கலிங்கனின் காவியம் 27.2

படகு நெருங்க நெருங்க, அந்தச் சரக்குக் கப்பலின் பிரம்மாண்டம் அவளுக்குப் புரியத் தொடங்கியது. அது ஒரு சாதாரணக் கப்பலைப் போல இல்லை. கடலின் நடுவே மிதக்கும் ஒரு பெரிய நகரத்தைப் போலத் தோன்றியது.

அதன் நீண்ட அடிப்பகுதி கருமையான நீரைப் பிளந்து நின்றது. மேல்தளத்தில் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருந்த வண்ணக் கொள்கலன்கள் இருளிலும் மங்கலாகத் தெரிந்தன. பல அடுக்குகளாக உயர்ந்திருந்த அந்தப் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட கட்டடங்களைப் போலக் காட்சியளித்தன.

கப்பலின் மேற்புறத்தில் எரிந்த விளக்குகள், அதன் பிரம்மாண்டமான உடலமைப்பை வெளிச்சமிட்டுக் காட்டின. உயரமான கிரேன்கள் தொலைவில் நிழலுருவங்களாகத் தெரிந்தன. கப்பலின் பக்கவாட்டில் அலைகள் மோதி நுரை தெறித்தன.

அதன் அருகில் சென்றபோதுதான், தாங்கள் பயணித்துக் கொண்டிருந்த படகு எவ்வளவு சிறியது என்பதை வருணா உணர்ந்தாள்.

“எவ்வளவு பெரிய கப்பல் என்ன?” பார்வை அந்தக் கப்பலின் மீதிருக்க வியப்புடன் சொன்னாள் அவள். அவனும் திரும்பி அந்தக் கப்பலைப் பார்த்தான். அவனுக்கு அது அதிசயமாய் இல்லை.

அவனைப் பொறுத்தவரைக்கும் அந்தக் கப்பல் ஒரு வணிகச் சொத்து. அதன் மதிப்பு, அதில் இருக்கும் சரக்குகள், அதனால் கிடைக்கப்போகும் லாபம் என்று இவைதான் அவனுடைய சிந்தனையில் இடம்பிடித்திருந்தன.

ஆனால் அவளுடைய முகத்தில் தெரிந்த அந்த வியப்பு அவனுக்கு ஏனோ பிடித்திருந்தது. “உள்ளுக்குப் பாக்கவும் நல்லாருக்கும்.” என்றபடி வேகத்தைக் குறைத்து, அந்தக் கப்பலை நெருங்கினான் அவன்.

அதைக் காட்டத்தான் அந்த நடுச்சாமத்தில் அவளை அழைத்து வந்திருக்கிறான் என்று புரிந்தது அவளுக்கு.

கப்பலை நெருங்கியதும் அதன் மேல்தளத்தில் இருந்து ஓர் ஒளிக்கற்றை கடலின் மீது விழுந்தது. அது படகின் மீது படர்ந்ததும் வருணா சட்டென்று கலிங்கராயனின் கையை எட்டிப் பற்றிக்கொண்டாள்.

“பயப்பிடாத. வந்திருக்கிறது ஆர் எண்டு பாக்கினம்.” என்றபடி கப்பலின் அருகே படகைக் கொண்டுபோய் நிறுத்தினான்.

இவர்களைக் கண்டுவிட்டு கப்பலின் மேலிருந்து கயிற்று ஏணி இறக்கப்பட்டது. அதைப் பார்த்த வருணாவின் இதயம் மீண்டும் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. பின்னே, அந்தக் கயிற்று ஏணியில் ஏறுவதென்றால்? அவளுக்கு இப்போதே கால்கள் நடுங்கின.

“எனக்கு நீச்சல் தெரியாது.” நடுக்கத்துடன் சொன்னாள்.

“அதுக்கென்ன?” என்றவன் அவளிடம் வந்து அவளை எழுப்பி நிறுத்தினான்.

சத்தியமாக வருணாவினால் சுயமாய் காலை அசைக்கக் கூட முடியவில்லை. ஆழ்கடலும், அதைச் சூழ்ந்திருந்த கருமையும், அவர்களை விழுங்க வரும் இராட்சசன் போன்று பக்கத்தில் நிற்கும் அந்தப் பெரிய கப்பலும், தப்பித்தவறி விழுந்தால் என்னாவோம் என்கிற நினைப்பும் அவளை மிரட்டிய.

“அதான் நான் இருக்கிறன் தானே. பயப்பிடக் கூடாது!” குழந்தைக்குச் சொல்வது போன்று தைரியம் சொன்னவன் அவளுடைய லைஃப் ஜாக்கெட்டை மீண்டும் ஒருமுறை சரிபார்த்தான்.

“அப்பிடியே விழுந்தாலும் இந்த ஜாக்கெட் இருக்கிறதால நீ தண்ணில மிதப்பாய். தாழ மாட்டாய்.” அவன் தைரியப்படுத்தத்தான் சொன்னான்.

அவளோ, “என்ன விழுந்திடுவனா?” என்று கண்கள் இரண்டும் வெளியே வந்துவிடும்போல விரியக் கேட்டாள். “எனக்கு ஒண்டும் பாக்க வேண்டாம். வாங்க திரும்பிப் போவம்.” என்றாள் வேகமாக.

அவன் சிரிக்கவில்லை. சிரிப்பு வரவுமில்லை. அவள் பயத்தை உணர்ந்து, பற்றியிருந்த அவள் கரத்தை அழுத்திக் கொடுத்து, தன் கைப்பிடியிலேயே அவளை அந்தக் கயிற்று ஏணி அருகே அழைத்துச் வந்தான்.

“கலிங்கா, சத்தியமா என்னால ஏலாது. இப்பவே கால் எல்லாம் நடுங்குது.” அவன் புறம் திரும்பி அவனைப் பற்றிக்கொண்டு நடுங்கினாள்.

அவளின் அந்த அழைப்பில் அவளையே சில கணங்களுக்குப் பார்த்தான் கலிங்கன். அவள் அதை உணரவில்லை என்று புரிந்தது. “இந்த ஏணில ஏறுறது மட்டும்தான். கப்பலுக்க போய்ட்டா அந்த உலகமே வேற வரு. இது வழமையா வாற கப்பல்களை விடப் பெருசு. அதான் கரைக்கு வராம நடுக்கடலில நிக்குது. இதெல்லாம் அடிக்கடி பாக்கக் கிடைக்காது.” என்று இதமாய் எடுத்துச் சொன்னான்.

“எல்லாம் சரிதான். எனக்குப் பயமா இருக்கே.” அவன் பிடியில் நின்றுகொண்டே திரும்பி இன்னொரு முறை கப்பலைப் பார்த்தாள்.

அதன் உருவமே அவளை இன்னும் மிரட்டியது. “இது ஏன் இவ்வளவு பெருசா இருக்கு? கொஞ்சம் சின்னதா இருக்கலாம்தானே.” என்றவள் பேச்சில் அவன் உதட்டில் மெல்லிய முறுவல்.

“அடுத்த முறை சின்ன கப்பலா வரச் சொல்லுவம்.” அவளுக்கு ஏற்ப பதில் சொன்னான் அவன்.

அவளை மெல்லக் கயிற்று ஏணி அருகே அழைத்துச் சென்று, “உனக்கு பின்னால நான் வந்துகொண்டே இருப்பன். நீ கடைசிவந்தாலும் விழ மாட்டாய். அப்பிடியே விழுந்தாலும் பிடிக்க நான் இருப்பன் சரியா?” என்று அவளுக்குத் தைரியம் சொன்னான்.

“உண்மையா பிடிப்பீங்களா? என்ர பாரம் தாங்குவீங்களா? நான் 54 கிலோ.” என்னவோ தான் மிகவும் பாரமானவள் போன்ற தொனியில் அவனைத் திரும்பிப் பார்த்துச் சொன்னாள் அவள்.

அவன் கண்களில் ஒரு கணம் சிரிப்பு மின்னி மறைந்தது. “தாங்குவன், நீ ஏறு!” என்று அவளைப் பாராமல் சொல்லிவிட்டு, மறுபடியும் கப்பலை பார்பபதுபோல் அவளை திருப்பி, அந்த ஏணியில் அவள் கால்களை வைக்க உதவினான்.

“ஐயோ! பயமா இருக்கு. நடுங்குது.” என்று சுலோகம் சொல்வதை போன்று ஒவ்வொரு காலடிக்கும் நடுங்கியபடியேதான் ஏறினாள்.

அவனும் சலிக்காமல், “பயமில்ல. ஏறு. இன்னும் ரெண்டு படிதான். பின்னால நான் இருக்கிறன்.” என்று சொல்லிக்கொண்டே வந்தான்.

மேலிருந்தவர்கள் அவளுக்கு கை கொடுக்க, ஒரு வழியாக கப்பலின் உள்ளே வந்தவளுக்கு அதன் பிறகுதான் உயிரே வந்தது.

தானும் உள்ளே குதித்து வந்தவன், “இப்ப ஓகேயா நீ?” என்று அவளைத்தான் ஆராய்ந்தான்.

ஆம் என்று தலையசைத்தபடி சுற்றிலும் பார்த்தாள். சுற்றிலும் கடல் மட்டுமே! கரை எங்கே இருக்கிறது என்றுகூடத் தெரியவில்லை.

தலைக்கு மேலே வானம். கால்களுக்குக் கீழே இரும்புத் தளம். சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான சரக்குக் கொள்கலன்கள். தொலைவில் தெரிந்த கப்பலின் கட்டுப்பாட்டு அறை. அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்த பணியாளர்கள் என்று காணும் காட்சியை அவளால் நம்பவே முடியவில்லை.

சில மணி நேரங்களுக்கு முன்பு வரை, இத்தகைய ஓர் இடத்துக்கு வருவோம் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

“என்ன கலிங்கா இது, இவ்வளவு பெருசா இருக்கு?” அவளுடைய பயம் மெல்ல வியப்பாக மாறிக்கொண்டிருந்ததில் பார்வையைக் கப்பலைச் சுழற்றியபடி சொன்னாள்.

அவள் மீதே கவனமாயிருந்தவனின் உதட்டோரத்தில் அழகான முறுவல்.

error: Alert: Content selection is disabled!!