட்களில் அவை பணமாக மாறிவிடும். அந்தப் பணம் மீண்டும் அவனுடைய வலிமையாக மாறும். அடுத்த சரக்கை வாங்கவும், அடுத்த வியாபாரத்தைத் தொடங்கவும், தனக்கெதிராக நிற்பவர்களை விலைக்கு வாங்கவும் அதையே பயன்படுத்துவான்.
கலிங்கனுக்கு வரதனின் அந்தச் சுழற்சியை உடைக்க வேண்டும். இதை காவல்துறையிடம் கையளித்து, வரதனை அவர்களிடம் மாட்டிவிடுவதிலும் அவனுக்கு விருப்பமில்லை.
இந்தச் சரக்கைக் கைப்பற்றியதாகக் கணக்குக் காட்டிவிட்டு, மறைமுகமாக வரதனுக்கே திருப்பிக் கொடுத்துத் தமக்கும் ஆதாயம் பார்க்கக் கூடியவர்கள் அவர்கள்.
இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அந்த லொறிகளையே பார்த்து நின்றவனின் முகத்தில் வியர்வை வழிந்துகொண்டிருந்தது. நடந்த சண்டையில் மூச்சு வேக வேகமாக ஏறி இறங்கிற்று. சட்டை சில இடங்களில் கிழிந்திருந்தது. கைகளில் காயங்கள் இருந்தன. அதை எதையும் அவன் பொருட்படுத்தவில்லை.
திரும்பி ஆதியைப் பார்த்தான். அவன் மறைவாக இருந்த பெட்ரோல் கேன்களை எடுத்து லொறிகளின் மீது ஊற்றினான். மற்றொருவன் கையிலிருந்த தீப்பந்தத்தை வாங்கி
முதல் லொறியின் மீது வீசிவிட்டுத் தன் ஆட்களுடன் வேகமாக அங்கிருந்து விலகிப்போனான்.
அடுத்த கணம், தீ மளமளவெனப் பரவத் தொடங்கியது. நொடியில் பெரும் சத்தத்துடன் லொறிகள் வெடித்துச் சிதறின. வானை முட்டிய தீப்பிழம்புகளும் கரும்புகையும் காட்டையே ஒளிரச் செய்தன.
தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்த வரதனின் ஆட்கள், அந்தப் பயங்கரச் சத்தத்தில் ஒரு கணம் நெஞ்சைப் பிடித்தபடி உறைந்து நின்றார்கள். அப்போதுதான் தங்களுடைய கண் முன்னால் நடந்தது எத்தகைய பேரழிவு என்பது அவர்களுக்குப் புரிந்தது.
செய்தி வரதனைச் சென்றடைந்தபோது, அவன் சில கணங்கள் எதுவுமே பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனான். அவன் தலையில் இடியே விழுந்திருந்தது. மூன்று லொறிகளும், அவற்றிலிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருட்களும் தீக்கிரையாகிவிட்டன என்ற செய்தியை அவனால் நம்பவே முடியவில்லை.
அதிர்ச்சி மெல்ல ஆத்திரமாக மாறியது. அவனுடைய முகம் இறுகியது. கண்கள் சிவந்தன. நெஞ்சு ஆத்திரத்தில் ஏறி இறங்கிற்று.
பொருட்களை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு என்ன பதில் சொல்வான்? அவர்களிடம் வாங்கியிருந்த பணத்தை எப்படித் திருப்பிக் கொடுப்பான்? அதற்கான ஈட்டை எங்கிருந்து தேடுவான்?
இது சாதாரணமான நட்டமல்ல. அவனுடைய வியாபாரத்தையே ஆட்டம் காணச் செய்யக் கூடிய பேரிழப்பு! அதைவிட இந்த இழப்பைப் பற்றி அவனால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கலிங்கன் மீது பொங்கிய ஆத்திரமும் பழிவாங்கும் வெறியும் வரதனுக்குள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின.

