கலிங்கனின் காவியம் 29.2

அவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவளும் சிறிது நேரம் அவனையே பார்த்தாள். அவனைக் கண்டு இலேசாகப் புன்னகைத்தாள். அதன் பிறகுதான் விழிகளைத் திருப்பிச் சுற்றிலும் பார்த்தாள். தாங்கள் வீடு வந்து சேர்ந்துவிட்டது புரிந்தது.

“வந்திட்டமா?” என்று கேட்டபடி நிமிர்ந்து அமர்ந்தாள். இதற்குள் காரிலிருந்து இறங்கி வந்து, அவள் பக்கக் கதவைத் திறந்து, “இறங்கு!” என்றான் அவன்.

நல்ல உறக்கத்தில் இருந்ததாலோ என்னவோ அவனைப் பற்றிக்கொண்டுதான் இறங்கினாள் வருணா.

மாடி ஏறி வந்து தன் அறைக்குள் போவதற்கு முன் நின்று, “இஞ்ச இருந்து வெளிக்கிடேக்க இப்பிடி ஒரு அனுபவம் கிடைக்கும் எண்டு நினைக்கவே இல்ல கலிங்கா. தேங்க்ஸ்!” என்றுவிட்டுப் போனாள்.

அன்றுதான் அவனை வருணா கடைசியாகப் பார்த்திருந்தாள். அடித்துப்போட்டது போன்று உறங்கி எழுந்து பார்த்தால் அவனைக் காணவில்லை. அதன் பிறகு இரண்டு நாட்களாக கண்ணிலேயே படவில்லை.

அவனை ஒருமுறை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று முழுமையான மருத்துவப் பரிசோதனை ஒன்றைச் செய்ய நினைத்தாள். சாதாரணமாக அவனாகவே அதைச் செய்திருக்க வேண்டும். அப்படி அவனாகச் செய்வான் என்கிற நம்பிக்கை அவளுக்கு இல்லை.

வெளிப்புறக் காயங்கள் ஆறியிருந்தாலும், உள்ளுறுப்புகளின் நிலை எப்படி இருக்கிறது என்று அறிந்துகொள்வதுதானே சரி.

அன்றும் காலையில் எழுந்ததிலிருந்து அவனைத்தான் தேடிக்கொண்டிருந்தாள். ஆனால், அந்த மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றதொரு தோற்றம்.

ஆதி அங்கேதான் இருந்தான். அவனுடன் வருணா எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்வதில்லை. அவனும் அன்றைக்குப் பிறகு அவளிடமிருந்து ஒதுங்கியே இருந்தான்.

ஆனால், கலிங்கன் இருக்கும் இடத்தில்தான் ஆதியும் இருப்பான். அப்படியிருக்க, இன்று இவன் இங்கே இருக்கிறான் என்றால் கலிங்கன் எங்கே என்று யோசித்தாள்.

ஆனாலும், ஆதியிடம் போய்க் கேட்கவில்லை. காலை உணவுக்காக வந்து அமர்ந்தபோதுதான் கலிங்கன் உள்ளே வந்தான்.

அவனைப் பார்த்ததுமே வருணா திடுக்கிட்டாள். கண்கள் இரண்டும் உறக்கம் இல்லாது இரத்தக் கட்டிகளை போன்று சிவந்திருந்தன. கலைந்த தலைமுடி, அழுக்கடைந்த ஆடைகள் என்று பார்க்கவே வேறு ஒருவனைப் போலிருந்தான். அதைவிட அவனுடைய நெற்றியில் இருந்த காயத்தைக் கண்டு பயந்துபோனாள்.

“என்ன இது? காயம்?” பதற்றத்துடன் கேட்டபடி வேகமாக எழுந்து அவனருகே வந்தாள்.

அப்போதுதான் அவனும் அதை உணர்ந்தான் போலும். தன் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “ஏதோ சின்ன காயம்.” என்றபடி மாடிப்படிகளில் ஏற முயன்றான்.

“சின்ன காயமா? முதல் ஆர் உங்களுக்கு அடிச்சது?” என்று அவனுக்குப் பின்னால் வந்தாள் வருணா. அவன் ஒன்றும் சொல்லாமல் மாடிப்படிகளில் ஏறினான்.

“ப்ச் கலிங்கா!” எட்டி அவன் கை பற்றி நிறுத்திவிட்டு காயத்தை ஆராய்ந்தாள். பெரிதாக ஆழம் இல்லைதான். என்றாலும் தோள் பிய்ந்து காய்ந்திருந்தது.

“இது இப்ப பட்ட காயம் மாதிரி இல்லையே. என்ன நடந்தது?” அவனிடமிருந்து உண்மையைப் பிடுங்கி விடுகிறவள் போன்று கூர்மையாக அவனை நோக்கி வினவினாள்.

“நான் முதல் குளிக்கோணும்.” என்றான் அவன்.

அவன் உடல் சோர்வும் புரிய ஒன்றும் சொல்லாமல் இறங்கிப்போனாள்.

குளித்து, உடை மாற்றிக்கொண்டு அவன் கீழே இறங்கி வந்தபோது, வருணா உணவருந்தாமல் அவனுக்காகக் காத்திருந்தாள்.

“நீ சாப்பிட்டிருக்கலாமே.” என்றபடி நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான் அவன்.

“இப்ப அதா முக்கியம்?” என்றுவிட்டு ராசம்மா கொண்டுவந்து தந்திருந்த முதலுதவிப் பெட்டியைத் திறந்து, குளித்ததன் பயனாக ஈரமாகியிருந்த அவன் காயத்தை மெதுவாகத் துடைத்தாள். பின்னர் அதைச் சுத்தம் செய்து, கிருமிநாசினி மருந்தைப் பூசினாள்.

அவள் அவ்வளவு கவனமாக அவனுடைய காயத்தைக் கவனித்துக்கொண்டிருக்க, கலிங்கனின் பார்வை முழுவதும் அவளிடமே நிலைத்திருந்தது. அவளுடைய முகத்தில் தெரிந்த தீவிரமும், காயத்தைத் தொடும்போதெல்லாம் வெளிப்பட்ட மென்மையும் வைத்தியசாலையில் வைத்து அவனை அவள் பார்த்துக்கொண்ட நாவல்களை நினைவூட்டின.

“பெரிய காயமில்ல. பயமில்லத்தான். எண்டாலும் கவனமா ஏறுங்க.” எடுத்த பொருள்களை எல்லாம் ஒதுக்கி வைத்து, கைகளைக் கழுவிக்கொண்டு அவள் வருகிற வரைக்கும் அவன் பார்வை அவளையேதான் தொடர்ந்துகொண்டிருந்தது.

வந்தவள் உணவை அவனுக்கும் சேர்த்துப் பரிமாறிவிட்டு, எதிரில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ராசம்மா தான் ஒருத்தி அங்கிருப்பதையே காட்டிக்கொள்ளாமல் சந்தோசமாக அந்த இடத்தை விட்டே நழுவியிருந்தார்.

உணவில் கவனமாக இருந்தவள் நிமிர்ந்து, “எப்ப ஹொஸ்பிடல் போவம்?” என்று கேட்டாள்.

“இந்தக் காயத்துக்கா?” என்றான் அவன்.

அவனை முறைத்துவிட்டு, “ஃபுல் செக்கப் ஒண்டு போடுவம் எண்டு சொன்னேனே.” என்று நினைவூட்டினாள்.

எப்போது என்று சொல்லாமல், “போவம்.” என்றான் பொதுவாக.

“அதான் எப்ப?”

“போவம் வரு. என்ன அவசரம்?”

வருவா? அவள் திகைத்துப் பார்க்க, “என்ன?” என்றான் அவன்.

ஒன்றுமில்லை என்று குறுக்காகத் தலையை அசைத்துவிட்டு உணவுத் தட்டில் கவனத்தைக் குவித்தவளுக்கு மனம் குழம்பிப் போயிற்று.

அன்றைய கப்பல் பயணத்துக்குப் பிறகு அவர்களுக்கிடையில் இணக்கமான மனநிலை உருவாகியிருப்பதை அவள் உணர்ந்துதான் இருந்தாள். இன்றைக்கு அவனுடன் அமர்ந்து உணவருந்துவது கூட அந்தப் பயணத்தின் பயனாகத்தானே.

ஆனாலும் அவன் வரு என்று அழைத்தது…

அப்போதுதான் தானும் அவனைக் கலிங்கா என்கிறோம் என்று புத்தியில் உரைத்தது. அதன் பிறகு அமைதியாகவே சாப்பிட்டாள்.

திடீரென்று அமைதியாகிப்போனவளைக் காரணம் புரியாமல் பார்த்தாலும் அவன் தொந்தரவு செய்ய போகவில்லை.

அவனுக்கு வரதனின் ஹோட்டல்களில் போதைப்பொருட்களோ, அதற்கான தடயங்களோ எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவிலிருந்து வெளியான செய்தி குடைந்துகொண்டிருந்தது.

வரதன் இதைச் செய்வான் என்பது அவனுக்குத் தெரிந்ததுதான். இது அவன் மானப் பிரச்சனையாயிற்றே. ஆனால், போதைப்பொருள் தடுப்புப் பிரிவையும் அவனால் கட்டுப்படுத்த முடிகிறது என்பதுதான் அவனை யோசிக்க வைத்தது.

கொஞ்சம் கொஞ்சமாக வரதனின் பலம், செல்வாக்கு, அதிகாரம் அனைத்தையும் அழிக்க வேண்டும் என்பதுதான் அவன் திட்டம். அதை முடிக்காமல் அவன் விடப்போவதில்லை.

இதற்குள் வருணா உணவை முடித்திருந்தாள். “அப்பா, அம்மாவப் பாக்கோணும் கலிங்கா.” என்று அவனிடம் சொன்னாள்.

கூடவே, “அப்பா பள்ளிக்கூடம் போகத் தொடங்கியிருப்பார். அங்க ஆர் என்ன கதைக்கினமோ தெரியா. சும்மாவே என்னைப் பற்றிக் கூடாமத்தான் போய்க்கொண்டிருக்கு. அவரின்ர டிபார்ட்மெண்ட்ல இருந்து என்ன சொன்னவே எண்டும் தெரியா. என்ன நடக்குது, ஏதாவது பிரச்சினையா, சமாளிச்சாரா எண்டு தெரியோணும்.”

“போன்லயும் கேக்கலாம்.” என்றான் அவன்.

“அப்ப என்ர ஃபோனை கொண்டுவந்து தரச் சொல்லுங்க.”

அவளை ஒரு கணம் பார்த்துவிட்டு, “டிபார்ட்மெண்ட்ல இருந்து அவருக்கு எந்தப் பிரச்சினையும் வராது.” என்றான் அவன்.

இவன் எப்படி இத்தனை உறுதியாகச் சொல்கிறான் என்று பார்த்தாள் வருணா.

“பள்ளிக்கூடத்துக்குள்ள ஆரும் ஏதும் சும்மா கதைச்சா அவர் சமாளிக்கத்தான் வேணும். மற்றும்படி அவரின்ர வேலைக்கோ அவருக்கோ எந்த பிரச்சினையும் இல்ல.”

“எப்பிடி இவ்வளவு உறுதியாச் சொல்றீங்க?” என்றவள் பார்வையில் அவன் நெஞ்சையே அலசுவது போன்ற மிகுந்த கூர்மை.

அவன் அதற்குப் பதிலளிக்காமல் உணவில் கவனத்தைச் செலுத்தினான். அவனுடைய அந்த மௌனமே ஏதோ செய்திருக்கிறான் என்று சொல்லிற்று. “நீங்க திருந்தவே மாட்டீங்களா?” என்றவளுக்கு இந்த முறை கோபத்தோடு சேர்த்து, இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்கிற ஆதங்கமும் சேர்ந்துகொண்டது.

“ஏன் கலிங்கா இப்பிடி? இதெல்லாம் வேண்டாமே.” என்றாள்.

“நான் ஒண்டுமே செய்யேல்ல.” என்றுவிட்டு எழுந்துபோய்க் கையைக் கழுவினான் அவன்.

பின்னாலேயே வந்து தானும் கை கழுவிக்கொண்டு, துடைப்பதற்குத் துண்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“உண்மையச் சொல்லுங்க. என்ன செய்தனீங்க? எனக்குப் பயமா இருக்கு. நீங்க செய்றதால அப்பாவுக்கு இன்னும் மோசமான பிரச்சினை வந்துட்டா?”

“அப்பிடி ஒரு நாளும் நடக்காது.” எண்றுவிட்டுப் போனான் அவன்.

இவன் ஏன் இப்படியிருக்கிறான் என்று அவளுக்குப் புரியவே இல்லை. அவனுடைய செயல்களுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதையும் ஊகிக்க முடியவில்லை. கையாளாக கோபம் ஒன்று அவளை சுழற்ற, அவனோடு சண்டை பிடிக்க விருப்பமில்லாமல் விடுவிடுவென்று மாடிப்படிகளில் ஏறி, அறைக்குள் சென்று அடைந்துகொண்டாள்.

error: Alert: Content selection is disabled!!