அத்தியாயம் 28
அவள் இதுவரை பார்த்திராத உலகம் அது! கடல் காற்று வேகமாக வீசிக்கொண்டிருக்க, பிரமாண்டமான கிரேன்கள் கப்பலின் மேலிருந்து இயங்கிக்கொண்டிருந்தன. அவற்றில் தொங்கியிருந்த பெரிய சரக்குப் பெட்டிகள் ஒவ்வொன்றாக மேலே உயர்ந்து, காத்திருந்த சரக்குப் படகுகளுக்குள் இறக்கப்பட்டுக்கொண்டிருந்தன.
ஒரு பக்கம் கப்பலின் பணியாளர்கள் சைகைகளாலும் தகவல் தொடர்புக் கருவிகளாலும் ஒருவருக்கொருவர் அறிவுறுத்திக்கொண்டிருக்க, மறுபக்கம் சரக்குப் படகுகளில் இருந்தவர்கள் அவற்றைச் சரியான இடத்தில் இறக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தனர்.
“சூப்பரா இருக்கு, என்ன!” விழிகளில் வியப்பு மின்னச் சொன்னாள் வருணா.
“அதான் கூட்டிக்கொண்டு வந்தனான்!” என்றவன், அவளை அழைத்துக்கொண்டு நடந்தான்.
கடலில் கப்பலின் அசைவும் வீசிய காற்றும் அவளுடைய சமநிலையைக் குலைத்தன. சீராக நடக்க முடியாமல், விழுந்துவிடுவோமோ என்று பயந்து, “கலிங்கா!” என்றபடி எட்டி அவன் கையைப் பற்றினாள்.
அவள் அப்படி அழைக்கிற ஒவ்வொரு பொழுதுகளிலும் அவனுக்குள் என்னவோ நிகழ்ந்தது. திரும்பி அவள் முகம் பார்த்தான். இப்போதும் அவள் அதை உணர்ந்ததுபோல்
இல்லை.
எத்தனையோ பேர் அவனைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்கள். அதிகாரத்தோடும் அச்சத்தோடும் மரியாதையோடும் அவனை அணுகியிருக்கிறார்கள். ஆனால், அவள் அவனை அழைக்கும் ஒவ்வொரு முறையும் அவனுக்குள் நிகழ்வது வேறு.
அந்தக் குரலில் அவனுக்கான உரிமை இருந்தது. அவனை மட்டுமே நம்பி அழைக்கும் நெருக்கம் இருந்தது. அவனருகில் நிற்கும்போது தன்னையறியாமல் அவனிடம் அடைக்கலம் தேடும் ஒரு மென்மை இருந்தது.
அதை உணர்ந்தவன் அவளைத் தன் கைப்பிடியிலேயே அழைத்துச் சென்று, கப்பல் முழுவதையும் சுற்றிக் காட்டினான்.
அதுவும் கப்பலின் கட்டுப்பாட்டு அறையில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் வழியாக எல்லையற்ற கடல் விரிந்திருக்க, கப்பலின் வழிசெலுத்தல் திரைகள், ரேடார், திசைகாட்டிகள் எனப் பல்வேறு கருவிகள் இருப்பதைக் கண்டு அவளுக்கு மிகுந்த வியப்பாயிற்று.
இதற்குள் கப்பலில் இருந்த அவனுடைய சரக்குகள் அனைத்தும் படகுகளில் இறக்கப்பட்டிருந்தன. கப்பலின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று, படகுகள் புறப்படுவதைக் காட்டினான் கலிங்கன்.
அடிக்கிற காற்றுக்குத் தான் தூக்கி வீசப்பட்டுவிடுவோமோ என்கிற பயத்தில் எட்டிப் பார்க்கவே யோசித்தாள் வருணா. அவன்தான் அவள் தோள்களைப் பற்றி நகர்த்திக் சென்று அவளுக்குக் காட்டினான்.
குருவிக் கூட்டம் ஒன்று கும்பலாகப் பறந்தாலும் அவை தமக்குள்ள சீரான ஒரு இடைவெளியைப் பேணுவது போன்று, அங்கிருந்து புறப்பட்ட படகுகள் அத்தனையும் ஒன்றாகப் புறப்பட்டாலும், தமக்குள் சீரான இடைவெளியைப் பேணின.
அவற்றின் பின்னால் வெள்ளை நுரையைப் பிளந்தபடி நீரலைகள் உருவாகின. ஒவ்வொரு படகும் கடல் நீரை இருபுறமும் தள்ளிக்கொண்டு முன்னேறியதைப் பார்த்தபோது,
அவை அலைகளைச் சிறகுகளாக மாற்றிக்கொண்டு பயணிப்பது போலவே இருந்தது.
வருணாவின் விழிகள் அந்தப் படகுகளுடனேயே பயணித்துக்கொண்டிருக்க, “போவமா?” என்றான் அவன்.
அப்போதுதான் அவனுடைய இருப்பையே உணர்ந்தவள் போன்று திரும்பிப் பார்த்தாள்.
கடற்காற்றில் கூந்தல் பறக்க, கள்ளுண்ட வண்டாக இயற்கையின் அழகை அள்ளித் திணற மயக்கத்தில் திளைத்திருந்த அவள் விழிகளையே நோக்கி, “என்ன?” என்றான் அவன்.
“தேங்க்ஸ்!” என்றாள் அவள்.
உதட்டுக்குள் முறுவலை ஒழித்து வைத்துவிட்டு அவன் தன் புருவங்களை உச்சி மேட்டுக்கே உயர்த்தினான்.
“ப்ச்! நான் அவ்வளவு பயந்தும் விடாம கூட்டிக்கொண்டு வந்ததுக்கு நன்றி சொன்னா ஆகத்தான்!” என்று அவனுக்கு ஒரு அடியைப் போட்டுவிட்டு நடந்தவள் கப்பல் ஆடிய ஆட்டத்தில், “அம்மா!” என்றபடி மறுபடியும் அவனைப் பற்றிக்கொண்டு நின்றாள்.
சிறு சிரிப்புடன் வா என்று அழைத்துக்கொண்டு போனவன் அங்கிருந்த ஒரு இருக்கையில் அவளை இருத்திவிட்டு, “கொஞ்ச நேரம் இஞ்சயே இருக்கிறியா, வாறன்.” என்றான்.
சட்டென்று அவளிடத்தில் ஒரு கலக்கம். “வந்திடுவீங்கதானே.” என்றாள் அவன் முகத்தையே பார்த்து.
இலேசான முறுவலுடன் அவளையே பார்த்தவன், விழிகளை ஒருமுறை மூடித் திறந்துவிட்டுப் போனான்.
போகிறவனையே பார்த்திருந்தாள் வருணா. நிறைய நாள்களுக்குப் பிறகு எந்தக் கலக்கமும் குழப்பங்களும் இல்லாது உற்சாகத்தில் திளைத்தது மனது.
பொழுது விடியலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று பார்க்கவே தெரிந்தது. தன்னைச் சுற்றிப் பார்வையை அலையவிட்டபடி இருந்தவள், அவன் அங்கிருந்த பாராமான ஏதோ ஒன்றை தூக்கப் போவதைக் கண்டு, ஓடி வந்து அவன் கை பற்றித் தடுத்தாள்.
“என்ன செய்றீங்க? நீங்க பாரம் தூக்கக் கூடாது எல்லா?” என்று அதட்டினாள்.
அவன் பாரம் தூக்கக் கூடாதா? அவனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலாயிற்று. “ஏன்?” என்றான் அதை அடக்கிக்கொண்டு.
“ஏனா?” அவள் விழிகளில் கோபம் கொப்பளித்தது. “அவ்வளவு பெரிய ஒப்ரேஷன் நடந்து ஆறு மாதம் கூட ஆகேல்ல. இதுக்க சிகரெட் பத்துறீங்க. அண்டைக்கு என்னவோ வெறி வந்தவன் மாதிரி அடி வயித்தில இருந்து கத்துறீங்க. இண்டைக்குப் பாரம் தூக்க நிக்கிறீங்க. என்ன நினைச்சுக்கொண்டு இதையெல்லாம் செய்றீங்க?”
அவள் அதட்டலில் அவன் கண்களில் ரசனை படர்ந்தது. கோபத்தில் மின்னிய அந்தக் கண்களையும் அதற்குள் சிவந்துவிட்ட அவள் முகத்தையும் பார்த்தவன் நெற்றியை ஒற்றை விரலால் கீறிவிட்டான்.
அவனுக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை. என்ன, அவளை மீறித் தூக்கக் கைகள் வரமாட்டேன் என்றது. அங்கே இருந்த பணியாளர்களை அழைத்து அந்த வேலையைச் செய்யச் சொன்னான்.
அதன் பிறகு எங்கே சென்றாலும் அவன் பின்னால் அவளும் தொடர்ந்தாள். அவனைக் கண்காணிக்கிராளாம். சிரிப்பு வந்தாலும் உள்ளே ஏதோ ஒன்று இனித்துக்கொண்டு போயிற்று.
இதுவரை இப்படியான அனுபவங்கள் அவனுக்கு உண்டானதில்லை. யாரும் அவனை இப்படிப் பார்த்துக்கொண்டதில்லை. அவனுடைய உடல்நிலையை நினைத்துப் பதறியதில்லை. அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் கவனித்து, அவனுக்குப் பாதுகாப்பாகப் பின்னாலேயே சுற்றியதில்லை. அந்தப் புதுமையான உணர்வு அவனுக்குள் ஏதோவொன்றைச் செய்தது.
ஒரு வைத்தியராக, அவனுடைய உடல்நிலையைக் கருத்திற் கொண்டே அவள் அப்படிச் செய்கிறாள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.
ஆனாலும், அவளுடைய அந்த அக்கறை அவனுக்கு இனித்தது.
இதுவரையில் அவன்தான் மற்றவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறான். அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்துகொடுத்து, அவர்களுடைய நலனில் அக்கறை செலுத்தி வாழ்ந்திருக்கிறான்.
திரும்பிப் பார்த்தான். அப்போதும் அவள் இவனையேதான் கவனித்துக்கொண்டிருந்தாள். சிரிப்பை உதட்டுக்குள் மறைத்தபடி அவளைத் தன்னிடம் அழைத்தான்.
“நான் பாரம் தூக்க மாட்டன். நீ கப்பலைச் சுத்திப் பார். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு.”
“உங்களை நம்ப மாட்டன்!” அவள் உறுதியாக மறுத்தாள்.

