அத்தியாயம் 26
மூன்று லொறிகளும் கலிங்கராயனால் எரிக்கப்பட்டுவிட்டன என்கிற செய்தியைக் கேட்டதும் சூர்யாவும் அதிர்ச்சியில் உறைந்துபோனான். அந்தப் பாதையை எப்படிக் கலிங்கன் கண்டுபிடித்தான் என்று எவ்வளவு யோசித்தும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
உடனேயே வரதனைச் சந்திக்கச் சென்றான்.
அங்கே வரதன் அடிபட்ட நாகத்தைப்போலச் சீறிக்கொண்டிருந்தான். சூர்யாவைப் கண்டதும் அவன் பார்வையில் கொலைவெறி கொப்பளித்தது.
சூர்யாவை நோக்கி விரைந்தவன், “எல்லாம் உன்னாலதான்டா! எவ்வளவு பெரிய இழப்பைச் சந்திச்சிருக்கிறன் தெரியுமா? இதை எப்பிடிச் சரிக்கட்டுறது? நீ தருவியா, இல்ல உன்ர அப்பன் தருவானா?”என்று அவனது சட்டையைப் பிடித்து உலுக்கினான்.
அடுத்த கணமே தன் ஆத்திரத்தை எல்லாம் இறக்கி வைப்பவன் போல் அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
வரதன் கோபப்படுவான் என்று எதிர்பார்த்திருந்த சூர்யா, இதை எதிர்பார்க்கவில்லை. அடுத்த நொடியே முகம் கறுக்க, பளார் என்று தானும் திருப்பி அறைந்தான். “எதுவா இருந்தாலும் வாயால கதை. அத விட்டுப்போட்டு கை நீட்டுற வேல வச்சியோ!” என்று விரல் நீட்டி உறுமினான்.
வரதனின் முகம் விகாரமடைந்தது. அவனை ஒருவன் அடிப்பதா என்கிற ஆத்திரத்தில், “என்னடா செய்வாய்? என்ன செய்ய ஏலும் உன்னால? இந்த நிமிஷம் நான் உன்னைத் தூக்கிப் போட்டா, கேக்க ஆளில்லாதவன் நீ! ஒரு செக்கன்ல வந்து போட்டுட்டுப் போவான் உன்ர நண்பன். செய்யவா? சொல்லு செய்யவா?” என்று முகத்தின் முன்னே வந்து நின்று உறுமினான்.
வரதனின் வார்த்தைகள் அவன் அரைத்ததை விடவும் ஆழமாக சூர்யாவைத் தாக்கின. அவன் முகத்தில் அவமானமும் ஆத்திரமும் ஒன்றாகப் படர்ந்தன. வரதனை அங்கேயே அடித்துத் துவைக்க வேண்டும் என்று இரத்தம் கொதித்தாலும், அதைச் செய்ய முடியாத தனது இயலாமையே அவனை அதிகமாகச் சுட்டது.
வரதன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். அவனது விரல்கள் ஆத்திரத்தில் இறுகின. சரக்குகளின் இழப்பு ஒருபுறமிருக்க, அந்தச் சரக்குக்காகப் பணம் கொடுத்தவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வேறு அவனை எரிச்சலடையச் செய்தது.
“எனக்கு அவனை அழிக்கோணும்!” வரதனின் குரலில் பழிவெறி கொப்பளித்தது.
அவனோடு இருந்தவனைத் தன் பக்கம் இழுத்து, முதுகில் குத்தி, அவனுடைய வியாபார உலகத்தை அத்தனை மோசமாக அழித்தும், கலிங்கராயன் அடங்கிப் போகவில்லையே. அதற்கு மாறாக இரண்டு மடங்கு மூர்க்கத்துடன் அவன் முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறான். அதை நினைக்கும்போதே வரதனின் அகங்காரம் வலுவாகச் சீண்டப்பட்டது.
அவனா நானா என்று ஒரு கை பார்க்கத் துடித்தான். அவனை அழித்தே ஆக வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது.
சூரியாவுக்கும் அதே வெறிதான். தான் இந்தப் பக்கம் மாறி வந்த பிறகும் அவன் அசையாமல் நிற்பது பிடிக்கவில்லை.
அதைவிட, கலிங்கராயன் இருக்கும்வரை தனக்குரிய மதிப்பும் இடமும் வரதனிடம் கூடக் கிடைக்கப்போவதில்லை என்பதை அன்றைய சம்பவம் அவனுக்குத் தெளிவாக உணர்த்தியிருந்தது.
“அழிக்கலாம்!” என்றான் அவனும் அழுத்தமாக.
அன்று இரவு நிலாவினி வரதனின் வீட்டுக்கு வந்தாள். சூர்யா இல்லாத பொழுதுகளில் அவர்களின் வீட்டுக்கு வரதன் வந்தாலும், பெரும்பான்மைப் பொழுதுகளில் அவளை அவன் இடத்துக்குத்தான் வரவழைப்பான் வரதன்.
அன்று வந்தவளை வழக்கம்போல நெருங்கி வரவேற்கவில்லை அவன். நிலாவினி அவன் முகத்தில் தெரிந்த இறுக்கத்தைக் கவனித்தவாறே அவனருகே மெதுவாகச் சென்றாள்.
அவள் ஏதோ கேட்க வாயெடுத்தபோது, அவளது கையைப் பற்றித் தன்னருகே இழுத்தான். அவனுடைய தொடுகையில் வழக்கமான நெருக்கம் இருந்தாலும், அதற்குள் கலந்திருந்த முரட்டுத்தனம் அவளைத் தடுமாறச் செய்தது.
சூர்யாவைத் திட்டித் தீர்த்தான். அவனால்தான் தான் இந்த நிலையில் இருப்பதாகக் கோபப்பட்டான். தான் எவ்வளவு பெரிய ஆள் என்று சொன்னான். அப்படியான தன்னில் கை வைத்த கலிங்கராயனை வேரோடு அழிக்கப்போவதாகச் சூளுரைத்தான். அவளுக்கு இன்னுமே காலிங்கராயன் மீது நினைப்பு உண்டா என்று தூண்டித் துருவினான். இல்லை என்கிற பதிலை எத்தனை வழிகளில் சொன்னாலும் அவன் கேட்டுக்கொள்ளத் தயாராய் இல்லை. அவளருகில் இருந்தாலும் அவனுடைய சிந்தனை முழுவதும் கலிங்கராயனை எப்படித் தகர்ப்பது என்பதிலேயே சுழன்றுகொண்டிருந்தது.
நிலாவினி அவனது மனநிலையைப் புரிந்துகொண்டு அமைதியாக இருந்தாள். அவனைச் சமாதானப்படுத்த முயன்றும், அவனது ஆத்திரத்தின் முன்னால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
*****
வெளியுலகத்தைப் பொறுத்தவரையில் காட்டுக்குள் எரிந்து சாம்பலான மூன்று லொறிகளும் யாருடையவை, அவற்றில் என்ன இருந்தது, அந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதெல்லாம் மர்மமாகவே இருந்தன.
ஆனால், இருண்ட உலகத்தில் இருபவர்களுக்கு லொறிகள் வரதனுடையவை என்பதும், அவற்றில் கோடிக்கணக்கான பெறுமதியுள்ள சரக்குகள் இருந்தன என்பதும், அவற்றைக் கலிங்கராயன்தான் அழித்தான் என்பதும் நன்றாகத் தெரிந்திருந்தது.
அதுவரையில் வரதன் மூலம் தம் பொருள்களைக் கைமாற்றியவர்கள் இப்போது தயங்கினார்கள். தங்களுடைய பொருட்களும் இப்படியே அழிந்துபோனால் என்ன செய்வது என்கிற அச்சம் அவர்களுக்குள் எழுந்தது. வரதனைப் பற்றி அடிக்கடி வருகிற செய்திகளும் சேர்ந்துகொண்டது.
அதே நேரத்தில், வரதனின் பலத்தையே எதிர்த்து நிற்கும் கலிங்கராயனின் தைரியமும் துணிவும் அவர்களைக் கவர்ந்தது. தங்களுடைய சரக்குகளை அவனிடம் ஒப்படைத்தால் என்ன என்று யோசித்தார்கள்.
அதன் பயனாக வரதனிடம் நீண்ட காலமாகத் தொழில் செய்து வந்தவர்களில் ஒருவர், கலிங்கராயனைத் தொடர்புகொண்டு பேசினார். விலை மதிப்புமிக்க தொழில்துறை உபகரணங்கள் அவருக்கு நல்ல விலைக்கழிவில் கிடைத்திருந்தது. அதைக் கறுப்பாக நாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால் நல்ல விலைக்கு கொடுக்க முடியும் என்பதில், அவற்றைப் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்க்க முடியுமா என்று கேட்டார்.
கலிங்கராயனுக்கு அது வெறும் புதிய தொழில் வாய்ப்பாக இல்லை. சூர்யாவாலும் வரதனாலும் ஏற்பட்ட இழப்புகளால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய தொழிலையும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்கக் கிடைத்த சந்தர்ப்பமாகப் பார்த்தான். அதில் அந்த வேலையை ஏற்றுக்கொண்டான்.
அது மிகப்பெரிய சரக்குக் கப்பல். நேரடியாகத் துறைமுகத்துக்குள் வர முடியாத சூழலில், ஆழமான கடற்பகுதியில் தரித்து நின்றது.
அது நிற்கும் இடத்திற்கு சரக்குப் படகுகள் சென்று, கிரேன் மூலம் இறக்கப்படும் பொருள்களைக் கரைக்கு கொண்டுவர வேண்டும். பிறகு அவை லொறிகளில் ஏற்றப்பட்டு போக வேண்டிய இடங்களுக்குப் போகும்.
செய்தி வந்ததும் படகுகள் புறப்பட்டன. ஆனால் அவை கப்பலை நெருங்குவதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டன. கடலோரக் காவல்படையினர் அப்பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்தனர். சரக்குப் பரிமாற்றம் குறித்து அவர்களுக்குக் கிடைத்திருந்த தகவலின் அடிப்படையில், அந்தக் கப்பலை விசாரிக்கத் தொடங்கியிருந்தனர்.

