கப்பலில் இருந்தவர்களுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. அவர்களால் அங்கேயே நீண்ட நேரம் தரித்திருக்க முடியாது. அந்தச் சரக்குகள் எந்தவிதமான பதிவுகளுமின்றி ரகசியமாகக் கொண்டுவரப்பட்ட கறுப்புச் சந்தைச் சரக்குகள். குறிப்பிட்ட நேரத்துக்குள் அவற்றை இறக்கிவிட்டு, அடுத்த இடத்தை நோக்கிப் புறப்பட்டாக வேண்டும்.
அதை அறிந்துதான் வரதன் மூலம் சூர்யா இதைச் செய்திருந்தான். இத்தனை காலமும் தன்னிடம் இருந்த ஒருவன் இப்போது வேலையை கலிங்கனிடம் கொடுத்துவிட்ட விடயம் வரதனுக்கு வந்து சேர்ந்திருந்தது.
அதையறிந்து அவன் கொதித்தபோது சூர்யாதான் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தான். சரக்குப் படகுகளைக் கப்பலைச் சேர விடாமல் தடுத்து, நேரத்தை ஓட்டிவிட்டால் கப்பல் புறப்பட்டுவிடும். கலிங்கனால் அந்த வியாபாரத்தை முடித்துக்கொடுக்க முடியாது. அது அவனுக்கு இன்னும் இழப்பாக முடியும் என்று கணக்கிட்டு, அதிகாரிகளை தூண்டிவிட்டிருந்தான்.
ஆனால், வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் எப்போதுமே உண்டுதானே.
கப்பலில் இருந்து கலிங்கனுக்குத் தகவல் வந்தது. கலிங்கராயன் நேரத்தைப் பார்த்தான். அது வேகமாக நழுவிக்கொண்டிருந்தது.
அந்தப் பகுதியில் அவனுக்கென்றும் ஒரு வட்டம் உண்டு. அவனுடைய வியாபாரத்தோடு பலருடைய வியாபாரங்களும் பிணைந்திருந்தன. அவன் வீழ்ந்தால், அதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள் பலர் இருந்தார்கள். அவன் பிடிபட்டால் அவனோடு மாட்டிக்கொள்கிறவர்களும் பலர். அந்தத் தொடர்புகளும் செல்வாக்கும்தான் இப்போது அவனுக்குக் கைகொடுத்தன.
உடனேயே சில அழைப்புகளை மேற்கொண்டான். காரசாரமான விவாதம் நடந்தது. தனக்கு இந்த வியாபாரம் எவ்வளவு முக்கியம் என்பதை சொன்னான். அவர்களுக்கு அவன் எந்தளவில் தேவை என்பதையும் சுட்டிக்காட்டினான். உரையாடல் நீண்டது. ஆரம்பத்தில் உறுதியாக இருந்த மறுப்புகள் மெல்லத் தளர்ந்தன.
அடுத்த சில நிமிடங்களில் துறைமுக அதிகாரிகளின் கைப்பேசிகள் ஒலிக்கத் தொடங்கின. முதலில் ஒருவருக்கு அழைப்பு வந்தது. அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே முகம் மாறியது. அடுத்ததாக இன்னொருவருக்கு அழைப்பு வந்தது. அவர் வெளியே சென்று பேசிவிட்டு உள்ளே வந்தார். யார் முகமும் சரியாக இல்லை.
இரண்டு ஆதிக்கவாதிகளுக்குள் மாட்டிக்கொண்டு தாம் படும் பாட்டை எண்ணி அவர்கள் முகங்களில் எரிச்சல் மண்டிற்று. வேறு வழியில்லை. அடங்கிப்போகும் நிலைக்கு ஆளானார்கள்.
இங்கே வேகமாகப் புறப்பட்டு அறையை விட்டு வெளியே வந்து படிகளில் இறங்கப்போன கலிங்கன், ஒரு நொடி நின்று யோசித்துவிட்டுச் சென்று, வருணாவின் கதவைத் தட்டினான்.
அப்படி ஒரு நாளும் அவன் செய்திராததில் வேகமாக வந்து கதவைத் திறந்து அவனைக் கேள்வியாக ஏறிட்டாள் அவள்.
கலைந்த தலை, அலுங்கிய உடை என்று உறக்கக் கலக்கத்தில் இருந்தவளை ஒரு கணம் பார்த்துவிட்டு, “கெதியா வெளிக்கிட்டுக்கொண்டு வா?” என்றான் பார்வையைத் திருப்பிக்கொண்டு.
“இந்த நேரம் எங்…” என்று ஆரம்பித்தவள், “அம்மா அப்பாக்கு ஏதுமா? என்னடா செய்தனி அவேய?” என்று அவன் சட்டையைப் பிடிக்க வந்தாள். அவள் கைகளைப் பற்றிக்கொண்டு, “கார்பருக்கு போகப்போறம். ஜீன்ஸ் போட்டுக்கொண்டு வா!” என்றான் நிதானமாக.
அப்போதுதான் அவளுக்கு உயிரே வந்தது. ஊப் என்று மூச்சை இழுத்துவிட்டு ஆசுவாசமானவளுக்கு அப்போதும் அவன் மீதுதான் கோபம். “எல்லாம் உங்களால! எந்த நேரத்தில எந்த இடிய இறக்குவீங்களோ எண்டு பயந்து சாகிறன்!” என்று அவனைத் திட்டிவிட்டு உள்ளே சென்று, கதவை அறைந்து சாற்றினாள்.
எழுந்த முறுவலைக் கீழுதட்டைப் பற்களுக்குள் கொண்டுவந்து அடக்கிவிட்டுப் போய், தான் அணிந்திருந்ததை போலவே இன்னொரு கருப்பு நிற லெதர் ஜாக்கெட் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தான்.
அவள் அவன் சொன்னது போன்று ஒரு ஜீன்ஸ் டொப்பில் தயாராகி வந்தாள். ஜாக்கெட்டை அவளிடம் நீட்டி, “குளிரும் போடு.” என்றான்.
அது அவனுடையது என்று யாரும் சொல்லாமலேயே புரிந்தது. அப்படியிருக்க அவனுடையதை அவள் அணிவதா? பார்வையால் அவனை எரித்துவிட்டு, “இல்ல வேண்டாம்.” என்றுவிட்டுப் படிகளில் இறங்கினாள் அவள்.
கலிங்கனின் ரேஞ்ச் ரோவர் அவன் கைகளில் பறந்தது.
“ஏன் இவ்வளவு வேகம்?” கதவின் கைப்பிடியை இறுக்கிப் பற்றிக்கொண்டு கோபப்பட்டாள் வருணா.
“கொஞ்ச அவசர வேலை.”
“அப்ப என்னை விட்டுட்டுப் போயிருக்கலாம்தானே.”
அதற்கு ஒன்றும் சொல்லவில்லை அவன். வேகத்தை நிதானப்படுத்திவிட்டு, தான் வந்துகொண்டிருப்பதை அங்கிருந்த யாருக்கோ அழைத்துச் சொன்னான்.
“வாகனம் ஓடேக்க ஃபோன்! வாவ்!” என்று அதற்கும் கடுப்படித்தாள் அவள்.
நள்ளிரவைக் கடந்து கொண்டிருந்த அந்த வேளையில், கடற்கரை முழுவதும் இருள் கவிந்திருந்தது. தொலைவில் தெரிந்த துறைமுகத்து விளக்குகள் மட்டும் கடலின் மேற்பரப்பில் சிதறித் தெறித்த நட்சத்திரங்களைப் போல மின்னிக்கொண்டிருந்தன.
அலைகள் கரையைத் தொட்டுத் திரும்பும் ஓசை சீராகக் கேட்டுக் கொண்டிருக்க, கடற்கரையோரத்தில் கொண்டுபோய் காரை நிறுத்தினான் கலிங்கராயன்.
காரை விட்டு இறங்கிய வருணா சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசிக்கொண்டிருந்தது. கடலிலிருந்து வந்த குளிர்ந்த காற்று அவளுடைய மெல்லிய ஆடையை ஊடுருவி உடலைத் தழுவ, தன்னையறியாமல் இரு கரங்களையும் மார்போடு குறுக்காகக் கட்டிக்கொண்டாள்.
கலிங்கன் கையேடு கொண்டுவந்திருந்த அந்த லெதர் ஜாக்கெட்டை அவள் தோள்களைச் சுற்றிப் போட்டுவிட்டான். திடுக்கிட்டுத் திரும்பி அவனைப் பார்த்தவள் விழிகள் சில கணங்களுக்கு அவன் பார்வையைக் கவி நின்றுவிட்டு விளங்கிற்று.
இப்போது அந்த ஜாக்கெட்டை அவளால் மறுக்க முடியவில்லை. அந்தளவில் காற்று ஊசியாய் உடலை ஊடுருவி, உடலின் உள்ளுறுப்புகளைக் கூட கிடுகிடுக்க வைப்பது போலிருந்தது அவளுக்கு. கைகளை நுழைக்காமல் அந்த ஜாக்கெட்டை தன்னைச் சுற்றி நன்றாகப் போட்டுக்கொண்டாள்.
அவளையும் அழைத்துக்கொண்டு கடலோரக் கண்காணிப்புப் பிரிவின் அலுவலகத்தைக் கலிங்கராயன் அடைந்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் இவர்களுக்காகக் காத்திருந்தார்கள்.
இவனைக் கண்டு உள்ளுக்குள் அவர்களுக்குள் கொடுக்காமல் இல்லை. காட்டிக்கொள்ள முடியாதே.
கலிங்கராயன் சமர்ப்பித்த ஆவணங்களை ஒவ்வொன்றாகச் சரிபார்த்தனர். ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த பொருட்களுக்கும், கப்பலிலிருந்து இறக்கப்படவிருந்த சரக்குகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். அது கலிங்கராயனுக்கும் தெரியும்.
ஆனாலும், அவன் சமர்ப்பித்தான். அதிகாரபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பில் அனைத்தும் முறையாக இருப்பதாக அவர்களும் பதிவு செய்தார்கள்.
இறுதியில், சரக்குகளை இறக்கிச் செல்வதற்கான அனுமதி அவனுக்குக் கிடைத்தது.
அவர்களுக்குக் கைகொடுத்து விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தான் கலிங்கராயன். நடப்பவை எதுவும் புரியாமல் வேடிக்கை மட்டும் பார்த்தாள் வருணா.

